டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 70-க்கு வீழ்ச்சியடைந்தற்கான உடனடி காரணம் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு 45% வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்பீர்கள்.
துருக்கி லிரா ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். துருக்கி என்ற நாடு, அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை இவற்றை நமது நாட்டோடு ஒப்பிட்டால்தான் இதை புரிந்து கொள்ள முடியும்.
துருக்கியின் மக்கள் தொகை சுமார் 8 கோடி (இந்தியாவின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடியது), இந்திய மக்கள் தொகையில் 15-இல் ஒரு பங்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு.
எனவே, ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் ($11,114) இந்தியாவை ($2,134) விட 5 மடங்கு அதிகம். இரண்டு நாடுகளுமே அன்னிய முதலீட்டைச் சார்ந்து, மலிவான உள்நாட்டு உழைப்பையும், திறன்சார் உழைப்பையும் விற்பதை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளன.
துருக்கி அதிபர் எர்டோகன் இசுலாமிய மதவாதத்தை தூண்டி, சிறுபான்மை மக்களை படுகொலை செய்து, அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்கி, ஜனநாயக நிறுவனங்களை துவம்சம் செய்து சர்வாதிகாரத்தை தன் கையில் குவித்திருக்கிறார்.
1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக இருந்த அவர் 2002-இல் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2007, 2011 தேர்தல்களிலும் வெற்றி பெற்று 2014-இல் நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி நாட்டு அதிபராக பதவி ஏற்றார். 2018-இல் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2028 வரை பதவியில் நீடிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.
மோடி பயணிப்பது எர்டோகன் போட்ட பாதையில் என்று உங்களுக்கு தோன்றினால் அதில் தவறு ஏதும் இல்லை.
இது தொடர்பாக மைக்கேல் ராபர்ட்ஸ் என்ற மார்க்சிய பொருளாதார அறிஞர் ஆகஸ்ட் 11, 2018 அன்று எழுதிய Turkey Total Meltdown கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே
துருக்கி : ஒட்டு மொத்த வீழ்ச்சி
துருக்கிய லிரா முழு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் டாலருக்கு எதிரான தனது மதிப்பில் 40%-ஐ இழந்திருக்கிறது. சென்ற வாரத்தில் 20% வீழ்ச்சியடைந்திருக்கிறது. சமீபத்திய தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கியின் எதேச்சதிகார அதிபர் ரிசல் தயீப் எர்டோகனின் தாறுமாறான பொருளாதார கொள்கையும், துருக்கிய நிறுவனங்களும் தனிநபர்களும் செய்த வினைகளும் நாட்டைச் சுட ஆரம்பித்திருக்கின்றன.
அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் பங்கு வகித்ததற்காக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அப்துல்ஹமித் குல் மீதும், உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு மீதும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை அமெரிக்கா சுமத்தியது இந்த நெருக்கடியை வெளிக் கொண்டு வந்தது.
பாதிரியார் பிரன்சன் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் ஒரு சிறு கிருத்துவ சபையை நடத்தி வந்தார். எர்டோகன் ஆட்சிக்கு எதிரான சதித் திட்டத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் அக்டோபர் 2016-இல் கைது செய்யப்பட்டார்.
பிரன்சன் இந்த குற்றச்சாட்டுக்களை “அவதூறு” என்று மறுத்திருக்கிறார். சிரியா தொடர்பான எதிரெதிர் நிலைப்பாடுகள், அமெரிக்க ஆயுதங்களை வாங்குவது போன்ற துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பல சச்சரவுகளில் ஒன்றுதான் பிரன்சனின் கைது.
இந்நிலையில், துருக்கிய ஸ்டீல் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதம் ஆக உயர்த்துவதாக அமெரிக்க வர்த்த அமைச்சர் வில்பர் ராஸ் அறிவித்தார். இதற்கு முன்பு அமலில் இருந்த 25% வரி அமெரிக்காவுக்கு துருக்கியின் ஏற்றுமதிகளை குறைப்பதற்கு போதுமானதாக இல்லையாம்.
