வில்லவன்

சென்னையில் தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய அபிராமி செய்திகளால் எல்லா ஊடகங்களும் மக்கள் மனங்களும் நிறைந்திருந்த வேளையில், மாணவி ஒருவர் ஒற்றை கோஷத்தின் மூலம் அவர்கள் கவனத்தை திருப்பியிருக்கிறார். அது வெறுமனே ஒற்றை வாசகமாக இருக்கலாம். மிகை ஆர்வம் காரணமாக வெளிப்பட்ட எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் சோஃபியா விமானத்தில் ஏறுகையில் எடுத்த ஒரு தீர்மானமும் அதனையடுத்து எடுத்த சிறு முயற்சியும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானவை. அது வெறும் ஒற்றை கோஷம் என்றால் பா.ஜ.க. இத்தனை பதற அவசியமில்லை.முதலில் சோஃபியாவின் விமான முழக்கத்துக்கு பா.ஜ.க. கூடாரத்தின் எதிர்வினைகளை கவனியுங்கள் (இந்துத்துவாவுக்கு தாலிகட்டினாலும் ஒரிஜினல் கள்ளக் கணவர்களாகவே வாழும் ”நடுநிலை” பார்ப்பனர்கள் உட்பட). விமான நிலைய வளாகத்தில் தாவித் தாவி குதிக்கிறார் தமிழிசை. அவரை தடுக்க அங்கிருந்த பெண் போலீஸ்காரர் ஒரு கபடியாட்டமே நடத்த வேண்டியிருந்தது. “சோஃபியா இடத்தில் என் மகளை வைத்து பார்க்கிறேன் ஆகவே அவரது எதிர்காலம் பாதிக்கப்படுமே என கவலையாக இருக்கிறது” என ரங்காராவ் பிட்டை போடுகிறார் தினமலர் வெங்கடேஷ். அவர் ஏன் மாணவி வளர்மதியை மகளாக நினைக்கவில்லை, சோஃபியாவை ஏன் மகளாக நினைக்க முடிகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

பொன்.ராதா, தமிழிசை உள்ளிட்ட பல பா.ஜ.க. தலைகள் கோஷமிட்ட பெண்ணுக்கு பின்னணியில் ஏதோ ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் அலறுகிறார்கள். பா.ஜ.க. பாதநக்கி கருத்தாளர்களும் அதனை அப்படியே வழிமொழிகிறார்கள். ஆனால் அனைவரும் கோபத்தையும் பதற்றத்தையும் அடக்கிக்கொண்டு தடுப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பது இங்கே பெரிதும் கவனிக்கத்தக்கது. பா.ஜ.க. பேச்சாளர்கள் ”நாங்கள் வெறும் புகார் மட்டும்தான் கொடுத்தோம். அவரை ஜெயிலில் தள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, அந்த உரிமைகூட எங்களுக்கு இல்லையா” என்றுதான் புலம்பினார்கள்.

விமான நிலைய வளாகத்திலேயே மேடை போட்டு உரையாற்றும் அமித்ஷா.

வழக்கமாக தமிழிசைக்காக தமிழக பா.ஜ.க.வின் பார்ப்பன லாபி எந்த வேலையையும் செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் தமிழிசையை வேலை மெனக்கெட்டு ஆதரிக்கிறார்கள். நேரடி மற்றும் மறைமுக பா.ஜ.க. கருத்தாளர்கள் எல்லோரும் அவர் வெறுமனே மாணவியல்ல அவருக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் சொல்லி சோஃபியா ஒரு சாமனிய பெண் அல்ல என நிரூபிக்க முற்படுகிறார்கள். பிறரை அவமானப்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட பா.ஜ.க. இவ்விவகாரத்தில் சோஃபியாவை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருகிறது.

மறுபுறம் செய்தி கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள் பேரார்வத்தோடும் ஒருவிதமான பரவசத்தோடும் அவரை ஆதரித்து பதிவிடுகிறார்கள். இத்தளங்களில் இயங்காத சாமானிய மக்களும் இதே உணர்வோடுதான் இருந்தார்கள். சோஃபியாவை ஆதரிக்கும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக எனும் ஹேஷ்டேக் ஒரு அலையைப்போல பரவிற்று. ஏன் சாதாரண நிகழ்வுவொன்று ஒருபுறம் பெரும் பதற்றத்தையும் மறுபுறம் பரவசத்தையும் உருவாக்குகிறது?

காரணம் அந்தப்பெண் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பொருளாதாரப் பிண்ணனி. பா.ஜ.க.வின் கோர முகம் தெரிந்தும் அதனை அலட்சியப்படுத்தி, பா.ஜ.க.வை ஆதரித்து பார்ப்பனக் கும்பலோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அதனை பயன்படுத்திய மிடில் கிளாசில் இருந்து அவர் வந்திருக்கிறார். அதிகம் படித்தவனுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது. நீ படி, அதிகம் பொருளீட்டு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதே அனேக மெத்தப்படித்தோரின் வாழ்நாள் அறிவுரை. அந்த அறிவுரையை சோஃபியா துணிவோடு புறந்தள்ளியிருக்கிறார். போராட்டங்களை இடையூறு என்பதாகவும் உரத்த குரலை அநாகரீகம் என்பதாகவும் கருதும் ஒரு வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஒரு சிறு பெண் எட்டி உதைத்துவிட்டார்.

