சென்னையின் வர்த்தக மையங்களில் பழமையும், முக்கியத்துவமும் வாய்ந்ததென்றால் மூலக்கொத்தளம் கருவாட்டு மண்டியை கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். சுமார் 130 வருடங்களாக சென்னையின் வரலாற்றில் பயணித்து வருகிறது அந்த மண்டி.1806 -ல் பக்கிங்ஹாம் கால்வாய் சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு,   பின்னர் ஆந்திராவின் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாயாக மாறிப் போயுள்ள பக்கிங்காம் கால்வாய்.

1876-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பஞ்சத்தை போக்க மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்க வேண்டிய சூழலில் அந்தக் கால்வாயை மேலும் நீட்டித்து அடையாறு வரையும் பின்னர் அது விழுப்புரம் வரையிலும் தோண்டப்பட்டது. பின்னாளில் அக்கால்வாய் நீர்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.”

படிக்க :
கருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்

“விஜயவாடவில் இருந்து விழுப்புரம் கூனிமேடு வரை வெட்டப்பட்டுள்ள இந்த கால்வாய் வழியாக அரிசி, உப்பு, பருத்தி, மீன், கருவாடு உள்ளிட்ட உணவு பொருட்கள் மூலக்கொத்தளத்தில் உள்ள படகுத்துறையில் வந்து இறங்கும். அதில் வரும் கருவாட்டை இங்கே விற்பனை செய்வார்கள். அதுவே நிரந்தரமாகி விட்டது” என்கிறார்கள் மண்டி வியாபரிகள்.  இன்று அந்தப் பகுதியில் பல்வேறு தொழில்கள், கடைகள் என ஏகத்துக்கும் பரந்து விரிந்தாலும் கருவாடு என்றால் அப்பகுதி மட்டுமல்ல, கருவாடு ரசிகர்களாக உள்ள அனைத்து மக்களின் நினைவிற்கு வருவது அந்த மண்டிதான்.

பரபரப்பான அந்த நான்குமுனை சந்திப்பில், வால்டாக்ஸ் சாலையின் ஓரத்தில் உள்ள கடைகளின் எதிரில் ஒய்யாரமாக நின்று கொண்டு கருவாட்டின் விலையை விசாரித்து கொண்டிருந்தனர் மக்கள். கருவாட்டின் மணம் காற்றில் பரந்த வண்ணம் சாலைகளில் செல்வோரையும் இழுத்து வாங்கும்படி வீசியது.

கருவாடு ஆவணப்படம்

நண்பகல் பத்து மணி என்பதால் அப்பொழுதுதான் கடையைத் திறந்து விற்பனைக்கு எடுத்து வைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்தார் குமார். நெற்றியில் விபூதியும், குங்குமமும் நிறைய பவளச் சிரிப்புடன் நம்மை நோக்கி……

“பாருங்க…சார்… எந்த கருவாடு வேணும்..எல்லாம் ஃபிரஷ்..ஷா.. இருக்கு..”என்றார்.

“என்னென்ன கருவாடு’ண்ண இருக்கு”?

குமார்

“வாலை, கெளிச்சக் கருவாடு, காரப்பொடி, நெத்திலி, காஞ்ச எறா, சுறா, பால்சுறா, சென்னாகொன்னி, ஷீலா, வஞ்சிரம், பாம்பேடெக், கோலா, மாசி” என்று கூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கருவாட்டினை ஒவ்வொன்றாக சொல்லி முடித்துவிட்டு, . “எந்த கருவாடு வேணும்” என்று பார்வையிலே கேட்டார்.

“இருக்கிறதுலயே வெல அதிகமான கருவாடு எது’ன்னு சொல்லுங்களேன்”?

வஞ்சிரம்தான் சார். கிலோ 600 ரூபா… அடுத்து கோவா நெத்திலி 600 ரூபாய். ராமேஸ்வரம் நெத்திலி 400 ரூபாய். எல்லாம் நல்ல அயிட்டம்தான்….சார்.

“சரி! எல்லாம் எந்த ஊரு சரக்கு”?