“துருக்கியில் இருந்து இறக்குமதி ஆகும் ஸ்டீல் மீதான வரியை இரட்டிப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வர்த்தக அமைச்சகம் கருதும் இந்த இறக்குமதிகளை மேலும் குறைக்கும்” என்று ராஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
லிராவின் தற்போதைய வீழ்ச்சிக்கு இவை தூண்டுதல்களாக இருந்தாலும் துருக்கிய பொருளாதாரத்தின் வேகமான சீர்குலைவுதான் அதன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்துகிறது. 2016-இல் தனக்கு எதிரான தோல்வியடைந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு எர்டோகன் பொருளாதாரத்தை ஊதிப் பெருக்கும் வகையில் கடன்களை வாரி வழங்க ஆரம்பித்தார். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேரை சிறையில் அடைத்து, அதை விட அதிகமான எண்ணிக்கையிலானவர்களை கல்வித்துறையிலிருந்தும், அரசு பதவிகளிலிருந்தும் பணிநீக்கம் செய்தார்.
வட்டி வீதங்களை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, வேகமாக அதிகரித்து வந்த பண வீக்கத்தை கட்டுப்படுத்த துருக்கியின் ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். “அனைத்து தீமைகளுக்கும் தாயும் தந்தையும் வட்டி வீதங்களே” என்பது அவரது கோட்பாடு.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியதால் டாலர் வலுவடைந்து வந்த நேரத்தில், எர்டோகனின் பொருளாதார நடவடிக்கைகளை துருக்கியின் முதலாளித்துவ பொருளாதாரத்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது.
துருக்கியின் தொழில்துறை வளர்ச்சி, கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றுக்குத் தேவையான நிதி ஆதாரத்தில் பெரும்பகுதி, அமெரிக்க, ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மூலமாக வெளிநாட்டில் இருந்து வருகின்றன. துருக்கி எரிசக்தி ஆதாரங்களை சொந்தமாக கொண்டிருக்கவில்லை; மனிதத் திறமையையும், மலிவான உழைப்பையும் சார்ந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது.
இந்நிலையில், துருக்கியின் குடிமக்களும் நிறுவனங்களும் டாலரிலும், யூரோக்களிலும் பெருமளவு கடன் வாங்கி குவித்திருக்கின்றனர். [இது இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை ஒத்திருக்கிறது]
கடந்த இரண்டு ஆண்டுகளில் துருக்கிய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்ற தோற்றம் கடன், அன்னிய நிதி முதலீடுகள் என்ற பலவீனமான அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டது. ஏற்றுமதியை விட அதிக அளவு இறக்குமதிகள் வந்து குவிந்தன.
துருக்கிய மூலதனத்தின் இலாப வீதம் வெகுவாக சரிந்தது. உலகச் சந்தையில் டாலர் மதிப்பு அதிகரிப்பும் வட்டி வீதங்கள் உயர்த்தப்படுவதும் துருக்கிய பலூனை வெடிக்க வைத்து உலக முதலாளித்துவத்தின் நிதர்சனங்களை எர்டோகனுக்கு உணர்த்தின.
துருக்கியின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் இப்போது படு மோசமான சுழலில் சிக்கியுள்ளனர். துருக்கியின் நிதி அல்லாத நிறுவனங்களின் அன்னிய நாணய கடன்கள், அவர்களது அன்னியச் செலாவணி கையிருப்புகளை விட $20,000 கோடி அதிகமாக உள்ளன.
அந்த நாட்டின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் பல நூறு கோடி டாலர் அன்னியக் கடன்களை விரைவில் கட்ட வேண்டியிருக்கிறது. அடுத்த ஒரு ஆண்டில் துருக்கியின் வங்கிகள் $5,100 கோடி கடன் கட்ட வேண்டியிருக்கிறது. இன்னும் $1,850 கோடி கடன் நிதித்துறை அல்லாத கார்ப்பரேட்டுகள் வசம் உள்ளது.
கார்ப்பரேட் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62 சதவீதமாக இருக்கும் நிலையில்தான் (அவற்றில்பாதி டாலர், யூரோ போன்ற அன்னிய நாணயங்களில் கட்ட வேண்டியவை) கடன்காரர்கள் கழுத்தில் துண்டை போடுகின்றனர்.
இந்தக் கடன்களை துருக்கியால் கட்ட முடியாது என்று அன்னிய முதலீட்டாளர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். அதன் குறுகிய கால வெளிநாட்டுக் கடனுடன் ஒப்பிடும் போது துருக்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு மேலும் குறைந்துள்ளது.
