Monday, September 16, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசிதம்பரம் - இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!

சிதம்பரம் – இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!

-

கடந்த 3-6-12 அன்று சிதம்பரத்தில் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்க போராடுவோம் என்ற முழக்கத்தின் கீழ் பேரணி மாநாடு நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும், மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் பெற்றோர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட நிகழ்வானது சிதம்பரம் நகர மக்களிடையே நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

மாலை 4-30 மணியளவில் புறப்பட்ட பேரணி ம.க.இ.க.வின் பறை இசை முழங்க எழுச்சிகரமாகப் புறப்பட்டது. பேரணியை மாவட்டத் தலைவர் வை.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசினார். வழி நெடுகிலும் பெற்றோர்கள் சேர்ந்து கொண்டனர். முன்வரிசையில் மாணவர்கள் ஆரவாரத்துடன் முழக்கமிட்டுச் சென்றது உயிரோட்டமாக இருந்தது . இலவசக் கல்வியை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பொது மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கல்வி விற்பனைச் சரக்காகிப் போனது என்பதை விளக்குமுகமாக சரக்கு என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. சிறுவர்கள் பங்கேற்ற இந்த நாடகம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. சாகும் தருவாயிலும் கலிலியோ உலகம் உருண்டை என்பதிலிருந்து பின்வாங்காமல் இருந்த நேர்மையையும், தற்போது கூடங்குளத்தில் அப்துல் கலாமின் கயமைத்தனத்தையும் அம்பலப்படுத்தியது இந்த நாடகம். தனியார்மயத்தை முறியடிக்கும் போராட்டத்தின் மூலமே தற்போதைய அரசை தரமான இலவசக் கல்வியை வழங்கச் செய்ய முடியும். என்பதை கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினர்.

கடலுர் மாவட்டத்தில் +2 தேர்வில் 85 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம்  பெற்றதற்காக மாநாட்டில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கே. ராஜன் கௌரவிக்கப்பட்டார்.  அது போல சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை பால சரஸ்வதி அவர்களும் தனியார் பள்ளிகளை விடத் தரமான கல்வியை வழங்கி வருவதற்காக கௌரவிக்கப்பட்டார்.

வரவேற்புரை ஆற்றிய மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க சிதம்பரம் நகரத் தலைவர் ராமகிருஷ்ணன் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் நடந்த போராட்டத்தைப் பற்றியும், தற்போது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழிகாட்டுதலால் அது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார்.

தலைமை ஏற்றுப் பேசிய நகரச் செயலாளர் கலையரசன், குறுகிய காலத்தில் முடிவு செய்து, நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்கள் வந்திருப்பதைப் பார்க்கும் போது மக்கள் ஆதரவு பெருமளவில் இருப்ப தனியார்தாகவும், பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொடுமைக்கு எதிராக பெற்றோர் சங்கம் விடாது போராடியதற்கு அங்கீகாரமாகவும் பார்க்கிறோம். எந்த ஒரு பெற்றோரும் பாதிக்கப்பட விட மாட்டோம். கடலூர் தனியார் பள்ளியில் 5 வது படிக்கும் தன் மகனை 5 மணி நேரம் பெஞ்சில் நிற்க வைத்ததற்காக அவனது தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுடப் போகிறேன் என எங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தார். சங்கத்தில் இணையுங்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அறிவுறுத்தினோம். சட்டப்படி போகவே  நாங்கள் விரும்புகிறோம் என்றார். முன்னதாக தனியார்மயக் கல்வியால் உயிரிழந்த கோவை சங்கீதா, சென்னை குருராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டு, மாநாடு துவக்கப்பட்டது.