தங்களது கவசமாக இருந்த ஒரு வர்க்கத்தில் இருந்து வந்த பெண் அவர்களுக்கான விதிகளை எல்லாம் உடைத்துவிட்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதை பார்க்கையில் தமிழிசைக்கு பயம் மேலிடுகிறது. என்ன நடந்தாலும் சாணி மாதிரி கிடக்கும் மிடில்கிளாசிடம் இருந்து வெளிப்படையான எதிர்குரல் எழுவதென்பது பா.ஜ.க. கூடாரத்தை பெரிதும் கலவரப்படுத்தவல்லது. அதனை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடத் துடித்ததன் விளைவே தமிழிசையின் அந்த விமான நிலைய குறளிவித்தை. எல்லாவற்றையும் பொறுக்கித்தனமாகவே கையாளும் பா.ஜ.க.வின் தலைவர் என்பதால் இதையும் அப்படியே கையாள முற்பட்டார் தமிழிசை. அதனால்தான் அவர் வெறுமனே புகார் சொல்லாமல் தன் ஆட்களை விட்டு சோஃபியாவையும் அவர் குடும்பத்தையும் மிரட்ட வைத்தார் (அவர் மிரட்டு என உத்தரவிடத்தேவையில்லை, என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என சொன்னாலே போதுமானது).

ஆனால், ஆரம்பத்திலேயே பாடம் கற்பித்துவிடவேண்டும் எனும் அவரது ஆத்திரம் எதிர்மறையாக வேலை செய்துவிட்டது. தலித், பெண், கிருஸ்துவர், வெளிநாட்டில் படிக்கிறார் என்பதாக பா.ஜ.க.வால் மிக இலகுவாக அவமானப்படுத்த முடிகிற எல்லா தகுதியும் சோஃபியாவுக்கு இருந்தது. ஆனால் மக்கள் யாரெல்லாம் களத்துக்கு வரவேண்டும் என விரும்பினார்களோ அங்கிருந்து ஒரு சிறு பெண் துணிந்து வரவும் கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பா.ஜ.க.வின் வழக்கமான அஸ்திரங்கள் பயனற்றுப்போயின. மிக அரிதான நிகழ்வாக பா.ஜ.க. தடுப்பாட்டம் ஆடும் நிர்ப்பந்தம் வந்தது.

பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாமல் ஷோவை ஓட்டிவிடவேண்டும் எனும் ஊடகங்களின் வேண்டுதலை குழந்தைகளை கொன்ற அன்னை அபிராமியால்கூட காக்க இயலவில்லை. ஆனாலும் பாசிச பா.ஜ.க. ஒழிக எனும் கோஷம் முன்னுக்கு வராமல் தடுத்து சோஃபியா செய்தது சரியா என்பதாக விவாதித்து தமது எஜமானர்களை அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். எந்த டி.வி.யும் தமிழிசை ஏன் புகார் மட்டும் கொடுத்துவிட்டு போகாமல் தன் கட்சி ஆட்களை அழைத்து ரகளை செய்தார் எனும் கோணத்தை விவாதிக்கவே இல்லை.

பா.ஜ.க.வின் டிப்ளமேட்டிக் அணிகள், டிப்ளமேட்டிக் ரவுடி அணிகள் மற்றும் பியூர் ரவுடி-பொறுக்கி அணிகள் எல்லாமே இம்முறை அடக்கி வாசித்தன. பார்ப்பன நற்செய்தியாளர்கள் சேதாரத்தை அனுமானித்து ”ஏர்கிராஃப்ட் ரூல்சை மீறிப் பேஷறது தப்பு” என ஆரம்பித்து ”பொண்ணோட எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்குல்ல..” என முடித்தார்கள், அதன் பொருள் மற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரும் இப்படி கோஷம் போட்டுவிட வேண்டாம் என்பதே. பொன்ரா வகையறா சோஃபியாவுக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொல்லி  அவர் உங்கள் ஆள் அல்ல என மக்களுக்கு பாடம் எடுத்தார்கள். மக்கள் தமது கோபத்தை அடுத்த வருடம் தேர்தலில் காட்டினால் போதும் என ஆலோசனை சொன்னார் ஒரு நடுநிலை. ”உங்க தலைவருக்கு இது நடந்தா நீங்க சும்மாயிருப்பேளா” என சிலர் முறையிட்டார்கள் (சம்பவத்தில் ஒரு முக்கிய திருப்பமாக தி.க. ஓவியாவும் இதை சொன்னார். வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.க. நாராயணன் ஓவியாவின் கருத்துக்களை குறிப்பிட்டு வழிமொழிந்தார்) ஆனால் ஒருவர்கூட பா.ஜ.க. பாசிஸ்ட் கட்சி இல்லை என்றோ பாசிச ஆட்சி இல்லை என்றோ சொல்லவில்லை.

