மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 14

ன்றைய பகலும், அந்த நாள் இரவும் மெதுவாகக் கழிந்தன. இதையும் விட மெதுவாக நகர்ந்தது அடுத்த நாள். யாராவது வருவார்கள் என்று அவள் எதிர்பார்த்தாள். யாருமே வரவில்லை. மாலை வந்தது. கருக்கிருளும் சூழ்ந்தது. குளிர் படிந்த மழை பெருமூச்செறிந்து கொண்டே சுவர்களிலும் சலசலத்துப் பெய்தது; புகைக்கூண்டு வழியாக ஊதக்காற்று ஊளையிட்டு அலறிற்று. தரைக்கடியிலே ஏதோ ஓடுவது போலிருந்தது.

மாக்சிம் கார்க்கி
கூரைச் சரிவிலிருந்து மழைத் துளிகள் சொட்டின; அவை சொட்டிச் சொட்டி விழும் ஓசையும், கடிகாரத்தின் பெண்டுல ஓசையும் ஒன்றோடு ஒன்றாய் முழங்கிக் கலந்து ஒலித்தன. அந்த வீடு முழுவதுமே லேசாகத் தலையசைத்து ஆடுவது போலத் தோன்றியது. மனத்திலே கவிந்திருந்த சோக உணர்ச்சியால் சுற்றுப்புறத்தில் இருந்து பழகிப்போன பொருள்கள் அனைத்தும் உயிரற்றனவாகவும், அன்னியமாகவும் தோற்றம் அளித்தன.

ஜன்னல் கதவில் யாரோ தட்டுகின்ற ஓசை கேட்டது. ஒரு தடவை, இரண்டு தடவை. அவளுக்கு அந்த மாதிரி ஓசை பழகிப்போனதுதான், எனவே அவள் அதைக் கேட்டுப் பயப்படுவதில்லை. ஆனால் அன்று அந்த ஓசையைக் கேட்டதும் இதயத்தில் இன்பவேதனை சில்லிட்டுக் குளிர, அவள் துள்ளி எழுந்தாள். தெளிவற்ற நம்பிக்கைகள் அவளை உடனே எழுந்து நிற்கச் செய்தன. தன் தோள் மீது ஒரு போர்வையை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் கதவைத் திறந்தாள்.

சமோய்லவ் உள்ளே வந்தான்; அவனைத் தொடர்ந்து இன்னொருவனும் வந்தான். அவன் தன் தொப்பியை நெற்றிவரையிலும் இழுத்துவிட்டிருந்தான் கோட்டுக் காலரை மேல்நோக்கித் திருப்பி மடித்துக் கழுத்தையும் முகத்தையும் மூடியிருந்தான்.

“உங்களை எழுப்பிவிட்டோமா நாங்கள்” என்று வணக்கம் கூடச் சொல்லாமல் கேட்டான் சமோய்லவ் வழக்கத்துக்கு மாறாக. அன்று அவனது குரலில் ஆர்வமும் சோகமும் கலந்து தொனித்தன.

“நான் தூங்கவே இல்லை” என்று பதிலளித்துவிட்டு, அவர்களது பேச்சையே எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள்.

சமோய்லவின் கூட்டாளி தனது தொப்பியை அகற்றிவிட்டு, கரகரத்துச் சுவாசித்தான், தனது தடித்த கரத்தை நீட்டினான்.

“வணக்கம், அம்மா! என்னைத் தெரியவில்லையா?” என்று ஒரு பழைய நண்பனைப்போல் உரிமையோடு கேட்டான்.

“நீங்களா?” என்று காரணகாரியம் தெரியாது திடீரென எழுந்த உவப்போடு கேட்டாள் பெலகேயா; “‘இகோர் இவானவிச்சா?”

“அவனேதான்!” என்று பதிலளித்துவிட்டு அவன் தேவாலயப் பாடகர்களின் முடியைப் போல் வளர்ந்து இருந்த அவனது நீண்ட மயிர் நிறைந்த தலையைத் தாழ்த்தி வணங்கினான். அவனது முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவனது சிறிய சாம்பல் நிறக் கண்கள் தாயைப் பரிவுடன் நோக்கின. அவன் ஒரு தேநீர்ப் பாத்திரத்தைப் போல் உருண்டையாகவும் சிறிதாகவும் தடித்த கழுத்தும் குட்டைக் கைகளும் உடையவனாகவும் இருந்தான். அவனது முகம் பிரகாசித்தது; நெஞ்சுக்குள்ளே ஏதோ கரகரத்து உறுமுவது போல அவன் ஓசையெழும்பச் சுவாசித்தான்.

