வில்லவன்

சென்னையில் தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய அபிராமி செய்திகளால் எல்லா ஊடகங்களும் மக்கள் மனங்களும் நிறைந்திருந்த வேளையில், மாணவி ஒருவர் ஒற்றை கோஷத்தின் மூலம் அவர்கள் கவனத்தை திருப்பியிருக்கிறார். அது வெறுமனே ஒற்றை வாசகமாக இருக்கலாம். மிகை ஆர்வம் காரணமாக வெளிப்பட்ட எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் சோஃபியா விமானத்தில் ஏறுகையில் எடுத்த ஒரு தீர்மானமும் அதனையடுத்து எடுத்த சிறு முயற்சியும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானவை. அது வெறும் ஒற்றை கோஷம் என்றால் பா.ஜ.க. இத்தனை பதற அவசியமில்லை.முதலில் சோஃபியாவின் விமான முழக்கத்துக்கு பா.ஜ.க. கூடாரத்தின் எதிர்வினைகளை கவனியுங்கள் (இந்துத்துவாவுக்கு தாலிகட்டினாலும் ஒரிஜினல் கள்ளக் கணவர்களாகவே வாழும் ”நடுநிலை” பார்ப்பனர்கள் உட்பட). விமான நிலைய வளாகத்தில் தாவித் தாவி குதிக்கிறார் தமிழிசை. அவரை தடுக்க அங்கிருந்த பெண் போலீஸ்காரர் ஒரு கபடியாட்டமே நடத்த வேண்டியிருந்தது. “சோஃபியா இடத்தில் என் மகளை வைத்து பார்க்கிறேன் ஆகவே அவரது எதிர்காலம் பாதிக்கப்படுமே என கவலையாக இருக்கிறது” என ரங்காராவ் பிட்டை போடுகிறார் தினமலர் வெங்கடேஷ். அவர் ஏன் மாணவி வளர்மதியை மகளாக நினைக்கவில்லை, சோஃபியாவை ஏன் மகளாக நினைக்க முடிகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

பொன்.ராதா, தமிழிசை உள்ளிட்ட பல பா.ஜ.க. தலைகள் கோஷமிட்ட பெண்ணுக்கு பின்னணியில் ஏதோ ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் அலறுகிறார்கள். பா.ஜ.க. பாதநக்கி கருத்தாளர்களும் அதனை அப்படியே வழிமொழிகிறார்கள். ஆனால் அனைவரும் கோபத்தையும் பதற்றத்தையும் அடக்கிக்கொண்டு தடுப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பது இங்கே பெரிதும் கவனிக்கத்தக்கது. பா.ஜ.க. பேச்சாளர்கள் ”நாங்கள் வெறும் புகார் மட்டும்தான் கொடுத்தோம். அவரை ஜெயிலில் தள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, அந்த உரிமைகூட எங்களுக்கு இல்லையா” என்றுதான் புலம்பினார்கள்.

விமான நிலைய வளாகத்திலேயே மேடை போட்டு உரையாற்றும் அமித்ஷா.

வழக்கமாக தமிழிசைக்காக தமிழக பா.ஜ.க.வின் பார்ப்பன லாபி எந்த வேலையையும் செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் தமிழிசையை வேலை மெனக்கெட்டு ஆதரிக்கிறார்கள். நேரடி மற்றும் மறைமுக பா.ஜ.க. கருத்தாளர்கள் எல்லோரும் அவர் வெறுமனே மாணவியல்ல அவருக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் சொல்லி சோஃபியா ஒரு சாமனிய பெண் அல்ல என நிரூபிக்க முற்படுகிறார்கள். பிறரை அவமானப்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட பா.ஜ.க. இவ்விவகாரத்தில் சோஃபியாவை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருகிறது.

மறுபுறம் செய்தி கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள் பேரார்வத்தோடும் ஒருவிதமான பரவசத்தோடும் அவரை ஆதரித்து பதிவிடுகிறார்கள். இத்தளங்களில் இயங்காத சாமானிய மக்களும் இதே உணர்வோடுதான் இருந்தார்கள். சோஃபியாவை ஆதரிக்கும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக எனும் ஹேஷ்டேக் ஒரு அலையைப்போல பரவிற்று. ஏன் சாதாரண நிகழ்வுவொன்று ஒருபுறம் பெரும் பதற்றத்தையும் மறுபுறம் பரவசத்தையும் உருவாக்குகிறது?

