தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வீர இளைஞன்தானே பகத் சிங் என்று நீங்கள் நினைக்கலாம் ! அவ்வளவுதானா ? பகத் சிங்கை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் ? அறியத் தருகிறார் தோழர் துரை. சண்முகம்

ன்று (செப்டெம்பர் 28, 2018) பகத்சிங்கின் 111-வது பிறந்தநாள். பகத்சிங்கைப் பற்றி இக்காலகட்டத்தில் பேச வேண்டிய அவசியம் என்ன?

ஊர்பக்கங்களில் கோவில் திருவிழாக்களில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவதற்கு முன்னர், முள் பொறுக்கி சாமியை வீதி உலா அழைத்துச் செல்வர். அதாவது உற்சவ மூர்த்தி வருவதற்கு முன், இந்தச் சாமி வந்து வழியை சரிபடுத்திக் கொடுக்கும். அதே போல ஏகாதிபத்தியங்கள் இந்த நாட்டை ஒட்டச் சுரண்டுவதற்கேற்ப வழிப்பாதையை சரி படுத்திக் கொடுக்கவே முள்பொறுக்கிச் சாமியாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் தற்போது மக்களை ஒடுக்கி வருகிறது.

தற்போது நிலவும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு நிகராக அன்று இருந்த காலனிய காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் பகத்சிங். பகத்சிங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக எழுப்பிய எதிர்ப்புக் குரலைப் போன்றே இன்றும் இந்த அரசின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக இளைஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் எதிர்ப்புக் குரல்களை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு.

இந்த சூழல்தான் பகத்சிங்கை அவசியப்படுத்துகிறது. அவரைப் பற்றி இதுவரை நமக்கு என்ன சொல்லித் தரப்பட்டிருக்கிறது ?

பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு போட்டது மட்டும்தான் முக்கியமான நடவடிக்கையா? அவர் ஒரு துடிப்புள்ள இளைஞர் என்பது மட்டும்தானா அவரது சிறப்பு? அதைத்தாண்டி இச்சமூகத்திற்கு பகத்சிங்கின் பங்களிப்பு என்ன?

பகத்சிங் ஒரு தியாகி. அவரது தியாகத்திற்குப் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன? அவரது நோக்கம் ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதும், சோசலிச சமதர்ம சமூகத்தை ஏற்படுத்துவதுமே ஆகும். அதற்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் பகத்சிங். அவரது சித்தாந்தமும் உணர்வும் என்னவாக இருந்தது?

பகத்சிங் தனது உயிருக்காக வாழவில்லை. அவர் தனது உணர்வுக்காக வாழ்ந்தவர். அவர் மரணிப்பதற்கு முன்பு கூட, இந்த நாட்டிற்குத் தாம் சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறோமா என்பதை பரிசீலித்தவர்.

உண்மையான தியாகம் என்பது என்ன ? உயிரை இழப்பது மட்டுமா ? இல்லை சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணிப்பதா?

பகத்சிங் எதற்காக, என்ன நோக்கத்திற்காக வாழ்ந்தாரோ அதிலிருந்துதான் பகத்சிங்கின் வாழ்வை, அவரது தியாகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகத்சிங்கை அத்தகையதொரு சீரிய பார்வையில் நமக்கு அறியத் தருகிறார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்

பாருங்கள் ! பகிருங்கள் !