சோஃபியாவின் குரலுக்கான எதிர்வினைகளையும் பரிசீலிக்கையில் அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது விளங்கும். மக்கள் இத்தகைய குரல் ஒன்றுக்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதும் பா.ஜ.க. கூடாரம் இத்தகைய குரலைக் கண்டு அஞ்சுகிறது என்பதும் உற்சாகமூட்டக்கூடிய செய்திகள். சோஃபியாவை ஆதரிப்பதன் மூலம் அவரது உணர்வுகளை பரவலாக்குவதன் மூலம் நாம் பெருந்தொகையான மத்தியதர மக்களிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும். உண்மையில் பா.ஜ.க.வின் பொருளாதார நடவடிக்கைகள் கொடூரமாகச் சிதைத்திருப்பது மிடில்கிளாஸ் மக்களின் எதிர்காலத்தைத்தான் (ஏழைகளுக்கு அப்படி ஒன்று இருந்ததில்லை). நிகழ்காலத்தை செலவு மிக்கதாக்கி சேமிப்பை அர்த்தமற்றதாக்கியதுதான் பா.ஜ.க. மிடில் கிளாஸ் விசுவாசத்துக்கு கொடுத்த பரிசு. இன்று அவர்களை பிடித்து நிறுத்தியிருப்பது அந்த விசுவாசம் அல்ல, பா.ஜ.க.வை செருப்பால் அடிப்பதில் இருக்கும் தயக்கம்.

இதுவரை நடுத்தர வர்க்க மக்களுக்கு போதிக்கப்பட்ட உதாரண மனிதர்களின் இலட்சணமான “நல்லா படி, ஃபாரின் போ, சம்பாதி” என்பதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டவர் சோஃபியா. அப்படியான உதாரண மிடில் கிளாஸ் மகளை சமூக அக்கறைக்கான மாடலாக நாம் காட்டவேண்டும். அவர் கோஷம் மட்டுமல்ல, மன்னிப்பு கேட்க மறுத்த துணிவு மற்றும் அவரது கருத்தியல் பங்களிப்பு (அவர் எழுத்துக்கள்) ஆகிய எல்லாவற்றையும் நாம் பெருமிதத்தோடு வரவேற்போம். எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம். இன்னும் ஆயிரமாயிரம் சோஃபியாக்களின் தயக்கத்தை அது உடைக்கட்டும்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

28 மறுமொழிகள்

 1. நடுத்தர வர்க்கத்தினர் பலர் முனுமுனுப்பதை வெளிப்படையாக அச்சமில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் சோபியா. ரயிலில் புதிய ஜனநாயகம் விற்பனை வைத்து பிரச்சாரம் செய்யும் தோழர்களிடம் சாதி/மத வெறியர்கள் வம்பு செய்யுபோது அதற்கான எதிர்குரல் சக பயணிகளிடம் இருந்தே கிளம்பும். அப்படியாரும் தமிழைசக்கு உதவிக்கு வராததும் கணவான் வர்க்கத்திடமும் தாங்கள் செல்லாகாசாகி இருப்பதும் தமிழசையின் அச்சத்தை மென்மேலும் அதிகரித்திருக்கும்.

  ஓவியா போன்று டி.வி விவாதங்களிலும், குளிரூட்டப்பட்ட அரங்க நிகழ்ச்சிகளிலும் நிலைய வித்வான்களாக வலம் வருபவர்கள் சோபியா போன்று மக்கள் மத்தியில் இருந்து வரும் குரலை புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் நிலவும் அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குவதையோ தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதையோ ஆதரிப்பது நம் கடமை. மக்கள் அதிகாரம் என்பது அமைப்பு மட்டும் அல்ல அது ஒரு அரசியல்.
  well said வில்லவன். எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம்.

 2. ஹாஹாஹா…….. ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் தமிழனின் மிகைப்படுத்துதலுக்கு போட்டி உலகில் யருமே இல்லை. ஆதரித்தால் காலில் விழுவது, எதிர்த்தால் எதர்க்கெடுத்தாலும் காட்டு கூச்சல் போடுவது. இதுதான் தமிழன் மரபு. உதாரணத்திற்க்கு, கம்யூனிச தலைவரான ஸ்டாலின் பல லச்சம் சொந்த மக்களை கொன்று இருக்கிறார். அரசியல் எதிரி, நிலத்தை கொடுக்க மாட்டேன் என்ற விவசாயிகள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், அவரை ஆதரிப்பவர்களால் அவரை ஒரு பாசிசவாதி என்று சொல்ல முடியாது. இன்றுவரை கம்யூனிச சித்தாந்தம் இருக்கும் நாடுகளில் கொடூரமான பாசிசவாதம் இருக்கவே செய்கிறது. க்யூபாவில் இணையமே தடை. செல்போன் பயன்படுத்தும் அனுமதியே சில வருடங்களுக்கு முன்னால்தான் கிடைத்தது. சைனாவில் முகநூல், யூடியூப், வாட்சாப் தடை. ஜனநாயகம் என்று வீட்டில் இருந்து கூவினாலே சிறை. இப்படிபட்ட சித்தாந்தங்களை ஆதரிக்கும் கூட்டம் இந்திய ஜனநாயகத்தை விமர்ச்சிப்பது வேடிக்கையானது. பொது வெளியில் முக்கியமாக ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக யார் எதை சொன்னாலும், செய்தாலும் அதற்கான எதிர்வினையும் வந்தே தீரும். சில வாரங்களில் இதை எல்லாரும் மறந்தும் போய் விடுவார்கள். இதற்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை. இவ்வளவுக்கும் உலகில் மிக ஜனநாயகமாக நாடு இந்தியா மட்டுமே. ஆனால், இது அளவுக்கு மீறிய ஜனநாயகம். சிங்கப்பூர் மாதிரியான ” ஜனநாயகம் ” தான் இந்தியாவுக்கு சரியாக இருக்கும்.

