Friday, May 7, 2021
முகப்பு கலை இசை பகத் சிங் - அந்த வீரன் இன்னும் சாகவில்லை....பாடல்!

பகத் சிங் – அந்த வீரன் இன்னும் சாகவில்லை….பாடல்!

-

பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை எதிர் கொண்டு எப்படி போராட வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக வாழ்ந்து தாய் நாட்டுக்காக உயிர் நீத்தவர் பஞ்சாப் சிங்கம் பகத்சிங். அவரது வீரவரலாறு தலைமுறை தலைமுறையாக நாட்டுப் பற்றுள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. உணர்வுபூர்வமாக பகத்சிங்கின் வீரத்தைப் போற்றும் இந்தப் பாடல் பகத்சிங்கின் நினைவைப் போலவே எழுச்சியளிக்கிறது.

======

பகத்சிங். இந்திய விடுதலை வானில் ஒரு விடிவெள்ளி. காங்கிரசின் துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த இளம் சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை லட்சக் கணக்கான இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி. அங்குமிங்குமாய் நடந்த  ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை தேசமெங்கும் விசிறியடிக்கச் செய்தது பகத்சிங்கின் உயிர்த்தியாகம். விடுதலை எழுச்சியைப் பூட்டி வைக்க நினைத்த காந்தியின் துரோகத்தை உடைத்தெறிந்தது பகத்சிங்கின் வீரமரணம். இந்திய முதலாளியாகவோ, பிரிட்டிஷ் முதலாளியாகவோ, அல்லது இரண்டின் கலப்பாகவோ இருக்கலாம். முதலாளிகளின் சுரண்டல் ஒழிக்கப்படும் வரை இந்தப்போர் தொடரும். இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை என்றான் பகத்சிங். ‘நாளை அணையப் போகின்ற விடியற்காலை விளக்கு நான், நாட்டு மக்களே தைரியமாக இருங்கள்’ என்றான் பகத்சிங்.  தேச விடுதலைப் போராளியாக களத்தில் கால் பதித்த பகத்சிங் தனது மரணத்தில் கம்யூனிசச் சுடராக ஒளிர்ந்தான்.

_______________________________________

பாடல்:

 

தாய் நாட்டின் மானம் காக்க…
தூக்கு கயிற்றை துணிந்தே முத்தமிட்ட…
எங்கள் பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே… தோழனே… தோழனே…

அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை

கோரஸ் : அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை
அந்த வீரன் இன்னும் சாகவில்லை

அண்ணல் காந்தியின் அகிம்சைப் பாதையிலே
வீரத்தை அடகு வைத்து மண்டியிட்ட நேரத்திலே

கோரஸ் : வீரத்தை அடகு வைத்து மண்டியிட்ட நேரத்திலே

வெள்ளை ஆதிக்க இருள்தன்னை கிழித்திடவே
வானில் விடிவெள்ளிகள் மூன்று உதித்தனவே..

கோரஸ் : உதித்தனவே… உதித்தனவே…

ஜாலியன் வாலாபாக்கில் மண்ணெடுத்து – அதில்
தேச விடுதலை உணர்வை வளர்த்தெடுத்து –

கோரஸ் : அதில் தேச விடுதலை உணர்வை வளர்த்தெடுத்து

தூக்குக் கயிறு இறுக்கி உயிர் துடித்த நேரத்திலும் – மண்ணில்
விழிபதித்து புன்னகைத்த வீரர்களே

கோரஸ் : வீரர்களே… வீரர்களே…

தூக்கு மரம் நெருங்கி வந்த நேரத்திலும் – நெஞ்சம்
துவளாது எதிர்கொண்ட தீரர்களே

கோரஸ் : நெஞ்சம் துவளாது எதிர்கொண்ட தீரர்களே

அன்று மறுகணமே மரணம் என்ற நேரத்திலும் – அந்த
மாமேதை லெனின் உங்கள் கைகளிலே..

