நண்பர்களே….
மாணவர் ஒருவர் தமிழ் இலக்கணத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கின்றது ஐயா என்றார். இலக்கணத்தை எளிமையாகச் சொல்ல முடியுமா என்று கேட்டார். நான் அவரிடம் ஒரு திருக்குறளைச் சொன்னேன். அந்தக் குறள்,
“ எண் என்ப1 ஏனை எழுத்து என்ப2 இவ்விரண்டும்
கண் என்ப3 வாழும் உயிர்க்கு ”
இந்தக் குறளுக்கு பொருள் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டேன். அவர் “எண் என்று சொல்லபடுபவையும், எழுத்து என்று சொல்லபடுபவையும் ஆகிய இரண்டும் உயிர்களுக்கு கண் என்று சொல்லுவார்கள்” என்றார்.
தம்பி, இந்தக் குறளில் முதல் வரியில் வருகின்ற என்ப என்ற இரண்டு வார்த்தைகளுக்கு “சொல்லபடுபவை” என்று பொருள் கூறினீர்கள். இரண்டாவது வரியில் வருகின்ற என்ப என்பதற்கு “சொல்லுவார்கள்” என்று பொருள் கூறினீர்கள். சரி சொல்லபடுபவை என்பது என்ன என்று கேட்டேன். “அஃறிணைப் பன்மைப் பெயர்” (பலவின்பால் வினையாலணையும் பெயர்) என்றார். சொல்லுவார்கள் என்பது ”உயர்திணைப் பன்னை வினை” (பலர்பால் வினைமுற்று) என்றார்.
படிக்க:
♦ தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !
♦ உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா
சரி ஒரே சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தங்களை இந்தக் குறளில் இருந்து நாம் பெறுகின்றோம். அப்படியானால் ஒரேசொல் இரு வேறுவிதமாகப் பொருள் கொள்ளப்படுவதை நாம் அறிகிறோம். அவ்விதமாக பொருள் கொள்ளப்படுவதை இலக்கணத்தில் வைத்து சொன்னால் உயர்திணை, அஃறிணை என்று இரு வேறு தன்மையை அச்சொல் பெறுகின்றது. தமிழ் இலக்கணத்தின் அடிப்படை என்பதை இலக்கண ஆசிரியர்கள் இவ்விதமாகத்தான் பொருள் கொண்டு அதற்கான கலைச் சொற்களை கையாண்டுள்ளனர். அத்தகைய கலைச்சொற்களுக்கான பொருளை நாம் தெரிந்து கொண்டு மொழியைப் பயின்றால் இலக்கணம் என்பதை ஓரளவு எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். இது ஆரம்ப நிலை. தொடர்ந்து நாம் கற்றுக்கொண்டே வந்தால் இலக்கணம் என்பது நமக்கு எளிமையாகி விடும். ஒரு இலக்கியம் பற்றிய நம்முடைய புரிதலையும் விரிவாக்கும்.
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
- கோவில் நிலம் சாதி
- பொய்யும் வழுவும்
எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியம். அதாவது பொருள் தருவன மட்டுமே சொல் எனப்படும்.மற்றையவை சொல்லாகா என்பதும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு என்பதும் இதன் உள்ளீடு. அவ்வாறாயின் ஒரு சொல்லுக்குப் பல பொருள் என்பது எவ்வாறு பொருந்தும்.
ஊகத்தின் அடிப்படையில் சொல்ல விழைகிறேன்.
ஒரு சொல் பல பொருள் தருவது பொதுமையானது. அந்த சொல் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட பொருள் தருகிறது. அதே இடத்தில் அச்சொல்லிற்கு வேறு பொருளில்லை.
உதாரணமாக மெய் என்ற சொல் உடலையும் உண்மையையும் குறிக்கிறது. ஆனால் பயன்படுத்தப்படும் இடத்திற்கு தக்கவாறு குறிப்பாக பொருள் கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்.
இலக்கணம் தெரிந்தவர்கள் விளக்கலாம்.