வஞ்சிரம் கருவாடு

சார்! கெளிச்ச, சென்னா, எறா எல்லாம் ஆந்திராவில் இருந்து வருது. கோலா காசிமேடு, பாம்பே டெக் மும்பையிலிருந்து வருது…. வாள கருவாடு குஜராத், ஆந்திரா, காசிமேடு அப்புறம் ராமேஸ்வரத்தில் இருந்து வரும்.!

“குஜராத்ல இருந்து பாடம் செய்து வரும் வாளக்கருவாடு செம்ம டேஸ்ட்டா இருக்கும். ஆனா அங்க இருக்கவங்க அதிகம் சாப்பிட மாட்டாங்க. எல்லாத்தையும் ஒரு பாக்சில போட்டு இங்க அனுப்சிடுவாங்க. அது வந்த இரண்டு மூனு நாளைக்குள் விற்றால் ஓரளவு  லாபம் கிடைக்கும். இல்லன்னா காய்ஞ்சி எடை குறைஞ்சிடும்.

பெட்டிகளில் அடுக்கப்பட்டடுள்ள வாளை கருவாடு.

ராமேஸ்வரம்  வாள கருவாடு ஆறு மாசத்துக்குகூட கெடாம இருக்கும். அந்த அளவுக்கு தரமா பாடம் பண்ணுவாங்க. விற்பனையே ஆகாத பட்சத்தில் கருவாடு கெட்டுப் போனால் அதனை கோழி தீனிக்கு கொடுத்து விடுவோம்” என்றார்.

கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வர அங்கிருந்து நகர்ந்ததும், அருகிலிருந்த கடையில்……ஊழியர் ஒருவர் கருவாட்டை அழகாக வெட்டிக் கொண்டிருக்க… உள்ளே இருந்து ஒருவர் வேகமாக வந்து….

“என்ன வேணும்”? என்றார் காத்திரமான குரலில்! அவர் பெயர் ஜெபகுல்லா.

ஜெபகுல்லா (இடது புறம் உள்ளவர்)

“விற்பனையெல்லாம் எப்படி இருக்கு”? என்றதும்….. சற்று யோசித்து விட்டு…. மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்…..

“சென்னையை பொருத்த வரைக்கும் கருவாடு சாப்பிடுறவங்களோட எண்ணிக்கை கொறஞ்சிகிட்டே வருது. ஆனா கிராமத்துல இருக்கும் மக்கள் கருவாட்டை விரும்பி சாப்பிடுறாங்க. அவங்களால வஞ்சிரம் போன்ற விலையுயர்ந்த கருவாடு வாங்க முடியறதில்ல. விலை கூடுதலா இருக்குன்னு நெனக்கிறாங்க. வாங்கக் கூடியவர்கள் கருவாட்டையே ஒதுக்குறாங்க.

எப்படி இருந்தாலும் வஞ்சிரம் 1000 ரூபாய்க்கு  மேலதான் விற்கனும். ஆனா 600-க்குதான் விக்கிறோம். எப்படின்னா, வஞ்சிரம் மீனே 1000 ரூபாய்க்கு விற்கிறது. அதனை காயவைத்து பாடம் போட்டு கொடுப்பது கடினமான வேலை. அதற்கு ஏத்த விலையைப் போட்டால் மீனைவிட அதிகமாக விற்க வேண்டி வரும். இருப்பினும் குறைவாகத்தான் விற்கிறோம்..

“குஜராத்ல இருந்து வரும் வாளை சிறப்பா இருக்கும்னு சொல்லுறாங்களே எப்படி”?

உண்மைதான். அதைவிட ராமேஷ்வரம் கருவாடு நல்லா இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் பாடம் பண்ணுவதுல ஒரு பக்குவம் இருக்கும். அதுல கைதேர்ந்தவங்க நம்ம ராமேசுவரத்துகாரங்க.

“சரி..! இடையில கருவாடு விக்க கூடாதுன்னு சொன்னாங்களே… அதனால எதாவது பாதிப்பு வந்ததா”?

