லகின் மிக உயர்ந்த சிலையைத் திறந்து வைத்துள்ளார் திருவாளர் நரேந்திர மோடி. சுமார் 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை முதலில் கற்பாறைகளால் அமைக்க வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாக திறப்பு விழாவின் போது பேசிய பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்காக அக்கம் பக்கத்து மலைகளைச் சுற்றிப் பார்த்த போது (அவர் சொல்கிறார்; நாம் நம்புவோம்) அந்தப் பாறைகள் இலகுத் தன்மை வாய்ந்ததாக இருந்ததை அறிந்துள்ளார். இதற்கிடையே தீவிரமாக மூளையைக் கசக்கியதில் (மோடியின் மூளை தான்) தீர்வு ஒன்று கிடைத்துள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என்கிற அடைமொழிக்குச் சொந்தக்காரர் என்பதால் இரும்புச் சட்டங்களாலேயே சிலையை வடிப்பதென பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். பின் மேற்படி சிலையை 70,000 டன் சிமெண்ட், 24,500 டன் இரும்பு, 1700 மெட்ரிக் டன் பித்தளை (பிரான்ஸ்) உள்ளிட்ட கந்தாயங்களைப் பயன்படுத்திக் கட்டியுள்ளனர். பட்டேல் இரும்பு மனிதராக இருந்த அதே நேரம் சிமெண்ட் மனிதராகவும், வெண்கல மனிதராகவும் விளங்கியுள்ளார் என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

படிக்க:
♦ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்
♦ ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?

சிலைத்திறப்பை ஒட்டி நகர்ப்புற நக்சல்கள் நிறைந்த தமிழ்நாட்டு சமூக வலைத்தள வட்டாரங்களில் கேலியும் கிண்டலுமாக அமளிதுமளிப்பட்டது. சிலர் திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரனின் தலையை போட்டோஷாப்பில் பட்டேலின் சிலையோடு இணைத்திருந்தனர். வெறுங்காலிலேயே குத்தாட்டம் போடும் கூட்டத்தின் காலில் சலங்கையைக் கட்டி விட்டது “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” .

விசயம் என்னவென்றால், ஒற்றுமைச் சிலை அல்லது ஒருமைப்பாட்டுச் சிலை (Statue of Unity) என நாமகரணம் சூட்டப்பட்டுள்ள மேற்படி சிலையை ஒட்டி உலக மொழிகள் சிலவற்றில் அதன் பெயரை எழுதிய பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மேற்படி பதாகையில் Statue of Unity என்பதை தமிழில் “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என “முழி பெயர்ந்திருந்தனர்”. தகவல் கிடைத்ததும் தமிழ் வலைஞர்கள் சதிராடித் தீர்த்து விட்டனர்.

உண்மையில் சீனம், அரபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் “முழி பெயர்க்கப்பட்டிருக்கும்” மேற்படி வாசகத்தை மொழிபெயர்ப்பு செய்யாமல் ஒலிபெயர்ப்பு செய்துள்ளனர். எனினும், தமிழ் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில் பா.ஜ.கவின் நாராயணன், இலக்கிய பிரிவைச் சேர்ந்த ஸ்லீப்பர் செல் உறுப்பினர் எழுத்தாளர் மாலன் உள்ளிட்டோர் இத்தகவல்  பொய்யானது என்றும், அப்படி ஒரு அறிவிப்புப் பலகையே வைக்கப்படவில்லை எனவும் சாதித்தனர். அதே நேரம், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும், மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணனும், தவறு சரி செய்யப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (தினமணி கூரூப்) பத்திரிகை மேற்படி “முழி பெயர்ப்பு” செய்தியே தவறானது என்றும், சம்பந்தப்பட்ட (பெயர் குறிப்பிட விரும்பாத) அதிகாரியிடம் தாம் பேசி உறுதிப் படுத்திக் கொண்டதாகவும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால், புகைப்படத்தை எடுத்த பி.பி.சி செய்தியாளர் தான் அப்புகைப்படத்தை எடுத்ததையும், அவ்வாறு ஒரு அறிவிப்புப் பலகை சர்தார் பட்டேலின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்ததையும் உறுதிப்படுத்தினார். குஜராத் முதல்வரின் ட்விட்டரில் வெளியான புகைப்படங்களிலும் அந்த அறிவிப்புப் பலகை இடம் பிடித்திருந்தது.

பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல் உறுப்பினர் எழுத்தாளர் மாலன்.

அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்ததும், அதில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் வன்கலவி செய்யப்பட்டதும் உறுதியான நிலையிலும், பா.ஜ.க நாராயணனும், மாலனும், தமது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை – அவர்களைப் பொறுத்தவரை அது பொய்ச் செய்தி தான். ஒரே விசயத்தைக் குறித்து இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட “உண்மைகள்” உலாவும் நிலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது; ஆனால், “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” எனினும் தத்துவத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.

*****

பாரதிய ஜனதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி முழுவதுமே ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாகத் தான்  இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். கருப்புப் பணத்தை ஒழிப்பதே நோக்கம் என முதலில் சொல்லப்பட்டது; பின்னர் கள்ளப் பணத்தையும் ஒழிப்போம் என்றனர். கருப்புப் பணம் வங்கிகளுக்குத் திரும்ப வராது என்றார்கள். ஐம்பது நாட்களில் பலன் கிடைக்கவில்லை என்றால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னைத் தூக்கிலேற்றுங்கள்  என்று பிரதமரே சவால் விட்டார்.

செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் திரும்பி வந்த பின் அவற்றை ‘வருடக்கணக்கில் எண்ண்ண்ண்ணி’ இறுதியில் சில மாதங்களுக்கு முன் 99 சதவீத நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இதில் பூட்டான் மற்றும் நேப்பாள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளிடம் இருப்பில் இருக்கும் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 100 சதவீதத்திற்கும் மேலான தாள்கள் திரும்பி வந்து விட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ள வெண்டும்.

15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதில் திரும்ப வராது என்று கணிக்கப்பட்ட 3-4 லட்சம் கோடி கருப்புப் பணம் வெள்ளையானது; 100-க்கும் மேலான மக்கள், வங்கித் தானியங்கி இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்கையில் மரணமடைந்தனர்; 15 லட்சம் வேலைகள் மூன்றே மாதங்களில் காணாமல் போனது; புதிய நோட்டுக்கள் அச்சடிக்க 7,965 கோடி தண்டச் செலவு. நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக தலை குப்புற விழுந்தது தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கிடைத்த ‘பலன்களின்’ சாராம்சம்.

படிக்க:
♦ மோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்
♦ மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

என்றாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் வெற்றி என்பதே பா.ஜ.கவினரின் துணிபு. எப்படி வெற்றி? அதான் எல்லா பணமும் வங்கி வலைப்பின்னலுக்குள் வந்து விட்டதே என்று தோசையை அப்படியே திருப்பிப் போட்டு விட்டனர். தலை விழுந்தால் தோல்வி என்பது தானே விதி முறை – பூ விழவில்லை என்றால் தோல்வி என்று சொல்லவில்லை அல்லவா? ஆக மொத்தம் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவத்தின் அடிப்படையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் வெற்றியானது.

அதற்கும் கொஞ்சம் முன்னே சென்றால், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பணத்தை மீட்டு 15 லட்சம் போடப்போவதாக சொன்னார்கள். தேர்தலில் வென்ற பிறகு அதெல்லாம் ஜெயிக்க மாட்டோம் என்கிற நம்பிக்கையில் சொன்னது; இப்போது ஜெயித்து விட்டதால் செல்லாது என்கிறார்கள். ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவம் அதன் கருவடிவில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திலேயே காணப்பட்டது என்பதை 15 லட்ச விவகாரத்தில் மட்டுமல்ல – அகமதாபாத்தில் உதித்தெழுந்த சீனச் சாலைகள் மற்றும் கம்யூட்டரின் மதர் போர்டில் காட்சியளித்த குஜராத் நகரங்களிலும் காண முடிந்தது. நமக்குத் தான் ‘அப்போ புரியலை; இப்போ புரியுது’

பின்னர் நாட்டு மக்களின் தலையில் விடிந்தது ஜி.எஸ்.டி என்கிற நவீன மூட்டைப் பூச்சி நசுக்கும் இயந்திரம். தொழில் புரிவோர் வரிகட்டுவதை எளிமையாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் இருக்கும் ‘நெளிவு சுழிவுகளை’ சிறு தொழிலதிபர்கள் புரிந்து கொள்வதற்குள் அவர்களின் தொழில்கள் மொத்தமும் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போனது. என்றாலும் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் ஜி.எஸ்.டி மாபெரும் வெற்றி; எப்படி? எளிமைப்படுத்துவதே நோக்கம் அல்லவா, தொழில்கள் இல்லை என்பதால், வரிகட்டுவதும் தேவையில்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. வரி கட்ட வேண்டிய தேவை இல்லாததால், தொழிலதிபர்களும் இனிமேல் வருமான வரித்துறையின் சிக்கலான வரிவிதிப்பு முறைகளுக்குள் தலையைக் கொடுக்கத் தேவையில்லை. அனைத்தும் எளிமையாகி விட்டது.