காரணம் அந்தப்பெண் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பொருளாதாரப் பிண்ணனி. பா.ஜ.க.வின் கோர முகம் தெரிந்தும் அதனை அலட்சியப்படுத்தி, பா.ஜ.க.வை ஆதரித்து பார்ப்பனக் கும்பலோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அதனை பயன்படுத்திய மிடில் கிளாசில் இருந்து அவர் வந்திருக்கிறார். அதிகம் படித்தவனுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது. நீ படி, அதிகம் பொருளீட்டு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதே அனேக மெத்தப்படித்தோரின் வாழ்நாள் அறிவுரை. அந்த அறிவுரையை சோஃபியா துணிவோடு புறந்தள்ளியிருக்கிறார். போராட்டங்களை இடையூறு என்பதாகவும் உரத்த குரலை அநாகரீகம் என்பதாகவும் கருதும் ஒரு வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஒரு சிறு பெண் எட்டி உதைத்துவிட்டார்.

தங்களது கவசமாக இருந்த ஒரு வர்க்கத்தில் இருந்து வந்த பெண் அவர்களுக்கான விதிகளை எல்லாம் உடைத்துவிட்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதை பார்க்கையில் தமிழிசைக்கு பயம் மேலிடுகிறது. என்ன நடந்தாலும் சாணி மாதிரி கிடக்கும் மிடில்கிளாசிடம் இருந்து வெளிப்படையான எதிர்குரல் எழுவதென்பது பா.ஜ.க. கூடாரத்தை பெரிதும் கலவரப்படுத்தவல்லது. அதனை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடத் துடித்ததன் விளைவே தமிழிசையின் அந்த விமான நிலைய குறளிவித்தை. எல்லாவற்றையும் பொறுக்கித்தனமாகவே கையாளும் பா.ஜ.க.வின் தலைவர் என்பதால் இதையும் அப்படியே கையாள முற்பட்டார் தமிழிசை. அதனால்தான் அவர் வெறுமனே புகார் சொல்லாமல் தன் ஆட்களை விட்டு சோஃபியாவையும் அவர் குடும்பத்தையும் மிரட்ட வைத்தார் (அவர் மிரட்டு என உத்தரவிடத்தேவையில்லை, என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என சொன்னாலே போதுமானது).

ஆனால், ஆரம்பத்திலேயே பாடம் கற்பித்துவிடவேண்டும் எனும் அவரது ஆத்திரம் எதிர்மறையாக வேலை செய்துவிட்டது. தலித், பெண், கிருஸ்துவர், வெளிநாட்டில் படிக்கிறார் என்பதாக பா.ஜ.க.வால் மிக இலகுவாக அவமானப்படுத்த முடிகிற எல்லா தகுதியும் சோஃபியாவுக்கு இருந்தது. ஆனால் மக்கள் யாரெல்லாம் களத்துக்கு வரவேண்டும் என விரும்பினார்களோ அங்கிருந்து ஒரு சிறு பெண் துணிந்து வரவும் கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பா.ஜ.க.வின் வழக்கமான அஸ்திரங்கள் பயனற்றுப்போயின. மிக அரிதான நிகழ்வாக பா.ஜ.க. தடுப்பாட்டம் ஆடும் நிர்ப்பந்தம் வந்தது.

பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாமல் ஷோவை ஓட்டிவிடவேண்டும் எனும் ஊடகங்களின் வேண்டுதலை குழந்தைகளை கொன்ற அன்னை அபிராமியால்கூட காக்க இயலவில்லை. ஆனாலும் பாசிச பா.ஜ.க. ஒழிக எனும் கோஷம் முன்னுக்கு வராமல் தடுத்து சோஃபியா செய்தது சரியா என்பதாக விவாதித்து தமது எஜமானர்களை அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். எந்த டி.வி.யும் தமிழிசை ஏன் புகார் மட்டும் கொடுத்துவிட்டு போகாமல் தன் கட்சி ஆட்களை அழைத்து ரகளை செய்தார் எனும் கோணத்தை விவாதிக்கவே இல்லை.

