மே 22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் அரிராகவன் உள்ளிட்ட 18 பேரை இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிணையில் விடுவித்தது.

ஒவ்வொருவர் மீதும் சுமார் 20 முதல் 120 பொய் வழக்குகள் வரையில் பதிவு செய்து ஒரு வழக்கில் தண்டனை கிடைத்தால் இன்னொரு வழக்கில் கைது செய்வது என்ற சட்டவிரோதமான வழிமுறையை பின்பற்றி, அனைவரையும் மாதக்கணக்கில் சிறைவைக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தூத்துக்குடி போலீஸ். இதனை முறியடிக்க சாத்தியமான எல்லா முனைகளிலிருந்தும் சட்ட ரீதியாக இதனை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான வழக்குகளை தொடுத்திருக்கிறோம்.

கைது செய்யப்பட்டவர்களுடைய பிணை மனுக்கள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், பிணை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். பிணை மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை  கிளையில்  நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. கீழ்க்கண்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 பரியேறும் பெருமாள், பூவலிங்கம், சிவகுமார், ஆசை,  திருமாறன்,  முத்துக்குமார், வெங்கடேசன்,சத்தியசீலன்,  ராம்குமார்,  இஸ்ரவேல்,  பால்ராஜ்,  செல்வகுமார்,  சையது முஸ்தபா, கெபிஸ்டன், இசக்கி துரை, அரி ராகவன், அக்பர், இருதய ஜெபமாலை.

18 பேருக்கு பிணை
வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, வாஞ்சிநாதன்

மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் பிரபு ராஜதுரை, வின்சென்ட், வாஞ்சிநாதன், சுரேஷ் சக்தி கணேஷ் பிரபு ஆகியோர் வாதிட்டனர்.  அக்பர், இருதய ஜெபமாலை ஆகியோர் சார்பாக வழக்கறிஞர் ஷாஜி செல்லான் வாதிட்டார்.

இனி விசாரணை என்றால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41 பிரிவின்படி நோட்டீஸ் கொடுத்து விசாரணை செய்து அதன் பின் உரிய முகாந்திரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்றும் போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

கைது செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொருவர் மீதும் குறைந்தபட்சம் 10 வழக்கில் முதல் அதிகபட்சம் 120 வழக்குகள் வரை போடப்பட்டிருப்பதால் ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியே பிணையம் (Bail Bond) வழங்க வேண்டியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட ஐந்து பேருக்காக சுமார் 500 பிணையங்களை தயார் செய்வதற்காக மட்டுமே 5 வழக்கறிஞர்களும் அவர்களது உதவியாளர்களும் இரண்டு நாட்களாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

எனவே இந்த 18 பேர் மீதான எல்லா வழக்குகளுக்கும் பொதுவான பிணையம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியதையும் நீதிமன்றம் ஏற்றது.

பிணையில் விடுவிக்கப் படுபவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியது.

இதற்கு  மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது குறிப்பாக எண்ணற்ற பொய் வழக்குகள் மற்றும் போலீஸ் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிராக பேசுவதையும் தடுக்கின்ற நோக்கத்துடனேயே இந்த நிபந்தனையை போலீஸ் தரப்பு கூறுகிறது என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிணையில் விடப்பட்டிருக்கும் மனுதாரர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் போலீஸ் அடக்குமுறை மற்றும் பொய் வழக்குகள் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது

*****

வெள்ளிக்கிழமையன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நாம் பிணை உத்தரவு பெற்ற சதீஷ், முருகேஷ் (மக்கள் அதிகாரம்), மகேஷ்,  ராஜ்குமார் (குமரெட்டியாபுரம்),  வியனரசு (நாம் தமிழர் கட்சி) ஆகியோரில், வியனரசு (இவர் மீது 10 வழக்குகள்) மட்டுமே இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் ஒவ்வொருவர் மீதும் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருப்பதால் பிணையங்களை சரிபார்ப்பது தாமதமாகி வருகிறது.

மேலும் வெள்ளிக்கிழமை பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, மே 22 க்கு முன் நடைபெற்ற போராட்டங்களின்போது போடப்பட்ட வழக்குகளைக் காட்டி குமரெட்டியாபுரம் மகேஷை மீண்டும் ரிமாண்டு செய்திருக்கிறது போலீஸ். இதற்கான பிணை மனு நாளை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

*****

வழக்குகள் அனைத்தையும் மக்கள் உரிமை பாதுகாப்பு  மையம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது

தூத்துக்குடி, மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றங்களில் பிணை மனு தொடர்பான பணிகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்  ஜிம்ராஜ் மில்டன், முருகானந்தம், மணிகண்டன், பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர்.

மேற்கூறிய வழக்குகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் கட்டணம் ஏதும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி நீதிமன்ற செலவுகள் உள்ளிட்ட பிற செலவுகளை மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் செய்து வருகின்றனர்.

பொய் வழக்குகளுக்கு எதிராகவும், மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான சதிகளுக்கு எதிராகவும், மே 22, 23 தேதி படுகொலைகளுக்குப் பொறுப்பான போலீசு அதிகாரிகளுக்கு எதிராகவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க