கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதா-விற்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டி வருகிறது, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் கருத்தரங்கம் மற்றும் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளது.

மதுரையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, -ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் “உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கிய தோழர் ராஜ்குமார் தனது உரையில், “உயர்கல்வி ஆணைய மசோதாவைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் – தனியார்மயம் என்பது தான்.  இந்த நாட்டில் இருக்கும் – இயங்கக்கூடிய அனைத்துக் கல்வி அமைப்புகளையும் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க திறந்து விட வழி செய்யும் ஒரு மசோதா.

இந்த மசோதாவைக் கூட சட்டப்படி எந்த அவகாசமும் கொடுக்கப்படாமல் நம் மீது திணிக்கப் பார்க்கிறது மோடி அரசு.  கடந்த ஜூன் 27-ஆம் தேதி, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கான அறிவிப்பை திடீரென வெளியிட்டு, பத்து நாளில் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சாதாரணமாக முடித்து விட்டார்.  உடனே கல்வியாளர்கள், முற்போக்காளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தொழிலுக்கு உடனே இலாபம் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், இங்கோ ஸ்டெர்லைட் முதல் மீத்தேன் வரை அத்தனை திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.  விளைவு, அடக்குமுறை.  நாம் கண்டனம் தெரிவிக்க முடியாது.  கைது, குண்டாஸ், NSA என மக்களின் குரல்வளையை நெறிக்கிறார்கள்.  அதன் ஒரு பகுதி தான் இந்த மசோதா.  வரும் 2020-க்குள் இந்திய கல்விச் சந்தையின் மதிப்பு 9.5 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.  அதை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திறந்துவிட இந்த மசோதா மூலம் வழி அமைத்துக் கொடுக்கிறார்கள்.  தற்போது மதுரை ‘தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில்’ எஸ்.சி. என்றால் விண்ணப்ப படிவம் கூட கொடுப்பதில்லை. இந்த நிலையில் இந்த மசோதாவும் நிறைவேறிவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்.  எந்த சாதி ஆனாலும், காசு இல்லாதவனுக்கு கல்வி கிடைக்காது என்ற நிலை ஆகிவிடும்.” என பேசினார்.இக்கருத்தரங்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவர் பேரா.விஜயகுமார்; மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்,   பேராசிரியர் இரா. முரளி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக, பு.மா.இ.மு. – வின்  மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் தனது உரையில்,  ”ஒரு மாதத்தில் யாரிடமும் கேட்காமல் இந்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் இந்த அரசு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக எப்போதும் பதில் சொன்னதில்லை. தரமான கல்வி என்றால் அது தனியார் அமைப்பால்தான் தரமுடியும் என்கிற கருத்துக்கு பெற்றோரே விளம்பரங்களின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு தள்ளிவிட்டதே இந்த அரசுதான்.

இரண்டு வருடத்திற்கு முன் கோவையில் கல்வி கட்டணம் கட்ட முடியாததால் ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இன்னொருபுறம் நம்மீது நீட் திணிக்கப்பட்டது. ஆடை கிழித்து மாணவ மாணவிகள் அவமானப் படுத்தப்பட்டார்கள். 1150 மார்க் எடுத்தவர்கூட நீட்டில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பீகாரில் +1, +2 வகுப்பறைக்கு செல்லாமலே ஒருவர் நீட்டில் தேர்வு எழுத முடிகிறது. இதுதான் உங்களுடைய தேர்வு –  தரம் – இலட்சணம்.

என்ன தரம்? சென்னை சுந்தரவள்ளி என்ற தனியார் பள்ளி திடீரென்று பெற்றோர்களிடம் 2 இலட்சம் டெபாசிட் கேட்கிறான். கேள்வி கேட்டால் இது என்னோட ஸ்கூல் என் இஷ்டம் அரசாங்கம் என்ன கேட்கிறதுன்னு திமிரா பதில் சொல்றான் அதனுடைய ஓனர். இது பெற்றோருடைய தனியார் பள்ளி மோகம் கொடுத்த தைரியம் அவருக்கு.

இன்னொரு பள்ளியில் இரண்டாது படிக்கிற பையனுக்கு நீட் தேர்வு கோச்சிங் ஆரம்பிக்க ஐம்பதாயிரம் கட்டணம் இப்போதே கேட்கிறார்கள். ஏதோ வலது மூளை –  இடது மூளை வித்தியாசத்தை சரி செய்தாதான் இப்பவே படிக்கிறது மனசுல தங்க ஆரம்பிக்குமாம். அதுக்கு இப்ப இருந்தே பயிற்சி கொடுக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அரசு +1 மாணவர்களுக்கு சென்ற வருடம் ரெண்டு மாதமாகியும் புத்தகம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அனைத்துப் புத்தகங்களையும் தனியார் பள்ளிகளுக்கு பாக்கி வைக்காமல் தந்து விட்டார்கள். அப்ப அரசு பள்ளி மாணவர்கள் நிலை?

