‘பாசிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்டதற்காக, கைது செய்யப்பட்டவரும் ஆய்வு மாணவருமான லூயி சோபியா ‘‘த வயர்” இணையதளத்தில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முதல் கட்டுரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் 46-வது நாளில் ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பிரச்சினை என்பதை விளக்கமான கட்டுரையாக ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். தூத்துக்குடி போராட்டத்தின் 100-வது நாளில் தமிழக காவல்துறை நடத்திய படுகொலைக்குப் பிறகு ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

♦♦♦

வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான பிரச்சினைக்குரிய தூத்துக்குடி காப்பர் உருக்கு ஆலையை நிரந்தமாக மூடுவதாக தமிழக அரசு ஜோடிக்கப்பட்ட வார்த்தைகளை நிரப்பி, சட்டரீதியாக தாக்குப்பிடிக்க முடியாத ஒரு அறிவிப்பாணையை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு முன் எகனாமிக்ஸ் டைம்ஸ், அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வாலின் நேர்காணலை வெளியிட்டது.

கடந்த மே 22, 23-ஆம் தேதிகளில் மாநில காவல்துறை வன்முறையை ஏவி, 13 பேர் கொல்லப்படுவதற்கும், 65-க்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமானது. சட்டத்துக்குப் புறம்பான முறையில் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கைகளை தொடங்கியதோடு, பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட தூண்டியதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்த காரணத்துக்காக பலர் கைதுசெய்யப்பட்டு, வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டனர்.

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீதான பொதுமக்களின் சினமும் பேரச்சமும், வேதாந்தாவின் காப்பர் உருக்காலைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தின. எவ்வித ஆயுதமும் ஏந்தாத போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசு, அதுவரை 100 நாட்களாக நடந்த போராட்டத்துக்கு எந்த எதிர்வினையும் செய்திருக்கவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக செயல்பட்ட தமிழக அரசு மே 23-ஆம் தேதி வரை, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டிருந்தது.

அதே நாளில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது. அதோடு, பொதுமக்களின் கருத்தை கேட்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தியது.

இத்தகைய அரசியல் சூழலில் அனில் அகர்வால், த எகனாமிக்ஸ் டைம்ஸுக்கு நேர்காணல் அளிக்கிறார். வழக்கமாக ஸ்டெர்லைட் செயல் அதிகாரி ராம்நாத் ஊடகங்களிடம் பேசுவதே வழக்கம்.

இந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா? போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

ஸ்டெர்லைட் வெளியிடும்  பத்திரிகை செய்தி அறிக்கை போலத்தான் அந்த நேர்காணல் இருந்தது; சில விஷயங்களைத் தவிர. உதாரணத்துக்கு வேதாந்தாவின் தலைவர் சொல்கிறார், “முதல் நாளிலிருந்தே இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது இந்தியாவில் மட்டுமே நடக்கும். எல்லா நேரங்களிலும், மக்கள் ஜனநாயகத்தில் உள்ள அனுகூலங்களை சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்”.

கார்ப்போரேட் தலைமையின் இந்த கூற்று வெளிப்படுத்துவது என்னவென்றால், அவருடைய திட்டங்கள் பொதுமக்களின் பரவலான எதிர்ப்பின் காரணமாக மீண்டும் ஒரு முறை முடக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடல் சமீபமாக நடந்த ஒன்று.

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் குரலை கேட்க வேண்டும் என்கிற உண்மையான ஜனநாயகத்தை அவமதிக்கும் போக்கை அனில் அகர்வாலின் கூற்று சுட்டிக்காட்டவில்லை; ‘இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்’ என்கிற கேள்வியையும் சேர்த்தே சுட்டுகிறது.

உதாரணத்துக்கு, இந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா? போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிராக, பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டத்துக்கு எதிராக இத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்படுமா?

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அந்நாட்டின் பிரதமர் தெரசா மே-உம் கூட, 13 பேர் கொல்லப்பட்டதையும் சூழலியல் சீர்கேட்டையும் உருவாக்கிய ஒரு நிறுவனத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தையும் முற்றிலுமாக மறுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது;

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடியில் அரங்கேற்றப்பட்ட சாதிய மோதல்கள், அப்போது கட்டுமானப்பணிகளை தொடங்கியிருந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்பவே நடத்தப்பட்டன என பல தூத்துக்குடிவாசிகள் கருதுகிறார்கள்.

