நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி

கேரளத்தில் 1970 களில் நக்சல்பாரிகளை வேட்டையாடியபோது, தோழர் வர்கீசை சுட்டுக்கொன்றது பற்றி சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.

வனைக் கொன்றுவிடலாமென்று முடிவு செய்திருக்கிறோம். உங்களில் யார் இவனைச் சுட்டுக் கொல்கிறீர்கள்?

யாரும் எதுவும் பேசவில்லை .

லட்சுமணாவின் கண்டிப்பு மிகுந்த குரல் திரும்பவும் உயர்ந்தது.

தயாராக இருப்பவர்கள் கை தூக்குங்கள். மற்ற மூன்று பேரும் தயங்கிக் கொண்டே கைகளைத் தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமலிருந்து விட்டேன்.

“உனக்கென்ன, முடியாதா?

டி.ஒய்.எஸ். பி.யின் கேள்வி.

“இவனை நாங்கள் உயிருடனல்லவா பிடித்தோம், இவன் எந்த எதிர்ப்புமே காட்டவில்லையே? இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும்?”

“ப்ளடி, அதைத் தீர்மானிக்கிறது நீயா?”

லட்சுமணா சொன்னார்:

“இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும். அல்லது, நக்சலைட்களுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.”

‘நான் வர்க்கீசின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஒரு நிமிட யோசனை. பிறகு, வர்க்கீசை நானே கொன்று விடுவதாகத் தீர்மானித்தேன்.  “செய்கிறேன்.  குரலையுயர்த்திச் சொன்னேன். விசையை இழுத்தேன், குண்டு தெறித்தது. மிகச் சரியாக இடதுபுற நெஞ்சில்.”

குண்டு பாய்ந்த சத்தத்தையும் மீறி வர்க்கீசிடமிருந்து இறுதி சத்தம் முழங்கியது. “மாவோ ஐக்கியம் சிந்தாபாத். புரட்சி. வெல்லட்டும்”

1970 பெப்ரவரி 18 ஆம் தேதி சாயுங்கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு சுய வாக்குமூலம்தான் பி.ராமச்சந்தின் நாயர்  எனும் காவலரை வரலாற்றுத் திசை வெளிக்குக் கொண்டு வருகிறது.  சம்பவம் நிகழ்ந்த ஏழாண்டுகளுக்குப் பின் அதைக் குறிப்புகளாக எழுதி வர்க்கீசின் வலதுகரமாக அறியப்பட்ட தோழர் ஏ.வாசுவிடம் ஒப்படைத்த பிறகும் இரு பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்தச் சுய ஒப்புதலை உலகம் அறிந்து கொண்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போலீஸ்காரர் தனக்குச் செய்ய வேண்டியதிருந்த ஒரு பாதகச் செயலைச் சுயமாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்: “நான் தான் அதைச் செய்தேன். என் கைகளாலேயே அதைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் இதோ உங்களெதிரில் நிற்கிறேன். என்னைத் தண்டியுங்கள்” என்று.

இதுவரை ஏ.வர்க்கீஸ் எனும் நக்சலைட் புரட்சிக்காரனின் சாவைப் பற்றி ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் மட்டுமே நமது நினைவுகளிலிருந்தன. ஒடுக்கப்பட்டோரின் பெருமான் என்றறியப்பட்டிருந்த வர்க்கீஸ் வயநாட்டின் காட்டில் வைத்து காவல்துறையால்… இடுப்பு வரை கொதிக்கும் நீரில் வேக கண்களைத் தோண்டியெடுத்து, உடலைச் சல்லடையாகச் சுட்டுத் துளைத்து, கையில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்து இன்று வர்கீஸ் பாறை என்றறியப்படும் பாறையின் மீது மல்லாந்தபடி படுக்க வைத்து…

ஒருமுறை ‘நாடுகத்திக’ என்ற நாடகத்திற்கு ஒரு வர்கீஸ் தினத்தன்று நானும் அங்கே போயிருந்தேன். ஆதிவாசிகள் நிறைந்த ஒரு சபை நாடகத்தின் இறுதிகட்டத்தில் தொல்குடித் தெய்வங்களை அழைத்து தங்களை விட்டுப் பிரிந்து சென்ற மூத்தார்களை அழைத்து நாடகத்தின் கதாபாத்திரங்கள் திமிர்த்தாடிய போது பார்வையாளர்களாக இருந்த ஆதிவாசிகள் அத்தனைபேரும் அவர்களுடன் சேர்ந்து நடத்திய ஆட்டம், ஒரு போதுமே மறக்க முடியாத நாடக அனுபவமாகவும் அரசியல் அனுபவமாகவும் இருக்கிறது. அப்போதும்கூட வர்க்கீசின் மரணம், ஒரு மோதலின்போது நடந்த கொலை என்ற மூடு பனிக்குள்தான் ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் இருந்தன.