இப்போது புதிதாக இந்த கல்வி ஆணையம். ஏற்கனவே இங்கே என்ஜீனியரிங் காலேஜ் நிலைமை என்ன? 50%  க்கும் அதிகமான கல்லூரிகளில் 30% க்கும் குறைவான மாணவர் சேர்க்கை. இலவச கல்வி என கவுன்சிலிங் அன்று ஆள் பிடிக்கிறான். அரசாங்கம் இவனுக்கு நம்மோட கட்டணத்தைக் கொடுக்குமாம். நாம் பிறகு அரசிற்கு கடன திருப்பி கட்டணுமாம். ஏற்கனவே கடனை திருப்பி வசூல் செய்கிறேன் என்று எத்தனை மாணவர்களை இவர்கள் கொன்றுவிட்டார்கள். இனி அது உயர்கல்வியிலும் தொடரப் போகிறது. இனி அண்ணா பல்கலைக்கு அரசு நிதி கிடைக்காது. இனி  நம்மிடம் அதிக கட்டணத்தை வாங்கினால் மட்டுமே பல்கலை நடத்த முடியும் என்ற நிலை வரப் போகிறது. எனவே முன்பு சூத்திர- பஞ்சமருக்கு இருந்த கல்வி உரிமை கிடையாது என்கிற நிலை காசில்லாத அனைவருக்கும் வரப்போகிறது.

இதை எதிர்க்க அதிகாரிகளை நம்பி பயனில்லை. பெற்றோர்கள்- மாணவர்கள்- இளைஞர்கள்- ஆசிரியர்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே தடுக்க முடியும்.  நம் உயிரைக் கொடுத்தேனும் இந்த உயர் கல்வி ஆணைய மசோதாவை முறியடித்தே ஆகவேண்டும்.  முறியடிப்போம்.” என எழுச்சி மிக்க உரையாற்றினார்.

கருத்துரைகளுக்கு இடையிடையே கம்பம் பகுதி மாணவர்கள் புரட்சிகர பாடல்களை பாடினார்கள். உசிலம்பட்டி தோழர் பகத்சிங் உயர்கல்வி ஆணையம் பற்றியும் மோடியின் சதிகள் பற்றியும் அம்பலப்படுத்தி கவிதை வாசித்தார். தோழர். ரவி நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களின் உரை தனிப்பதிவாக வெளியிடுகிறோம்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மதுரை.

_______________________________________

விழுப்புரத்தில், கடந்த ஆகஸ்டு 23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு.  விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர். ஞானவேல் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் ”பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் மசோதாவை கொண்டுவருவதன் மூலம், பெரும்பான்மை ஏழை, எளிய மாணவர்கள் தற்குறியாகவும், உயர்கல்வியில் இருந்து பெரும்பான்மை மாணவர்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள். ஒட்டு மொத்த கல்வியும் கார்ப்பரேட் பிடியில் போகும். இதை முறியடிக்க வேண்டும்.” என்றார்.பு.மா.இ.மு. – வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தனது உரையில், ”60-வது வருடத்திற்கு மேலாக செயல்படும் யூ.ஜி.சி.யைக் கலைப்பது ஒரு சமூகத்தையே  தற்குறியாக்குவதற்கு சமம். 1956 – ஆம் ஆண்டு முதல் உயர்கல்வியை விரிவுபடுத்த கொண்டுவரப்பட்டு இன்றைக்கு தராமான உயர்கல்வி அரசு தருகிறது. மேலும் அடித்தட்டு மக்களும் அவர்களின் பிள்ளைகளும் பட்ட படிப்புகள் படிக்க முடிந்து இருக்கிறது. என்றால் அதற்குக் காரணம் இந்த பல்கலைக்கழக மானிய குழு இருந்ததால்  தான். இப்படி எண்ணற்ற பணிகளை கல்வி மேம்பாட்டிற்கு  யூ.ஜி.சி. ஆற்றியிருக்கிறது. தரத்தின் பெயரால் யூ.ஜி.சி.-யைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் கொண்டு வருகிறார்கள். இந்த தரத்தின் இலட்சணத்தை நீட் தேர்வில் நாம் பார்க்கிறோம். தேர்வில் முறைகேடு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு  தேர்ச்சி பெறாத உ.பி., பீகாரை சேர்ந்த  மாணவர்கள்  தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பல்கலைக்கழகங்கள்,   கல்லூரிகளில் 2500 இருந்து 5000 ரூபாய் இருந்தால் ஒரு டிகிரி படித்து  விடலாம். ஆனால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் செலவு செய்து படிக்கக்கூடிய நிலை உருவாகும்.

இதனை, நாம் அனுமதிக்கக் கூடாது. நேர்மையான பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைப்போம். உயர்கல்வியை பாதுகாப்போம்.” என்று பேசினார் இந்த கூட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் திலீபன் நன்றி உரை கூறினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க