டெல்லியில் கல்வித்துறையால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் காலையில் “காயத்ரி மந்திரத்தை” மாணவர்கள் ஒப்புவிக்க வேண்டும் என வடக்கு டில்லி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து டில்லி சிறுபான்மையினர் நலத்துறை நகராட்சி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டிருக்கிறது.

அதில், “ இது நமது மதச்சார்பற்றதன்மைக்கு எதிரானதாக இல்லையா? இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே பிரிவை உண்டாக்காதா? பலர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மதத்தன்மை கொண்ட மந்திரங்களை ஒப்புவிக்க விரும்பாமலும் இருக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளது.

வடக்கு தில்லி நகராட்சி நிர்வாகமோ “அந்த உத்தரவு கட்டாயமாக்கப்படவில்லை” என பதில் கூறியுள்ளது. வடக்கு டில்லியில் மொத்தம் 765 தொடக்கப் பள்ளிகள் இருக்கின்றன. அதில் சுமார் 2.2 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.

பாஜக-தான் வடக்கு டில்லி முனிசிபல் கார்ப்பரேசன் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தை வைத்துள்ளது. இந்நகராட்சியின் கீழ் உள்ள கல்விக் குழுவின் தலைவரான ரிது கோயல், சிறுபான்மையினர் நலத்துறையிலிருந்து அப்படி எந்த ஒரு நோட்டீசும் பெறப்படவில்லை என்கிறார். கூடுதலாக காயத்ரி மந்திரம் ஒப்புவிப்பது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் அது குறித்து பள்ளிகளுக்கு ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

படிக்க:
♦ ஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !
♦ கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !

மேலும், காயத்ரி மந்திரம் ஒப்புவித்தல் மட்டுமே தனிப்பட்ட வழிகாட்டுதலாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் ஆரோக்கியம் மற்றும் மாணவர்களின் உடல்நலன் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் குறிப்பிடுகிறார் கோயல்.

ரிது கோயல் கூறியது உண்மை என்றே எடுத்துக் கொள்வோம். உடல் நலம் குறித்த சுற்றறிக்கைக்கும் காயத்ரி மந்திரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மந்திரங்கள் மனித உடலில் தாக்கம் செலுத்துகின்றன எனும் கட்டுக்கதையையும், இந்துத்துவத்தை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மாணவர்கள் மத்தியில் விதைக்கவுமே முயற்சித்து வருகிறது இந்துத்துவக் கும்பல். ஹரியானாவின் பாஜக முதல்வர் கட்டார், அரசுப் பள்ளிகளில் கட்டாயம் காயத்ரி மந்திரம் ஒலிக்க விடப்பட வேண்டும் என கடந்த பிப்ரவரி 2018-ல் உத்தரவிட்டார்.

அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம் ஒலிக்கவிடப் பட வேண்டுமென உத்தரவிட்ட ஹரியானா முதல்வர் கட்டார்

மதச்சார்பற்ற ஒரு அரசு, எந்த ஒரு மதத்தையும் முன் தள்ளாமல், மதம் மற்றும் மத விழாக்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். ஆனால் ’மதச்சார்பற்ற’ ‘இந்து’ இந்தியாவில் நடப்பது என்ன ?

இங்கு, யோகா, சரஸ்வதி பூஜை, குரு பூஜை, விஜயதசமி என்று எண்ணிறந்த முறைகளில் அனைத்துப் பள்ளிகளிலும் பார்ப்பனியப் பண்டிகைகளும், சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி பள்ளிகளில் வரலாறு !
ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து வரலாற்றாய்வு, கல்வித்துறை, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உள்நுழைந்து அனைத்தையும் காவிமயமாக மாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

நாட்டையே இப்படி பகிரங்கமாக இந்துமயமாக்கும் வேலையை சங்கபரிவார் செய்து வருகிறது. “காயத்ரி” மந்திரம் கூட பார்ப்பனர்கள் மட்டுமே அன்றாடம் செய்யும் சடங்கில் சொல்லப்படும் ஒன்று. பார்ப்பனரல்லாத சாதி மக்கள் எவரும் சமஸ்கிருதத்தை பேசினாலே தீட்டு என்ற நிலையில் இந்த காயத்ரி மந்திரம் கூட மற்ற ‘இந்துக்களின்’ சடங்கு சம்ரதாயங்களில் வராது. மீறினால் அவர்களுக்கு தண்டனை என்பதுதான் பார்ப்பனியத்தின் வரலாறு. ஆகவே காயத்ரி மந்திரம் என்பது ஏதோ சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரானதுதான்.   ஆகவே இதை அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் ஒன்று பட்டு எதிர்ப்பது மூலமே இந்தியாவை இந்து நாடாக மாற்றும் பார்ப்பனிய முயற்சியை முறியடிக்க முடியும்.

செய்தி மூலம்:
For ‘Gayatri Mantra’ Order To Delhi Schools, Civic Body Gets A Notice

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க