1970-ல் கேரளத்தில் நக்சல்பாரிகளைப் போலீசார் வேட்டையாடியபோது பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் வர்க்கீசை, சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் மேலதிகரியின் நிர்ப்பந்தத்தால் தனக்கு ஆதர்சமான மனிதரையே தன் கைகளால் கொன்றதைப் பற்றி 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.

அன்றுவரை வெறுமொரு காவலராக மட்டுமே இருந்த ராமச்சந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்தபிறகு, முப்பதாண்டுகளுக்கு முன் வயநாடன் காடுகளில் நடந்தவைகளைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது. அவர் சொல்கிறார். “இப்படித்தான் நடந்தது. என்னைக் கொல்ல வைத்தார்கள். எனக்குச் செய்ய வேண்டியதாயிற்று. முப்பது ஆண்டுகளாக நான் இந்தப் பாரத்தைச் சுமந்து திரிந்தேன். எனக்கு இதை வெளி உலகிற்குச் சொல்லியேயாக வேண்டும். உங்களில் சிலரிடம், தோழர் வர்க்கீசின் மிக நெருங்கிய சிலரிடம் சொல்லியும்கூட நீங்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே? இதோ, நான் தஸ்தாவேஸ்கியின் ஒரு கதாபாத்திரம் போல்…”

அவசர நிலைக்காலம் முதல் தோழர் ஏ.வாசுவுடன் மிக நெருக்கமாகப் பழகி, அவரை அறிந்து கொண்டவன் என்ற நிலையில் நான் உறுதியாக நம்புகிறேன். வாசு அண்ணன், ராமச்சந்திரன் நாயரின் சுய ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய விஷயத்தை மறந்துதான் போயிருப்பாரென்று. அந்தக் குறிப்பு எங்கேயோ வைத்துத் தவறிவிட்டது. ஆனால் வர்க்கீசின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை அவசர நிலை வாபஸ் பெறப்பட்டதன் பின் நடந்த வர்க்கீஸ் தினம் முதல் (கேரளத்தில் முதன் முதலாக நக்சலைட்களின் இந்தப் பொதுக்கூட்டம் கோழிக்கோடு டவுண் ஹாலில் வைத்து நடந்தது) ஒவ்வொரு வர்க்கீஸ் தினத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்தத் தோழர், வர்க்கீசின் நினைவுகளை உரத்த குரலில் பேசிக் கொண்டுதானிருக்கிறார்.

ஆனால் இந்த உண்மைகளுக்கு அடிப்படையாக இருக்கும் இந்த சுய ஒப்புதலின் குறிப்புகளை அவர் மறந்தே போய்விட்டார். ஏழெட்டு வருடங்களாகத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து விசாரணைகளுக்குள்ளாகி சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் சராசரி மனோநிலையுடன் இருக்க முடியாது என்பதுதான் இயல்பு. அதன் காரணமாக அந்த மறதி, அவர் ஏற்ற சித்திரவதைகளின் கொடூரத்தையே காட்டுகிறது. தோழர் வாசு, தோழர் வர்க்கீசின் வீர மரணம் தொடர்பான உண்மைகளை, அதைத் தெரிவித்த காவலரின் சுய ஒப்புதலை எதற்காக மறைக்க வேண்டும்?

படிக்க:
வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை
காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது

கொஞ்சம் காலதாமதமாக நடந்திருந்தாலும் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாக்குமூலம், இறுதியாக நடந்த நமது புரட்சி இயக்கத்தை அதிகார வர்க்கம் எதிர்கொண்ட முறை, நாம் அவற்றை வாய்மூடி பார்த்து நின்ற விதம் திரும்பவும் ஒருமுறை விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாயிற்று. நமது அணுகுமுறைகள் ஜனநாயக விதிப்படி நடந்தேறுவதாக நாம் நம்பிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. இந்தக் காவலரின் மனசாட்சி முன் வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா? நீதித் துறையின் பொறுப்புகளைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது யார்? ஜனநாயகக் கட்டமைவின் கீழிருக்கும் ஒவ்வொரு பிரஜைகளாலும் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளை நம் போன்ற குடிமக்கள் கேட்காமலிருக்கும்போது ஒரு காவலர் இரண்டு கைகளையும் மேலே உயர்த்திப் பிடித்து இதைக் கேட்கும்போது நாம் அப்படியே கூனிப் போகிறோம். நம்முடைய ஜனநாயக உணர்வும் மொத்தமே இவ்வளவுதானா? நம்மிடையிலுள்ள ஒருவரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் செழுமைப்படுத்தவும் முயற்சி செய்த ஒருவரை இப்படியெல்லாம் செய்த பிறகும் நாம் பிரஜைகள், ஆகா!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா?