மாநாட்டு துவக்க உரை ஆற்றிய மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் “பெற்றோர்கள் இல்லையெனில் எந்தப் பள்ளியும் இல்லை. பெற்றோர்கள் தான் பள்ளியின் ஆணி வேர். வலிமை மிக்கவர்கள், தனியார் பள்ளிகளின் கட்டிடம் பெற்றோர்கள் பணத்தில்தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் அங்கு எடுக்கும் முடிவுகளில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. கூனிக் குறுகி அச்சமடைகிறீர்கள். அவ்வாறு அச்சப்படத் தேவையில்லை. வெளிநாடுகளில் பெற்றோர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கின்றனர். சோவியத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் வர மாட்டார்கள். முன்னரே பள்ளியில் படிக்கும்  குழந்தைகள் மேள தாளத்துடன் புதிய குழந்தைகளை அழைத்து வருவர். அந்தக் குழந்தைகளும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வருவார்கள். நாம் என்ன செய்கிறோம் என்றால் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லையென்றால் நாலு போடு போடுகிறாம். அங்குள்ளது போல நடக்க வேண்டும் என்றால் எல்லாப் பள்ளிகளும் மக்கள் பள்ளிகளாக, நமது பள்ளிகளாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சுயேச்சையாக ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணத் தெரியாது. புத்தகத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்க மட்டுமே தெரியும். கூட்டாகச் சேர்ந்து படிக்கவோ, நூலகத்தில் தகவல் சேகரித்து படிக்கவோ இயலாமால் தேர்வில் தோற்று விடுகின்றனர். பல்கலைக்கழக அளவில் முதல் 20 இடங்களில் கூட வருவதில்லை. தேவ்பாய் அரசு பள்ளியில் 9000 பெண்கள் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாத் துறைகளிலும் இந்திய துணைக்கண்டத்திலே மிகச் சிறந்து விளங்குகின்றனர். நாட்டில் தற்பொழுது நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்தான் காரணம் எனக் குறிப்பிட்டார். 1992 -இல் நரசிம்மராவ் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு நமது நாட்டின் கல்விக் கொள்கையை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம்தான் நிர்ணியிக்கிறது என்றார்.

காமராஜ் காலத்தில் கல்விக்கு 35 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்பொழுது 14 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. 2 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1100 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.மக்கள் ரேசனுக்காகவும், குடிதண்ணீருக்காகவும் தெருவில் இறங்கிப் போராடுவது போல கல்விக்காகவும் போராட வேண்டும். அரசுப்பள்ளி சரியாக இயங்குகிறதா என மக்கள் கண்காணிக்க வேண்டும். இலவசங்கள் வேண்டாம், தரமான இலவசக் கல்வி வேண்டும். சிறந்த மருத்துவத்தை பெற மக்கள் போராட வேண்டும். போராடுவது உங்கள் கடமை எனப் பேசினார்.

அஞ்சலகம், ரயில்வே போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் திட்டமிட்டே நசுக்கப்படுகின்றன. 50 பைசாவுக்கு இந்தியா முழுமைக்கும் தகவல் தர முடியும். விளம்பரம் போட்ட அட்டையாக இருந்தால் 25 பைசாதான். கூரியருக்கு இன்று எவ்வளவு ஆகிறது. நம்மில் எத்தனை பேர் பி.எஸ்.என்.எல் வைத்திருக்கிறோம். தனியார் பேருந்துக்கு ரயில்வேயை விட மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் ஆள் பற்றாக்குறையை நிரப்பாமல் கூடுதலாக பல பணிகளைக் கொடுத்து வேலைப்பளுவை அதிகரிக்கிறார்கள். 60 பைசாவுக்கு அரசுத்துறையில் IDPl மூலம் பென்சிலின் மருந்து தயாரித்துத் தந்த மத்திய அரசு நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதே போல் அரசுப் பள்ளிகளும் திட்டமிட்டே மூடப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் மட்டுமே உள்ள டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் தன்னிறைவு பெற்ற நாடுகளாக விளங்குகின்றன.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் அதிக அளவு லஞ்ச, ஊழல் நடைபெறுவதால்  பள்ளி முதலாளிகள் அரசு அதிகாரிகளை மதிப்பதில்லை, ஏன் அரசாங்கத்தை மதிப்பதில்லை. எனவே மக்கள் புரட்சி செய்தால் தான் கல்வியில் மாற்றம் ஏற்படும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் இணைந்து போராடினால்தான் தங்கள் உரிமைகளைக் கூடப் பெறலாம் எனக் கூறினார். ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியில் அதிகம் ஊழல் நடைபெற ஏதுவாக இருப்பதால் அதற்கு அதிக நிதி ஒதுக்குகிறார்கள். கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியில் கமிசன் கிடைக்காது என்பதால் குறைந்த நிதி ஒதுக்குகிறார்கள். இது போன்ற மக்கள் போராட்டங்களே இலவசக் கல்வி உரிமையை நிலைநாட்டும். அடுத்த ஆண்டும் வெற்றி பெற்ற பிறகு என்னைப் பேசக் கூப்பிடுவீர்கள் என நம்புகிறேன் என்றார் ராஜகோபாலன்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு என்பது கட்டாய இலவசக் கல்வியை மறுக்கும் சூழ்ச்சியே என்ற தலைப்பில் பேராசிரியர் கருணானந்தன் பேசும் போது 1947-இல் நாம் பெற்ற சுதந்திரம் 47 ஆண்டுகள் கூட நிலைக்க வில்லை.1994 காட் ஒப்பந்தத்திற்குப் பிறகு நாம் பெற்ற சுதந்திரம் பயனற்றதாகி விட்டது. கல்வி விற்பனைச் சரக்காக மாறி விட்டது. வளரும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் கல்வித் துறையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த துடிக்கின்றன. ஆட்சி அதிகாரங்கள் கார்ப்பரேட்டுகளிடம் இருக்கின்றன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே RTI ,  RTE போன்ற சட்டங்கள் கொண்டுவரப் படுகின்றன. அனைத்தும் கார்ப்பரேட் கைகளுக்குப் போன பிறகு தகவல் உரிமைச் சட்டத்தால் என்ன பயன்.?

