மார்க்சியத்தின் தத்துவம் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இது பொருள்முதல்வாதத் தத்துவச் சிந்தனையின் ஒரு வளர்ந்த வடிவமாகும். மார்க்சியத்திற்கு முந்தியே பல பொருள்முதல்வாதத் தத்துவங்கள் இருந்திருக்கின்றன. தத்துவம் தோன்றிய காலத்திலிருந்தே, வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வகையான பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் வழக்கிலிருந்திருக்கின்றன. ஆயின் மார்க்சிய தத்துவம், முந்திய பொருள்முதல்வாதங்களிலிருந்து பலவகைகளில் வேறுபட்டு விளங்குகிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுவது அவசியம். எனவே பொருள்முதல்வாதத்தின் வரலாற்று வடிவங்களை நாம் காணவேண்டியுள்ளது.

பொருள்முதல்வாதம் என்றால் என்ன? 

தத்துவவரலாறு சுமார் 2500 வருட காலம் கொண்டது. இந்த நீண்ட நெடிய காலத்தில் உலக நாகரிகங்களில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தத்துவவாதிகள் தோன்றியுள்ளார்கள். மனித வாழ்வு குறித்து தத்துவவாதிகள் மிகச் சிக்கலான கேள்விகளை முன்வைத்துப் பேசி வந்திருக்கிறார்கள். இந்த உலகம், மனிதன், வாழ்க்கை இவற்றின் தோற்றம் என்ன? ஆன்மா என்ற ஒன்று உண்டா? இறந்த பின் என்ன நிகழுகிறது? உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு யாது? அறிவு என்றால் என்ன? நாம் எப்படி உலகை அறிகிறோம்? உண்மை என்றால் என்ன? அதன் அளவுகோல் யாது? நமது புலனுணர்வுகள் உண்மையை நமக்குத் தருகின்றனவா? இப்படி ஏராளமான கேள்விகளோடு தத்துவவாதிகள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இக்கேள்விகளுக்குத் தத்துவஞானிகள் தந்த பதில்களும் வேறு வேறானவை. இருப்பினும், மொத்தத் தத்துவ வரலாற்றையும் இரண்டு மிகப்பெரிய அணிகளாக வகைப்படுத்தலாம் என்று மார்க்சியம் கூறுகிறது. ஒன்று பொருள்முதல்வாத அணி, மற்றது கருத்துமுதல்வாத அணி.

தத்துவப் பிரச்சினைகளுக்கு உலகியல் ரீதியான பதிலை வழங்கியவர்கள் பொருள்முதல்வாதிகள் எனப்பட்டனர். பண்டைய இந்தியத்தத்துவத்தில் பூதவாதிகள் என்றொருபிரிவினர் இருந்தனர். உலகையும் மனித வாழ்வையும் இவர்கள் இயற்கையிலுள்ள ஐம்பூதங்கள் எனப்படும் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோற்றம் பெற்றதாக விளக்கினர். இவர்கள் பொருள்முதல்வாதிகள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றிலிருந்து சிகப்புநிறம் கொண்ட வெற்றிலைக் குழம்பு உண்டாவது போல் பௌதீகப் பொருட்களின் சேர்க்கையினால் மனித உடலும் அதன் உயிர் என்ற பண்பும் உண்டாகிறது என்று இந்தியச் சார்வாகர்கள் விளக்கினார்கள். இது பொருள்முதல்வாத விளக்கம். வைசேடிகத் தத்துவம் அணுக்களின் சேர்க்கை, பிரிவு ஆகியவற்றைக் கொண்டு உலகை விளக்கியது. இதுவும் ஒரு பொருள்முதல்வாத விளக்கம்தான். உலகில் துன்பம் உள்ளது, துன்பத்திற்குக் காரணங்கள் உள்ளன, அக்காரணங்களை விலக்கத் துன்பம் விலகும் என்று புத்தர் கூறியதும் கூட பொருள்முதல்வாதப் பண்பு கொண்ட விவாதம்தான். இவ்வாறாகப் பருப்பொருட்கள், பருப்பொருள் இயக்கம், உலகியற் காரணிகள், இயற்கை ஆகியவற்றைக் கொண்டு தத்துவக் கேள்விகளுக்குப் பதில் காணுதல் பொருள்முதல்வாத அணுகுமுறையாகும்.

படிக்க:
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !
எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

இதற்கு எதிர்நிலையிலுள்ள கருத்துமுதல்வாதம். ஏதாவதொரு சூக்குமக் கருத்தின் நிலைப்பாட்டிலிருந்து உலகை, வாழ்வை விளக்குவது கருத்துமுதல்வாதம் ஆகும். இயற்கையிறந்த, உலகைக் கடந்த, அப்பாலைத்தன்மை கொண்ட, அநுபூதப் பண்பு கொண்ட காரணிகளால் இது உலகை விளக்கும். இறைவன், ஆன்மா, உலக ஆன்மா, பிரம்மம், பரிபூரணக்கருத்து என்பது போன்ற துவக்கங்களிலிருந்து இது உலகையும் வாழ்வையும் விளக்குவதால் கருத்துமுதல்வாதம் என்ற பெயர் பெற்றது. (நூலிலிருந்து பக்.3-4)

… பஞ்சபூதங்களின் (காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம்) சேர்க்கையே உலகம் என்று கூறுவதிலும் கூட குறைபாடு உண்டு. இது இன்று ரசாயன மூலகங்களின் சேர்க்கையே மனித வாழ்வு என்று கூறுவதற்கு ஒப்பாகும். மனித உடலின் பௌதீக, ரசாயன, உள்ளடக்கம் குறித்த ஒரு விளக்கமாக இது அமையலாம். ஆயின் மனித வாழ்வின் பிரத்தியேகப் பண்புகளை இந்த அணுகுமுறை விளக்காது. மனித சிந்தனையை, அனுபவங்களை, கற்பனையை இது விளக்காது. வரலாற்றை இது விளக்காது.