எப்படியாயினும், சமீபத்திய போராட்டம் சாதி – அரசியல் – மத – வர்க்க அடிப்படைகளை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தது. குமரெட்டியாபுரத்தில் பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கிய போராட்டம் அருகாமை ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் ஓரிடத்தில் கூடி, பேனர்களையும், முழக்கங்கள் எழுதிய அட்டைகளையும் வைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பணிகளுக்கு ஏற்ப மாறி மாறி போராட்டத்துக்கு நேரம் ஒதுக்கினார்கள், குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வந்த கோடை விடுமுறையிலும் போராட்டக்களத்தில் நின்றார்கள். மார்ச் 24-ஆம் தேதி வியாபாரிகள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் தூத்துக்குடி முழுவதுமாக முடங்கியிருந்தது. அன்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்று தெருக்களை நிரப்பினார்கள். பேரணியின் படங்கள் சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை உருவாக்கின.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தூத்துக்குடியின் மில்லர்புரம், மூன்றாவது மைல், ஃபாத்திமா நகர் போன்ற இடங்களில் போராட்டக் கூடாரங்கள் முளைத்திருந்தன. தினமும் நடைபெற்ற போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.

நூறாம் நாள் போராட்டத்தில் உண்ணாவிரதம், மனித சங்கிலி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்ற செயல்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் காப்பர் உலோகத்தை கொண்டு வருவதைத் தடுப்பதற்கும், அந்தப் பொருட்களை வேறு எங்காவது சேமிப்பதற்கும் அனுமதி பெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்கு எந்த தனிமனிதரோ அல்லது மனிதர்களோ தலைமையேற்க அனுமதிக்கக்கூடாது என்கிற தன்னிச்சையான முடிவு போராட்டக்காரர்களால் எடுக்கப்பட்டிருந்தது. அதுபோல, கட்சிகளையும் அமைப்புகளையும் போராட்டக்குழு தள்ளி வைத்திருந்தது.

இது உண்மையில் அடிமட்டத்திலிருந்து நடந்த ஒரு அணிதிரட்டல். சொல்லப்போனால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் போராட்டம் எனவும் கொள்ளலாம். முறைபடுத்தும் அமைப்புகள், அரசு, நீதிமன்றம் என மாநில அரசின் அமைப்புகளால், இரண்டு தசாப்தங்கள் ஏமாற்றப்பட்ட பிறகு, நடந்த போராட்டங்களை நசுக்க, கொடூரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி தூத்துக்குடியில் நடக்கும் அநீதிகளை வெளி உலகத்துக்கு வெளிச்சமிட்டு காட்டியது.  இறுதியில் அதை சரிகட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது மாநில அரசு.

தூத்துக்குடியில் நடைபெற்ற பயங்கர நிகழ்வுகளுக்குப் பின் வந்த முதல் அரசு பிரதிநிதியான அமைச்சர் கடம்பூர் ராஜு, அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். அரசியல்வாதிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள் மீது மக்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள், அவர்கள் வார்த்தையை மென்று முழுங்காமல் நேரடியாகவே கேட்டார்கள்.

இதுதான், வேதாந்தாவின் அகர்வாலுக்கு பிரச்சினைக்குரியதாகவும் நேர்மையின் அரிதான தருணமாகவும் உள்ள அவருடைய கூற்று, அமெரிக்க சிந்தனையாளர் நோம்சாம்ஸ்கி சொல்லும் ‘எலைட்டுகளுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் அதீதமான வெறுப்புணர்வை’ காட்டிக்கொடுக்கிறது.

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது.

“நாம் தொழிலை அரசியலிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்” என, மேலும் ஒரு அதிரடியான பாசாங்கு வாக்கியம் ஒன்றை சொல்கிறார் அகர்வால்.

வேதாந்தா குழுமம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில் நன்கொடை அளித்திருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டில் வேதாந்தா குழுமத்திலிருந்து பா.ஜ.க ரூ22.5 கோடி நிதி பெற்றுள்ளது. ஸ்டெர்லைட்டிலிருந்து மட்டும் ரூ.15 கோடி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சிக்கு அகர்வால் நன்கொடை அளிக்கிறார். இந்திய மதிப்பில் ரூ. 93 லட்சத்தை டிசம்பர் 2015 மற்றும் மே 2017-க்கு இடைப்பட்ட காலங்களில் அளித்திருக்கிறார். இதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக்கவோ அல்லது ஜனநாயக நடைமுறைகளை தாக்கம் செலுத்தவோ தனக்கும் பொதுமக்களுக்கும் வேறுபாடு உள்ளது என கருதுகிறார் அவர்.