இது எல்லாம் சேர்ந்து துருக்கியிலிருந்து மூலதனம் வெளியேற காரணமாக அமைந்தன. எனவே லிரா மண்ணைக் கவ்வியது.
இப்போது சர்வதே மூலதனத்தின் இன்னொரு கவலை என்னவென்றால் துருக்கியின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் கடன் கட்டத் தவறினால், அவற்றுக்குக் கடன் கொடுத்திருக்கும் ஐரோப்பிய வங்கிகளின் நிலைமையும் மோசமாகும். இழப்புகளும், கடன் கட்ட தவறுதலும் இவ்வாறு நாடு கடந்து பரவுவது “தொற்று” என்று அழைக்கப்படுகிறது. துருக்கியின் வங்கிகளில் சில வெளிநாட்டவர்க்கு சொந்தமானவை, மேலும் துருக்கிக்கு பெருமளவு கடன் கொடுத்திருக்கும் வங்கிகள் ஸ்பெயினின் BBVA, இத்தாலியின் யூனிகிரெடிட், பிரான்சின் BNP பாரிபா ஆகியவை.
துருக்கியின் வங்கிகளிடம் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தோன்றுகிறது. மேலும் ஐரோப்பிய வங்கிகள் துருக்கிக்கு கொடுத்திருக்கும் கடன்கள் அவற்றின் மொத்த கடன் பட்டியலில் ஒரு சிறு பகுதிதான்.
ஆனால், ‘இலாபங்கள் கையைக் கடிக்கும் நேரத்தில் சிறிதளவு’ இழப்புகள் கூட நிலைகுலையச் செய்து விடலாம். ஐரோப்பிய வங்கிகளின் வாராக் கடன்கள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன (கடன் கையிருப்பில் ‘வாராக்’ கடன்களின் %, வரைபடத்தை பார்க்கவும்)
இந்த நாணய நெருக்கடியில் இருந்து எர்டோகன் எப்படி விடுபட முடியும்? இதற்கான முதலாளித்துவ தீர்வின் முதல் படி வட்டி வீதங்களை விண்ணளவுக்கு உயர்த்துவதன் மூலம் இனிமேலும் கடன் வாங்குவதை தடுத்து நிறுத்துவது ஆகும் [இந்திய ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருக்கிறது].
அதன் பிறகு அரசு செலவினங்களை கடுமையாக வெட்டி, வரிகளை உயர்த்த வேண்டும் (அதாவது நிதிச் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்). இந்த ‘சேமிப்புகளை’ பயன்படுத்தி வங்கிகளுக்கு நிதி வழங்கி அவை தமது வெளிநாட்டு கடன்களை அடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் கிரீஸ் நாட்டைப் போல சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தி நிற்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளின்படி, துருக்கி தனது கடன்களை அடைப்பதற்கு $2,800 கோடி வரை கடன் வாங்க முடியும். ஆனால், அந்த வசதியை பயன்படுத்த வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்.
இதுதான் துருக்கியின் நெருக்கடிக்கான முதலாளித்துவ தீர்வு. இது பொருளாதாரத்தில் படு தீவிரமான வீழ்ச்சியை ஏற்படுத்தும், துருக்கி மக்களை கடுமையாக பாதித்து எர்டோகனின் ஆதரவை அரிக்கும்.
இதற்கு மாற்றாக, மூலதன கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் நாட்டிலிருந்து பணம் வெளியேறுவதை தடுக்கலாம். ஆனால், அப்படி செய்தால் பிற நாடுகளும், வெளிநாட்டு வங்கிகளும் கடன்களை ரத்து செய்து விடுவார்கள், பொருளாதாரம் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்ளும்.
இதை எதிர்கொள்ள பாகிஸ்தான் செய்தது போல ரசியா, சீனா அல்லது சவுதி அரேபியாவிடமிருந்து நிதி உதவி பெற முயற்சிக்கலாம். ஆனால், இந்த நாடுகளுடனும் எர்டோகனின் உறவு மோசமாக உள்ளது.