ஒரே பருப்பொருள் அல்லது பஞ்சபூதங்கள் அல்லது இயற்கை, இவற்றிலிருந்து வாழ்வின் சிக்கலான அம்சங்களை வருவித்தல் என்பதில் ஒருவித குறைத்தல்வாதம் உள்ளது. இறைவன், உலகம், ஆன்மா ஆகியவற்றை முதற்புள்ளிகளாக எடுத்துக்கொண்டு முழு உலகத்தையும் அவற்றிலிருந்து வருவித்தல் போலவே பருப்பொருட்களை, பஞ்சபூதங்களை முதல் புள்ளிகளாகக் கொண்டு உலகை விளக்குதலும் அடிப்படையில் ஒருவித இயக்க மறுப்பியல் சிந்தனையே. இரண்டுமே குறைத்தல் வாதங்கள்தான். முறையியல் ரீதியாக இரண்டுமே ஒன்றுதான். பண்டைய பொருள்முதல்வாதம் பொருள் என்பதைச் சடப்பொருள் என்றே புரிந்துகொண்டது. உற்று நோக்கினால் இப்படித்தான் இயற்கையையும் பஞ்சபூதங்களையும் பருப்பொருட்களையும் பண்டைய ஆன்மீகவாதமும் உயிரற்ற, ஆன்மாவற்ற சடப்பொருளாகக் கருதியது. அவற்றைச் சடப்பொருள் என ஏற்றுக்கொண்டதன் மூலம், பண்டைய பொருள்முதல்வாதம் ஆன்மீகவாதிகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக ஆகிறது.

இயக்கம் குறித்த பார்வை பண்டைய பொருள்முதல்வாதத்தில் பலவீனமான ஒரு கண்ணி, சடப்பொருளாக உலகைக் குறைப்பதோடு சடப்பொருளின் பௌதீக இயக்கங்களை மட்டுமே அது இயக்கம் எனக் கொண்டது. இடப்பெயர்ச்சி, அணுக்களின் சேர்க்கை, பிரிவு என்ற மேலோட்டமான அளவில்தான் இயக்கம் புரிந்து கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில் தொழில்யுகம் தொடங்கிய காலத்தில், அதையொட்டி விஞ்ஞானங்கள் உயிர்ப்பு பெற்ற காலத்தில் பொருள்முதல்வாதமும் மறுமலர்ச்சி பெற்றது. இக்காலத்தில் பருப்பொருள் என்ற நிலைப்பாட்டைக் கடந்து வளர பொருள் முதல்வாதம் முயன்றது. ஐரோப்பாவில் ஆளுகை செலுத்திய விஞ்ஞானங்களும் அவற்றின் கண்டுபிடிப்புகளும் பொருள் முதல்வாதத் தத்துவத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தின.

இக்காலத்திய பௌதீக, ரசாயன விஞ்ஞானங்கள் பொருட்களின் பண்புகளை ஆய்வு செய்தன. பொதுமைப்படுத்தப்பட்ட வடிவில் பொருட்களின் பண்புகள் கண்டறியப்பட்டன. திடத் தன்மை, உருவம், பரப்பு, எடை, அடர்த்தி, ஆற்றல், விசை என்பது போன்ற ஏராளமான பொருட்பண்புகள் கண்டறியப்பட்டன. பௌதீகப் பொருட்களின் இப்பண்புகள் பற்றிய அறிவு, அப்பண்புகளின் அளவு ரீதியான கணக்கீடுகள் தொழில் யுகத்தின் தேவைகளான இருந்தன. பொருட்பண்புகள், புலனுணர்வுகளால் அறியப்படுகின்றன என்பதுவும் இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய பின்புலத்தில் தொழில் யுகத்தின் பொருள்முதல்வாதமும் உருவானது. (நூலிலிருந்து பக்.5-6)

வாழ்க்கை நிகழ்வுகளை நாம் நேரடியாகக் காணுகிறோம்; அனுபவிக்கிறோம். இந்த நிகழ்வுகளை அவற்றின் நேரடித் தளத்தில் முடிந்த சம்பவங்களாகக் கொள்ளுதல் கூடாது. சம்பவங்கள், நிகழ்வுகளுக்கிடையிலான உட்தொடர்புகள் அறியப்படவேண்டும். வெறும் சம்பவங்கள், நிகழ்வுகளோடு நிறுத்திக் கொண்டால் நமது மேலோட்டமான அனுபவத் தளத்தைத் தாண்டிய உட்தொடர்புகளை அறிய முடியாமற் போய்விடும். நிகழ்வியல் தளத்திலிருந்துதான் நாம் தொடங்க வேண்டிவரும்.

… நிகழ்வுகளோடு நிறுத்திக்கொள்ளுதல் தனிமனித வாதத்தையும் அனுபவ வாதத்தையும் வளர்க்கும். சாராம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு அது நிகழ்வுகளை நிர்ணயிக்கிறது என்ற முடிவிற்கு வருவது சாராம்சத்திற்கு அதீத அந்தஸ்து வழங்குவதில் முடியும். சாராம்சவாதம் இன்னொரு வகையான ஒரு தலைப்பட்சமாகவும் கருத்துமுதல்வாதமாகவும் முடியும். (நூலிலிருந்து பக்.20-21)

நூல் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க