போராட்டக்காரர்களை ஆதரிப்பவர்களை புதைக்க தேசியவாதம் என்கிற முகமூடி ஒன்று அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நேர்காணலில் அகர்வால் சொல்கிறார், “காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்முடைய நாட்டை தங்களுடைய சந்தையாக்கிக் கொள்வார்கள்”. கூடவே வேதாந்தா நிறுவனத்தின் தலைமையகம் இங்கிலாந்தில் இருப்பதை மறந்துவிட்டு, ‘வெளிநாட்டு சதி’ இருப்பதாக மறைமுகமாக குறிப்பிடுகிறார் அகர்வால்.

அதோடு, சமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். இதையேதான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசும் நடிகர் ரஜினிகாந்தும் சொன்னார்கள். தொழிற்சாலைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராடும் போதெல்லாம் இந்த பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒருபோதும் எவரும் இதற்கு ஆதாரங்களை தருவதில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் போராட்டத்தை சிதைக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

சமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்?

அது நியாமகிரி என்றாலும், தூத்துக்குடி என்றாலும் வேதாந்தா நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதோடு அவர்களின் குரல்களை எதிரொலிக்கும் சூழலியல் செயல்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் குழுக்களை சார்ந்தோரை ஒடுக்குவதையும் விரும்புகிறது. சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்?

இந்த நேர்காணலின் எந்த இடத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான முக்கியமாக சூழலியல் மற்றும் சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து சொல்லப்படவில்லை. கேட்கப்படக்கூடிய கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட்டு எடுக்கப்படும் இத்தகைய நேர்காணல்களில் சொல்லப்படும் எதுவுமே தவறான நோக்கத்திற்காக சொல்லப்படுவதாகத்தான கருத முடியும். எதற்காக இத்தகை நேர்காணல்கள் எடுக்கப்படுகின்றன என்பதை படிப்பவரால் நிச்சயம் யூகிக்க முடியும்.

உண்மையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி முடக்கப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட தொழிலதிபர்களின் காரசாரமான நேர்காணல்களுக்கான காலம் இது. அதோடு, பாதிக்கப்பட்ட குரல்களுக்கும் அதிகமாக இடம் கொடுங்கள்.

– லூயிஸ் சோஃபியா

நன்றி : தி வயர் Yes, Mr Anil Agarwal, Business Does Need to be Kept Away From Politics

தமிழாக்கம்: கலைமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சோபியா எழுதிய மற்றொரு கட்டுரை:

3 மறுமொழிகள்

  1. எத்தனை அற்புதமான கட்டுரை எங்கிருந்தாலும் தனது மண்ணின் மீது சோபியா வைத்துள்ள மாளாத பேரன்பு கட்டுரையுடன் முடித்துவிடாமல் வானிலும் போராட்டத்தின் மூலம் தொடர்வது சிறப்பானது.
    வெளிநாட்டில் வேலை செய்யும் நண்பர்கள் ஸ்டெர்லைடை எதிர்த்து போராட்டம் செய்தது, தொடர்ந்து சோபியா அவர்கள் எழுதியது ,போராடுவது போன்ற நிகழ்வுகள் இந்திய விடுதலை போராட்ட
    காலத்தில் பல பணக்காரர்கள் கூட வெளிநாட்டில் படிக்க சென்றபோது கலந்து கொண்டது நடைபெற்றது.வரலாறு மீண்டும் திரும்புகிறது….

  2. The polis project.com என்ற இணையதளத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்கு முன்பும் பின்பும் நடந்தவற்றை தோழர் சோபியா விரிவாக விளக்கியுள்ளார்.
    அதன் இணைப்பு
    https://thepolisproject.com/dont-resist-we-can-kill-you-a-massacre-in-thoothukudi/

  3. சகோதரி சோபியா ஏற்கனவே கனமான வாதங்களை தன் கட்டுரை மூலம் ஆதிக்க சக்திகளுக்கும் , அந்த சக்திகளை தூக்கி நிறுத்தும் அடிவருடிகளுக்கும்
    எதிராக முன்னிறுத்தியுள்ளார்.

    சோபியா ஒரு விளம்பரத்திற்காக முழக்கம் இட்டார் என்ற சொத்தை வாதம் செய்வோரை சகோதரியின் கட்டுரைகள் முகத்தில் அறைந்து கேள்வி கேட்கின்றன.

Leave a Reply to தமிழ்மைந்தன் சரவணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க