சேலம் மாவட்டம் என்றதும் நமக்கு இரு விசயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற அடைமொழியுடன் புகைப்படக்காரர் சகிதமாக வலம் வரும் ரோகிணி. இரண்டு எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டம். தற்போது மூன்றாவதாக ஒரு செய்தி சேர்ந்திருக்கிறது.

அது தலித் சிறுமி ராஜலட்சுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக “மீ டூ” இயக்கம் அதிகம் பேசப்படும் காலத்தில் அதே பாலியல் வன்முறையால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட முறையில் கொல்லப்பட்டிருக்கிறார் அந்த 13 வயதுச் சிறுமி.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சாமிவேல். மனைவி சின்னப்பொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள். கடைசி மகளான ராஜலட்சுமி அருகாமை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி – கொலைகாரன் தினேஷ்குமார்.

சாமிவேல் வீட்டிற்கு அருகே மனைவி சாரதாவுடன் குடியிருக்கிறார் தினேஷ் குமார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வீட்டுக்கு ராஜலட்சுமி அவ்வப்போது தண்ணீர் பிடிக்க செல்வார். கடந்த சில நாட்களாக அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார் தினேஷ் குமார். ஆயுத பூஜை அன்று வீட்டில் தனியாக இருந்த தினேஷ் குமார் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் மேற்கண்டவாறு நடந்திருக்கிறார். இவற்றை பொதுவாக வெளியே சொல்லக் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்படும் சமூகத்தில், சொன்னால் தொலைச்சிருவேன் என்று மிரட்டப்படும் நிலையில் அச்சிறுமி இதை தனக்குள்ளேயே வைத்து குமுறியிருக்கிறார்.

வெளியே சொல்லாமல் அழுது அரற்றிய சிறுமி இறுதியில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவும் இதை அப்பாவிடம் தெரிவிப்போம் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார். ஒரு கிராமத்து தாய் அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தனது மகளிடம் இத்தகைய பிரச்சினைகளை  வெளியே தெரியாமல் எப்படி சரி செய்வது என்பது ஏதோ விழிப்புணர்வு பற்றிய பிரச்சினை அல்ல. வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் அது.

தனது குற்றம் வெளியே தெரிய வந்த தினேஷ் குமார் ஆத்திரம் தலைக்கேறி சிறுமி தலையை துண்டாக்கி படுகொலை செய்திருக்கிறார். இப்படுகொலை தொடர்பாக நேரில் சென்ற எவிடன்ஸ் கதிரின் பதிவில் அந்த கொடூரமான தருணங்கள் இரத்த வாடையுடன் இருக்கிறது, படியுங்கள்.

“வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறார் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தவன் மறுபடியும் ஓங்கி அரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தோட்ட வீட்டிற்கு செல்கிறான். அங்கிருந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவும் தம்பி சசிக்குமாரும் இவளது தலையை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? ரோட்டில் வீச வேண்டியதுதானே என்று கூற ஆத்தூர் – தளவாய்பட்டி சாலையில் அந்த தலையை வீசிவிட்டு தினேஷ்குமாரும் சாரதாவும் சசிக்குமாரும் ஒரு வாகனத்தில் ஏறி காவல்நிலையம் செல்கின்றனர்.

கடந்த 22.10.2018 அன்று இரவு 7.30 மணிக்கு வீசப்பட்ட தலித் சிறுமி ராஜலெட்சுமியின் துண்டிக்கப்பட்ட தலை 2 மணிநேரம் கிடக்க ஒட்டுமொத்த தலித் மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தனர். இரவு 9.30 மணிக்கு அங்கு வந்த போலீசார் தலையையும் வெற்று உடலையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

ராஜலட்சுமியின் பெற்றோர்கள் சின்னபொண்ணு – சாமிவேல்.