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியின் ஆகச் சிறந்த பங்களிப்பு ரபேல் போர் விமானங்கள். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வெறும் 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் மோடி கையெழுத்திட்ட போது (அப்போதைய) பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர்  கோவாவில் மீன் கடை ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார். பழைய ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக விலை என்பதோடு, ஒப்பந்தப்படி கூட்டுப் பங்கு நிறுவனம் துவங்க ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருந்த அரசுப் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் கழட்டி விடப்பட்டு சின்ன அம்பானியின் நிறுவனம் நுழைக்கப்பட்டது.

இதைக் குறித்த விவரங்கள் அனைத்தும் பிரான்சு பத்திரிகைகளில் (விலை விவரங்கள் உட்பட) வெளியாகிக் கொண்டிருந்த போது நம்முடைய (இப்போதைய) பாதுகாப்புத்துறை அமைச்சரோ, ரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கே உலை வைத்து விடும் என்றொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையே பாதுகாப்புத்துறை தொடர்பான விசயங்களுக்கு நிதி அமைச்சரும், நிதி அமைச்சகம் தொடர்பான விளக்கங்களை தகவல் தொடர்புத்துறை அமைச்சரும், தகவல் தொடர்புத் துறை தொடர்பான விளக்கங்களை வேறு ஒரு துறையின் அமைச்சரும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் ஊறுகாய் போடும் படங்களை வெளிட்டு ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனியன் தத்துவத்தின் அடிப்படையில் சேவையாற்றிக் கொண்டிருந்தார்.

இந்த வரிசையில் புதுவரவு வங்கித்துறை விவகாரங்கள். ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் ஏறத்தாழ திவாலாகி பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 90 ஆயிரம் கோடி வட்டியை கட்டவில்லை. அரசு மற்றும் தனியார் துறையின் கட்டுமானப் பணிகளுக்கு மேற்படி நிறுவனமே நிதி உதவி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மோடியின் கனவுத் திட்டங்களான குஜராத் கிஃப்ட் சிட்டி, புல்லட் ரெயில் போன்ற திட்டங்களுக்கான நிதி உதவியை இந்த நிறுவனமே செய்து வந்தது.

ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் திவாலாவது ஏறக்குறைய உலகப் பெருமந்தத்தைத் துவக்கி வைத்த லேமென் பிரதர்சின் திவாலின் இந்திய வடிவம் என பொருளாதார நிபுணர்களே தொண்டை அடைக்க உட்கார்ந்திருந்த நிலையில் , வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வாராக் கடன்கள் ஒழுங்கு செய்யப்படவில்லை என்றால் பொதுத்துறை வங்கிகளின் கடன்களை நிறுத்தி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன் காரணமாக வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கி வந்த வீட்டுக் கடன்களின் தவணைகளும் தடைபட்டது.

படிக்க:
♦ ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
♦ ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேலைப் பொருத்த வரை வாராக் கடன்கள் ஒழுங்கு செய்யப்படாத நிலையில் பொதுத்துறை வங்கிகளைக் கடன் கொடுக்க அனுமதிப்பது நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தையே சீரழித்து விடும் என்று அஞ்சுகிறார். சாவு உறுதி என்றால் அது என் கையால் நடந்ததாக இருக்கக் கூடாது என்பது அவரது நிலை. ஆனால், அரசியல் சாசணத்தின் ஏழாவது பிரிவில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பிரிவு ஒன்றை பயன்படுத்தியுள்ளது மத்திய அரசு.

வினவு செய்திப் பிரிவு ஆக மொத்தம் பாரதிய ஜனதாவின் கையில் மொத்த நாடும் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் வலைஞர்களோ முழி பெயர்ப்புக்காக பொங்குவதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? சிந்திப்பீர் நியாயமாரே!