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் போன்றவற்றை ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் ஏதோ பெரிய நன்மை நடந்து விட்டது போன்ற மாயையை உருவாக்குகிறார்கள். அரசின் கொள்கை முடிவுகள் அரசியல் தளங்களில் விவாதிக்கப்படாமல் அறிவாளிகள் மற்றும் அதிகாரமளிக்கும் குழு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்டுகளின் மூலம் தனியார் முதலாளிகளுக்குச் சாதகமாக நாட்டைச் சுரண்டும் வகையில் முடிவுகளை எடுத்து மத்திய அரசு அதனை அறிவிக்கும் நிலை என்று ஏற்பட்டதோ அன்றே நமது உரிமைகள் பறிபோக ஆரம்பித்து விட்டது. பெட்ரோல் விலை உயர்வு, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி போன்றவை இதுபோல் எடுக்கப்பட்ட முடிவுகள்தான். RTE சட்டத்தில் பல ஓட்டைகளுடன், அரசுகள் இதில் இருந்து விலகிக்கொள்ள வசதியாக பல திருத்தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தி இந்தச் சட்டத்தை செயல்படுத்தி அனைவருக்கும் 25 சதவீத ஒதுக்கீடு கல்வியை அமல் படுத்த முடியாது. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் பொருட்டே அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் தனியார் பள்ளிகள் சிறந்தவை என்ற மாயையை அரசாங்கமே உருவாக்குகிறது. இச்சட்டப்படி அரசின் பொருளாதர வசதிக்கேற்ப அமல்படுத்தலாம் என உள்ளதால் போதிய நிதி இல்லை என்று அரசு அமைதி காக்கும். இந்தச் சட்டம் கட்டாய இலவசக்கல்வியை வலியுறுத்தவில்லை. புதிய பள்ளிகளைத் திறக்க போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை. புதிய அட்மிசனுக்கு மட்டுமே 25 சதவீதம். மாற்று செய்துகொள்ள வாய்ப்பில்லை. ஆசிரியர் நியமனம் கட்டுமானங்கள் திட்டமிடல் எதுவும் இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசடிச் சட்டம். நமது பொது எதிரி அரசின் இந்த தனியார்மய கொள்கைதான் என்பதைப் புரிந்து கொண்டு போரடினால் மட்டுமே அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற தமது இலக்கில் வெற்றி பெற முடியும் எனப் பேசினார்.

வாழ்த்துரை வழங்கிய தலைமை ஆசிரியர் கோ. பாக்கியராஜ் ஆதிதிராவிட, ஆதிவாசி ஆசிரிய காப்பாளர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேசும்போது, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சுயசிந்தனையுடன் தற்சார்பு, கூட்டு மனப்பான்மை ஆகியவற்றுடன் கல்வி கற்று சுயசார்புடன் விளங்குகின்றனர். தனியார் பள்ளிகளில் பயின்று, பொறியியல் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் படிப்பை விட்டு ஓடுவதும் அதிகரிக்கிறது. அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விபரங்களை கல்வித் துறை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற மாநாட்டு தீர்மானத்தை ஆதரித்துப் பேசியவர், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பொதுத்தேர்வில் தேர்ச்சி எப்படி அதிகரிக்க முடியும், இதற்காக ஆசிரியர்களைக் குறை சொல்வது நியாயமில்லை எனப் பேசினார். மேலும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழாவிற்கு 2000 முதல் 3000 ரூபாய் வசூலித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுட் ஆபாச விழாவாக நடத்துகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகள் பலவற்றில் பணம் ஏதும் வசூல் செய்யாமல் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விழாவாக நடத்தி கொண்டிருக்கின்றோம். எனவே தனியார் பள்ளிகளை எதிர்க்கும் அதே வேளையில் உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து அங்கு போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசை நிர்பந்தம் செய்திட மக்கள் போராடினால் மட்டுமே அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்கும் எனப் பேசினார்.

சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், கமிட்டி உத்திரவுகள் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா? என்ற தலைப்பில் பேசிய உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மீனாட்சி, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளிக்கு சிங்காரவேலு கமிட்டி வரை சென்று தீர்ப்புப் பெற்ற பிறகும் அப்பள்ளி நிர்வாகம் பெற்றோர்களையும், மாணவர்களையும் துன்புறுத்துவது ஏன்? அம்பானி ரிலையன்ஸ் கறிவேப்பிலை, கொத்தமல்லி வியாபாரம் செய்வது ஏன்? முதலாளித்துவம் இலாபத்திற்காக எதையும் செய்யும். இலாப வெறி அவன் ரத்தத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். கல்வி அடிப்படை உரிமை வாழும் உரிமை என அரசியல் அமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாகச் சொன்னாலும் அது பீஸ் போன பல்பு மாதிரிதான். தனியாகச் சட்டம் இயற்றினால் தான் அனைவருக்கும் இலவசக் கல்வியைக் கொடுக்க முடியும் என்று இருப்பதால் RTE  சட்டம் போட்டார்கள். 25 சதவீதம் பேருக்கு மட்டுமே இலவசக் கல்வியைப் பெற முடியும் என மக்கள் முதுகில் குத்துகிறது இச்சட்டம். முதலாளிகளின் அடிப்படை உரிமையாக பள்ளிகள் நடத்துவது அவர்கள் வியாபார உரிமை என உத்திரவிட 11 நீதிபதிகள் அமர முடிகிறது. கட்டணத்தை அவர்களே நிர்ணியிக்கலாம் எனத் தீர்ப்பு வழங்க முடிகிறது. ஆனால் சுரண்டப்படும் மக்களுக்காக ஒரு நீதிபதியால் வழக்கின் தன்மையைக் கூட காது கொடுத்து கேட்க முடியவில்லை. தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள், மக்களின் எதிர்ப்புகள் இவற்றைத் திசைதிருப்பவே கட்டண நிர்ணயக் கமிட்டி என்று ஏற்படுத்தினார்கள். எனவே இந்த நீதிமன்றங்கள், சட்டங்கள், கமிட்டிகள் ஒருபோதும் மக்களின் நலன் கருதிச் செயல்படாது. எனவே நாம் பள்ளிகளை முற்றுகையிட்டுப் போராடினால் தான் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியும். நமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து, அவற்றின் தரத்தை மேம்படுத்தப் போராடினால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு 8 மணி நேர மின்வெட்டு. அது போல் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளைச் சார்ந்திருக்கும் நாம் நமது பிள்ளைகளுக்கு கல்வி வழங்க இயலாத நிலை ஏற்படும். அரசு செய்யும் என நம்பாமல் நாம் போராடினால் தான் இதற்குத் தீர்வு காண முடியும் என்றார்