“நீங்கள் அறைக்குள் போங்கள். நான் உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்” என்றாள் தாய்.

“நாங்கள் ஒன்று கேட்க வந்திருக்கிறோம்” என்ற அக்கறையோடு சொல்லிக்கொண்டே, புருவங்களுக்கு மேலாக அவளை ஒரு பார்வை பார்த்தான் சமோய்லவ்.

இகோர் இவானவிச் அடுத்த அறைக்குள் சென்று அங்கிருந்தே பேசத் தொடங்கினான்.

“இன்று காலை நிகலாய் இவானவிச் -அவனை உங்களுக்குத் தெரியுமல்லவா- அவன் சிறையிலிருந்து இன்று காலையில் வெளிவந்துவிட்டான், அம்மா..” என்று ஆரம்பித்தான் அவன்.

”அவன் சிறையிலிருந்ததே எனக்குத் தெரியாது” என்றாள் தாய்.

”இரண்டு மாதமும் பதினொரு நாளும் ஆகிறது. அவன் அங்கே அந்த ஹாஹோலைப் பார்த்தானாம். ஹஹோல் உங்களுக்குத் தன் வந்தனத்தைத் தெரிவிக்கச் சொன்னானாம். பாவெலும் சொல்லியனுப்பியிருக்கிறான். நீங்கள் வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாதென்று சொல்லியிருக்கிறான். அவன் தேர்ந்தெடுத்த மார்க்கத்தை வேறு யார் யார் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்குச் சிறையிலே சில காலம் ஓய்வு பெறும் ஆனந்தம் கிட்டும் என்பதையும் அவன் உங்களிடம் சொல்லச் சொல்லியிருக்கிறான். நம்முடைய முதலாளிகளின் தயவால் ஆனந்தம் கிட்டுவது நிச்சயமாம்! சரி நான் வந்த விஷயத்தைக் கவனிக்கிறேன். அம்மா. நேற்று மொத்தம் எத்தனை பேரைக் கைது செய்தார்கள், தெரியுமா?’

“ஏன்? பாவெலைத் தவிர, வேறு யாராவது உண்டா?” என்று கேட்டாள் தாய்.

“அவன் நாற்பத்தொன்பதாவது நபர் என்று அமைதியாய்க் குறுக்கிட்டுப் பேசினான் இகோர் இவானவிச், “தொழிற்சாலை நிர்வாகம் இன்னும் குறைந்த பட்சம் ஒரு டஜன் ஆட்களையாவது உள்ளே தள்ளும்! இதோ இந்த இளைஞனைக்கூட!”

“ஆமாம். என்னைக் கூடத்தான்” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் சமோய்லவ்.

பெலகேயாவுக்கு என்ன காரணத்தாலோ முன்னைவிடச் சுலபமாகச் சுவாசிக்க முடிந்தது.

‘நல்ல வேளை. அவன் மட்டும் அங்குத் தனியாகத் தவிக்க மாட்டான்” என்ற எண்ணம் அவள் மனத்தில் மின்னிட்டு மறைந்தது.

உடை உடுத்தி முடிந்தவுடன், அவர்களோடு கலந்துகொண்டாள் அவள்.

“இத்தனை பேரைக் கொண்டு போனால், அவர்களை அதிக நாள் உள்ளே வைத்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.”

”நீங்கள் சொல்வது ரொம்ப சரி” என்றான் இகோர் இவான்விச். “இந்த மாதிரியாக அவர்கள் கெடுபிடி செய்வதை மட்டும் நாம் தகர்த்துவிட்டால், அப்புறம் அவர்கள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓட வேண்டியதுதான், ஆமாம். நாம் மாத்திரம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பதை நிறுத்திவிட்டால், போலீஸ்காரர்கள் இதுதான் சாக்கு என்று பாவெலையும் அவனோடு சிறையில் தவிக்கும் தோழர்களையும் தாக்க முனைவார்கள்.”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று பதறிப்போய்க் கேட்டாள் தாய்.

