நூல் அறிமுகம் : வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன்

வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா? மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?

வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா?
மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்?
மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?
மன்னர்களுக்கெதிராகச் சிறு முணுமுணுப்புக்கூட எழவில்லையா?

தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்தில், அந்தப்புரங்களையும் போர்க்களங்களையும் தாண்டி எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் திருடிய செயலுக்காக உயர் பறிக்கப்பட்டாளே சங்ககாலப் பெண் ஒருத்தி.

தான் மேய்த்த மாடு பயத்தம் செடியை மேய்ந்துவிட்டதற்காகக் கண்ணைப் பறிகொடுத்தாரே மிஞிலியின் தந்தை.

வைதீத சமயத்தை எதிர்த்தமைக்காகக் கழுவில் ஏற்றப்பட்டார்களே எண்ணாயிரம் சமணர்கள்.

குடி நீக்கிய பிரம்மதேயங்களும், தேவதானங்களும் உருவாகத் தம் நிலத்தை இழந்தார்களே, பல உழவர்கள்.

பிரம்மதேயமாக மாற்றப்பட்ட கிராமங்களில் கள் இறக்கும் உரிமையை இழந்தார்களே ஈழவர்கள்.

‘வெண்கல் உடைத்து மண்கலம் உடைத்து’ என்ற விதிமுறைப்படி தம் வெண்கலப் பாத்திரங்களைச் சோழப் பேரரசின் சேவகர்களிடம் பறிகொடுத்ததுடன், தம் வீட்டு மட்பாண்டங்களையும் அவர்கள் உடைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனரே சோழர்கால வேளாண்குடிகள்.

வீட்டின் முன்புறம் திண்ணை வைத்துக்கொள்ள, மாடிகட்ட, வெள்ளையடிக்கப் போராடித்தானே சோழர்கால இடையர்கள் இவ்வுரிமைகளைப் பெற்றார்கள்.

ஊதியமில்லாத கட்டாய வேலையை ‘வெட்டி’, ஊழியம் என்ற பெயர்களில் செய்து மாய்ந்துபோனார்களே நம் முன்னோர்.

தளிச் சேரிப் பெண்டிர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டனர்?

அழகான பெண்களைக் கவர்ந்துவந்தும், விலைக்கு வாங்கியும், அவர்களுக்கென ‘அம்முவீடு’, ‘மங்களவிலாசம்’, ‘கல்யாண மகால்’ என்ற இருப்பிடங்களை உருவாக்கிய மன்னர்கள் யார்?

இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாட்டை பெண்கள் மீது திணித்த மன்னர்கள் மற்றும் மேட்டிமை சாதியினர் யார்?

இக்கொடுமைகளுக்கெதிரான போராட்டங்கள் நடந்தனவா இல்லையா?

இவ்வாறு ஏராளமான கேள்விகளும் ஆய்வுக்குரிய செய்திகளும் தமிழக வரலாற்றிலும் உண்டு; இந்திய வரலாற்றிலும் உண்டு. அதிகாரப் பூர்வமான வரலாற்றுப் பாடநூல்களில் இவை இடம்பெறுவதில்லை….

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

வரலாறு என்பது மன்னர்கள் இல்லாமல் இல்லை என்ற கருத்து ஆதிக்கம் செலுத்துவதல்தான் வரலாற்று நாடகத்திற்குச் செங்கோலையும் கிரீடத்தையும் தேடி நம் பள்ளி மாணவர்கள் அலைகிறார்கள்.

உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் மன்னர்களைத் தாண்டி நிகழ்ந்த நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகளும்தான் என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.

உணர்த்தப்பட்டிருந்தால் கலிலியோ என்ற விஞ்ஞானி கண்ணை இழந்ததும், புருனோ என்ற விஞ்ஞானி உயிருடன் கொளுத்தப்பட்டதும், மகத் என்ற ஊரின் குளத்து நீரை ஆயிரக்கணக்கான மகர் சாதியினருடன் சென்று அம்பேத்கர் பருகியதும், தஞ்சை மண்ணின் விவசாயிகள் சாணிப்பால் குடித்ததும், சவுக்கால் அடிபட்டதும், அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்ததும் வரலாற்று நிகழ்வுதான் என்பதை அறிந்திருப்பர்.

நூலின் முன்னுரையில் : ஆ.சிவசுப்பிரமணியன் (பக்: 13-15)

நூலாசிரியரைப் பற்றி: ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் முக்கிய சமூக விஞ்ஞானிகளுள் ஒருவர். தூத்துக்குடி நகரில் வாழ்ந்து வரும் இவர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டவர்.

நூல்: வரலாறும் வழக்காறும்
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001.
பேச: 91-4652-278525
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

பக்கங்கள்: 120
விலை: ரூ.90.00

இணையத்தில் வாங்க: பனுவல் | CommonFolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க