மறையாத சூரியன்

போராட்டத்திற்கு
மெரினாவில் இடமில்லை
என்பதிலேயே புரிந்துவிட்டது
கலைஞருக்கு
மெரினாவில் இடமில்லை
என குரலெழுந்ததன்
காரணம்.

கலைஞர்
உயிர் வாழ போராடிய
காவேரி மருத்துவமனை – வாயிலில்,
குருமூர்த்தி  வாயி.. லில்,
”கலைஞர் நாட்டுக்கே உரியவர்
நல்லவர், பெரியவர்” என
சந்தியா வந்தன நடிப்பு!

அவர் இறந்த
அடுத்த நொடியே
கலைஞருக்கு மெரினாவில்
இடம் தரக் கூடாது என
கட்டுக்கடங்காத, கர்ப்பம் தாங்காத
பார்ப்பனக் கொழுப்பு!

பல முறை
வதந்திகளின் மலர் வளையத்தோடு
திரிந்த ஆரியப் பாம்புகள்
சந்துக்கு சந்து டுவிட்டரில் சிலிர்ப்பு!
முகநூலில்
பூநூல் முளைப்பு.

வெறுக்க வேண்டியதை
வெறுத்ததனால்
ரிஷிக்கோத்திரங்களுக்கு
கலைஞர் மீது வெறுப்பு!

விட்டாரா கலைஞர்?
பிறந்த குழந்தை
உதைப்பதில் என்ன பெருமை!
இறந்த குழந்தை
எட்டி உதைத்தது போல்
பார்ப்பன வெறுப்பின் முகத்தில்
காலை நீட்டிவிட்டு
கம்பீரமாய்
மெரினாவில் கலைஞரின் விதைப்பு!

இறந்தவர் முகத்திலோ
இன்னும் யோசிப்பதுபோல
ஒரு திளைப்பு.
வயிற்றெரிச்சல் குலங்களின்
முகத்திலோ
வற்றாத  சவக்களை,
செத்துப்பிழைத்த தவிப்பு.

மக்களுக்காக
தினையளவு சிந்திப்பவரையும்
மக்களுக்கு பிடிக்கும்.
கலைஞரை
மக்களுக்கு பிடிக்கும்
காரணம் இதுதான்.

அடிமைத்தனத்தை
எதிர்ப்பதே அறிவு
என தெளிந்த பருவம் முதல்
முதிர்ந்த பருவம் வரை,
உலகின் கொடிய
ஆரியப் பார்ப்பன
மனித விரோத மனுநீதியை
எதிர்த்துச் சமர் புரியும்
வலியை உணர்பவர்களுக்கு
வருகிறது
கலைஞருக்காக கண்ணீர்!

தனக்காக மட்டும்
சிந்திக்கும் வரம்பிருந்தும்
வாழ வாய்ப்பிருந்தும்
தமிழ் நரம்பெங்கும்
பார்ப்பன எதிர்ப்பு விசையை
பாய்ச்ச மறவாத
ஒரு கால நதியை
இழந்த சோகம் இது.

பிறருக்கானதாய்
இருக்க வேண்டும் வாழ்க்கை
தனக்கானதாய்
இருக்க வேண்டும் மரணம்
இந்த தகுதியுடையோரை
வெறுப்பதில்லை மக்கள்.

சமத்துவபுரத்தில்
அவாளுக்கும்
இடம் ஒதுக்கினாலும்,
சமத்துவம் என்றாலே
அவாளுக்கு வெறுப்பு
மயிலாப்பூர் தீர்த்தம் மட்டுமல்ல
வங்க கடலும்
அவாளது என்ற நினைப்பு!

பின்னே,
காத்துவாங்க வருமிடத்தில்
கலைஞரைப் பார்த்தால்
வியர்த்து வாங்காதா?

பாலம் கட்ட
ராமன் என்ன என்ஜினியரா?
குரங்கு என்ன கொத்தனாரா?
என்ற கரகரப்பு
தொண்டைக்கு வந்து படுத்தாதா!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை…
கலைஞர் மறைந்ததாய்
அவாள் நம்பவில்லை
தமிழர்களே!
தயவுசெய்து
அந்த நம்பிக்கையை
கெடுக்காதீர்கள்!

  • துரை. சண்முகம்

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

5 மறுமொழிகள்

  1. இறந்த பின்னும் போராடி
    அண்ணா நிழலில்
    இளைப்பாறும் பாசத்தம்பி கலைஞர்.

  2. சந்தியா வந்தன நடிப்பு!//.

    என்னே அற்புதமான வரிகள்! நடிப்புகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் பார்ப்பனீய கொடுரமன நடிப்புகளில் ஆககொடூரமான நடிப்புதான் இந்த சந்தியா வந்தன நடிப்பு.இதன் உளவியலை இது போன்று அறிவியலாக வேறு எப்படி துல்லியமாக விளக்க முடியும் நாறுக்காக!

