உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப்பிரதேச மாநிலங்களின் சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டம் :
போராட்டங்களை ஒடுக்கவல்ல பாசிச ஆயுதம் !
போராட்டம், வேலைநிறுத்தம், மறியல், கலவரம் போன்றவற்றின்போது அரசு சொத்துக்களோ, தனியார் சொத்துக்களோ சேதப்படுத்தப்பட்டால் அதற்குரிய இழப்பீட்டுடன் (அதன் இருமடங்கு வரை) போராட்டம் தொடர்பான போலீசுத்துறையின் செலவுகளையும் சேர்த்து சேதப்படுத்தியவர்கள் மற்றும் போராட்டங்களை – வேலை நிறுத்தங்களை ஏற்பாடு செய்தவர்களிடம் வசூலிப்பதற்கான சட்டங்களை உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாஜக அரசுகள் நிறைவேற்றியுள்ளன.
அரசு சார்பில் நியமிக்கப்படும் முன்னாள் நீதிபதிகளை தலைவராகக் கொண்ட அரசாங்க, போலீசுத்துறை அதிகாரிகள் கொண்ட தீர்ப்பாயங்கள் விதிக்கும் தண்டத் தொகையினை செலுத்த தவறினால், தண்டனையாளரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை விற்று இழப்பீடாக மாற்றப்படும்.
படிக்க :
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டங்களை ஒடுக்க, போராட்டக்காரர்களின் புகைப்படங்களை பேனர்களாக வைத்ததுடன் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சட்டவிரோதமாக முயற்சித்தது உ.பி.யின் யோகி ஆதித்தியநாத் அரசு. இதற்கான கண்டனங்கள் வலுக்கவே மார்ச் 2020-ல் அவசர சட்டம் கொண்டுவந்து சட்டப்பூர்வ ஒடுக்குமுறையினை தொடர்ந்தது.
இதனை எதிர்த்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தூங்கிக்கொண்டிருக்க, 2021 மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அதுவே சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற சட்டத்தினை மார்ச், 2021-ல் அரியானாவிலும், சனவரி 2022-ல் மத்தியப்பிரதேசத்திலும் பாஜக-வின் அரசுகள் நிறைவேற்றியுள்ளன.
பொது சொத்துக்களை சேதப்படுத்தியோரை தண்டிப்பதில் தவறென்ன என்று நினைப்போர் சிந்திக்க வேண்டியது என்னவெனில் அரசு அதிகாரம் எவ்வழியோ அதன் வழியே சட்டத்தின் சரத்துகளும் தடையின்றி பயணிக்கும். அரசு அதிகாரத்திலிருப்பது காவி பாசிசக் கூட்டம். இந்துராஷ்டிரத்தினை உருவாக்கும் திட்டத்துடன் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரத்தின் அரசியல் ஆட்சி முறையினை நடைமுறைக்கு கொண்டு வருபவர்கள்.
அரசு இயந்திரத்தினை பயன்படுத்தி தங்களது காவி பயங்கரவாத நடவடிக்கையினை எதிர்ப்போரை மட்டுமல்ல, கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை, ஏன் ஆட்சி அதிகாரத்திற்காக தங்களுடன் போட்டிபோடும் இதர முதலாளித்துவ அரசியல் கட்சியினரை கூட அவர்கள் விட்டுவைப்பதில்லை.
நீதிபதிகளும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பதவிகளை துறந்து பாஜக-வில் சேர்ந்து கட்சி, ஆட்சி பொறுப்புகளை பெறும் இந்துத்துவம் மேலோங்கி இருக்கும் காலமிது.
பாஜக அரசாங்கங்கள் அமைக்கும் சொத்து சேதங்களின் இழப்பீட்டு தீர்ப்பாயங்கள் யாரை கொண்டு அமைக்கப்படும், அது எப்படி செயல்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
குடியிரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம் போன்றவை அமைதி வழியாகவே நடைபெற்றன. போலீசுத்துறையின் தாக்குதலுக்கு பின்பே அவை கலவரங்களாக மாறின.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அமைதியாக சென்ற மக்கள்மீது போலீசுத்துறை தானே வண்டிகளை எரித்து, துப்பாக்கியால் சுட்டு கலவரத்தினை தொடங்கினர்.
போராட்டங்களின் நியாயங்களை நசுக்கவும், அரசு பயங்கரவாதத்தினை மறைக்கவும், போராட்ட ஏற்பாட்டாளர்களை கலவரக்காரர்களாக சித்தரித்து அவர்களை முடக்கும் நோக்கிலேயே இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இச்சட்டங்களின் நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றினை பார்க்கும்போது இழப்பீட்டினை வசூலிப்பதைத்தாண்டி போராட்ட ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதே இவற்றின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமாக இச்சட்டங்களை விரிவுப்படுத்தும் திட்டத்துடன் பாஜக இயங்கி வருகிறது.
படிக்க :
கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
முதலமைச்சராவற்கு முன்பு கொலை, கலவரம் என குற்ற வழக்குகளுடன் இருந்த யோகி ஆதித்தியநாத், ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவ்வழக்குகள் அரசால் திரும்பப் பெறப்பட்டன அல்லது முடிக்கப்பட்டன. ஆட்சி அதிகாரத்தினை பிடிப்பதற்காகவும், அதனை தக்க வைப்பதற்காகவும் கலவரங்களை தொடர்ந்து நடத்துவதே ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங்பரிவார அமைப்புகள்தான்.
இசுலாமியர்களை இனஅழிப்பு செய்து இந்துத்துவ நாடாக்குவோம் என சாமியார் மாநாட்டில் பகிரங்கமாக சவால் விடுகிறார்கள். இதற்கு குற்ற வழக்கு பதிவு செய்யவே போராட வேண்டியிருந்தது.
இத்தகைய சூழலில் காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்தோ, கார்ப்பரேட் சுரண்டலை தடுக்கவோ போராடினால், ஏன் போராடுவோம் என்று பேசினால், எழுதினால், ‘கலவரக்காரராய்’, ’கலவரத்தை தூண்டியவராய்’ சட்டப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசால் முடக்கப்படும்.
இதோ ஹிஜாப் அணிவதற்கான இசுலாமிய மக்களின் போராட்டம் நாடு முழுவதும் பரவுகிறது. காவி பாசிசமோ அரசு அதிகாரத்தின் வழியாக சட்டப்படி தாக்குவதற்கு தயாராகி வருகிறது.

சுரேசு சக்தி முருகன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க