மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 3

ந்தை காலமாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று பாவெல் விலாசவ் மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தான். வீட்டுக்குள் தள்ளாடித் தடுமாறி நடந்தான். மேஜை மூலையிலிருந்த ஆசனத்தை நோக்கித் தொட்டுத் தடவி நகர்ந்து சென்றான்; தன் அப்பன் செய்தது போலவே மேஜைப் பலகை மீது முஷ்டியால் ஓங்கிக் குத்தியவாறு தன் தாயைப் பார்த்துச் சத்தமிட்டான்.

மாக்சிம் கார்க்கி

“கொண்டா சாப்பாடு!”

அவனது தாயோ தன் மகனுக்கருகே வந்து உட்கார்ந்தாள். தன் கரங்களால் அவனை அணைத்து அவனது தலையைத் தன் மார்பகத்தில் புதைத்துக்கொண்டாள். அவனோ அவளை விலக்க முயன்றான்.

”அம்மா, கொண்டா சீக்கிரம்!”

“முட்டாள் பயலே!” என்று தாய் கவலையோடும் அன்போடும் அவனது கையை விலக்கிக்கொண்டே சொன்னாள்.

“நான் புகை பிடிக்கவும் போகிறேன். அப்பாவின் குழாயை எடுத்துக் கொடு” என்று சொல்லுக்கு வளையாத நாக்கினால் குழறினான் பாவெல்.

அவன் குடித்துவிட்டு வந்தது இதுதான் முதல் தடவை. ஓட்கா அவனது உடம்பைத் தளர்வுறச் செய்திருந்தது. எனினும் அவனது பிரக்ஞையை, போதை முற்றும் துடைத்துவிடவில்லை. எனவே அவனது மூளைக்குள்ளே ஒரே ஒரு கேள்வி மட்டும் முட்டி மோதிக்கொண்டிருந்தது

“குடித்திருக்கிறேனா? குடித்திருக்கிறேனா?”

அவன் தன் தாயின் அன்பைக் கண்டு தடுமாறினான். அவளது கண்ணில் மிகுந்த சோகம் அவன் உள்ளத்தைத் தொட்டது. அவன் அழ நினைத்தான். எனினும் அந்த உணர்ச்சியை அமுக்கடிப்பதற்காக, தன்குடிவெறியை அதிகமாக வெளிக்காட்டிக் கொண்டான்.

ஈரம் படிந்து கலைந்து போயிருந்த அவனது தலைமயிரைக் கோதிக் கொடுத்தாள் அவனது தாய்.

”நீ இப்படிச் செய்யக் கூடாது” என்று அமைதியாகச் சொன்னாள்.

அவள் திரும்பி வருவதற்குள்ளாக, பாவெல் நன்றாகத் தூங்கிப் போய்விட்டான்.

அவனுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. பிறகு பலமாக வாந்தியெடுத்தான். அதன் பின்னர் தாய் அவனைப் படுக்கையில் கொண்டு போய்ப் படுக்க வைத்து, வெளிறிப் போன அவனது நெற்றியின் மீது ஒரு ஈரத்துணியைப் போட்டாள். அது அவனுக்கு ஓரளவு தெளிவைக் கொடுத்தது. எனினும் அவனைச் சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் நீச்சலடித்து மிதப்பது போலிருந்தன. அவனது கண்ணிமைகள் கனத்துத் திறக்க முடியாதபடி அழுத்திக் கொண்டிருந்தான். தன் வாயில் உறைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கார நெடியின் உணர்ச்சியோடு, அவன் தன் கண்ணிமைகளை லேசாகத் திறந்து பெரிதாகத் தெரியும் தன் தாயின் முகத்தைப் பார்த்தான். ஏதோ தொடர்பற்று நினைத்தான்;

”நான் இன்னும் சின்னப் பிள்ளைதான். இதற்குள் குடித்திருக்கக் கூடாது. ஆனால், மற்றவர்கள் குடிக்கிறார்களே, அவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. நான் மட்டும் இப்படியாகிவிட்டேன்…..

எங்கிருந்தோ அவனது தாயின் இனிமையான குரல் ஒலித்தது.

“இப்படிக் குடிக்க ஆரம்பித்தால் நீ என்னை எப்படிக் காப்பாற்றப் போகிறாய்?”

“எல்லோரும்தான் குடிக்கிறார்கள்’ என்று கண்களை மூடிக்கொண்டே பதில் சொன்னான் பாவெல்.

அவனது தாய் பெருமூச்சு விட்டாள். அவன் சொன்னது சரி, சாராயக் கடை ஒன்றில் மட்டும்தான் ஜனங்கள் ஓரளவேனும் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அவளும் அறிவாள்.