  • எதுக்கு முகநூல் யூடியூப் வாட்சாப் தடைன்னு தெரியுமோ, அது மூன்றும் யூதனின் கருவிகள், இன்று முகநூல் மூலம் அனைவரதும் தகவல்கள் விருப்பு வெறுப்புகளை சேகரித்து விற்றான் ஒரு யூதன். யூடியூபில் அனைத்து தமக்கு சாதகமான வீடியோகளே தெரியுமாறு செய்வது ( யூடியூப் கூகிளின் கிளை, கூகிள் யூதன் லாரி பேஜ் கம்பெனி)வாட்ஸ் ஆப் மூலம் புரளிகள் கிளப்புவது. இவற்றின் மூலம் நன்மைகளை விட அதிக தீமைகளே. அதனால் தான் புரிந்து தடை செய்திருக்கிறார்கள். நாம் கூட இவர்களை வீழ்த்தும் செய்திகளை பரப்பவே இவற்றை பயன்படுத்த வேண்டும். தமது நோக்கத்துக்கு நேர் எதிராக நடப்பது கண்டு யூதன் புழுங்குவான். இணையத்தில் இவர்கள் அம்பலபடுவது தொடர்ந்தால் இணையமே இல்லாமல் போனாலும் ஆச்சரிய படக்கூடாது.

  • Who has told you that present China is following communist ideology?What do you mean by saying that India is following too much democracy?Are you sleeping or pretending to sleep while all democratic norms and constitutional institutions are destroyed one by one?For what type of incident you will give big build up other than trampling on individual’s freedom of expression?Singapore is not a democratic country right from the days of Lee .This reply is meant for the “democratic”Shan.

 3. பொதுவாக சமூக ஊடகங்களின் பல விதமான மனநோயாளிகளை காணலாம், அதில் முக்கியமான கேரக்டர், அந்த நாட்டில் அப்படி இந்த நாட்டில் இப்படி என்று இந்தியாவை குறைத்தோ கூட்டியோ மதிப்பிடுவது, உதாரணமாக அராபிய நாடுகளை இந்தியாவோடு ஒப்பிடுவது , அராபிய நாடுகளில் நடப்பது மன்னராட்சி, ஆனால் இந்தியாவிலோ மக்களாட்சி, இது கூட அறியாத மூடர்களை சமூக ஊடகங்களில் காணலாம்.

  அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது அறிவார்ந்த சமுதாயத்திற்கான அடையாளம், ஆட்சியாளர்கள் எவ்வளவு அடக்கினாலும் அடங்கிப்போவது அடிமைத்தனம், அதைத்தான் பார்ப்பன இந்து மதம் செய்கிறது, மக்களை கூறுபோட்டு அடக்கி ஆண்டது, அதை எதிர்த்து கேள்வி கேட்ட பெரியாரை, கருணாவை வசைமாரி பொழிவது தான் அவர்களின் வாடிக்கை, அதேபோலத்தான் கம்யுனிசத்தையும் பார்ப்பது.

  • கம்யூனிசம் ஒரு தெளிவான பாசிசம். ஆதாரங்கள் கொட்டி கிடக்கின்றன. அதை பார்க்க மறுப்பது ஒரு வகையான சார்பு கொள்கை. இதுவும் மனநோய்தான். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமையையே ஜனநாயகம்தான் கொடுத்தது. அப்படி பட்ட ஜன நாயகத்தை விமர்ச்சனம் செய்துக் கொண்டு, கம்யூனிச பாசிசத்தை தூக்கிப்பிடிக்கும் பைத்தியக்காரத்தனம் எந்த மாதிரியான மனநோய்.

   • shan தங்களின் அதிஅறிவு கண்டு வியக்கிறேன்.பாசிசம் கம்யூனிஸம் இரண்டு சித்தாந்தங்களையும் படித்து சிந்தித்து பின்னர் விமர்சனம் செய்யலாம் 🙏

    • ////shan தங்களின் அதிஅறிவு கண்டு வியக்கிறேன்.பாசிசம் கம்யூனிஸம் இரண்டு சித்தாந்தங்களையும் படித்து சிந்தித்து பின்னர் விமர்சனம் செய்யலாம்////

     உங்களுக்கு அதிக அறிவு இருக்கிறது அல்லவா? கம்யூனிசத்தையும், பாசிசத்தையும் தெளிவாக படித்து சிந்தித்து அறிந்த அறிஞர் அல்லவா? எனது கேள்விக்கு பதில் சொல்லவும். உதாரணம் கொண்டே கேட்கிறேன்.