அனைவருக்கும் இலவசக் கல்வி உரிமையை நிலை நாட்டுவோம் தனியார்மயக் கல்விக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், கல்வி சரக்காக மாறியதன் விளைவுதான் சென்ற ஆண்டு கோவை சங்கீதா, சென்னை குருராஜன் போன்றவர்களின் தற்கொலைச் சாவு. இதுபோன்று தற்கொலை முடிவுகளை எடுக்காமல் தனியார் பள்ளி முதலாளிகள் உருவாக்கியிருக்கும் மனப்பாடக் கல்வியை என்கவுண்டர் செய்ய வேண்டும். அப்படி நடந்தால் பு.மா.இ.மு. ஆதரவு கொடுக்கும். தனியார்மயக் கொள்கையை விரட்டாமல் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. பேக்கேஜ்களாக வைத்து கல்வியை விலை பேசும் பள்ளி முதலாளிகளை நாம் பேக் அப் செய்து அனுப்ப வேண்டும். பிள்ளைகளைப் பணயக் கைதிகளாக வைத்துப் பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகள் சிறைச்சாலைக்கு ஒப்பானவை. அங்கு போலீசுக்கு பதிலாகப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள். 25 சதவீதம் இலவசக் கல்வி என்ற பெயரில் நவீன தீண்டாமையை உங்கள் பிள்ளைகள் தான் அனுபவிக்கும். கடுமையான மன அழுத்தத்திற்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகும் பிள்ளைகள் தான் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர். நாமக்கல் உண்டு – உறைவிடப் பள்ளிகள் கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் போல் மாணவர்களை உற்பத்தி செய்கிறது. சுயமாக சிந்திக்கும் திறன் இல்லாமல் வளர்க்கப்படும் பிள்ளைகள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி மன தைரியம் இல்லாத கோழைகளாக, மெசினாக ரோபட்டாக வளர்க்கப்படும் கொடுமைகள்  அனைத்தும் அரசுக்குத் தெரியும். தனியார் பள்ளிகளின் கொடுமைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அரசுகளின் தனியார்மயக் கொள்கைதான். காட், காட்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக நாடே அடிமையானது. கல்வி சரக்கான பிறகு இலாபத்திற்குதான் எனத் தனியார் பள்ளி முதலாளிகள் கொக்கரிக்கின்றனர். வியாபாரம் என வந்து விட்ட பிறகு அதில் மோசடிகளும் வந்து விட்டன. நாமக்கல்லில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வில் விடை சொல்லித் தருகின்றனர். அதிக மதிப்பெண் என்ற பெயரில் அடுத்து வரும் மாணவர்களிடம் கொள்ளையடிக்க எதையும் செய்யத் துணிகின்றனர் .தனியார்மயக் கல்வி என்பது ஏமாற்று, மோசடி, கண்கட்டு வித்தை. இதற்கு ஒரே தீர்வு அரசுப் பள்ளிகள்தான். எல்லா அரசியல் கட்சிகளும் தனியார்மயக் கொள்ளையை ஏற்றுக் கொண்டுள்ளதால் இதனை மாற்ற ஒரே தீர்வு அன்பு, பாசம், நேசம், பண்பு, சக மனிதனை மதிக்கும் மாணவனை உருவாக்க அரசுப் பள்ளிகளே சிறந்தது எனக் கூறினார்.

நிறைவுரை ஆற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பேசும் போது, தனியார்மயக் கல்வியின் தரம் என்ன? +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களை இரண்டாண்டுகள் ஒரே பாடத்தைப் படிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துகிறீர்கள். மதிப்பெண்களை எடுத்தவுடன் 95 சதவீதம் 490 என விளம்பரம் செய்கிறீர்கள் .மாணவர்கள் மதிப்பெண்கள்  எடுத்தால் உனக்கு என்ன? MBBS,  ENGGINEERING -இல் இத்தனை பேர் சேர்ந்தார்கள் என விளம்பரம், எனப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பது வியாபார விருத்திக்குதானே.

சினிமா பாடலை மாணவர்கள் ராகத்தோடு பாடுகிறார்களே. பாட்டுப் புத்தகம் வைத்து மனப்பாடம் செய்தார்களா? விருப்பம் இருக்கிறது, சுலபமாகப் பாடுகிறார்கள். ஜனகன மனகதி போல் மனப்பாடம் செய்வதுதானே தனியார்மயக் கல்வி. கூட்டத்தோடு சேர்ந்துதான் தேசிய கீதத்தைப் பாட முடியும். தனியாகப் பாட முடியாது. MBBS, ENGGINEERING-படித்தவர்கள்  மட்டுமே வாழத்  தகுந்தவர்கள் என்பது போன்ற விளம்பரம் கொடுக்கிற சூழலில் மற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்களர?. காடு, மலை கழனி, ஆறு எல்லாவற்றையும் விற்றவன் படித்த IAS ஆபிசர் தானே. குடிநீருக்காக, கல்வி உதவித் தொகைக்காக, கட்டணக் கொள்ளைக்கு எதிராக, கூலிக்காகப் போராடும் தொழிலாளிகள் மீது தடியடி நடத்துவது IPS ஆபிசர்தானே. என்ன படிச்சவன்? கடலூர் ரசாயன ஆலைகளுக்கு அனுமதி கொடுத்தவர் படித்தவர்தானே. இன்று அங்கு மீன்வளம் இல்லை, குடிநீர் இல்லை. இது தெரியாதா? பன்னாட்டு கம்பெனிக்கு ஆதரவாகச் சட்டம் வகுத்துக் கொடுப்பவன் படித்த IAS ஆபிசர்தானே?.