என் மகள் ராஜலெட்சுமியின் தலையில்லாத முண்ட உடல் துடித்தது சார்… என் நெஞ்சுலயும் மடியிலயும் ஆசையா வளர்ந்த என் மகள கொன்னுட்டான் சார் அந்த படுபாவி என்று சின்னப்பொண்ணு என் கைகளைப் பிடித்து கதறியபோது ஒடிந்த கந்தலான அந்த தாயாரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். மூன்று நாட்கள் ஆகிவிட்டது. வற்றிய குளத்தில் உள்ள இறுதி தண்ணியும் கசிவது போல அந்த தாயாரின் கண்களிலும் வெயில் படர்ந்த கண்ணீரை பார்க்க முடிந்தது.”

படிக்க:
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !
ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

போலீசில் சரணடைவதற்காக செல்லும் போது வந்து இன்னும் இரண்டு பேரை வெட்டுவேன் என்று தினேஷ்குமார் மிரட்டியாவாறே சென்றிருக்கிறார். தற்போது அவரது மனைவி தனது  கணவனுக்கு மனச்சிதைவு நோய் உள்ளது, முனி பிடித்து விட்டது என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். சாதிவெறியும், பாலியல் வெறியும் பிடித்திருக்கிற சமூகத்திற்கு முனி பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன?

கொலை நடந்து இரண்டு மணிநேரம் கழித்துச் சென்ற போலீசு, தற்போது பாலியல் வன்முறை நடந்ததாக தெரியவில்லை, கொலை மட்டும்தான் விசாரித்து வருகிறோம் என்கிறது. ஃபோக்சோ சட்டத்தினை தவிர்த்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு. சரி, இந்த சம்பவத்தில் பாலியல் வன்முறை இல்லை, இருக்கிறது என்று ஏன் முதலிலேயே தீர்ப்பு அளிக்க வேண்டும். விசாரித்த பிறகு தெரிவிப்போம் என்று கூட ஏன் சொல்லவில்லை? வன்கொடுமைப் பிரிவின் படியே பார்த்தாலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி நேரடியா ஆய்விற்கு வந்திருக்க வேண்டும், வரவில்லை என்கிறார் எவிடன்ஸ் கதிர்.

ஆய்விற்கு வந்திருக்க வேண்டிய ஆட்சியர் ரோகிணி என்ன செய்கிறார்?

தினமலர் நாளிதழில், அக்டோபர் 31, 2018 தேதி அன்று (அதாவது ராஜலட்சுமி கொல்லப்பட்ட 22.10.2018 நாளுக்குப் பிறகு ஒரு வாரம்) “தார்மீக கோபமும் பெரிய அளவில் சாதிக்க உதவும்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இத்தகைய உபதேச முத்துக்களுக்காகவே தினமலரில் “சொல்கிறார்கள்” என்று ஒரு பத்தி வைத்திருக்கிறார்கள். அதில் ரோகிணி போல பல மேன்மக்கள் நமக்கு கருத்துரைப்பார்கள். உரைத்துவிட்டுப் போகட்டும்.

அதில் தார்மீகம் கோபம் என்று இருப்பதால் ஒரு வேளை தலித் சிறுமியைப் பற்றித்தான் ஏதும் எழுதியிருப்பாரோ என்று பார்த்தால், இல்லை, இல்லவே இல்லை.

அதில் அவரது மராட்டிய மாநிலத்தில் ரோகிணியின் தந்தை மிளகாய் விவசாயத்தை விட்டுவிட்டு திராட்சை வியாபாரியாக மாறிய வெற்றிக் கதையை விளக்கியிருக்கிறார். தனது கிராமத்து விவசாயிகள் சிரமப்படுவதைப் பார்த்து இதை யார் தீர்ப்பார்கள் என்று ரோகிணி கேட்க, அப்பாவோ கலெக்டர்தான் என்றாராம். பிறகு என்ன, மனதில் விழுந்த விதையால் ரோகிணி இன்று கலெக்டர்.

படிக்க:
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

ஒரு முறை ரோகிணியின் தந்தை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சென்று அதிகாரியைப் பார்க்கப் போனாராம். அதிகாரியோ, திராட்சை சாகுபடி தொடர்பான முக்கியமான கூட்டத்தில் இருக்கிறேன், மிளகாய் விவசாயிக்கு என்ன அவசரம், காத்திருங்கள் என்றாராம்.