பாவெல் சிறைக்குள்ளே கிடந்தாலும், அவன் கை சிறைக்கு வெளியிலும் நீண்டு சென்று வேலை செய்யும் என்பதை அவர்கள் உணரட்டும், பார்க்கட்டும்!”

”சின்ன விஷயம் தான்!” என்று பதிலளித்தான் இகோர் இவானவிச். “சமயங்களில் போலீஸ்காரர்கள்கூட தர்க்க ரீதியாகச் சிந்திக்கிறார்கள். நீங்களே நினைத்துப் பாருங்களேன். பாவெல் இருந்தான் – துண்டுப் பிரசுரங்களும் அறிக்கைகளும் பரவிக் கொண்டிருந்தன. பாவெல் இல்லை – துண்டுப் பிரசுரமும் அறிக்கைகளும் இல்லை. எனவே அவன்தான் அவற்றைப் பரப்பினான், இல்லையா? அவர்கள் ஒவ்வொருவரையும் கடித்துக் குதறித் தீர்க்க முனைவார்கள். போலீஸ்காரர்கள் ஒருவனைச் சின்னாபின்னாமாக்குவதென்றால், அந்த மனிதன் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள். அதுதான் அவர்கள் வழக்கம்.”

”எனக்குப் புரிகிறது” என்று துக்கம் தோய்ந்த குரலில் சொன்னாள் தாய், “அட கடவுளே! நாம் இப்போது என்ன செய்வது?”

”அவர்கள் அநேகமாக எல்லாரையுமே பிடித்துவிட்டார்கள். அவர்கள் நாசமாய்ப் போக!” என்று சமையலறையிலிருந்து சமோய்லாவின் குரல் ஒலித்தது. “நாம் நமது வேலையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான். இது நாம் கை கொண்டுள்ள லட்சியத்துக்காக மட்டும் அல்ல; நமது தோழர்களைக் காப்பாற்றுவதற்கும் கூடத்தான்.”

”ஆனால் வேலை செய்வதற்குத்தான் ஆளில்லை” என்று சிறு சிரிப்புடன் கூறினான் இகோர். “என்னிடம் அருமையான முதல் தரமான பிரசுரங்கள் எல்லாம் இருக்கின்றன; எல்லாம் என் கைப்பட எழுதியவை. ஆனால் அவற்றை எப்படித் தொழிற்சாலைக்குள்ளே கொண்டு செல்வது – அதுதான் இன்னும் தீராத பிரச்சினை?”

”அவர்கள் தொழிற்சாலை வாசலில் ஒவ்வொருவரையும் சோதனை போட்டுத்தான் உள்ளே விடுகிறார்கள்” என்றான் சமோய்லவ்.

அவர்கள் தன்னிடமிருந்து ஏதோ பதிலை எதிர்பார்ப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

“எப்படி இதைச் செய்ய முடியும்? எப்படிச் செய்வது?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் அவள்.

சமோய்லவ் வாசல் நடைக்கு வந்தான்.

“பெலகேயா நீலவ்னா, உணவு விற்கிறாளே, மரியா கோர்சுனவா அவளை உங்களுக்குத் தெரியும் அல்லவா?”

“ஆமாம். அதற்கென்ன?”

“அவளோடு பேசிப்பாருங்கள். ஒருவேளை அவள் அவற்றை உள்ளே கொண்டு போகக்கூடும்.”

ஒப்புக்கொள்ளாத பாவனையில் தாய் தலையை ஆட்டினாள்.

”இல்லையில்லை. அவள் ஒரு வாயாடி, அவள் அந்தப் பிரசுரங்களை என்னிடமிருந்துதான் பெற்றாள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அந்தப் பிரசுரங்கள் இந்த வீட்டிலிருந்துதான் வந்தன என்பது தெரிய நேர்ந்தால் அது முடியவே முடியாது!”

பிறகு அவள் திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சி பரவசத்தோடு பேசினாள்.