பா.ஜ.க.வின் டிப்ளமேட்டிக் அணிகள், டிப்ளமேட்டிக் ரவுடி அணிகள் மற்றும் பியூர் ரவுடி-பொறுக்கி அணிகள் எல்லாமே இம்முறை அடக்கி வாசித்தன. பார்ப்பன நற்செய்தியாளர்கள் சேதாரத்தை அனுமானித்து ”ஏர்கிராஃப்ட் ரூல்சை மீறிப் பேஷறது தப்பு” என ஆரம்பித்து ”பொண்ணோட எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்குல்ல..” என முடித்தார்கள், அதன் பொருள் மற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரும் இப்படி கோஷம் போட்டுவிட வேண்டாம் என்பதே. பொன்ரா வகையறா சோஃபியாவுக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொல்லி  அவர் உங்கள் ஆள் அல்ல என மக்களுக்கு பாடம் எடுத்தார்கள். மக்கள் தமது கோபத்தை அடுத்த வருடம் தேர்தலில் காட்டினால் போதும் என ஆலோசனை சொன்னார் ஒரு நடுநிலை. ”உங்க தலைவருக்கு இது நடந்தா நீங்க சும்மாயிருப்பேளா” என சிலர் முறையிட்டார்கள் (சம்பவத்தில் ஒரு முக்கிய திருப்பமாக தி.க. ஓவியாவும் இதை சொன்னார். வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.க. நாராயணன் ஓவியாவின் கருத்துக்களை குறிப்பிட்டு வழிமொழிந்தார்) ஆனால் ஒருவர்கூட பா.ஜ.க. பாசிஸ்ட் கட்சி இல்லை என்றோ பாசிச ஆட்சி இல்லை என்றோ சொல்லவில்லை.

சோஃபியாவின் குரலுக்கான எதிர்வினைகளையும் பரிசீலிக்கையில் அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது விளங்கும். மக்கள் இத்தகைய குரல் ஒன்றுக்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதும் பா.ஜ.க. கூடாரம் இத்தகைய குரலைக் கண்டு அஞ்சுகிறது என்பதும் உற்சாகமூட்டக்கூடிய செய்திகள். சோஃபியாவை ஆதரிப்பதன் மூலம் அவரது உணர்வுகளை பரவலாக்குவதன் மூலம் நாம் பெருந்தொகையான மத்தியதர மக்களிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும். உண்மையில் பா.ஜ.க.வின் பொருளாதார நடவடிக்கைகள் கொடூரமாகச் சிதைத்திருப்பது மிடில்கிளாஸ் மக்களின் எதிர்காலத்தைத்தான் (ஏழைகளுக்கு அப்படி ஒன்று இருந்ததில்லை). நிகழ்காலத்தை செலவு மிக்கதாக்கி சேமிப்பை அர்த்தமற்றதாக்கியதுதான் பா.ஜ.க. மிடில் கிளாஸ் விசுவாசத்துக்கு கொடுத்த பரிசு. இன்று அவர்களை பிடித்து நிறுத்தியிருப்பது அந்த விசுவாசம் அல்ல, பா.ஜ.க.வை செருப்பால் அடிப்பதில் இருக்கும் தயக்கம்.

இதுவரை நடுத்தர வர்க்க மக்களுக்கு போதிக்கப்பட்ட உதாரண மனிதர்களின் இலட்சணமான “நல்லா படி, ஃபாரின் போ, சம்பாதி” என்பதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டவர் சோஃபியா. அப்படியான உதாரண மிடில் கிளாஸ் மகளை சமூக அக்கறைக்கான மாடலாக நாம் காட்டவேண்டும். அவர் கோஷம் மட்டுமல்ல, மன்னிப்பு கேட்க மறுத்த துணிவு மற்றும் அவரது கருத்தியல் பங்களிப்பு (அவர் எழுத்துக்கள்) ஆகிய எல்லாவற்றையும் நாம் பெருமிதத்தோடு வரவேற்போம். எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம். இன்னும் ஆயிரமாயிரம் சோஃபியாக்களின் தயக்கத்தை அது உடைக்கட்டும்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.