”ஆனால், நீ மட்டும் குடிக்காதே என்று சொன்னாள் அவள். ”உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?”

படிக்க:
ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி
பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

துக்கமான இந்த இனிய வார்த்தைகளைக் கேட்டதும், தந்தை உயிரோடிருந்த காலத்தில் வீட்டிலிருப்பதே தெரியாது. எப்போதும் மெளனமாய், அடிக்குப் பயந்து சாகும் துயர வாழ்வையே தன் தாய் வாழ்ந்து வந்தாள் என்பது பாவெலுக்கு ஞாபகம் வந்தது. தன் தந்தையைச் சந்திக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, பாவெலும் எப்போதும் வீட்டை விட்டு வெளியேதான் திரிந்து கொண்டிருந்தான். எனவே அவன் தன் தாயிடம் கூட அதிகமாகப் பழகியதில்லை. ஆனால், இப்போது அவனுக்கு அறிவு தெளியத் தெளிய அவன் தன் தாயை ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்தான்.

அவள் உயரமாக இருந்தாள். எனினும் ஓரளவு கூனிப் போயிருந்தாள். ஓயாத உழைப்பினாலும், கணவனின் அடி உதைகளாலும் உடைந்து கலகலத்துப் போன அவளது உடம்பு அரவமே செய்யாமல் ஒரு பக்கமாகச் சாய்ந்தே நடமாடியது. எதனோடாவது மோதிவிடுவோமோ என்ற அஞ்சி நடப்பதைப் போலத் தோன்றியது. அகன்று நீள் வட்டமாக இருந்த அவளது முகம் உப்பியதாய், சுருக்கம் கண்டு போயிருந்தது. அந்த முகத்தில் குடியிருப்பிலுமுள்ள பெரும்பான்மையான பெண்களுக்கிருப்பது போலவே பயபீதியும் சோகமும் தோய்ந்து படிந்த இருண்ட இரு கண்கள் ஒளி செய்து கொண்டிருந்தன. அவளது வலது புருவத்துக்கு மேலாக ஒரு ஆழமான வடு தெரிந்தது, அந்த வடுவினால், அவளது புருவம் ஓரளவு உயர்ந்து போயிருந்தது. இதனால் அவளது வலது செவியும் இடது செவியைவிட ஓரளவு உயர்ந்து போய்விட்டது போல் பிரமை தட்டியது. இதனால், அவள் எப்போதுமே ஒரு பயங்கரச் செய்தியைக் கேட்டு அஞ்சுவது போலத் தோன்றியது. அவளது அடர்ந்த கரிய கூந்தலில் ஒன்றிரண்டு நரை மயிர்கள் மின்னிக் கொண்டிருந்தன. அவள் இதமும், சோகமும் பணிவுமே உருவாக இருந்தாள்…

அவளது கன்னங்களின் வழியே கண்ணீர் மெதுவாக வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

“அழாதே” என்று அவளது மகன் அமைதியாகச் சொன்னான். ”எனக்கு இன்னும் கொஞ்சம் குடிக்கக் கொண்டா?”

“உனக்கு நான் கொஞ்சம் ஐஸ் போட்ட தண்ணீர் கொண்டு வருகிறேன்.’

”உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார்”

ஆனால் அவள் திரும்பி வருவதற்குள்ளாக, அவன் நன்றாகத் தூங்கிப் போய்விட்டான். அவள் அவனையே ஒரு நிமிஷம் குனிந்து பார்த்தாள். அவளது கையிலிருந்த குவளை நடுங்கியது. அதனால் தண்ணீரில் கிடந்த ஐஸ் துண்டுகள் குவளையோடு மோதி ஓசையுண்டாக்கின. பிறகு அவள் குவளையை மேஜை மீது வைத்துவிட்டு, சுவரில் இருந்து தெய்வ விகாரங்களை நோக்கி முழங்காலிட்டு அமைதியாகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டாள். ஜன்னலுக்கு வெளியே குடிகாரர்களின் கும்மாளம் ஒலித்து மோதிக்கொண்டிருந்தது. இலையுதிர்கால இரவின் இருளையும் குளிரையும் பிளந்து கொண்டு ஒரு ஆர்மோனியம் எங்கோ ஏங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. யாரோ உரத்த முரட்டுக் குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். யாரோ வாய்க்கு வந்தபடி சரமாரியாக ஆபாசமாக வைது தீர்த்தார்கள், எரிச்சலும் களைப்பும் நிறைந்த பெண் பிள்ளைகளின் உரத்த குரல்கள் இடையிடையே ஒலித்துக்கொண்டிருந்தன.