    இடம் தரக் கூடாது என
    கட்டுக்கடங்காத, கர்ப்பம் தாங்காத
    பார்ப்பனக் கொழுப்பு!//👌👌👌
    கேடுகெட்ட பார்ப்பனீயமே இனியும் நீ இந்த பூப்பந்தில் ஜீவித்தல் தகுமோ…

  3. கலைஞருக்கே வெளிச்சம்

    புதிய வைர முத்துக்களாக
    புதிய திராவிட ‘சோ’க்களாக மாறி
    ஒரு ஆளும் வர்க்கத் தலைவருக்காக சப்பைக் கட்டுவதும்
    இரங்கற்பா பாடுவதும்
    ஒரு வகையில் புரட்சி தான்…
    ஆம்…
    புரட்சியில் புரட்சி !

    உதய சூரியனை ஓணானாக வரைந்து, அதை நியாயப் படுத்தியது ஒரு காலம் . . .

    மறையாத சூரியனுக்கு வாழ்த்துப் “பா” இசைப்பது காலத்தின் கோலம்.

    இரங்கற்பாவுக்கு இடையில் தலைவர் ஆட்சியில்
    காணாமல் அடிக்கப்பட்ட ,
    அந்த நக்சலைட் அப்புவின் பேர் யாருக்கேனும்நினைவுக்கு வந்து விட்டால்?
    அட நீங்க வேற,
    அதுவும் புரட்சிதான்,
    இடது தீவிரவாதத்தை ஒழித்த புரட்சி.

    தாமிரபரணி படுகொலை ?
    அதற்கு சமூக அமைப்பு பொறுப்பு, அவருக்கு பொறுப்பில்லை என பதில் சொல்லிவிடலாம்.

    புதிய வைர முத்துக்களாக, சோக்களாக மாறுவதற்கு
    எந்த அநீதியையும் எழுதி சமாளிப்பது தானே அடிப்படைத் தகுதி. ..

    சரி… அப்போ …
    புரட்சி
    மக்கள் அதிகாரம்?
    அதெல்லாம்

    கலைஞருக்கே வெளிச்சம் …

    • விவேக் கவிதையை மீண்டும் ஒரு முறையேனும் படியுங்கள். இந்த கவிதையில் பார்ப்பனீய கொழுப்பையும், அதன் இரட்டை வேடத்தையும், அந்த ‘திராவிட கிழவன்’ மீது இயற்கை எய்தியபின்னும் பார்ப்பன பகை எத்துணை வன்மத்துடன் தொடர்கிறது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார் கவிஞர்.

      உங்கள் விமர்சனம் சோ போன்ற வலதுபயங்கரத்துடன் கவிஞரை ஒப்பிடுவது பார்ப்பனீய வன்மத்தை விட அதிவன்மமாக உள்ளது.

  4. விவேக்கு ரொம்பத்தான் பொங்குறாரு…..ஆனா, பெரியார், கலைஞர் பத்தி உழைக்கும் ஜனங்க சரியாத்தான் அணுகுறாங்க….. இதற்கு நேரடி உதாரணம் இது.

    வழக்கமான வேலைக்கிப்போற டிரெயினுக்கு காத்திட்டு இருந்தேன். டிரெயின் கேட்டுப்போட்டாச்சானு திரும்பிப்பாத்தேன். எதிரில், லட்சுமி. ரேஷன் கடையில் வேலைப்பார்ப்பவர். அவசரமா ஓடி வந்தார். என்னையப் பார்த்ததும் ஒரே குஷி. ஞாயிற்றுக்கிழமை நான் மட்டுந்தான் போறேன்னு நினைச்சேன். துணைக்கு நீயும் வந்துட்டீயா? ன்னு சிரித்து, உன்னை எதிர்பார்த்துட்டீருந்தேன். உங்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும். என்றார்.

    டிரெயின்ல உட்கார்ந்துட்டு பேசலாமா? என்றேன்.

    டிரெயின்ல உட்கார்ந்தோம். கலைஞர் தாத்தா டேத்துக்கு அப்புறம் உன்னைய பாக்க முடியலயே….. என்றார்.

    மதிய ஷிப்டு என்றேன்.

