மறையாத சூரியன்

போராட்டத்திற்கு
மெரினாவில் இடமில்லை
என்பதிலேயே புரிந்துவிட்டது
கலைஞருக்கு
மெரினாவில் இடமில்லை
என குரலெழுந்ததன்
காரணம்.

கலைஞர்
உயிர் வாழ போராடிய
காவேரி மருத்துவமனை – வாயிலில்,
குருமூர்த்தி  வாயி.. லில்,
”கலைஞர் நாட்டுக்கே உரியவர்
நல்லவர், பெரியவர்” என
சந்தியா வந்தன நடிப்பு!

அவர் இறந்த
அடுத்த நொடியே
கலைஞருக்கு மெரினாவில்
இடம் தரக் கூடாது என
கட்டுக்கடங்காத, கர்ப்பம் தாங்காத
பார்ப்பனக் கொழுப்பு!

பல முறை
வதந்திகளின் மலர் வளையத்தோடு
திரிந்த ஆரியப் பாம்புகள்
சந்துக்கு சந்து டுவிட்டரில் சிலிர்ப்பு!
முகநூலில்
பூநூல் முளைப்பு.

வெறுக்க வேண்டியதை
வெறுத்ததனால்
ரிஷிக்கோத்திரங்களுக்கு
கலைஞர் மீது வெறுப்பு!

விட்டாரா கலைஞர்?
பிறந்த குழந்தை
உதைப்பதில் என்ன பெருமை!
இறந்த குழந்தை
எட்டி உதைத்தது போல்
பார்ப்பன வெறுப்பின் முகத்தில்
காலை நீட்டிவிட்டு
கம்பீரமாய்
மெரினாவில் கலைஞரின் விதைப்பு!

இறந்தவர் முகத்திலோ
இன்னும் யோசிப்பதுபோல
ஒரு திளைப்பு.
வயிற்றெரிச்சல் குலங்களின்
முகத்திலோ
வற்றாத  சவக்களை,
செத்துப்பிழைத்த தவிப்பு.

மக்களுக்காக
தினையளவு சிந்திப்பவரையும்
மக்களுக்கு பிடிக்கும்.
கலைஞரை
மக்களுக்கு பிடிக்கும்
காரணம் இதுதான்.

அடிமைத்தனத்தை
எதிர்ப்பதே அறிவு
என தெளிந்த பருவம் முதல்
முதிர்ந்த பருவம் வரை,
உலகின் கொடிய
ஆரியப் பார்ப்பன
மனித விரோத மனுநீதியை
எதிர்த்துச் சமர் புரியும்
வலியை உணர்பவர்களுக்கு
வருகிறது
கலைஞருக்காக கண்ணீர்!

தனக்காக மட்டும்
சிந்திக்கும் வரம்பிருந்தும்
வாழ வாய்ப்பிருந்தும்
தமிழ் நரம்பெங்கும்
பார்ப்பன எதிர்ப்பு விசையை
பாய்ச்ச மறவாத
ஒரு கால நதியை
இழந்த சோகம் இது.

பிறருக்கானதாய்
இருக்க வேண்டும் வாழ்க்கை
தனக்கானதாய்
இருக்க வேண்டும் மரணம்
இந்த தகுதியுடையோரை
வெறுப்பதில்லை மக்கள்.

சமத்துவபுரத்தில்
அவாளுக்கும்
இடம் ஒதுக்கினாலும்,
சமத்துவம் என்றாலே
அவாளுக்கு வெறுப்பு
மயிலாப்பூர் தீர்த்தம் மட்டுமல்ல
வங்க கடலும்
அவாளது என்ற நினைப்பு!

பின்னே,
காத்துவாங்க வருமிடத்தில்
கலைஞரைப் பார்த்தால்
வியர்த்து வாங்காதா?

பாலம் கட்ட
ராமன் என்ன என்ஜினியரா?
குரங்கு என்ன கொத்தனாரா?
என்ற கரகரப்பு
தொண்டைக்கு வந்து படுத்தாதா!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை…
கலைஞர் மறைந்ததாய்
அவாள் நம்பவில்லை
தமிழர்களே!
தயவுசெய்து
அந்த நம்பிக்கையை
கெடுக்காதீர்கள்!

  • துரை. சண்முகம்

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்