இவை எதையும் கண்டு கொள்ளாத எர்டோகன் ‘கடவுள்’ மீதும் தன் மீதும் நம்பிக்கை வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு சொல்கிறார். [மோடி, மோடி என்று ஜெபிக்கும் படி பக்தாக்களுக்கு பா.ஜ.க. சொல்வதைப் போல]
துருக்கியின் நெருக்கடியை விட சர்வதேச முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சனை வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் கடன் நெருக்கடி.
மே மாதம் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்ற துருக்கியின் பொதுத் தேர்தலுக்கு பிறகு இதைத்தான் நான் சொல்லியிருந்தேன்.
“உலகளாவிய வட்டி வீதங்களின் அதிகரிப்பும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடங்கிய கடுமையான வர்த்தகப் போரும் துருக்கி போன்ற வளரும் முதலாளித்துவ பொருளாதாரங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது. அன்னிய கடன் வாங்குவதற்கான வட்டி வீதம் கடுமையாக அதிகரிக்கும், அன்னிய முதலீடுகள் வெளியேற ஆரம்பிக்கும். அர்ஜென்டினாவில் இது ஏற்கனவே நடந்து விட்டது. அதை அடுத்து உக்ரைன், தென் ஆப்பிரிக்கா போன்றவை அடங்கிய கடன் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இப்போது முன்னணிக்கு வந்திருக்கிறது.”
அதாவது, லிராவின் வீழ்ச்சி ஒரு தொடக்கம் மட்டும்தான். இன்னும் நிறைய காத்திருக்கிறது.
நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை
மேலும் :Turkey: total meltdown
“அனைத்து தீமைகளுக்கும் தாயும் தந்தையும் வட்டி வீதங்களே” என்பது அவரது கோட்பாடு.///
ஒருவேளை துருக்கிய கம்யூனிஸ்ட்கள் உருதுகானுக்கு எதிராக புரட்சி செய்து அவரை நீக்கி விட்டு நாட்டை வழிநடத்தினால் வட்டி சம்மந்தமாக தங்களின் கொள்கை எப்படி இருக்கும்?
வட்டி வாங்கி மக்களை சுரண்டுவார்களா? கம்யூனிஸிய பொதுவுடமைவாதிகள்?
Communism is against capitalistic mode of economy. So, there is no interest rate or loan.
ஹைதர் அலி சார்,
கம்யூனிஸ்டுகள் புரட்சி செய்தால் அங்கு முதலாளித்துவம் இருக்காது, எனவே வட்டி வீதமும் இருக்காது. முதலாளித்துவ முரட்டுக் குதிரையின் மீது ஏறிக் கொண்டு கடிவாளத்தை தூக்கி எறிந்து விட்டு தலை குப்புற விழும் முட்டாள்கள் இல்லை கம்யூனிஸ்டுகள்.
அப்படினா சீனா உள்ள வட்டியே இல்லயா? (உடனே சீனா கம்னிஸ்ட் நாடே இல்ல அவன் ஒரு கம்முனாட்டி நாடுன்னு சொல்லி கிட்டு வந்துடாதீங்க) செத்து போன ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை வச்சுக்கிட்டு நீங்க போடுற அலப்பறை தாங்கமுடியலபா..
சீனாவில் முதலாளித்துவம் இருப்பதால் வட்டி வீதமும் இருக்கிறது, அந்த ஊர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் புத்திசாலிகள். துருக்கியில் முதலாளித்துவத்தை வைத்துக் கொண்டு வட்டி வீதத்தை நிராகரிக்கும் எர்டோகனின் கோட்பாடு முட்டாள்தனமானது. இதுதான் விஷயம்.
1300 வருசத்துக்கு முன்னால் எழுதி வைத்ததுதான் சாஸ்வதம் என்று அலப்பறை விட்டுக் கொண்டிருக்கும் இந்த இசுலாமிய கூட்டத்தை விட, 3000 வருடத்துக்கு முன்பு எழுதி வைத்த வேதங்கள்தான் அற்புதம் என்று பிதற்றிக் கொண்டிருக்கும் இந்துத்துவ கூட்டத்தை விட யதார்த்தத்திலிருந்து உண்மையை கண்டறிய வேண்டும், அந்த யதார்த்தத்தை மாற்ற வினை ஆற்ற வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தம் என்றென்றும் உயிரோட்டத்துடன்தான் உள்ளது.