     1. சைனாவில் ஜன நாயக அரசு வேண்டும் என்று சொன்னவர் சிறையில் இருக்கிறார். இது பாசிசமா இல்லையா?
     2. கியூபாவில் கடுமையாண இணைய கட்டுபாடு. அரசாங்கத்தை விமர்ச்சித்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இது பாசிசமா இல்லையா?
     3. மதம் என்பது தனி மனித உரிமை. அதை தடுப்பது அல்லது கட்டுபடுத்துவது பாசிசமா இல்லையா?
     4. கம்யூனிச நாட்டில் தனியாக தொழிற்சங்கம் ஆரம்பித்தவர்கள் அதற்காகவே சிறையில் இருக்கிறார்கள். அது பாசிசமா இல்லையா?

     அதோடு இன்னுமொரு கேள்வி. கம்யூனிச பொருளாதாரம் என்றால் என்ன ?கம்யூனிச பொருளாதாரத்தின் மூலம் இந்திய பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவீர்கள்.

     இந்த கேள்வியை 6 வருடங்களாக கேட்கிறேன். உலகமே கம்யூனிசம் ஆகனும், அந்த புத்தகத்தை படி இந்த புத்தகத்தை படி என்று சொல்லிவிட்டு ஓடினார்களே தவிற யாரும் பதில் சொல்லவில்லை. நீங்கள்தான் பெரிய அறிவாளியாச்சே, விளக்குங்கள் கேட்கிறேன்.

     அதாவது பொதுவாகவே இது போன்ற வெளி நாட்டு சித்தாந்தங்களை நம்புபவர்கள் தாங்கள் ஏதோ பெரிய அறிவாளி என்ற நினைப்பு இருக்கும். தாங்கள் மற்றவர்களைவிட வேறுபட்டவர்கள், சிறந்தவர்கள் என்ற சிறுபிள்ளைத்தனமான இறுமாப்பு இருக்கும் இதுவும் ஒரு வகையான அடிமை சிந்தனையே.

     ///தங்களின் அதிஅறிவு கண்டு வியக்கிறேன்///

     ரொம்ப நாகரீகமாக சாடறாராமாம். கருத்து சுதந்திர சிகாமணிகள். நீங்கதான் கருத்து சுதந்திரத்த பத்தி எல்லாருக்கும் பாடம் எடுக்கறீங்க.

     • shanக்கு நன்றி சீனாவில் தோழர் மாவோவின் மறைவுக்குப் பின் டெங் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலேயே ஒரு வகையான திருத்தல் வாத முதலாளித்துவ முறையிலேயே ஆட்சி நடைபெறுகிறது.மேலும் மாவோவின் காலத்தில் கலாச்சார புரட்சி மானுடம் காணத ஜனநாயகத்தை உலகிற்கு அறிமுகமானது.
      கம்யுனிசத்திற்க்கு எதிரான வகைப்படுத்தவே முடியாது அளவில் புத்தகங்கள் ஊடக ஒலிஒளிகள் உள்ளது.
      ‘மாபெரும் சதி’ ஆல்பர்ட் மற்றும் ஒரு ஆசிரியர் இணைந்து ஆய்வு செய்த நூல் தாங்கள் படிக்கலாம்.
      உங்கள் கருத்து மீதுதான் எனது விமர்சனம் நண்பரே.மேலும் தாங்களும் நயமானநாகரீகத்துடன் எழுதுகிறீர்கள்.
      உங்களுக்கு படிக்க பிடிக்காது அல்லது படிக்க நூல்களை பரிந்துரை செய்யப்படுவதும் பிடிக்காது எனில் வேறு எப்படி?உண்மைகளை தேடினால்தான் கண்டறிய முடியும்

   • இதுபோன்ற பதில்களைத்தான் நான் வெறுக்கிறேன், கம்யூனிசம் செய்தால் ஜனநாயகம் செய்வது சரியாகுமா? எந்த இடமாக இருந்தாலும் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் வேரறுக்க வேண்டியதே

  • Ashak, பெரியாரை குறிப்பிட்டுயிருக்கிறீர்கள், அது நியாயம். கருணாநிதி எங்கிருந்து வந்தார்? அவர் எப்போது சாதிமத பேதங்களிலிருந்து உண்மையாக தள்ளி நின்றார்? தான் தள்ளி நின்றதுபோல் நடித்தார். அப்படி இந்துமதம் ஆதிக்கம் செய்தது உண்மைதான் என்று அவர் நினைத்திருந்தால், இந்துமதமக்களிடையே ஓட்டு கேட்டிருக்கவேகூடாது. அப்படிஇருந்திருந்தால், அவர் ஆட்சிக்கு வராமலே போயிருப்பார். இன்று உங்களைப்போல் யாரும் அவரை பாராட்டமாட்டீர்கள். மெரினாவில் இடம் மிச்சமாயிருக்கும். இந்துமக்கள் ஓட்டு கிடைக்காது என்று நன்றாக தெரிந்ததினால்தான், பெரியார் ஆட்சி அரசியலுக்குள் வராமல் தன் மானத்தை காத்துக்கொண்டார்.