மூலிகைப் பண்ணை வைத்து பலமடங்கு ஈவுத்தொகை தருகிறேன் என மக்களிடம் 100 கோடி ரூபாய் ஏமாற்றியது போன்று தனியார்மயக் கல்வி தரம் எனப் பேசுகிறாய். ஏமாந்த மக்களை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ஏமாற்றியவன் அறிவைக் கண்டு வியப்பதா?. தனியார்மயக் கல்வியில் மட்டுமா தற்கொலை நடக்கிறது? விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லையா ? சிறு வியாபாரிகள், நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனியார்மயக் கொள்ளைதான் காரணம். தொழிற்சாலையில் தொழிலாளிக்குச் சட்டப்படி சேர வேண்டிய ஊதியம் கேட்டு சட்டப்படி போராடினால் தீர்வு கிடைத்ததாக வரலாறு இல்லை. கேட்டை இழுத்து மூடினால்தான் தீர்வு கிடைக்கும். அது போல் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பள்ளியை முற்றுகையிட்டால் தான் தீர்வு கிடைக்கும்.

சட்டமும், நீதிமன்றங்களும் முதலாளிக்கு ஆதரவாக உள்ளது. தனியார் பள்ளி முதலாளிகளின் அத்துமீறல் குறித்து, கட்டணக் கொள்ளை பற்றி நாங்கள் யாருக்கும்  புகார் அனுப்பவில்லை. பிரதமருக்கும், பிரதீபா பட்டீலுக்கும்தான் அனுப்பவில்லை. தமிழகத்திலேயே சிதம்பரத்தில்தான் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மரியாதை. அதற்குக் காரணம் நமது போராட்டம். தனியார் பள்ளியில் அவ்வளவு சுலபமாக எந்த அதிகாரியும் நுழைந்து விட முடியாது. சிறைப்பறவை போன்ற கல்வித்துறை அதிகாரிகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்தது மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் நடத்திய மக்கள் போராட்டம் தான். மாவட்ட ஆட்சியர் பேசுகிறார், துணைக் கண்காணிப்பாளர் பேசுகிறார். மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் பேசுகிறார்கள். தனியார் பள்ளி முதலாளிகளை ஒடுக்க சட்டத்தில் இடம் இல்லை. எனவேதான் இந்தப் பேச்சுவார்த்தை. தமிழகம் முழுவதும் கட்டணக்கொள்ளைக்கு எதிராகப் பெற்றோர்கள் போராடுகிறார்கள். இங்கு மட்டும்தான் சங்கமாகத் திரண்டு சரியான திசையில் போராடுகிறோம். குறிப்பிட்ட பள்ளியை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள், ம.க.இ.க ஏன் வருகிறது எனத் துருவித்துருவி கேள்வி கேட்கும் காவல் துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் நாங்கள் கேட்கிறோம், இவ்வளவு பெற்றோர்களை இரவு 10-00 மணி வரை உட்கார வைக்க யார் காரணம்? இவர்களை எங்களிடம் அனுப்பியது நீங்கள் தானே. இவர்கள் சங்கமாக திரண்டு வளர்வதற்கு தனியார் பள்ளி முதலாளிகள் தான் காரணம். இதே சிதம்பரத்தில் சிவனடியாரை ம.க.இ.க .விடம் அனுப்பியது உங்கள் அரசாங்கம் தானே. தனியார் பள்ளி முதலாளிகளும், அரசும் இல்லாமல் எங்களால் இப்படிக் குறுகிய காலத்தில் இரண்டு மாநாடு நடத்தி மாவட்டம் முழுவதும் செல்வாக்குப் பெற முடியுமா?. நாங்கள் கடுமையாக முயன்றாலும் எங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் தானே காரணம்.

கல்விச் சேவை செய்கிறேன் என்று டிரஸ்ட் சட்டப்படி பதிவு செய்து, பெற்றோர்களின் பணத்தால் வளர்ந்த இந்த பள்ளிக் கட்டிடம் ஒரு பொதுச் சொத்து. ஆனால், என் பள்ளி, விருப்பம் இருந்தால் படி, இல்லை யென்றால் வெளியே போ எனச் சொல்ல தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உரிமையில்லை. இவர்கள் மாணவர்களைச் செய்யும் துன்புறுத்தலைப் பட்டியல் இட முடியாது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளிக்கு எதிராக சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிடும் அளவுக்கு தனியார் பள்ளி முதலாளிகள் அதிகார வர்க்கத்தில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் ஆர்பாட்டம் நடத்தக் கூட அனுமதி தர அரசு மறுக்கிறது.

