தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்து விட்டார். இன்றைய அரசியல் சூழலில் இம்மரணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? மோடி அரசு பதவியேற்ற பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் நாடே பார்ப்பனியமயமாக்கப்பட்டு வருகிறது. இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, சங்கபரிவார தலைவர்களின் பெயர்சூட்டல்,  கல்வி காவிமயம், பசுக்களின் பெயரில் மனிதவதை, நீட் திணிப்பு…………… இவை போக பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி என பொருளாதாரத் தாக்குதல்!

தமிழகத்தில் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து திராவிட இயக்கம் பார்ப்பனிய எதிர்ப்பையும், சமூகநீதியையும் முதன்மைப்படுத்தி செயல்பட்டு வந்தது. சுயமரியாதை இயக்கம், பெரியார், தி.க, அண்ணா, தி.மு.க, கருணாநிதி எனும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் தமிழகம் பார்ப்பனிய எதிர்ப்பிற்கு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கியது.

பின்னர் திராவிட இயக்கம், தி.மு.க-வின் சமரசங்களால் பின்னடைவு நேர்ந்தாலும், அவர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட பார்ப்பனிய எதிர்ப்பு என்ற ஆதிக்க எதிர்ப்பு அரசியலை தமிழக மக்கள் மறந்து விடவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் எங்கும் சாத்தியமில்லாத அளவில் மோடியே திரும்பிப் போ, அமித்ஷாவே திரும்பிப் போ எனும் முழக்கம் இங்கே மட்டுமே சாத்தியமாகிறது. வள்ளுவர் கோட்டமும், குமரிக்கடலில் வள்ளுவர் சிலையும், அனைத்து சாதி அர்ச்சகர் சட்டமும் இந்துத்துவத்தின் கண்ணை உறுத்துவதால்தான் அடிமைகள் மூலம் மெரினாவில் தடை போடுகிறார்கள்.

ஜெயலிலிதா – சசிகலா கும்பல் தமிழகத்தை மொட்டை போட்ட காட்டாட்சியின் காலம் 1991 – 1996. 96-ம் ஆண்டில் வந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரக் காலத்தில் ஜெயா-சசி கும்பலின் அமைச்சர்கள் தமிழக மக்களால் பல இடங்களில் விளக்குமாற்றுடன் விரட்டப்பட்டனர். அதற்கு முன்பேயே இக்கொள்ளை கூட்டத்தை எதிர்த்து ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பல இயக்கங்களை தொடர்ச்சியாக நடத்தின. இதே காலத்தில் பாபர் மசூதி இடிப்பின் மூலம் இந்திய அரசியலில் சங்க பரிவாரத்தின் இந்துமதவெறி அரசியலும் ஆரம்பித்தது.

இந்துத்துவத்தை வேரறுக்கும் அரசியலை முன்வைத்து ம.க.இ.க அமைப்புக்கள் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது. அந்தப் போராட்டத்தை வரவேற்று தி.மு.க-வின் முரசொலி தலையங்கம் எழுதியது.

1996-ம் ஆண்டில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இந்த அரசமைப்பில் ஜெயா எனும்  குற்றக் கும்பலை, கொள்ளைக் கூட்டத்தை தண்டிக்க முடியாது என போராட்டம் நடத்தியது. அதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசிகலாவின் தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்றது. அன்று தி.மு.கவின் ஆட்சியின் துவக்க ஆண்டு.

மருத்துவமனையின் முன்பு குவிந்த தோழர்கள் போலீசால் தடியடி நடத்தப்பட்டு மண்டை உடைக்கப்பட்டனர். அப்போது ஓரிரு மணிநேரங்கள் வினோதகன் மருத்துவமனையின் பிரம்மாண்டமான கேட்டில் “மக்கள் மருத்துவமனை” எனும் பதாகையை தோழர்கள் கட்டியிருந்தனர்.

ஆம். பிறகு ஜெயா-சசி கும்பல் குற்றவாளி எனும் தீர்ப்பு வந்தது 2017-ம் ஆண்டு. அப்போது ஜெயா இல்லை. ஆனால் அவரது கூட்டமோ தனது சொத்துக்களை முன்னிலும் அதிகமாய் பெருக்கியிருந்தது. ஜெயாவின் உடலும் மெரினாவில் புதைக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கின் ஏ 1 சகல அரசு மரியாதைகளுடன் கடற்கரையில் புதைக்கப்பட்டார்.