விலாசவின் அந்தச் சின்னக் குடிலில் வாழ்க்கை அமைதியாக முன்னைவிட ஒழுக்கமாக ஓடிக்கொண்டிருந்தது. மற்ற வீடுகளிலுள்ள வாழ்க்கைக்கு மாறுபட்டிருந்தது. அவர்களது வீடு, குடியிருப்பின் ஒரு மூலையில், ஒரு சரிவு நிலத்துக்கு மேலாக இருந்தது என்றாலும் சேற்றுக் குட்டையிலிருந்து மிகவும் உயர்ந்திருக்கவில்லை. வீட்டின் மூன்றிலொரு பாகத்தை சமையலறை ஆக்கிரமித்திருந்தது. சமையலறையைப் பிரிந்து நிற்கும் ஒரு சின்ன அறையில் தாய் படுத்துத் தூங்குவாள். மீதியுள்ள இரண்டு பாகத்தில் ஒரு சதுரமான அறை இருந்தது. அதில் இரு ஜன்னல்களும் இருந்தன. ஒரு மூலையில் பாவெலின் படுக்கையும், இன்னொரு மூலையில் ஒரு மேஜையும், இரண்டு பெஞ்சுகளும் கிடந்தன. மீதியுள்ள இடத்தில் சில நாற்காலிகளும், ஒரு அலமாரியும் அதன் மீது ஒரு கண்ணாடியும் இருந்தன. அவர்களது துணிமணிகளை வைத்திருந்த ஒரு டிரங்குப் பெட்டி, சுவரில் தொங்கும் ஒரு கடியாரம், மூலையிலுள்ள இரண்டு விக்ரகங்கள் – – – இவையே இதர சாமான்கள்.

மற்ற இளைஞர்களைப் போலவே தானும் வாழ விரும்பினான் பாவெல். தனக்கென ஒரு ஆர்மோனியப் பெட்டி, கஞ்சி போட்டுத் தேய்த்த சட்டை பளபளப்பான ஒரு கழுத்து ‘டை’ ரப்பர் ஜோடுகள். ஒரு பிரம்பு முதலியவற்றை வாங்கி வைத்து, இளவட்டப் பிள்ளையின் ஆசைகளைப் பூர்த்தி செய்திருந்தான். மாலை வேளைகளில் அவன் மது விருந்துக்குச் செல்வான்; அங்கு நடனம் ஆடப் பழகிக் கொண்டான். ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றாக குடித்துவிட்டு வீடு திரும்புவான். ஆனால் ஓட்கா அவனுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை, அதனால் மிகவும் சிரமப்பட்டான். திங்கட்கிழமை காலை நேரங்களில் அவன் தலைவலியோடும் நெஞ்செரிச்சலோடும் எழுந்திருப்பான், அப்போது அவனது முகம் வெளித்துப் பரிதாபமாயிருக்கும்,

”நேற்று நாள் இன்பமாய்க் கழிந்ததா?” என்று அவன் தாய் ஒரு முறை கேட்டாள்.

“நரகம்தான்!” என்று புகைந்து போன எரிச்சலோடு பதில் சொன்னான் பாவெல். “இதைவிட மீன் பிடிக்கப் போயிருக்கலாம். அல்லது ஒரு துப்பாக்கி வாங்கி, வேட்டையாடியாவது பொழுதைப் போக்கலாம்.”

மற்றவர்கள் எல்லாம் சாதாரணமாகத்தானே நடந்து கொள்கிறார்கள். இவன் மட்டும் சந்நியாசி மாதிரி இருக்கிறானே. அதிலும் இவ்வளவு கண்டிப்பாகவா? இவன் வயதுக்கு இது கூடாது.

அவன் நேர்மையோடு உழைத்தான். ஒருநாள் கூட ஊர் சுற்றியதில்லை, அபராதம் கட்டியதில்லை. அவன் எப்போதுமே அமைதியான ஆசாமி. எனினும் தன் தாயின் கண்களைப் போன்ற அவனது அகன்ற நீலக் கண்களில் மட்டும், அதிருப்தி பிரதிபலித்துக் கொண்டிருக்கும். அவன் தனக்கென ஒரு துப்பாக்கி வாங்கவும் இல்லை; மீன் பிடிக்கப் போகவுமில்லை. ஆனால், மற்றவர்கள் யாரும் செல்லாத ஒரு புதிய பாதையிலேயே அவன் சென்று கொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவன் இப்போதெல்லாம் கூட்டாளிகளோடு கூத்தடிக்கச் செல்வதில்லை. பண்டிகை நாட்களில் அவன் எங்கேயோ காணாமல் போய்விடுவான். திரும்பி வரும்போது குடிக்காமலே சுவாதீனமான புத்தியோடு வந்து சேருவான்.