சிதம்பரத்தில் பெற்றோர்கள் சங்கமாக இருப்பதால் தலைவர் ராமகிருஷ்ணனும், செயலாளர் கலையரசனும் ரோட்டிலே நடமாடுகிறார்கள் .இல்லையென்றால் ஆள்வைத்து அடிப்பார்கள்.  பிறகு நம் குடும்பத்தினர் நம்மைப் பின்னுக்கு இழுத்து விடுவார்கள். ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து விட்டால் இறுதிவரை எந்த எல்லைக்கும் சென்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடும் என்பது அரசுக்கும், போலீசுக்கும் தெரியும். மக்கள் மன்றமானாலும், நீதிமன்றமானாலும் இறுதி வரை போராடுவார்கள். மாணவர்களை நாமக்கல், திருச்செங்கோடு சென்று விடுதியில் போடும் பெற்றோர்களே படித்து வந்து அவர்கள் உங்களை விடுதிக்கு அனுப்பி விடுவார்கள். பன்னாட்டு கம்பெனிகளுக்காக மலிவான கூலிக்கு ஆட்களை உற்பத்தி செய்யும் கல்வி முறைக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்பலாமா?. இந்த மாநாடு நமக்கு ஒரு மைல் கல் என முழுத் திருப்தியடைய முடியாது. அடுத்து வரும் போராட்டங்களுக்கு நம்மைத் தயார்படுத்த இது உதவும்.

வழக்கு, சிறை, நீதிமன்றம் என நாம் கடந்து விட்டால் நம்மை யாராலும் அசைக்க முடியாது. ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகள் நம்மிடம் மண்டியிடும். எதிர்கால சந்ததியினருக்கான நமது போராட்டத்தில் இறுதிவரை போராட வேண்டும். அதற்கு நாம் போராளியாக மாற வேண்டும். ராஜகோபால் அவர்கள் சுருக்கமாக புரட்சி வந்தால் தான் கல்வியில் மாற்றம் வரும் எனப் பேசினார். அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை வென்றெடுக்கும் இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவட்டும் என்று பேசி முடித்தார்.

மாநாட்டுத் தீர்மானங்கள்

1.கல்வி என்பது வாழும் உரிமையாக அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 21-ஏ-வின் படி அடிப்படை உரிமையாக உள்ள போது, 8-ஆம் வகுப்பு வரை 25 சதவீதம் இலவசக் கல்வி என்பதை ரத்து செய்து +2 வரை அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்க சட்டமியற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.மாணவர்களின் சமத்துவத்திற்கான ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட பொதுப் பள்ளி-அருகாமைப் பள்ளி முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

3.அரசு ஆரம்பப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கத் தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும் உரிய நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளை உடனே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

4.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் சென்று பகுதி நேர வேலை செய்தாலோ அல்லது கணவன்/மனைவி பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினாலோ அவர்களை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இவர்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியைப் புறக்கணித்து தனியார் பள்ளியில் படிக்க வைத்தால் இவ்வாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

5.அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மோசமாகக் குறைவதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6.கடந்த ஆண்டு கோவையில் சங்கீதா என்ற தாய் எல்.கே.ஜி.க்கான கூடுதல் கட்டணக் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் .இன்று சென்னை அம்பத்துரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் பணத்திற்காக மதிப்பெண் பட்டியல் தர மறுத்ததால் +2 தேர்வில் 1022 மதி்பபெண் எடுத்த குருராஜன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய பள்ளித் தாளாளர், முதல்வரை கிரிமினல் வழக்கில் கைது செய்து கட்டணத்திற்காக மாணவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றும்படி தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7.சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகும் மெட்ரிகுலேசன் என்ற பெயரைப் பயன்படுத்த தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கவும், சமச்சீர் பாடத்தைத் தவிர வியாபார நோக்கில் பிற புத்தகங்களைப் படிக்கச் சொல்லி மாணவர்களைத் துன்புறுத்துவதைத் தடை செய்யவும் தமிழக அரசு உரிய உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