இதனால் மிளகாய் என்றால் இளக்காரமா, திராட்சை என்றால் உசத்தியா என்று அப்பா பெருங்கோபம் அடைந்தாராம். எனவே அவர் மாவட்ட அதிகாரியிடம் சென்று சண்டை போட்டதாக எதிர்பார்க்க வேண்டாம். என்ன இருந்தாலும் திராட்சைதான் ஒயினுக்கு மூலம், மிளகாய் என்றுமே சைடு டிஷ் அல்லவா!

சரி நாமும் இனி மிளகாயை தலைமுழுகிவிட்டு, திராட்சைக்கு குடி பெயர்வோம் என திராட்சை விவசாயி ஆகி விட்டாராம். ஆரம்பத்தில் கிராமத்து மக்கள் இதை ஏதோ லூசு மாதிரி செய்கிறார் என ஒதுக்கினார்களாம். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அவர் திராட்சை சாகுபடியாளராக உயர்ந்து சாதித்தாராம்.

இந்தக் கதையின் நீதியாக “மனிதர்களுக்கு, தார்மீக கோபம் மிகவும் அவசியம். அந்தக் கோபம், நேர்மறையான திசையில் செலுத்தப்பட்டால், நம்மால், வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்!” என்கிறார் ரோகிணி.

முதலில் இந்தக் கதையில் இருப்பது தார்மீகக் கோபம் இல்லை. அடிமைத்தனம். என் மிளகாயை இழிவுபடுத்தினாயே என்று காரமான கோபத்திற்கு பதில், ரம்மியமான திராட்சைக்கு மாறுவோம் என்ற ஒரு பணக்கார விவசாயியின் அடிமைத்தனம். கிராமத்து மிளகாய் விவசாயிகளை திரட்டிக் கொண்டு நீதி கேட்காமால், திராட்சைக்காக அரசு ஓடி வருகிறது என்று மாறிக் கொள்வோம் என்பதெல்லாம் கோபமா?

அதனால்தான் ரோகிணி மேடம் சாமர்த்தியமாக தார்மீகக் கோபம், நேர்மறையான விளைவு என்று பாசிட்டிவ் எனர்ஜி பேசுகிறார். அதே மராட்டியத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பட்டியல்தான் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதெல்லாம் நெகட்டிவ் எனர்ஜி போலும்.

தனது தந்தையின் காரியவாதத்தை தினமலரில் எழுதும் நேரம் கொண்ட ரோகிணி அவர்கள் ஒரு தலித் சிறுமியின் படுகொலைக்கு நேரில் போகாமல் இருந்தது ஏன்? எட்டு வழிச் சாலைப் போராட்டத்தை ஒடுக்கும் முகமாக அனைத்தும் அள்ளி வழங்கியிருக்கிறோம் என்று புள்ளிவிவரங்களால் அடுக்கிய இந்த மாவட்ட ஆட்சியர், இன்று ராஜலட்சுமி கொலை குறித்து என்ன விவரங்களை கையில் வைத்திருக்கிறார்?

கேமராவே வெட்கப்படும் அளவிற்கு போஸ் மேல் போஸ் கொடுத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த அம்மையார், ஒரு தாயின் கண் முன்னாலேயே ஒரு மகள் தலை வெட்டி துடிக்கும் காட்சியை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

ராஜலட்சுமியை இழந்து துடிக்கும் அந்தப் பெற்றோர் இனி தமது தார்மீகக் கோபத்தை  நேர்மறையில் செலுத்தி வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று மேடம் ரோகிணியை விளக்கச் சொன்னால் கண்டிப்பாக விளக்குவார்.

மக்களுக்கு தார்மீக கோபம் வராத வரைக்கும் ராஜலட்சுமி கொலைக்கும் நீதி இல்லை! ரோகிணிக்களின் ‘தார்மீக’ கோபங்களும் நிற்கப் போவதில்லை!