அவனது தாயின் கூர்மையான பார்வையில், தன் மகனது பழுப்பேறிய முகம் வரவர மெலிந்து வருவதாகவும், கண்களில் அழுத்த பாவம் குடி புகுந்து விட்டதாகவும் உதடுகள் இணைந்து இறுகி உறுதி பாவம் பெற்றது போலவும் தோன்றியது. அவன் எதையோ நினைத்துத் துயரப்படுவது போலவோ, அல்லது ஏதோ ஒரு நோய் அவனை உருக்கி உருக்குலைத்துக் கொண்டிருப்பது போலவோதான் தோன்றியது.

இதற்கு முன்பெல்லாம் அவனது நண்பர்கள் பலர் வீட்டுக்கு வருவார்கள். இப்போதோ பாவெலை வீட்டில் காண முடியவில்லையாதலால், வீட்டிற்கு வருவதையே அவர்கள் நிறுத்திவிட்டார்கள். தொழிற்சாலையிலுள்ள மற்ற இளைஞர்களைப் போல் இல்லாது பாவெல் மாறுபட்டு இருப்பது தாய்க்கு ஆனந்தம் தந்தது. எனினும் தன்னைச் சுற்றியுள்ள இருண்ட வாழ்விலிருந்து விலகி வேறொரு புதிய பாதையில் கவனமாகவும் பிடிவாதமாகவும் சென்று கொண்டிருக்கிறான் என்ற உண்மை, புரியாத ஒரு அச்சத்தைத் தந்தது.

“பாஷா! (1) உனக்கு என்ன , உடம்பு சரியில்லையா?” என்று சமயங்களில் அவனை அவள் கேட்பாள்,

“இல்லையே சரியாகத்தானே இருக்கிறேன்” என்று அவன் பதில் சொன்னான்.

”நீ மிகவும் மெலிந்து விட்டாய்!” என்று கூறி அவள் பெருமூச்சுவிடுவாள்.

அவன் வீட்டுக்குப் புத்தகங்கள் கொண்டுவர ஆரம்பித்தான். அவற்றை இரகசியமாகப் படிப்பான்; படித்து முடித்ததும் அவற்றை ஒளித்து வைத்துவிடுவான். சமயங்களில் அந்தப் புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை நகல் செய்து கொள்வான். அந்த நகலையும் ஒளித்து வைத்துவிடுவான்.

தாயும் மகனும் அநேகமாகப் பேசுவதே இல்லை . அதிகமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதும் இல்லை. காலையில் அவன் வாய் பேசாமல் தேநீர் அருந்திவிட்டு வேலைக்குப் போவான். மத்தியானத்தில் அவன் சாப்பிடுவதற்காகத் திரும்பி வருவான். அப்போதும் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதுவும் பேசிக்கொள்வதில்லை. மாலை வரை அவன் மீண்டும் எங்கேயோ போய்விடுவான். மாலையில் சீராய்க் குளித்துவிட்டு தனது புத்தகங்களை நீண்ட நேரம் படிப்பான், பண்டிகை நாட்களில் அவன் காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவான். மீண்டும் திரும்பிவருவது இரவு அகாலத்தில்தான்.

அவன் நகருக்குச் சென்று அங்கு டிராமா பார்த்துவிட்டு வருகிறான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் நகரத்திலிருந்து யாருமே அவனைப் பார்க்க வரக் காணோம். நாளாக நாளாக தன் மகன் தன்னிடம் வரவரப் பேச்சைக் குறைத்துக் கொண்டு வருவதாக அவளுக்குப் பட்டது. என்றாலும், அவன் சமயங்களில் அவளுக்குப் புரியாத புதுப்புது வார்த்தைகளைப் பிரயோகித்துப் பேசுவதை அவள் உணர்ந்திருந்தாள். மேலும், அவனிடம் முன்னிருந்த கொச்சையான, கூர்மையான பேச்சு மறைந்து வந்தது என்பதை அவள் அறிவாள். அவனது நடவடிக்கைகளில் தோன்றிய பல புதுமைகள் அவளது கவனத்தைக் கவர்ந்தன. அவன் அலங்காரமாக உடை உடுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டான்; தன் உடை, உடல் இவற்றின் சுத்தத்தில் அவன் அதிகம் கவனம் செலுத்தினான். அவனது அசைவுகள் மிகவும் லாவகமாகவும், நாசூக்காகவும் இருந்தன. பழகும் முறையும் எளிமையும் மென்மையும் நிறைந்ததாக இருந்தது. அவை அனைத்தும் தாயின் உள்ளத்தைக் கவலைக்குள்ளாக்கின. அவளோடு அவன் பழகும் முறை கூடப் புதிய வகையாக இருந்தது. சமயங்களில் அவனே வீட்டைப் பெருக்குவான். ஞாயிற்றுக்கிழமைகளில் அவனே தன் படுக்கையைச் சீர்படுத்திக் கொள்வான். பொதுவாக அவளது வேலைகளுக்கு அவனும் உதவ முன் வந்தான். அந்தக் குடியிருப்பிலுள்ள எவருமே அது மாதிரி என்றும் செய்வதில்லை.