 4. //பிறரை அவமானப்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட பா.ஜ.க. இவ்விவகாரத்தில் சோஃபியாவை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருகிறது//இது கொஞ்சம் மிகையாக தோன்றுகிறது.ஏனெனில் WhatsAppla சோபியாவ பத்தி மிகவும் கீழ்தரமாக பதிவிடுகின்றனர் Bjp supporters. மேல் மட்ட தலைவர்கள் மட்டும் தான் அடக்கி வாசிக்க இன்றும்.அடி பொடிகள் எல்லாம் வழக்கம் போல கிறிஷ்த்துவ மிஷனரி சதி, நக்சலைட்,மாவோயிஷ்ட்,பெண் எனபதால் மிகவும் கீழ்தரமான ஆபாச வசவுகள் என்று தான் செய்து கொன்டு இருக்கின்றார்கள்.

 5. இன்றைய மேற்கோள் பகுதியில் திருக்குறள் பாசிச பயங்கரவாத பா.ஜ.க. தலைவர் திருமதி.தமிழிசை அவர்களுக்கானதாக உள்ளது….

 6. இவர்களே ஜாதி இல்லை என்று சொல்வார்களாம். ஆனால் இவர்களே கம்பிளைன்ட்ல் ‘ஜாதி’ பெயரை போடுவார்களாம்

  ஏற்கனவே ஜல்லிக்கட்டு ‘வீரத்தமிழிச்சி. இப்போது இன்னொமொரு வீரத்தமிழிச்சியா ?

  அதெல்லாம் சரி. ஜாதி கொடுமையால் தானே மதம் மாறினார்கள். இப்போது ஜாதி எங்கிருந்து வந்தது ? இதை கேட்டால் ‘பார்ப்பன அடிவருடி’ என்பார்கள்

  • ஜல்லிக்கட்டு தமிழச்சி இன்று என்ன செய்துகொண்டுஇருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் வெளியேவந்து இப்படி பேசமுடியுமா? அவர்சார்ந்த TV சேனல் அவரை உடனே தள்ளி வைத்துவிடும். ஆக, இவையெல்லாமே இந்தவயதில் வரும் ஒருவகை புகழ் மயக்கம். இதே சோபியா டாக்டராகி நல்ல நிலையில் இருக்கும்போது இவ்வாறு பேசுவாரா? மாட்டார், ஏனெனில் அந்த நிலைமை வரும் காலத்தில் அவருக்கு மனப்பக்குவம் வந்து எது நிஜமென்று தெளிவுகிடைத்துவிடும், நம்ம ஜுலி போல.

 7. கம்யூனிசம் இன்று செத்துபோன பாம்பு. இன்றைய உலக எதார்த்ததிற்கு ஒத்து வராத ஒரு தத்துவ போதை, சீனா தவிர. இதை பிடித்து தொங்கும் இன்னும் சில குருட்டுபூனைகள் தங்கள் சுயலாபத்துக்காக அங்கங்கே இருக்கத்தான் செய்கின்றன. சோபியா மாதிரி பெண்கள் இவர்களின் பேச்சுக்களால் மனவசியம் செய்யப்பட்டு இம்மாதிரி பேசி தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிட்டு காலம் முழுவதும் இப்படியே இருக்க வேண்டியதுதான். இந்த தத்துவவாதிகள் என்னதான் செய்ய வேண்டுமென சொல்கிறார்கள்? இந்த நாட்டை இவர்கள் கையில் கொடுத்துவிடவேண்டும். இவர்கள் தங்கள் கோமாளி வசனங்களை பேசிப்பேசி எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்கி நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளுவார்கள். இதைத்தவிர, இவர்களால் உருப்படியாக ஏதேனும் சொல்லமுடியுமா?

  • //சோபியா மாதிரி பெண்கள் இவர்களின் பேச்சுக்களால் மனவசியம் செய்யப்பட்டு இம்மாதிரி பேசி தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிட்டு காலம் முழுவதும் இப்படியே இருக்க வேண்டியதுதான்//Vasanth Mohan உங்களது மறுமொழியின் சில வரிகள்.ஏதோ இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பது போலவும் இந்த சோபியா பெண் அதை இழப்பது போலவும் தங்களின் கருணையான கருத்து RSSன் மிரட்டல் போலவுள்ளது.என்ன செய்வது கெடுவாய்ப்பாக சோபியா “மானம்” உள்ள பெண்ணாக இருந்து தொலைந்துவிட்டார்.
   ஒரு வேளை பா.ஜ.க.ன் முன்னோர்கள் தொடங்கி இன்று வரை இந்தியாவை கூறுபோட்டு விற்க்கும் பா.ஜ.க.ன் நயவஞ்சகம் புரியாத அப்பாவியாக சோபியா இருந்திருந்தால் பாவம் திருமதி தமிழிசை அன்று மட்டும் தப்பியிருக்கலாம்.என்ன செய்ய விதி வலிது!