”அவற்றை என்னிடம் கொடுங்கள். கொடுங்கள் என்னிடம்; நான் பார்த்துக்கொள்கிறேன். நான் ஒரு வழி செய்கிறேன் மரியாவை என்னை ஒரு கையாள் மாதிரிக் கூட்டிக் கொண்டு போகும்படி கேட்கிறேன். எனக்கும் பிழைப்புக்கு ஒரு வழி வேண்டும் அல்லவா? எனவே நானும் தொழிற்சாலையில் சாப்பாடு விற்கச் செல்கிறேன். அப்போது நான் சமாளித்துக்கொள்கிறேன்.”

தாய் புன்னகை செய்தாள். தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்கள் பரவி வருவதை நிர்வாகஸ்தர்கள் கண்டால் அவர்கள் தன் மகனை மட்டும் குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என்பதை அவள் தெளிவாக உணர்ந்தாள்.

அவள் தன் கைகளை மார்போடு அணைத்துக்கொண்டு துடிதுடிப்போடு அவர்களுக்கு நம்பிக்கையூட்டினாள். எல்லாவற்றையும் தான் திறமையோடு, எவரும் காணாமல் செய்து முடிப்பதாகக் கூறினாள். முடிவாக அவள் ஒரே பரவசத்தோடு சொன்னாள்.

பாவெல் சிறைக்குள்ளே கிடந்தாலும், அவன் கை சிறைக்கு வெளியிலும் நீண்டு சென்று வேலை செய்யும் என்பதை அவர்கள் உணரட்டும், பார்க்கட்டும்!”

அவர்கள் மூவரும் தெம்பு பெற்று எழுந்தார்கள். இகோர் தனது இரு கைகளையும் பிசைந்து கொண்டு, புன்னகை செய்தவாறே சொன்னான்.

”அற்புதம்! அபாரம்! உங்கள் யோசனை எவ்வளவு மகத்தானது என்பது உங்களுக்கே தெரியாது! பிரமாதத்திலும் பிரமாதம்!’

”இந்தத் திட்டம் மட்டும் வெற்றிகரமாக நடந்தேறினால், நான் நிம்மதியாகத் தூங்கச் செல்வது போல், சிறைக்குள் தயங்காமல் செல்வேன்” என்று சமோய்லவும் கைகளைப் பிசைந்தவாறே சொன்னான்.

“அம்மா! இந்த உலகிலேயே உங்களைப்போல் அழகான பெண்மணியைக் காணமுடியாது” என்று கரகரத்துக் கத்தினான் இகோர்.

தாய் புன்னகை செய்தாள். தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்கள் பரவி வருவதை நிர்வாகஸ்தர்கள் கண்டால் அவர்கள் தன் மகனை மட்டும் குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என்பதை அவள் தெளிவாக உணர்ந்தாள். தான் எடுத்துக்கொண்ட வேலையைத் தன்னால் சாமர்த்தியமாக நிறைவேற்றிவிட முடியும் என்று அவள் நம்பினாள்; அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட உவகை அவளது உடல் முழுவதையுமே புல்லரிக்கச் செய்தது.

“நீங்கள் சிறைக்குப் போனால், பாவெலைச் சந்தித்து அவனுக்கு ஒரு அருமையான தாய் இருக்கிறாள் என்ற செய்தியைச் சொல்லுங்கள்” என்றான் இகோர்.

“அவனைப் பார்ப்பதுதான் என் முதல் வேலை” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சமோய்லவ்.

“செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் நானே செய்கிறேன் என்பதையும் அவனிடம் சொல்லுங்கள், அவனுக்கும் அது தெரிந்திருக்கட்டும்” என்றாள் தாய்.

“அவர்கள் சமோய்லவைச் சிறைக்கு அனுப்பாவிட்டால்?” என்று கேட்டான் இகோர்.

”அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்றாள் தாய்.

அவர்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட தாய் தன் பேச்சின் தவறை உணர்ந்து அதை மழுப்புவதற்காகத் தானும் சிரித்துக்கொண்டாள்.

படிக்க:
மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !
சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்

“உங்கள் தொல்லைகளையே நீங்கள் கவனிப்பதால், ஊரார் தொல்லைகளை உங்களால் கவனிக்க முடியவில்லை” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள் அவள்.