அவனது நடவடிக்கைகளில் தோன்றிய பல புதுமைகள் அவளது கவனத்தைக் கவர்ந்தன. அவன் அலங்காரமாக உடை உடுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டான்; தன் உடை, உடல் இவற்றின் சுத்தத்தில் அவன் அதிகம் கவனம் செலுத்தினான்.

ஒரு நாள் அவன் ஒரு படத்தைக் கொண்டுவந்து சுவரில் மாட்டிவைத்தான். அதில் மூன்று மனிதர்கள் உரையாடியபடியே பாதை வழியே ஹாயாக நடப்பது சித்திரிக்கப்பட்டிருந்தது.

“இது தான் உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து: எம்மாஸை நோக்கிச் செல்கிறார்” என்றான் பாவெல்.

அந்தப் படம் தாய்க்கு ஆனந்தம் தந்தது. எனினும் அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

“கிறிஸ்துவிடம் உனக்கு இவ்வளவு பக்தியிருந்தால், நீ ஏன் தேவாலயத்துக்கே போகமாட்டேன் என்கிறாய்?”

பாவெலுக்கு நண்பனான ஒரு தச்சன் கொடுத்திருந்த அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. அந்த அறை மங்களகரமாகக் காட்சியளித்தது.

அவன் தன் தாயை வழக்கமாக பன்மையில் தான் அழைப்பான், ஆனால் சமயங்களில் மிகுந்த அன்போடு அவளை ஒருமையில் அழைப்பதுமுண்டு.

‘என்னைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்பட்டுக் கொண்டிராதே அம்மா. இன்று ராத்திரி நான் நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு வருவேன்’

அவன் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது வார்த்தைகளில் ஏதோ ஒரு பலமும் அழுத்தமும் இருப்பதாக அவளுக்குப் பட்டது.

படிக்க:
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

ஆனால் அவளது பயவுணர்ச்சிகள் அதிகரித்தன. அதன் காரணம் அவளுக்குப் புலப்படவில்லை. அவளது இதயம் அசாதாரணமான ஏதோ ஒரு முன்னுணர்ச்சியால் குறுகுறுத்தது. சமயங்களில் அவளுக்குத் தன் மகனது நடவடிக்கையைக் கண்டு அதிருப்தி கூட ஏற்படுவதுண்டு.

அப்போது அவள் நினைத்துக்கொள்வாள்.

”மற்றவர்கள் எல்லாம் சாதாரணமாகத்தானே நடந்து கொள்கிறார்கள். இவன் மட்டும் சந்நியாசி மாதிரி இருக்கிறானே. அதிலும் இவ்வளவு கண்டிப்பாகவா? இவன் வயதுக்கு இது கூடாது.”

மறுபடியும் அவள் சிந்திப்பாள். “ஒரு வேளை ஏதாவது பெண் பிடித்திருக்கிறானோ?”

ஆனால், பெண்களுடன் திரிவதற்கெல்லாம் பணம் நிறைய வேண்டும்; அவனோ தன் சம்பளத்தில் அநேகமாக முழுவதையும் தாயிடம் கொடுத்துவிடுகிறான்.

இப்படியாக வாரங்களும் மாதங்களும் ஓடிக்கழிந்து வருடங்களும் இரண்டு முடிந்தன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சந்தேகமும் தெளிவற்ற சிந்தனைகளால் உள்ளுக்குள்ளாக மருகி மருகி வாழும் மோன வாழ்வும் கொண்ட இரண்டு வருடங்கள்..

அடிக்குறிப்பு:
(1) பாஷா – பாவெல் என்ற பெயரைச் செல்லமாக அழைப்பது. (மொ-ர்.)

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

முந்தைய பகுதிகள்:
(பகுதி – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பகுதி – 2) தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க