எதுவாயினும் வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. பொதுவாகவே, இப்படியொரு சுய ஒப்புதலை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை காவல்துறையின் தரப்புசாட்சியாக்கி வழக்கைப் பதிவு செய்வதுதான் வழக்கம். இப்படித்தான் செய்யவும் வேண்டும். ஆனால், இங்கே சி.பி.ஐ. குற்றத்தை வெளிப்படுத்தியவரையே முதல் பிரதிவாதியாக்கி குற்றப்பத்திரிகையை அளித்திருக்கிறது. ராமச்சந்திரன் நாயர் பதறிவிடவில்லை.

அவர் சொல்கிறார். “நீதிமன்றம் தன்னைத் தண்டிக்க வேண்டும். வாழ்க்கையில் செய்த பாதகச் செயலுக்கானத் தண்டனையாகச் சிறையிலடைக்கப்பட வேண்டு மென்பதுதான் தனது கடைசி ஆசை” என்று. ஆனால், தன்னுடனிருக்கும் சக பிரதிவாதிகளான தனது மேலதிகாரிகளும் தன் இடது புறத்திலும் வலது புறத்திலுமாக நின்று தண்டனை அனுபவிக்க வேண்டும்; தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும்.

இதில், எல்லாக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்களா, முக்கியக் குற்றவாளிகள் மட்டும் தப்பித்துக் கொள்வார்களா, அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு, இந்தக் காவலர் மட்டுமே தண்டிக்கப்படுவாரா, என்னதான் நடக்கப் போகிறது என்ற மன உணர்வுகளை நாம் தற்போது வெளிக்காட்ட வேண்டாம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால். இதனிடையில்தான் ராமச்சந்திரன் நாயர் தனது நினைவுகளைப் பதிவு செய்து கொள்ளத் துவங்கினார்.

ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒருவரது வாழ்க்கைக் கதை. அந்த முகம், அந்தப் பாவம், தைரியம், சஞ்சலமின்மை… தோழரின் அந்திம நிமிடங்களைப் பற்றி எழுதுவதற்கு இந்த ஆறாம் வகுப்பு படித்தவனிடம் வார்த்தைகளில்லை என்ற தயக்கத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் இது, அவரது பணிவை மட்டும்தான் காட்டுகிறது. இந்த வாழ்க்கைக் கதையினூடே நான் பல தடவை கடந்து சென்று, வாசிப்பின் தடங்கல்களைத் தவிர்ப்பதற்காக மட்டும் சில தலையீடுகள் செய்த ஒருவன் – இந்தப் புத்தகத்தின் எடிட்டர் என்ற நிலையில் பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை முன் வைக்கிறேன். பொக்குடனின், ஸி.கே.ஜானுவின், நளினி ஜமீலாவின், வினயாவின் நினைவுப் பகிர்வுகள் போல் மலையாளத்தில் எழுதப்பட்ட விளிம்பு நிலை வாழ்வியல் பதிவுகளில் இதுவுமொன்று.

படிக்க:
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

நான் இவ்வளவு பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வர முன் வருவதற்கானக் காரணம், இது ஒப்புதல் வாக்கு மூலம் என்பது மட்டுமல்ல, இந்தப் புத்தகம் முப்பத்தி மூன்றரை வருடங்கள் காக்கியுடுத்தி ஒரு காவலராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், அப்பட்டமாகத் திறந்து காட்டும் ஒரு வேதனை மிகுந்த வாழ்க்கைக் கதையும் என்பதுதான். தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

‘மனோரமா’ வார இதழில் வெளியான பழைய ‘டோம்ஸ்’ கேலிச் சித்திரத்தையும் நினைவுக்குக் கொண்டு வருகிறார். ‘நான்கு மனிதர்களும் ஒரு காவலரும்’. காவலரால் ஏன் ஐந்தாவது மனிதனாக ஆக முடியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்கிறார். “நீங்கள் இவ்வளவு சம்பளம் கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை எப்படி நடந்து கொள்கிறதென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. உங்களிடமிருந்து சம்பளம் வாங்குபவர்கள் நாங்கள். உங்களால் நிலைபெற்றிருக்கிறது இங்குள்ள அமைப்புகள். காக்கியென்றால் என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்”. காக்கிக்குள்ளிருக்கும் காவல்துறை எதுவென்பதை  வழக்கமான ஒரு சுய வரலாறுபோல் இந்த சுய ஒப்புதலை வாசிக்கத் துவங்கும் நாம் ஒரு காவலரின் வாழ்க்கையை பற்றி மட்டுமல்ல, நமது காவல்துறையைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம்.

நம் மொழியில் இதற்கு முன் இப்படியொரு அறிமுகம் நடந்ததில்லை. ஆகவே, நமக்கு இந்த சுயசரிதை ஒரு சாதாரண காவலரின் திடுக்கிடச் செய்யும் சுய அறிவிப்பாகவும் மாறுகிறது.

தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

காவல்துறையைப் பற்றி நமது திரைப்படங்கள் உருவாக்கும் ஒரு புனைவிருக்கிறதல்லவா? மம்முட்டியும், சுரேஷ் கோபியும், இப்போது பிரித்விராஜும் பிரதிநிதித்துவப்படுத்தும், நீதிமான்களும் யோக்கியர்களுமான காவல் அதிகாரிகள், இன்னசென்டும், ஜகதியும், மாமுக்கோயாவும், இந்தரன்சும் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதாரண காவலர்கள் எனும் கோமாளியும் ஏமாளியுமான வேடங்கள். அவசர நிலைக் காலத்தில் கக்கயம் முகாம் துவங்கி பல தடவைகள், பல இடங்களில் வைத்துக் காவலர்களுடன் பழகி, அவ்வப்போது அவர்களிடமிருந்து சிறு அளவிலான அடி உதையும் வாங்கி, சமூகப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவன் என்ற நிலையில், என் அனுபவம் முற்றிலும் வேறானது.

நம்முடைய காவலர்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். நமது சாதாரணக் காவலர்கள் ஊமைகள். அவர்களுக்கு ஏமாளிகளும் கோமாளிகளுமாக ஆக வேண்டியச் சூழல்கள் உருவாவதற்கானக் காரணங்கள், காவல்துறையின் அதிகார மனோபாவங்களும் வர்ணாஸ்ரம் படிநிலைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்கள் அனுபவிக்க நேரும் கசப்பான உண்மைகளும்தான். தோளிலிருக்கும் நட்சத்திர அடையாளங்களின் எண்ணிக்கை அதிகரிக்குந்தோறும் அவர்களது மனவளம் குறைந்துகொண்டே வருகிறது. நேரடியாகப் பொருள் கொள்வதனால் அவர்கள் குற்றவாசனையுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களென்பதுதான் அனுபவ உண்மை. இந்த உண்மையை எதிர்கொள்வதற்கு ஒரு ஊடகம் என்ற நிலையில் திரைப்படங்களால் இயலாமலாகி விடுகிறது.

ஆகவே, அவர்கள் அதிகார மையங்களைத் திருப்திபடுத்தும், மேலே எல்லாமே சரியாகத்தானிருக்கிறதென்பது போன்ற பிம்பங்களைத் தான் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் சந்திரன் ஐ.பி.எஸ். எனும் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படம் இதை இப்போது எழுதிக் கொண்டிருக்கும்போது தியேட்டருக்கு வந்திருக்கிறது. இந்த வரிசையில் வந்த கடைசித் திரைப்படம் இது.

படிக்க:
மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

ஒரு விஷயத்தை உரத்தக் குரலில் கேட்டு நான் இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். பி.ராமச்சந்திரன் நாயர் எனும் இந்த சாதாரணமான ஒரு காவலர் எழுதியதைப்போல் சுய வாழ்க்கையை வெளிப்படையாகத் திறந்துகாட்ட ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் தர ஏதாவதொரு ஐ.பி.எஸ்.காரர் முன்வருவாரா? அப்படியொன்று நடக்கும் வரை ராமச்சந்திரன் நாயரின் இந்த சுய வரலாறு அதன் நேர்மையின் பொருட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், எளிய காவலர் ஒருவரது வாழ்க்கைக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னசென்ட், ஜகதி, மாமுக்கோயா, இந்தரன்ஸ் வேடங்களில் கேலி செய்யப்படும் அத்தனை காவலர்களது வாழ்க்கையின் மதிப்பீடுகளையும் இந்தப் புத்தகம் மீட்டெடுத்திருக்கிறது. ஒரு காவலரால் மட்டுமே இது போன்ற  புத்தகத்தை எழுத முடியும், உயரதிகாரிகளால் முடியாது. மிகுந்த நம்பிக்கையுடன் நான் இந்தப் புத்தகத்தை வாசகர்களின் முன்வைக்கிறேன்.

(”பரத் சந்திரன் ஐ.பி.எஸ்., இது போன்ற ஒரு புத்தகம் எழுதுவாரா ?” என்ற தலைப்பில் சிவிக் சந்திரன் எழுதிய இந்நூலுக்கான முன்னுரை)

நூல்: நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
மலையாள மூலம்: ராமச்சந்திரன் நாயர்
(தமிழில்: குளச்சல் மு.யூசுப்)

வெளியீடு:மக்கள் கண்காணிப்பகம்,
6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை – 625 002.
பேச: 0452-2531874
மின்னஞ்சல்: info@pwtn.org

பக்கங்கள்: 214
விலை: ரூ.120.00

இணையத்தில் வாங்க: tamil books online | Common Folks | new book lands

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க