”அது இயற்கைதானே” என்று ஆரம்பித்தான் இகோர்: “நீங்கள் மாத்திரம் பாவெலையே எண்ணி எண்ணி வருத்தப்பட்டு மறுக்கவில்லையா? அவன் சிறையிலிருந்து வரும் போது கொஞ்சம் தேறிக்கூட வருவான். அங்கே நல்ல ஓய்வு கிடைக்கிறது. படிப்பதற்கு அவகாசமும் உண்டு. ஆனால் நம்மை மாதிரி ஆட்கள் வெளியில் இருந்தால் இந்த இரண்டு காரியத்துக்கும் நமக்கு இங்கு நேரமே கிடைப்பதில்லை. நான் மூன்று முறை சிறைக்குப் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையிலும் என் இதயமும் சிந்தையும் எவ்வளவோ பயனடைந்திருக்கின்றன. அந்த அனுபவம் இன்ப அனுபவமாக இல்லாவிட்டாலும், பலன் என்னவோ நல்ல பலன் தான்!”

“நீங்கள் மூச்சு விடுவதற்கே திணறுகிறீர்களே!’ என்று அவனது எளிய முகத்தை அன்பு ததும்பப் பார்த்தவாறே கேட்டாள் தாய்.

”அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது” என்று ஒரு விரலை உயர்த்திக் காட்டிக்கொண்டே சொன்னான் அவன். “சரி, எல்லாம் ஒரு வழியாய் முடிந்தது என்றே நினைக்கிறேன் இல்லையா, அம்மா? நாளைக்கு உங்களிடம் அந்தச் சரக்குகள் வந்து சேரும். அப்புறம், யுகாந்திர இருளை அறுத்தெறியும் ரம்பம் மீண்டும் சுழலத் துவங்கும். பேச்சுச் சுதந்திரம் நீடூழி வாழ்க! தாயின் இதயம் நீடூழி வாழ்க நான் வருகிறேன். நாம் மீண்டும் சந்திப்போம்!”

”வருகிறேன்” என்று அவளது கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டே சொன்னான் சமோய்லவ். “என் தாயிடம் இந்த மாதிரி விஷயங்களை என்னால் சொல்லக்கூட முடியாது.”

”அவர்கள் எல்லாரும் ஒரு நாள் இதை உணரத்தான் போகிறார்கள்” என்று அவனை உற்சாகப்படுத்தும் முறையில் பேசினாள் பெலகேயா.

அவர்கள் சென்றவுடன் அவள் கதவைத் தாளிட்டாள்; அறைக்கு நடுவில் வந்து முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தாள். வெளியே பெய்யும் மழையின் ஒலியையே சுருதியாகக் கொண்டு அவள் பிரார்த்தனையில் ஈடுபட்டாள். அப்பிரார்த்தனையில் வார்த்தைகள் இல்லை. அவளது வாழ்க்கையிலே பாவெல் புகுத்திவிட்ட மக்களைப் பற்றிய ஒரு பெரும் சிந்தனையே பிரார்த்தனையாயிற்று. அவளுக்கு எதிராக உள்ள தெய்வ விக்ரகங்களுக்கும் அவளுக்கும் இடையில் அந்த மக்கள் நகர்ந்து செல்வதாகப்பட்டது. அந்த மனிதர்கள் விசித்திரமாக ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாக, ஆனால் தனியர்களாக இருந்தார்கள்.

அதிகாலையிலேயே அவள் மரியா கோர்சுனவாவைப் பார்க்கக் கிளம்பிப் போனாள்,

அந்தச் சாப்பாட்டுக்காரி வழக்கம் போல் ஒரே ஆரவாரத்தோடு அன்போடு தாயை வரவேற்றாள்.

முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களைச் சிறையில் தள்ளினார்கள். இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள். பாவெல் பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. எல்லோருக்காகவும் அவன் கிளர்ந்தெழுந்தான்.

