கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்

நிலத்தில் இருந்து விவசாயியை துரத்தியடிக்கும் அரசு, கடலோடிகளை மட்டும் விட்டுவிடுமா என்ன ? ஒக்கிப் புயலின் போது காப்பாற்றாத அரசு மக்களை விரட்ட ஓடி வருகிறது.

லைகளில் தொழிலாளர்களை சுரண்டும், வங்கிகளில் வட்டியை பிழிந்தெடுக்கும், விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்கும் மூலதனம், கடலோர பகுதிகளை குறிவைத்திருப்பதை எதிர்த்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அடிப்படையிலான வரைவு கடலோர மேலாண்மை திட்டத்தின் மீது கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படவிருக்கும் “இந்தக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்கே என்றும் எட்டு ஆண்டுகளாக மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புகளை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை” என்றும் குற்றம் சாட்டியிருக்கின்றனர், அந்த மீனவர்கள்.

கடல் அலை ஏற்றப் பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையிலான பகுதியை கடலோர ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதி என்று வரையறுத்து அதில் கட்டிடங்கள் கட்டுவது, சாலை அமைப்பது போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை 1991-ம் ஆண்டு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்தப் பகுதியை 4 மண்டலங்களாக வகைப்படுத்தி அவற்றில் எந்தவிதமான பணிகளில் ஈடுபடலாம் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.

நமது நாடு 7500 கி.மீ நீள கடலோர பகுதிகளை கொண்டுள்ளது. பாரம்பரியமாக தமது வாழ்விடமாகவும், மீன்பிடித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி வரும் மீனவர்களிடமிருந்து இந்த இடங்களை கைப்பற்றி ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கும் தாரை வார்க்கும் நோக்கத்தில் இந்த விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு நடவடிக்கையாக 2011-ல் வெளியிடப்பட்ட புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் 1991-ன் விதிமுறைகளை மீறிய முதலாளிகளின் கிரிமினல் குற்றங்களை அங்கீகரித்து அவர்களை விடுவிப்பதாக அமைந்தது.

இவ்விதிகளின் அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்டங்கள் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவமக்களின் வாழ்வுரிமையை பறித்து, கடலையும், கடற்கரையையும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த வரைவுத் திட்டம் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விட கடலோர பகுதிகளை வணிக நலன்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கும் கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது. “அரசு பேசும் அலை ஏற்ற பகுதி நிலாவினால் ஏற்படும் நீரோட்ட மாற்றங்களை கணக்கிடுவதை விட வணிக நிறுவனங்களின் நலனை உறுதி செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது” என்கிறார் சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

அலை ஏற்றத்துக்கும் அலை இறக்கத்துக்கும் இடைப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியை ரியல் எஸ்டேட் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் நீர் நிலைகளிலிருந்து (ஆற்று கழிமுகங்கள், பின்நில ஏரிகள் போன்றவை) 100 மீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்பட்டிருந்தது இப்போது 50 மீட்டர் என்று குறைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடலோர மண்டலம் III இப்போது இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தொகை அடர்த்தி அதிகமான பகுதிகளில் 50 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. (அடர்த்தி குறைவான பகுதிகள் முன்பு போல 200 மீட்டர் வரம்பு தொடரும்). மக்கள் தொகை அடர்த்தியை நிர்ணயிப்பதை தமது விருப்பம் போல வளைத்து கணிசமான கடலோர நிலங்களை ரியல் எஸ்டேட் முதலைகள் ஆட்டையை போடுவதற்கான வழிகளை இது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல புதிய வரைபடத்தை எதிர்த்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி போராடும் மீனவர்கள்

மேலும் கடலோர மண்டலம் I-ல் கூட ராணுவ, பாதுகாப்பு, போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவைகள் மற்றும் பொது சேவைகளுக்காக சாலை அமைப்பதை புதிய வரைவு திட்டம் அனுமதிக்கிறது. போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே, எந்த ஒரு கார்ப்பரேட் திட்டத்தையும் அரசு தனது விருப்பம் போல பொது சேவை அல்லது போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவை என்று அறிவித்து கடலோர பகுதியை சீரழிப்பதற்கு இது அச்சாரம் போட்டுத் தருகிறது.

மத்திய அரசால் 1996-ல் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை அடிப்படையாக வைத்து புதிய கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

1:25000 அளவில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் அபாயக்கோடு பொருத்தியிருக்க வேண்டும். கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் வரைபடம் மட்டுமில்லாமல் எழுத்துப்பூர்வமான திட்டமும் இருக்க வேண்டும். ஆனால் இது நாள் வரை எழுத்துப் பூர்வமான திட்டம் வெளியிடவில்லை. கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மீனவ மக்கள் எழுப்பிய தெளிவானகளுக்கு உரிய விளக்கத்தை இன்று வரை தராத அரசு இப்போது மீண்டும் கண்துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டஙளை நடத்துகிறது.

மேலும், “இந்த கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் குறித்து மீனவமக்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றும், அவர்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்றும் உழைக்கும் மக்களை அவமதிக்கும் வகையில் அறிக்கை அனுப்பியிருக்கின்றனர் இந்த அதிகார வர்க்க ‘அறிவாளிகள்’.

தொழிலாளர், விவசாயிகள் வாழ்வாதாரங்களை பறிப்பது மட்டுமின்றி, கனிம வளங்களை கைப்பற்றுவது, கடற்கரை வளங்களை ஆக்கிரமிப்பது என்று நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டி வருகிறது பன்னாட்டு மூலதனம். மிக விரைவில் மூச்சு விடுவதற்குக் கூட முடியாமல் உழைக்கும் மக்களை நெருக்கிக் கொல்லும் கொலை வெறியில் செயல்பட்டு வருகிறது மூலதனத்தின் ஆட்சி.

திருவள்ளூர் மாவட்டத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டால் புலிக்காட் பகுதி மீனவர்கள் அதை எதிர்த்து பொது அடைப்பும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தவிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர்கள் சங்கத் தலைவர் துரை மகேந்திரன் அறிவித்திருக்கிறார். தென்னிந்திய மீனவர்கள் நல சங்கத் தலைவர் கே பாரதி, இந்த வரைபடங்கள் மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் மீனவர்கள் கொடுத்த தகவல்கள் எதுவும் அவற்றில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது மீனவர்களுக்கு மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல. நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மறுகாலனியாக்கத்தின் ஒரு பகுதியே. எனவே, மறுகாலனியாக்கத்தால் சுரண்டப்படும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் இணைத்து மூலதனத்தின் ஆட்சியை எதிர்த்து வீழ்த்துவது முன்பு எப்போதையும் விட அவசியமானதாக மாறியிருக்கிறது.

– குமார்

நன்றி : new-democrats
புதிய தொழிலாளி – ஆகஸ்ட் 2018 இதழிலிருந்து

மூலக்கட்டுரை :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க