பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?... ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனனு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் (12.10.18) அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்காத எடப்பாடி அரசை கண்டித்து கல்லூரிக்குள் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினர். போக்குவரத்து அதிகாரி கல்லூரிக்கு வந்து பதில் சொன்னால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வோம் என்று விடாப்பிடியாக நின்று போராடினர்.

கல்லூரி தொடங்கி ஏறத்தாழ நான்கு மாதங்களாகியும் இன்றுவரையில் பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. அன்றாடம் நடத்துனரோடு மாணவர்கள் மல்லுக்கட்டும் நிலைதான் நீடித்து வருகிறது. ஓ.சி. பயணம் என்பதாகக்கூறி மாணவர்களை அவமானப்படுத்தி பாதிவழியில் இறக்கிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

குறிப்பாக, கல்லூரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் கல்லூரி அருகே நிறுத்தப்படுவதுமில்லை. அதற்கடுத்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்துகின்றனர். கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் கல்லூரி வழியே செல்லும் வகையில் பேருந்துகளை திருப்பி விட வேண்டுமென்று நீண்டகாலமாகவே கோரி வருகின்றனர். குறிப்பிட்ட அந்த ஒன்றிரண்டு பேருந்துகளையும் தவற விட்டால், கல்லூரியில் முதல் இரண்டு வகுப்புகளை இழக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, மன்னார்புரம் மற்றும் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதிகளிலிருந்து சுமார் இரண்டு முதல் மூன்று கி.மீ. தூரம் வரை நடந்தே கல்லூரிக்கு செல்கின்றனர் மாணவர்கள்.

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் தொலைதூரங்களிலிருந்து குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் முதல் பட்டதாரி மாணவர்கள். அன்றாடம் 40 கி.மீ. தூரம் வரை பயணித்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். கல்லூரியிலிருந்து 30 கி.மீ. தூரம் வரையில் அரசின் இலவச பஸ்பாஸை பயன்படுத்தியும் அதற்கு மேல் உள்ள தூரத்தை தமது சொந்தக் காசை போட்டும்தான் அன்றாடம் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

படிக்க:
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!

வாரநாட்களில் இவ்வாறு கல்லூரிக்கு வந்து போகும் செலவுகளுக்காக, வார விடுமுறை நாட்களில் விவசாயக்கூலிகளாகவும், பெட்ரோல் பங்க், ஓட்டல் வேலை, கேட்டரிங் என கிடைத்த வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப காசைக் கொண்டுதான் ஈடு செய்கின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகளை இவ்வளவு தூரம் கல்லூரிக்கு படிக்க அனுப்புவதே பெரிய விசயம். அதிலும் அன்றாடம் பஸ்க்கு காசுனு கேட்டா கல்லூரிக்கே போக வேணாம். வேலைக்கு போ என்று முடக்கிவிடுவார்கள்.

இந்தப் பின்னணியிலிருந்தே, பஸ்பாஸ் வழங்கக்கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, போக்குவரத்து அதிகாரி கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பஸ்பாஸ் கொடுக்கும் வரை கல்லூரியில் வழங்கியுள்ள அடையாள அட்டையை பயன்படுத்தி பயணம் செய்து கொள்ளலாம் என்றும், இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிட்டதாகவும் தமது தரப்பில் எல்லாம் சரியாகவே நடக்கிறது என்பதைப் போல பேசினார்.

ஆனால், நாள்தோறும் பேருந்து பயணத்தின்போது மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதையும், நடத்துனர்களால் வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்படும் சம்பவங்களையும் எடுத்துரைத்தனர். கரூர் மாவட்டத்திலிருந்து அன்றாடம் நூறு ரூபாய் பேருந்துக் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு வர இயலாத நிலையில் கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு திருப்பூர் பணியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் அவலத்தை சொன்னார் மாணவி ஒருவர்.

”எங்கள் வீட்டில் நாலு பொம்பள பிள்ளைங்க. எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?… ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனும்னு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?” என்று மற்றொரு மாணவி எழுப்பிய கேள்விதான் அரசுக்கல்லூரி மாணவர்களின் ஒட்டுமொத்த நிலைமை.

கல்லூரி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யுமாறும்; தாம் மீண்டும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அறிவறுத்துவதாகவும்; அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர் நடத்துனர் குறித்து குறிப்பான புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் வாக்குறுதியளித்தார்.

இனிமேல் மாணவர்களின் மீது நடத்துநர்கள் யாராவது கைய வச்சா, பஸ்ஸை விட்டு கீழே இறக்கினால் அடுத்தமுறை ஒட்டு மொத்த மாணவர்களும் ரோட்டுக்கு வருவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மாணவர்கள் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

தகவல்: பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்,
திருச்சி – 9943176246.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க