திருமுருகன் காந்தியை விடுதலை செய் !

மே 17- ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் ! அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி நிலையை போராடி முறியடிப்போம் !

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து 09.08.2018 காலையில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

பழைய வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தியை  பெங்களூரில் கைது செய்து தமிழக போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர். தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்ப்போரைக் கைது செய்வதற்கு குறிப்பான காரணங்கள் இருக்க வேண்டியதில்லை. ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பல வழக்குகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு தேவைப்படும் போது கைது செய்கின்றனர். இயக்குநர் கவுதமன், தமிழக வாழ்வுரிமை இயக்கத்தின் வேல் முருகன் ஆகியோரை இப்படித்தான் கைது செய்திருக்கின்றனர்.

அது போல கடந்த ஜூன் மாதம் திருமுருகன் காந்தி பேசிய வீடியோவில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசினார் என்று சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்திருந்தனர். தற்போது அந்த வழக்கு தொடர்பாக கைது செய்திருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது என்.எஸ்.ஏ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளையும், தூத்துக்குடி மக்கள் சார்பில் போராடிய முன்னணியாளர்கள் மீது பல பத்து வழக்குகளையும் போட்டு போலீசு ஒடுக்கி வருகிறது. அந்த வழக்குகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் எதிர் கொண்டு தகர்த்து வருகிறது. இருப்பினும் இன்றைக்கும் தூத்துக்குடியில் அரசும் போலீசும் தனது மிரட்டலை விட்டுவிடவில்லை.

இந்நிலையில் திருமுருகன் காந்தி ஐ.நா. ஆணையம் ஒன்றில் ஸ்டெர்லைட் குறித்து பேசினால் சும்மா இருப்பார்களா? தமிழகம் இன்று காட்டாட்சியின் பிடியில் தத்தளிக்கிறது. எட்டு வழிச்சாலையை எதிர்க்கும் மக்களை தொலைக்காட்சியில் பேசினாலேயே தூக்கிச் சென்று விடுகிறது போலீசு.

இறுதியில் யாரும் பேசிவிடக் கூடாது என்பதே மோடி அரசின் உத்தரவில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசின் ஒரே வேலை! கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை என்று இந்த கும்பல் போட்ட ஆட்டம் ஒட்ட நறுக்கப்பட்டது. அது தொடரவேண்டும். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!

– வினவு செய்திப் பிரிவு

  • மே 17- ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் !
  • இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போராடி முறியடிப்போம் !
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க