லையைப் பிரித்து நண்டு, கானாங்கத்த, இறால், திருக்கை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துப் போட்டுக்கொண்டிருந்த அந்த சென்னை மீனவர், திடீரென படபடத்து கைகளை உதறினார். என்னப்பா ஆச்சு என்று சக மீனவத் தொழிலாளர்கள் பதறிப் போனார்கள்.

மீனவர் மாணிக்கம்

ஒன்னுமில்லப்பா ஷாக் அடிச்சிடுச்சி… என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர ஆரம்பித்தார்.

கரண்டே இல்லாத எடத்துல எப்படி ஷாக் அடிக்கும்? இருந்தாலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக ஒயர் எதுவும் கிடக்கிறதா என்று சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். எனது நிலைமையைப் புரிந்துகொண்ட மாணிக்கம், சார் பயப்படாதீங்க, அதோ அந்த மீன தொட்டதுனால கரண்ட் அடிச்சிருக்கு, பாத்து நேக்கா எடுக்கணும் என்று திருக்கையை காட்டினார்.

படிக்க :
♦ சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை
சென்னை : மக்களை உறைய வைத்த கண்ணீர்க் கடல் ஆவணப்படம் !

மேலும், இது ஒடம்புக்கு ரொம்ப நல்லது, பெண்களுக்கு பால் சுரக்கும். வயித்து புண்ண ஆத்தும். சதப்பிடிப்பு, வாயு பிடிப்பு உள்ளவங்களுக்கு கரண்ட் மீன எடுத்து வச்சா போதும், எல்லாம் சரியாயிடும் என்றார்.

இது பரவாயில்ல, அதோ வலையிலிருந்து எடுக்குறாரே அது ரொம்ப மோசமானது என்று 6 சென்டி மீட்டர் நீளமுள்ள முட்கள் நிரம்பிய ஒரு மீனை காட்டினார்.

கருந்தும்பின்னு இதுக்கு பேரு. பெரட்டை (அழகிய வண்ணங்களில் முட்களைக்கொண்ட கடல் உயிரி) முள்ளு பட்டா கடுக்கத்தான் செய்யும். ஆனா இந்த கருந்தும்பி குத்துனா நெஞ்சே அடைச்சிடும், மூச்சு விட செரமமா இருக்கும் என்றார்.

என்னங்க, விலாங்கு மீனெல்லாம் மாட்டியிருக்கு; நல்ல வேட்டையா என்றதும்,

மீனவர் ஸ்ரீதர் வலையில் இருந்து கடல் பாம்பை லாவகமாக எடுக்கிறார்.

இது மீனில்ல சார், கடல் பாம்பு. சேர-ன்னு சொல்லுவாங்க. கடிச்சா கை துண்டாயிடும் என்று துடித்துக்கொண்டிருந்த பாம்பின் வாயைப் பிளந்து கோரப்பற்களைக் காட்டி, இத சமைக்கல்லாம் முடியாது, தூக்கிப்போட வேண்டியதுதான் என்றார் ஸ்ரீதர்.

மேலும், நீங்க சொல்ற மாதிரி எப்போதாவது மீனுங்க அதிகம் மாட்டும். அப்ப எங்க பாடு கொண்டாட்டம்தான்; நிம்மதியா சரக்கு அடிப்போம், சீட்டுக்கட்டு போடுவோம். ஊரு முழிக்கிறதுக்கும் முன்னே எழுந்து மறுபடியும் கடலுக்கு ஓடுவோம். இந்த மீனவனோட வாழ்க்கையைப் பத்தி சுருக்கமா சொல்லனுமுன்னா “ஒரு நாள் லட்டு, ஒரு நாள் லவடா” என்றார்.

***

நாங்க இல்லேன்னா இந்த கடல் இல்லை; இந்தக் கடல் இல்லேன்னா நாங்களும் இல்லை. இந்தக் கடல்தான் எங்களுக்கு போக்கு, வாழ்க்கை, எல்லாமும் என தனக்கும் கடலுக்குமான உறவை அலையலையாய்க் கொட்டினார் சத்தியமூர்த்தி.

மேலும் தொடர்ந்தார்,

எனக்கு விவரம் தெரிஞ்சு என்னோட தாத்தா கடல்ல எறங்கினாரு, அப்புறம் எங்க அப்பா, இப்ப நானு. அடுத்தது என் பையனும் வந்துட்டான்.

மீனவர் சத்தியமூர்த்தி

காலையில மூன்றரை நாலு மணிக்கு பத்து லிட்டர் டீசல போட்டு, போட்ட எடுப்போம். 17, 18 மார்க் தூரம் போயி வலை வீசுவோம். அப்புறம் போட்ட வலையை சுருட்டி திரும்ப எட்டரை ஒன்பது மணியாயிடும்.

மீனு நெறையா கெடச்சதுன்னா இரண்டு வேள கூட கடலுக்கு போவோம். பத்தாயிரத்துக்கும் மேல லாபம் எடுப்போம். சில நாளு எதுவுமே கெடைக்காம சும்மாதான் இருப்போம்.

இன்னைக்கு 3 பேரு கடலுக்கு போனோம். நாலாயிரம் ரூபா மதிப்புள்ள மீன புடிச்சி வந்திருக்கோம். இப்போ புரட்டாசி மாசங்குறதால இரண்டாயிரத்துக்குத்தான் போகும். இதுல ஆயிரம் ரூபாயை வலைக்குக் கொடுத்துட்டு, மீதி உள்ள பணத்த ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்குவோம். தெனமும் கடல்ல கால வச்சாதான் குடும்பத்தையே ஓட்ட முடியும்.

கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள்.

கடலுக்கு போகும்போது, ஒரு நாள பாத்தாப்ல தெனமும் இருக்காது. திடீர்னு காத்து பலமா அடிச்சா, எங்கேயாவது தள்ளிட்டுப் போயிடும். ரொம்ப நேரமா ஆள காணோமேன்னு மத்த போட்டுக்காரங்க தேடிவந்து காப்பாத்திருவாங்க. எங்களோட நிலைமை பரவாயில்லை, கரைக்கும் பக்கத்திலேயே போயி வந்துகிட்டிருக்கோம். ராமேசுவரம் மீனவர்களோட நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு. இலங்கை போலீசு தெனமும் அடிச்சு வெரட்டுறான். அவங்க வாழ ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டேங்குது இந்த அரசு.

கரை திரும்பும் மீனவர்கள்.

சொல்றேன்னு கோச்சுக்காதீங்க, அமைச்சர் ஜெயக்குமாரை எங்காளுன்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்கு. மீனவனோட பிரச்சினையை கண்டுக்காம போறாரு, சுத்த வேஸ்ட் சார். நான் கூட ADMK-தான். இங்கே நடக்குறது கெவர்ன்மென்டே இல்ல சார்… இது கான்ட்ராக்ட் கெவர்ன்மென்ட். இனி கெவர்ன்மென்ட நம்பிப் பயனில்லை. ஒரு மீனவனுக்கு மீனவன்தான் துணையா இருக்க முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க