ரியானா, குர்கானில் கூடுதல் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருபவர் கிருஷன் காந்த் சர்மா. அவரிடம் மகிபால் சிங் என்ற காவலர் கடந்த இரண்டாண்டுகளாக பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நீதிபதியின் மனைவியும் மகனும் கூர்கானில் உள்ள ஆர்காடியா பல்பொருள் அங்காடிக்கு சென்ற போது உடனிருந்த மகிபால்சிங்கால் சுடப்பட்டனர். அதில் நீதிபதியின் மனைவி மரணமடைந்தார். அவரது மகன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிபால் சிங்

படுகொலை நிகழ்வதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக மகிபாலுடன் நீதிபதியின் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி ஒன்று சி.சி.டி.வி.யில் பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து, கோபமேறிய நிலையில் நீதிபதியின் மனைவி ரீத்துவின் மார்பிலும் அவரது மகனின் தலையிலும் பாதுகாவலர் சுட்டுள்ளார்.

சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்ட மகிபால் நான்கு நாட்கள் போலீசு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளார். நடந்த காரணத்தை ஆய்வு செய்ய குர்கான் போலீசு, ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்திருக்கிறது.

“குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் படி கொலை செய்யப்பட்டவர்கள் அவரிடம் நடந்து கொண்ட விதம் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மகிபால் அவரது மனைவியுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளதை அவரது அண்டை வீட்டார் உறுதி செய்துள்ளனர்” என்று விசாரணைக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

படிக்க:
விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா?
நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் ! புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்

மேலும், மகிபால் அடிக்கடி முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். கேள்வி கேட்டாலேயே கோபப்படுகிறார் என்றும் குடும்ப பிரச்சினைகளால் மிகவும் மனச்சோர்வு அடைந்ததாக அவர் கூறியதாகவும் விசாரணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் தலைமைக் காவலரான மகிபால் சிங் சம்பவம் நடந்ததற்கு முன்பு சில நாட்களாகவே விடுப்பில் செல்ல நீதிபதியிடம் அனுமதி கேட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. மேலும் அவரை நீதிபதி அடிக்கடி திட்டி வந்துள்ளார் என்றும் விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த சனிக்கிழமை அன்று காரில் சென்று கொண்டிருக்கும்போது நீதிபதியின் மனைவி மகிபால் சிங்கை திட்டியிருக்கிறார். இதில் எரிச்சலுற்ற மகிபால்சிங், நீதிபதியின் மனைவியையும் மகனையும் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் நடந்ததை நீதிபதிக்கு அலைபேசியில் சொல்லியிருக்கிறார்.

பொதுவாகவே நமது திரைப்படங்களில் உயரதிகாரிகளின் வீடுகளில் கீழ்நிலைப் போலீசார் எடுபிடி வேலை செய்வது வெறும் நகைச்சுவைக் காட்சியாகவே காட்டப்படுகின்றது. இந்தக் கீழ்நிலைப் போலீசாரும் உயரதிகாரிகள் காட்டிய இடத்தில் வேட்டை நாயாகப் பாய்ந்து குதறவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மக்களை ஒடுக்குவதில் மட்டுமல்லாமல், தங்களது வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பதிலும் கீழ்நிலைப் போலீசாரை அதே தரத்திலேயே நடத்துகின்றனர் அதிகார வர்க்கத்தினர்.

தாங்கள் அவமானப்படுத்தப்பட்டாலும் கோபத்தையும், எதிர்ப்பையும் ஜனநாயக ரீதியில் கூட காட்ட முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் கீழ்நிலை போலீசார். மீறி சிறு எதிர்ப்பைக் காட்டினால் கூட அவர்களின் வேலைக்கு ஆப்பு விழும் என்பதும் பதவி உயர்வை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதும்தான் எதார்த்தம். ஆனால், இங்கு விதிவிலக்காக நீதிபதியின் குடும்பத்தாரால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்திற்கு, ’இனியும் சகிக்க முடியாது’ எனும் சூழலில் கணக்குத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் மகிபால் சிங்.

இது போன்று மன அழுத்தத்திற்கு ஆளாகும் போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்கின்றனர் அறிவுஜீவிகள். கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டியது கொலை செய்த மகிபால் சிங்கிற்கா? அல்லது மகிபால் சிங்கை கொலை செய்வதற்கு நெட்டித் தள்ளிய அந்த நீதிபதியின் குடும்பத்திற்கா?

செய்தி ஆதாரம்:
• Gurugram Judge’s Son Who Was Shot in the Head Declared ‘Brain Dead’