– சாக்கியன்

6 மறுமொழிகள்

 1. பார்ப்பனீய பாசிஸ்ட் பா.ஜ.க RSS ன் “சிறப்பான” சித்தாந்தம்.வரலாற்றை மட்டுமா சித்தாந்தங்களையும் புளுகு மூட்டைகளால் நிரப்பும் கூட்டமல்லவா இவர்கள்.
  காந்தியை படுகொலை செய்துவிட்டு நாங்கள் செய்யவில்லை என்று இன்றுவரை சத்தியம் செய்யும் கழிவுகள் தானே இந்த RSS கும்பல்.
  ஆதிசங்கரனின் மாயாவாதம் போன்றது பா.ஜ.க வினரின் அரசியல்…
  ஜெர்மானிய நாஜிய அமைச்சர் கோயபெல்ஸ் ‘உலகமகா பொய்யன்’ என்று வரலாற்றில் பெயரெடுத்தவர். இந்த பொய்யனை தமிழ் எழுத்தாளர் மாலன் அவர்கள் கோயபெல்ஸ் பொய்யன் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதியிருந்தார்… உலகமகா பொய்யனையே முண்டு கொடுத்து தூக்கி நிறுத்தியவர் அல்லவா மாலன்? பாசிச மனநோயாளி மோடிக்காக இந்த ஆராய்ச்சிகூடவா செய்யமாட்டார் திருவாளர் மாலன்?

 2. நம்ம இலக்கிய சிகரம் சுயமோகன விட்டுட்டீங்களே. முறுக்குதாசோடு அவர் நடத்தும் உலகப் புகழ்பெற்ற சினிமாவுக்கான டிஸ்கஷனுக்கு வெயிட்டிங். இரண்டாம் பாகத்தை சீக்கிரம் வெளியிடவும்.

 3. வினவு போன்ற சீனா பாகிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள் என்ன பொய் பரப்பினாலும் அதை மற்றவர்கள் அதை நம்ப வேண்டும்.

 4. இந்திய அரசு மற்றும் பெரும்பாலான கட்சிகள், இந்திய தரகு முதலாளிகள், நிலப்பிரபுத்துவ எச்சங்கள்…நுகர்வு வெறியர்கள், வெளிநாட்டு மோகம் கொண்டு வெறியர்கள்,…. இப்படி தரப்பினர் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலை நோக்கிப் பிழைத்து கொண்டு உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலைக்காக போராடும் “வினவு” போன்ற இடதுசாரிகளை சீன பாகிஸ்தானிய ஏஜன்ட் என்று ஆதாரமற்ற கேவலமான அவதூறுகளை பரப்புகின்றனர்.இந்த அவதூறு மறுமொழிகளை வினவும் ஜனநாயக பூர்வமான முறையில் வெளியிட்ட வருகிறது.
  இந்த அவதூறுகளை தொடர்ந்து செய்யும் தனிநபர்கள் உண்மை ஆராய்ந்து பார்த்தால் அவசியம் என்ற வேண்டுகோளை இதன்மூலம் வைக்கிறேன்……

  • இதில் என்ன அவதூறு வேண்டியிருக்கு… வினவு பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரிவினையை ஆதரிப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தானே.

   இந்தியா சீனா போரின் போது இந்திய ராணுவத்தினருக்கு ரத்த தானம் செய்ய கூடாது என்று சொன்ன அயோக்கியர்கள் தானே இந்திய கம்யூனிஸ்ட்கள்… இன்றும் கூட வினவு கூட்டங்களுக்கு இந்திய நலனை விட சீனாவின் நலன் தான் முக்கியம் அதன் நலனை ஒட்டி தான் இந்தியாவையே இவர்கள் பார்க்கிறார்கள். முடிந்தால் நான் சொன்ன இந்த குற்றசாட்டுகளை ஆதாரத்தோடு மறுத்து பாருங்களேன் பார்ப்போம்.

   இந்த அயோக்கியர்களை சீனா பாகிஸ்தான் ஸ்லீப்பர் செல், கைக்கூலிகள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வதாம்.

 5. பொய்யான செய்திகளை தன் வசதிக்கு ஏற்ப வெளியிடும் வினவு ஒரு கனவு காணும் தினவு செய்தி தளம். விரைவில் சங்குதான்.

Leave a Reply to பாலன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க