கோரஸ் : கைகளிலே… கைகளிலே…

சினிமா சூதாட்டப் போதையிலே – மூழ்கி
சீரழியும் என்னருமை இளஞர்களே

கோரஸ் : மூழ்கி சீரழியும் என்னருமை இளஞர்களே

இந்த தியாகச் சுடர் பகத்சிங்கின் பெயராலே
அணிதிரண்டிடுவோம் கொடுமைகளை அழித்திடவே…

கோரஸ்: அழித்திடவே…அழித்திடவே…

அந்த வீரன் இன்னும் சாகவில்லை
அவன் தியாகம் இன்னும் மறையவில்லை

அந்த வீரன் இன்னும் சாகவில்லை…சாகவில்லை…சாகவில்லை..

_____________________________________

(இந்தப் பாடல் மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்டுள்ள ‘நான் உலகம்’ என்ற பாடல் ஒலிக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளது)

ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

1.      புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083. தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

2.      கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. என் தாய் நாட்டையும், என் தாய் மண்னையும் பார்த்துக்கொண்டே சாகவேண்டும் அதனால் என் கண்ணை கட்டாதே என்ற பகத்சிங்கின் நெஞ்சார்ந்த வீரம். நம் ரத்தத்தில், உணர்ச்சியில் கலந்திருக்க வேண்டும். இல்லையேல் எதிரியை கண்டு நாம் தலை குனிந்து அடிமையாய் வாழத்தான் வேண்டும்.

 2. இடிந்த கரை அல்ல.இனம் காக்கும் கரை..

  கூடங்குளத்தில் போராடுவோர்
  அந்நிய கைக்கூலிகளாம்.
  நாட்டையே அந்நியனுக்கு
  விற்கும் கைக்கூலிகள்
  நாறவாய் திறக்கிறார்கள்.

  அன்று பகத் சிங் பிறந்தான்
  பெருமையுற்றது பஞ்சாப்.
  இன்று மன்மோகன் துரோகத்தால்
  சிறுமையுறுகிறது பஞ்சாப்.

  தனியாருக்கு தடையில்லா மின்சாரம்.
  தமிழ் மக்களுக்கோ மின்சாரமே தடை.
  மின்தடை நீக்க அணு உலையே தீர்வாம்.
  அரளி விதையே அறுசுவை உணவாம்.

  பெரியாரின் மண்ணில் பம்மிக் கிடந்த
  பார்ப்பன காலிகள் பகிரங்க சதிராட்டம்.
  கூடங்குளம் போராளிகள் மீது
  இந்து முன்னணி கொலைவெறியாட்டம்.

  எட்டப்பன்களுக்கோ ஏக கொண்டாட்டம்.
  ஏற்கலாமோ இளங்கோவன்கள் ஆட்டம்.
  எத்தனை முறைதான் காட்டிக் கொடுப்பான்.
  தோற்கலாமோ நாம் மீண்டும் மீண்டும்.

  காங்கிரசு.பா.ச.க.கயவாளிகள் கூட்டம்.
  தி.மு.க.அ.தி.மு.க.கருங்காலிகள் கூட்டம்.
  வடவர்கள் நம்மவர்கள் அல்ல.
  நல்லவர்களும் அல்ல.
  அண்ணா சொல்லி தெரியும்.

  விபீடணர்கள் நம்மவர்கள் என்றாலும்
  நல்லவர்கள் அல்ல.
  ராமாயணம் சொன்னதையே
  கூடங்குளமும் சொல்கிறது.

  பொய்யும் புரட்டுமே அணு உலை பாதுகாப்பு.
  அதை புறந்தள்ளி வெற்றி கொள்வதே
  தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு.

 3. பகத்சிங்கின் வீரத்தை குறைத்து மதிப்பிடவல்ல, அதேபோல் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களைப்பற்றியும் எழுதுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க