”வருத்தமாயிருக்கிறாயா?” என்று தனது எண்ணெய்க் கையால் தாயின் தோளைத் தட்டிக்கொண்டே கேட்டாள். “வருத்தப்படாதே. அவர்கள் அவனைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். இல்லையா? போனால் போகட்டும்! அது ஒன்றும் வெட்கப் படுவதற்குரிய விஷயமில்லை. முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களைச் சிறையில் தள்ளினார்கள். இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள். பாவெல் பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. எல்லோருக்காகவும் அவன் கிளர்ந்தெழுந்தான். அனைவரும் அவனைப் புரிந்து கொள்கிறார்கள். அதனால் நீ அதை நினைத்து வருத்தப்படாதே. எல்லாரும் பேசுவதில்லை, ஆனால் நல்லவர் யார் என்று அனைவருக்கும் தெரிகிறது. நானே உன்னைப் பார்க்க வரவேண்டுமென்றிருந்தேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை. சமையல் செய்வதற்கும் சாப்பாடு விற்பதற்குமே நாள் முழுதும் சரியாய்ப் போய்விடுகிறது. ஆனால் உனக்கு நன்றாகத் தெரியும் என்னதான் உழைத்தாலும், நான் என்னமோ பிச்சைக்காரியாய்த் தான் சாகப்போகிறேன். என் காதலர்களே என்னைத் தின்று தீர்த்துவிடுவார்கள். இங்கே கண்டால் இங்கே, அங்கே கண்டால் அங்கே – எங்கேயும் அவர்கள் என்னைப் பாச்சை மாதிரி பிய்த்துத்தான் பிடுங்குகிறார்கள். அப்படியும் இப்படியுமாய் நான் பத்து ரூபிளை வாயைக்கட்டி வயிற்றைக் கட்டுச் சேர்த்து வைத்திருந்தால், எவனாவது ஒரு துடைகாலி வந்து, அதையும் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டு போய்விடுகிறான். பெண்ணாகப் பிறந்தாலே இந்தப் பிழைப்புத்தான். ஊம். என்ன கழிசடைப் பிழைப்பு! தனியாய் வாழ்வது சங்கடமாயிருக்கிறது; எவன் கூடவாவது வாழ்வது அதைவிடத் தொல்லையாயிருக்கிறது!”

“நான் உன்னிடம் ஒரு காரியமாக வந்தேன். நீ என்னை ஒரு கையாளாக அமர்த்திக்கொள்கிறாயா?” என்று மரியாவின் வாயளப்பிற்கிடையே குறுக்கிட்டுப் பேசினாள் தாய்.

“அது எப்படி?” என்றாள் மரியா. பெலகேயா விளக்கிச் சொன்னாள், மரியா தலையை அசைத்தாள்.

“நிச்சயமாய்” என்றாள் அவள். ”என் புருஷன் கண்ணிலே படாமல் நீ என்னை எப்படி மறைத்து வைத்திருந்தாய் என்பது நினைவிருக்கிறதா? சரி, இப்போது பசிக்குத் தெரியாமல் உன்னை நான் மறைத்து வைக்கிறேன். உன் மகன் எல்லாருடைய நன்மைக்காகவும் பாடுபட்டான். எனவே எல்லாரும் உனக்கு உதவத்தான் வேண்டும். அவன் ஓர் அருமையான பையன். எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள், அவனுக்காக இரங்குகிறார்கள். இந்த மாதிரிக் கைது செய்து கொண்டே போவதால், முதலாளிகளுக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை. அதுமட்டும் நிச்சயம். தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பதை நீயே கவனித்துப்பார். எல்லாரும் உம்மென்று முறைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முதலாளிகள் இருக்கிறார்களே, அவர்கள் என்ன நினைக்கிறார்கள், தெரியுமா? ஒரு மனிதனின் காலில் ஓங்கியடித்துவிட்டால், அவன் ஓடாமல் நின்றுவிடுவான் என்று பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் பத்துப்பேரை அடித்தால், நூறு பேர் முறைத்துக்கொள்கிறார்கள்!”

இவர்களது உரையாடலின் பயனாக மறுநாள் முதற்கொண்டு தாய் தொழிற்சாலையில் மத்தியான வேளையில் இருந்தாள். மரியா தந்த இரண்டு கூடைச் சாப்பாட்டோடும் நின்றுகொண்டிருந்தாள். மரியாவோ சந்தைக்கு வியாபாரம் செய்யப் போய்விட்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க