நூல் அறிமுகம் : சம்பிரதாயங்கள் சரியா ?

எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 சடங்கு சம்பிரதாயங்களை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்தெடுக்கிறார் நூலாசிரியர்.

ர்த்தம் தெரியாமல் இந்த உலகத்தில் பல காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அர்த்தம் இல்லாமலும் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

பூனை குறுக்கே வந்துவிட்டது என்பதற்காக புறப்பட்ட பயணத்தைத் தள்ளி வைக்கிறவர்கள் உண்டு. பல்லி விழுந்து விட்டது என்பதற்காக பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறவர்கள் உண்டு.

பகுத்தறிவு சிந்தித்துச் செயல்பட வைக்கும். என்ன செய்கிறோம் என்பதை தெளிய வைக்கும். ஏன் செய்கிறோம் என்பதையும் புரிய வைக்கும்.

அளவுக்கு மீறின சகுன நம்பிக்கைகள் இருக்கிறது பாருங்கள்… அதோடு பயமும் சேர்ந்து கொள்ளுமானால் அவ்வளவுதான். மனிதனின் மனநிலை பாதிக்கப்படும். இது மனவியல் நிபுணர்களின் கருத்து.

ஒருத்தருக்கு ஏழாம் நம்பர்தான் ராசியான நம்பராம். ஏழாம் தேதிதான் எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பார். ஏழு எழுத்து வருகிற மாதிரி பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். ஏழு மணிக்குத்தான் தினமும் எழுந்திருப்பார். ஏழாம் நம்பர் வீட்டில்தான் குடியிருப்பார். கல்யாணம்கூட ஏழாம் தேதிதான் பண்ணிக் கொண்டார்.

அவர் ஒருநாள் குதிரைப் பந்தயத்துக்குப் போனார். குதிரைகளின் பெயரையெல்லாம் பார்த்தார். ஒரு குதிரையின் பெயர் ஏழு எழுத்தில் இருந்தது. ஏழுதானே இவருக்கு அதிர்ஷ்ட நம்பர். அதனால் உடனே அந்தக் குதிரையின் மேல் பணத்தைக் கட்டினார். பந்தயம் நடந்தது. அவர் சொன்னார் சோகமாக: நான் பணம் கட்டின அந்தக் குதிரை ஏழாவதா வந்து சேர்ந்தது!

இப்படி சகுணங்களும், மூட நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நம்மைக் கோமாளிகளாக்கி விடுகின்றன. அப்படி ஆகிவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அருமை நண்பர் மஞ்சை வசந்தன் அவர்கள் சம்பிரதாயங்கள் பற்றி அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலிலே ஆய்வு செய்து தந்திருக்கிறார்.       – தென்கச்சி கோ. சுவாமிநாதன்

செவ்வாய், வெள்ளி, புதன், சனி கிழமைகளின் எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 வாழ்வியல் நடப்புகளை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து எடுக்கிறார் நூலாசிரியர். மரத்துப் போய்விட்ட மனிதத் தோல்களுக்கு தகுந்த தார்க்குச்சிகளும் இதில் உண்டு.
– கலி.பூங்குன்றன்

முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு; முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் மூடத்தனமானவை என்று ஏற்றி எறிவதும் தவறு. எதையும் ஏன் என்று ஆராய்ந்து சரியென்றால் மட்டும் ஏற்க வேண்டும் என்பதே அறிவிற்கு அழகு.  மரபுவழியாக எவ்வளவோ செயல்களைக் காரணம் புரியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறார்கள். சரியா? தேவையா? பயன் என்ன? பாதிப்பு என்ன? என்பதை ஆராய்வது இல்லை.

‘முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்ய வேண்டும்.’ முடிவு எளிதாகிவிடுகிறது. அம்முடிவின்படி பொருள் விரையம், பொழுது விரையம், உழைப்பு விரையம் என்பதையெல்லாங்கூட பொருட்படுத்தாமல் எப்படியும் செய்து முடிக்கின்றனர். காரணம் புரியாமல் கடமையாகச் செய்யப்படுவதால், அது அர்த்தமற்ற சடங்காக மட்டுமே அமைந்து போகிறது. பல பயித்தியக்காரச் செயல்களாகக் கூட பரிணாமம் பெற்று விடுகின்றன.
– மஞ்சை வசந்தன்

***

பார்ப்பன இந்துமதம் உருவாக்கி வளர்த்த சம்பிரதாயம், சடங்குகளும், தற்போது, ஹீலர் பாஸ்கர் வகையறாக்கள் பரப்பிவரும் இலுமினாட்டி சதிக்கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் மூடநம்பிக்கைகள் என்ற வகைப்படுத்தலில் ஒன்று சேர்கின்றன.

மரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கவழக்கங்களே மிகவும் சரியானதென்றும்; நவீன அறிவியலை மறுதலித்து, இயற்கைக்குத் திரும்புதல் என்ற பெயரில் ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் வகையறாக்கள் வைக்கின்ற வியாக்யானங்கள் அபத்தமானவை என்பதை புரிந்துகொள்வதற்கும் இந்நூல் உதவி புரியும்.

இன்றும் நம் மக்கள் அன்றாட வேலை தொட்டு, குடியிருக்கும் வீடு வரை எண்ணிறந்த முட்டாள்தனங்களை பின்பற்றி வருகின்றனர். அதற்காகவே பெரும் பணத்தையும் செலவழிக்கின்றனர். இவற்றை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் மக்களிடையே பிரச்சாரம் செய்து  விழிப்பூட்டுவதற்கும் இந்நூல் உதவும்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: சம்பிரதாயங்கள் சரியா
ஆசிரியர்: மஞ்சை வசந்தன்

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007. பேச: 044 – 2661 8161.

பக்கங்கள்: 114
விலை: ரூ.70

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)

1 மறுமொழி

  1. ஈ வெ ரா வை பற்றி ‘மஞ்சை வசந்தன்’ எழுதியதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இதில் இது வேறா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க