8.தனியார் உறைவிடப் பள்ளிகளில் பொதுத் தேர்வான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்தை அதற்கு முந்தைய ஆண்டு முதல் அதாவது இரண்டு வருடங்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு வரை மாணவர்களைப் படிக்கச் சொல்லி கொடுமைப்படுத்துவதைத் தடுக்கவும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படத்தை வருமானம் ஈட்ட விளம்பர பொருளாகப் பள்ளி நிர்வாகம் பிரசுரிப்பதையும் தடைசெய்ய வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9. பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் மற்றும் அதிக சதவிகித தேர்ச்சி பெற்றதை விளம்பரப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறையை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மேலும் அந்த மாணவர்களின் வெற்றிக்குக் காரணமான ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை இம்மாநாடு மனதார வாழ்த்தி, பாராட்டுகிறது.

10. அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒரு மனதாகக் கேட்டுக்கொள்கிறது.

___________________________________________________________________

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

___________________________________________________________________

தகவல்: –மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9790404031, 9443876977.

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9360061121, 9345180948.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

  1. வாழ்த்துகள், இலவச கல்வி, பூரண மது விலக்கு, உழல் ஒழிப்பு ஆகியவை தமிழகதிற்கு தேவையான ஓன்று. இதில் ஒத்த கருத்துகொண்டுள்ள அமைப்புக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

  2. நல்ல மனதுகளின் விளைவாக எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு எனது ஆதரவுகள். இந்த முயற்சி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவேண்டும். அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

  3. மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி மக்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டியமைக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.

    என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!- என்று சொல்லிவிட்டு

    //கல்வி சரக்காக மாறியதன் விளைவுதான் சென்ற ஆண்டு கோவை சங்கீதா, சென்னை குருராஜன் போன்றவர்களின் தற்கொலைச் சாவு. இதுபோன்று தற்கொலை முடிவுகளை எடுக்காமல் தனியார் பள்ளி முதலாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்.//

    என்று பேசுவது சரியா?

    • சீனிவாசன்,
      நீங்கள் கட்டுரையிலிருந்து குறிப்பிட்டிருக்கும் வரியின் படி தோழர் கணேசன் பேசவில்லை. அவர் பேசியது தனியார் பள்ளி முதலாளிகள் உருவாக்கி வளர்த்து வரும் மனப்பாடக் கல்வியை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் அதற்கு பு.மா.இ.மு ஆதரவு தரும் என்றுதான். கட்டுரையை எழுதிய அனுப்பிய தோழர் அதை தவறுதலாக பள்ளி முதலாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டு செய்திருக்கிறார். இது எங்களுக்குத் தெரியாமல் நடந்த தவறு. தற்போது கட்டுரையிலும் அதை திருத்தியிருக்கிறோம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

      • என்கவுண்டர் என்ற வார்த்தை எதிர்கொள்வது என்ற பொருளில் சாதாரணமாக பயன்படுத்தப் படும் ஒரு வார்த்தையல்லவா.. போலி என்கவுண்டர்களால் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தவே யோசிக்கவேண்டிய நிலையிருக்கிறது. உங்கள் தோழர் கணேசன் தற்கொலைக்கு முயலாமல் பிரச்சினையை ‘எதிர்கொள்ள வேண்டும்’ என்ற பொருளில் பேசியது போல்தான் தோன்றுகிறது.

        இந்த மாநாடு இலவசக் கல்வி உரிமை இயக்கத்துக்கு ஒரு முன்னோடியாக இருந்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்த்துகள்.

  4. சென்னையில் உள்ள சில பார்ப்பன மற்றும் கிறிஸ்துவ பள்ளிகளை அடக்கினால் போதும். முழு தமிழகமும் திருந்தும். இதை பிறப்பால் பார்ப்பானாக இருந்து சொல்கிறேன்.

  5. It has become a business in the name of Education, so the success of the decisons taken at Chidambaram lies in the implementation of the decisions by Government…Chilsren are forced to send to tuitions as they are not being taught in school…We cannot blame all the schools/ teachers for this…but the management in connivance with Govt. officials are encouraging private tuitions..
    This must be stopped…All the children may not have same IQ level…teachers must understnd this…pressure on teachers
    to complete the quota of syllabus in time is another aspect to put teachers as well as students on pressure…This must be removed in the present Education System…
    Over all hats off to the committee members for the successful completion of CHIDAMBARAM MANADU…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க