   • திரு. முரளி, தங்களது எதிர்பதிலில் அவநம்பிக்கை மேலோங்கியிருப்பதை காண முடிகிறது. அது வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அறுபது கால காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்படி அவநம்பிக்கை கொண்ட பல இளைஞர்களுக்கு இந்த நாலரை ஆண்டுகள் நம்பிக்கை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டை மட்டும் தனித்து பார்த்து தங்களது விரக்தி கொள்ளவேண்டாம். மீண்டும் ஒருமுறை காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் இந்த நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது என்பதை விரைவில் அறிவீர்கள். மூன்றாம் கூட்டணிக்கு இப்போது கணக்கு போடும் மற்ற கட்சிகளெல்லாம், தங்கள் பிரதமாகவேண்டுமென்ற பச்சை சுயநலமின்றி வேறேதுமில்லை. இந்த சுயநல நயவஞ்சகர்கள் கையில் எப்படி தங்கள் எதிர்காலத்தை கொடுப்பீர்கள். பாவம் தமிழ்நாடு. இம்முறை அதிமுகாவிற்கும் வாய்ப்பில்லை. திமுகவிற்கு ஒரு சிறிய நம்பிக்கையுள்ளது. ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை கூறுபோட காத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கும் மூன்றாம் கூட்டணிக்கு கோமாளிகள் காத்துக்கிடக்கிறார்கள். இன்னும் அடுத்த சிலமாதங்களில் நிலைமை தெரியவரும். சோசலிசம், கம்யூனிசம், பெடெரலிசம் போன்று இந்த ‘இஸங்களையெல்லாம்’ தூக்கி தூர எறிந்துவிட்டு நடுநிலையோடு அரசியிலை பாருங்கள். தெளிவு பிறக்கும்.

    • திரு.Vasanth Mohan எங்களுக்கு எந்த அவநம்பிக்கை விரக்தி ஏதுமில்லை.இந்த போலி ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் வேலைதான் மூன்றாவது அணிகள் சிந்தனை.
     மேலும் உங்களது பதிவுக்குத்தான் மறுமொழி கூறினேன்.நான் எழுதியதிலிருந்து விமர்சனம் செய்யுங்கள்.ஆனால் திசைதிருப்பும் வேலைகள் வேண்டாம்.

   • திரு. முரளி. மீண்டும் சொல்கிறேன். சோபியாவிற்கு மானம் உள்ளதால்தான் இப்படி பேசினார் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் வாதிட்டால் அது தங்களின் சிந்தனை பிழை. இந்த ‘மாப் சைக்கோலஜி’ வேகம் அவருக்கு எப்படி வந்தது? ஏன் இளையர்களையே பெரும்பாலும் இப்படி பேச வைக்கிறது? ஒரு பொது இடத்தில் சற்று சப்தமாக தும்மினாலோ அல்லது கொட்டாவி விட்டாலோ மற்றவர்கள் நம்மை சுற்றி இருப்பவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள். அப்படயிருக்க, விமானத்தில் பயணம் செய்யும்போது இவ்வாறு செய்தால் சட்டம் அனுமதிக்காது என்று தெரிந்தும் செய்தால், அவர் ஏதோ ஒருவகையில் மூளைச்சலவை செய்யப்பட்டவர்தான் என்று சொல்வதைத்தவிர என்ன இருக்க முடியும். அதற்க்குப்பேர் உங்கள் மொழியில் ‘மானமா’? இல்லை, மடத்தனம். இந்தவிடத்தில் தமிழிசை இருந்ததால் என்னை நீங்கள் உடனே RSSவோடு இணைப்பது உங்களது அறியாமையைவிட உங்களில் ஓங்கி நிற்கும் தாங்கள்சார்ந்த தத்துவத்தின் வேகம். அந்த வேகம் சோபியாவின் வேகத்தோடு பொருத்திப்பார்த்து தாங்கள் செய்ததுபோல் ஒரு மகிழ்ச்சி அடைகிறீர்கள். எனவே, சோபியாமீது உங்களுக்கு வருவது பச்சாதாபம். தமிழிசை இடத்தில் யார் இருந்தாலும், நான் அவர்களை ஆதரித்திருப்பேன். நீங்கள் அறிவுசார் இளையசமுதாயத்தை சார்ந்தவராக இருந்து நாட்டு முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டுள்ளவரைமட்டுமே ஆதரிப்பேன் என்று எந்தப்பாகுபாடும் இல்லாமல் இதை நோக்கினால், இவ்வாறு சோபியாவை ஆதரிக்க முயலமாட்டீர்கள். பிஜேபியை தள்ளிவைத்து வேறொரு மேலான மாற்று வரும் 2019ல் தங்களால் காட்டமுடியுமா? அப்படி காட்டினீர்களேயென்றால், நான் அவர்களை ஆதரிக்க தயங்கவேமாட்டேன். சொல்லப்போனால், காங்கிரஸின் 60 ஆண்டு துஷ்ட ஆட்சியில் துடித்து விரக்திகொண்டவன்தான் நானும். சாதிகளாலும், மதங்காளாலும், சுயநலத்தலும், கொள்ளைகாலும் நாட்டை கூறுபோட்டது இந்த காங்கிரஸே தவிர, பிஜேபி நிச்சயமாகயில்லை. தமிழ்நாட்டை மட்டுமே குறுக்கிப்பார்த்து எந்தமுடிவும் செய்யாதீர்கள். நான் இந்தியன் என்ற பரந்த மனதோடு பாருங்கள். மாயத்திரை விலகும்.