    புதன் கிழமை கலைஞர் டெத் அன்னிக்கு, காலையிலர்ந்து டிவி, ஓடுனது ஓடுனப்படி இருந்துது. எங்கப்பா, சோத்தைப்பத்தியும் நினைக்கல…. மத்த எதையும் டிவியில பாக்கல….. சாயங்காலம் அடக்கம் முடிஞ்சதும், எங்கப்பா, எங்க வீட்டுல சாவு விழுந்த மாதிரி…. அவசரமா எழுந்து, வீட்டை கழுவித்தள்ளி, எல்லாரும் தலைக்கி குளிக்கங்க….. னு சோகமானார். எல்லாரையும் அவசரப்படுத்தி குளிக்க வைச்சாரு…… குளிச்சி, வீட்டைக் கழுவிட்டேன். மெரினாவின் துக்கத்தை எங்கவீட்டுத் துக்கமாக்கிட்டாரு……தோச ஊத்திக்கொடுத்தா அப்பவும் அவர் சாப்பிடல…. மறுபடியும், கலைஞரப் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாரு……

    ‘பெரியாருக்கப்புறம், பொம்பளங்க மேல அக்கறையோட இருந்தது. கலைஞருத்தான். பெரியாரு ஜனங்களுக்கு செய்யணும்னு நினைச்சத… இவருத்தான் செய்ஞ்சாரு…. இனி இதமாதிரி ஆளங்கள எங்க பாக்கப்போறோம். என்று ஆதங்கப்பட்டாரு….

    கடைசியா…. சொன்னாரு….. இன்னா….. கடைசில, சாவுறக் காலத்துல பெரியாரு மணியம்மாவ கட்டிக்கிட்டாரு….. அதான் சங்கடமா இருக்கு…அந்த வழியில கலைஞரும் மூணுப் பொண்டாட்டி வைச்சிக்கனாரு….. தப்புனா அதுதான் அவங்க மேலே சொல்ல முடியும் னு திரும்பவும் சாப்பிடாமயே படுத்துட்டாரு…..

    இதற்குமுன்னேயே எனக்கு பெரியாரப்பத்தி எங்கப்பா நிறைய சொல்லியிருக்காரு… நான் சின்ன வயசுலயே விதவையாயிட்டேன்… மாமியார் வீட்டுப்பக்கமும், அக்கம்பக்கமும் அதுக்கு அனுதாபப்பட்டாங்க… ஆறுதல் சொன்னாங்க…அதோட சரி. ஆனா, அப்பவே எங்கப்பா, பெரியாரப்பத்திச் சொல்லி….. உனக்கு விருப்பன்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க…. னு சொன்னாரு… நான் தான் இரண்டு பிள்ளகள பாத்துக்கணும். புதுசா வரவன் எப்படி பாத்துப்பானோனுட்டு வேணானுட்டேன்….

    எனக்கும், சந்தேகம்….. ஏன் …..வயசானக் காலத்துல பெரியார் இப்படி செய்ஞ்சாரு….அதுதான் உன்கிட்ட கேட்கலாமுனு காத்திட்டுருந்தேன். என்றார்.

    அதற்கு நான், பெரியார்….. வாழ்நாள் முழுக்க…. பெண் இனத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், உழைச்சாரு….. இன்னிக்கு பெண்களுக்கு தன்னுடைய தாத்தாவிடப் பெரியாரத்தான் ரொம்பப் பிடிக்கும்… எனக்கும் அப்படித்தான். ஏன்னா? பொண்ணுனா இப்பிடித்தான் இருக்கணும், வாழணும். னு நமக்கு மட்டும் ஆயிரத்தெட்டு பழைய ரூல்ஸ். அதையெல்லாம் உடைச்சி, உன்னுடைய பாதை விசாலமானது யாருக்கும் நீ சளைச்சவ இல்ல…. எது உன்ன அடிமைப்படுதோ எது தடையா இருக்கோ அத தூக்கிப்போடுனு சொன்னார், அதால இயல்பா பெண்களுக்கு அவர எவ்வளவுப்பிடிக்கும்? அவ்வளவுப்பிடிச்சிது அவருக்கு உதவியா இருந்த மணியம்மைக்கு…… வயசான காலத்துல அவரப் நிரந்தரமா பாத்துக்கவும், அவரோட கொள்கைய தன்னுடைய வாரிசாக்கிக்கவும் மணியம்மை துணிஞ்சி அவரக் கட்டிக்கிட்டாங்க…… இது அவங்க இஷ்டம்… இதுப் பெரிய குற்றமா? என்றேன். கலைஞர் விஷயம் வேற….அவரு தவிர்த்திருக்கலாம். ஆனா, அரசியல உங்கப்பா சரியாதான் பாத்திருக்காரு…… அவங்க கொள்கைய மட்டுந்தான் எடுத்துக்கினுருக்காரு…….தனிப்பட்ட வாழ்க்கைய கறாராப் பாத்திருக்காரு….. விமர்சனம் வைக்கிராரு… அது தப்பில்ல…….என்றேன்.

    இதுக்குத்தான் உன்னைக்கேட்டேன். சிரிப்போட தலையாட்டினார்.

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க