இன்று தமிழகத்தை அடிமைப்படுத்த சங்கபரிவாரம் முழு வீச்சுடன் செயல்படுகிறது. கருணாநிதி காலத்து திராவிட இயக்கத்து இளைஞர்கள் கனவு கண்ட அந்த முற்போக்கான அரசியல் இன்று தமிழக இளைஞர்களின் கையில் இருக்கிறது – அது தி.மு.க-வின் கையில் இல்லை என்றாலும்.

கலைஞர் கருணாநிதி அந்த கனவின் அடையாளமாய் நம் முன் உறங்குகிறார். மக்கள் என்ன கருதுகிறார்கள்? சென்னை நகரில் இருந்து வினவு செய்தியாளர்களின் நேரடி செய்தி – புகைப்படங்களுடன் இன்றைய நேரலையைத் துவங்குகிறோம்.

6 மறுமொழிகள்

 1. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற நியாயமான சமூகநீதிக்காகவும், பார்ப்பனீயத்திற்க்கு எதிராகவும்… இன்னும் இந்திய ஆக்கிரமிப்பு படையை(IPKF) வரவேற்க்காமல் எதிர்ப்பு தெரிவித்ததும், ‘ராமன்’ எந்த கல்லூரியில் என்ஜினியரிங் படித்து பட்டம் பெற்றார் என்றும்…. இப்படி பல்வேறு வகைகளில் தமிழக அரசியலில் தொடர்ந்து செயலாற்றினார் கலைஞர் அவர்கள். இந்த வகையில் கலைஞரின் பார்ப்பனீய எதிர்ப்பு என்ற கொள்கையை தமிழ் இளைஞர்கள் ஆழக்கற்று ஆயுதமாகக்கொண்டு போராடுவதே கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி.
  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தொடர்ந்து அனைவரும் போராடி வெற்றி கிடைத்தது.ஆனால் பொதுவாக கட்சிகள், இயக்கங்கள்…தலைமை மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர் என்ற கருத்து பொதுவாக உள்ளது.அது முழுமையானது அல்ல ஏற்கனவே நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரி சித்தாந்தங்கள் அது சார்ந்த அமைப்புகள் இயக்கங்கள், தலித்திய அமைப்புகள் மற்றும் தந்தை பெரியார்,அண்ணா, கலைஞர்… போன்ற ஆளுமைகள் விதைத்த விதைகளின் விளைவாகவே ‘ஜல்லிக்கட்டு’ “டெல்லிக்கட்டாக” மாற்றம் பெற்றது.எனவே இந்த சந்தர்ப்பத்தில் இந்த வரலாறையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

 2. குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதே இயங்கியல் அறிவியல்.அவ்வாறே கலைஞர் கருணாநிதி,பார்ப்பன எதிர்ப்பு திராவிட சிந்தனை மரபின் ஆணித்தரமான ஆளுமை.அச்சிந்தனையின் வழித்தோன்றல்களாக கம்யூனிசப் புரட்சியாளர்கள் தொடர வேண்டும்.இயங்கியல் பொருள்முதல் வாதச் சித்தாந்தத்தோடு இணைக்க வேண்டும்.

 3. தேர்தல் சனநாயகத்தின் மூலம் பார்ப்பனியத்தை ஒழிக்க முடியாது என்பதற்கு கலைஞர் ஆட்சியே சாட்சி. அதற்கு தீர்வு பொதுவுடைமை சமூகத்தில் இருக்கிறது. அதை அமைக்க வரும் தலைமுறை “சல்லிக்கட்டு” வழியில் போராடும் காலமும் விரைவில் வரும்.

 4. பரம்பரை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம்
  அரசுப்பணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம்
  மேற்கண்ட இரண்டும் பெரியாரின் தொண்டர், அண்ணாவின் தம்பி தலைவர்
  கலைஞரின் சாதனைகள்.
  கலைஞரின் நிறைகுறைகள் இரண்டையும் இவ்வேளையில் நடுநிலையோடு
  பதிவுசெய்திருக்கும் வினவிற்கு என் பாராட்டுக்கள்.

 5. கலைஞர் சாதனை பார்ப்பன எதிர்ப்பில்/திராவிட அரசியலில் மகத்தானது. ஆனால் தற்போது உள்ள கள கட்சிக்கும் இணைய திமுக விற்கும் துளியும் சம்பந்தமே இல்லை. இணைய திமுக ஆதரவாளர்கள் முட்டுக்கொடுக்குது. ஆனா களத்துல திமுக மற்றும் அதிமுக ஒரே மாதிரி ஜாதியை வைத்தே இயங்குது. பெரிய வித்தியாசம் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க