    • திரு Vasanth Mohan மானம் உள்ளவர்கள் முட்டாள் என்பது உங்களது வாதம்.ஆமாம் கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், திப்பு சுல்தான், ஜான்சிராணி,வ.உ.சி, பகத்சிங், கல்பனாதத்,அஷ்வகுல்லாகான், வேலூர் புரட்சியாளர்கள்,அஷ்ரத்மகல்,
     சந்திரசேகரஆசாத், விடுதலையை நேசித்து போராடிய இன்னும் போராடும் கோடான கோடி சாதாரண மக்கள் இவர்களின் வரிசையில் சோபியாவும்….. நாங்கள்…. அனைவரும் “முட்டாள்” என்பதே பெருமை…. நன்றி 🙏

   • //ஏதோ இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பது போலவும் இந்த சோபியா பெண் அதை இழப்பது போலவும்//

    சரியான கருத்து. இது இளைஞர்களை வீதிக்கு இறங்காமல் தடுக்க பயன்படுத்தத படும் குயுக்தி. வாழ்க்கை அனுபவிக்க வேண்டியதே சமூகம் எக்கேடும் கேட்டு போகட்டும் என்ற சிந்தையை விதைப்பது.

  • //கம்யூனிசம் இன்று செத்துபோன பாம்பு. இன்றைய உலக எதார்த்ததிற்கு ஒத்து வராத ஒரு தத்துவ போதை,// Vasanth Mohanனின் வைரவரிகள் ஏன் செத்த பாம்பு மீது இத்தனை பயம்.உங்களின் சொந்த பயம் பற்றி கவலைப்படாமல் பாவம் அம்பானி அதானிகளின் பயத்தை நீங்கள் உங்களதாக உணர்ச்சி வயப்படவைத்ததுதான் பாசிச முதலாளித்துவ வெற்றி..

   உங்களை அதாவது நாட்டில் உங்களையொத்தவர்களை பற்றி கவலை கொள்ளுங்கள்…

 8. Mr.Vasanth Mohan,

  1. Why should we separate the BJP from other parties.
  2. BJP is also a political party like all political parties in all respect except religious arrogance.
  3. All respect includes corruption (raffle deal, NPA, nexcess with criminals & Vijay mallya, demonitisation to win UP election, Ajay shah’s disproportionate asset, Viyabam Medical Scam in MP, etc)
  4. Selection of candidate based the strength of caste
  5. Division of caste (political re-engineering) to get political (vote) advantage.
  6. Politician means licence to loot the wealth of country. It squirrely applies to all political parties including BJP.
  7. You people are talking about 60 years of congress rule and blaming as if nothing has developed in the last 60 years. Creation of public sectors, like BHEL, NTPC, ONGC, BPCL, SAIL, GAIL, FCI, etc and employment to lakhs of people of india and their development are congress work.
  8. Nationalisation of Banks is the work of congress and of course NPA is also work of congress. But tragidically BJP is also follows the same path.
  9. Agriculture development and food to all (alivation of hungry) through Food corporation of India is the work of congress. in 1947 it was 35 Crores, in 2014 it was 120 Crores. Think of the food requirement
  10. Development from raw land is very difficult. but developing from the developed is very easy. But BJP failed to do the things instead blaming congress for the last four years. Don’t you feel ashamed of it.
  11. Discrimination of fellow citizen by BJP. Example : death of children in UP govt hospital due to supply of industrial gas instead of life saving medical Oxygen, Killing of people by Cow raksans, Killing of tribals in tribal lands etc.
  12. In 1947 British government transferred the permit of rule of the country to big shots like land lords and millionaires. Still it is continuing. In olden days the land lord and millionaires spend their money to get fame. To day all politicians are looting money to project their fame as millionaires.

  So in noway BJP is better than any other party. The only difference is that, BJP is creating hate and division of people openly to establish Ram rajya in which Bramins will rule the country and all other varnas will serve bramins. This is called nationalism of BJP. and you will say that I am not RSS sevak but support any body comes with clean chit.

 9. Sanghis will not reply to points raised by Mr.Thanikachalam.After all they are only sanghis and we have to treat them like parasites afflicting a conscious society growing with its own difficulties and errors

  • பாசிச பா.ஜ.க.அரசாங்கத்தின் மோடி என்ற சங்கியிடம் ரஃபேல் விமான ஊழல் பற்றிய கேள்விக்கு நான் ஒரு ஏழையின் மகன் என்று பதில் தந்தார்.மேலும் பாசிசRSSன் தலைமை சங்கி மோகன் பாகவத் என்று கிரிமினல் சில தினங்களுக்கு முன் சிகாகோவில் விவேகானந்தர் பேசிய அதேயிடத்தில் எந்த ஆன்மீகமும் பேசாமல் மறைமுகமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாதத்தை கக்கியுள்ளான். இதுதான் இந்த கிரிமினல்களின் யோக்கியதை.
   காந்தி அவர்களை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பானும் தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு இஸ்லாமிய முறைப்படி சுன்னத்து செய்துகொண்டு வேடமிட்டு மக்களை திசைதிருப்பும் நயவஞ்சக வேலையை செய்தான்.
   இப்படித்தான் இந்த பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பல் செயல் படுகிறது என்பதே வரலாறு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க