காய்ந்த இறால்

“சிலர் ‘நான்–வெஜ்’ஜிக்கு எதிரா தொடர்ந்து எதாவது கருத்து சொல்லிக்கிட்டே இருக்காங்க. இவங்க,  எல்லோரையும் மனிதர்கள் என்பதை ஏத்துக்கவே மாட்டாங்க..  இவர்கள் (பார்ப்பனர்கள்) இதுபோன்ற உணவில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மாட்டுக் கறி முதல் கருவாடு வரை எல்லா உணவையும் அவர்கள் எதிர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் எப்பவும் கருவாடு உழைக்கும் மக்கள் உணவாகவே இருக்கிறது” என்கிறார், ஜபகுல்லா.

அது என்னவோ உண்மைதான்…. கிராமப்புறங்களில் சுண்டக் கஞ்சிக்கு  கருவாடுதான்  “இன்ஸ்டண்ட் சைடிஸ்ட்”. எறிகிற நெருப்பில் சுட்டுக் கொடுப்பார்கள்..  அதிலிருக்கும் சுவை வேறு எதிலும் இருக்காது. முக்கியமாக விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரின் விருப்பமான தொடுகறி உணவு கருவாடுதான். அதுமட்டுமா?

படிக்க :
சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?
நாடெங்கும் காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் – செய்தித் தொகுப்பு

கருவாட்டில் இருக்கும் மருத்துவ குணம், அதன் நன்மைகள் பற்றி சரளமாக விளக்குகிறார்….. முகமது சலீம் பாஷா.

முகமது சலீம் (வலது புறம் உள்ளவர்)

“சார், முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த விற்பனை இப்ப இல்ல. காரணம் வரத்து குறைவு. விலையேற்றம் அதிகாமகிடுச்சி. நெத்திலி கருவாடு எல்லாம்  சில்லறை விலைக்கு வித்தோம். இன்னைக்கு அந்த விலைக்கு தான் கொள்முதலே பன்றோம். ராமேஸ்வரத்துல இருந்து வர கருவாடு எல்லாம் அவ்வளவு அற்புதமா இருக்கும். விலையும் குறைவா இருக்கும். சுனாமிக்கு பிறகு எதிர்பார்த்த அளவு சரக்கு வரது இல்ல. எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்ப ஆந்திரா, கேரளா, குஜராத்துன்னு வெளியில இருந்துதான் இறக்குமதி பண்றோம். தமிழ்நாட்டுல எல்லாம் கொழம்பு கருவாடுதான் வருது.

இன்னொரு பக்கம், எந்த வியாதிக்கு மருத்துவமனைக்கு போனாலும் டாக்டர் முதல்ல சொல்லுறது கருவாடு சாப்பிடாதிங்கன்னு தான் பயமுறுத்துறாங்க. பி.பி, சுகர்  வந்தவங்க கருவாடு சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுறாங்க. இன்னிக்கு எல்லாருக்கும் அந்த பிரச்சனைதான் அதிகமா இருக்கு. அதனாலயே கருவாடு சாப்பிடுறது குறைஞ்சிடுச்சி.

உண்மையிலே கருவாட்டுல நெறைய கால்சியம் சத்து இருக்கு.  மருத்துவ குணமும் கருவாட்டுக்கு இருக்கு சார்.!  பறவைக் காய்ச்சல், சிக்கன் குன்யா வந்த பிறகு கச்ச கருவாட்ட ரசம் வச்சி குடிக்க சொன்னாங்க.  அதுல கசப்பு அதிகம். அந்த கசப்பு தான் அந்த நோயை குணப்படுத்தும். திருக்கை  கருவாடு இடுப்பு வலிக்கு நல்ல மருந்து. பால்சுறா குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நல்லது.  மாசி மீன்…. உடம்புக்கு நல்லது. வலிமைய தரும். இந்த மாசி கருவாடு மாலத்தீவுல இருந்து வருது. சுறாவினுடைய கறியை அறுத்து காய வைத்து பாடம் போட்டு கொடுப்பாங்க. அது தான் அந்த கருவாட்டோட சிறப்பு.

மாசி கருவாட்டை ராம்நாட் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க.  பாம்பே டெக்  கருவாட்டை பெங்களுர் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கருவாட்ட வறுத்து சாப்பிட்டா செம்ம டேஸ்ட்டா இருக்கும்.  வாளக் கருவாட்ட வால்டாக்ஸ் மக்க விரும்பி சாப்பிடுவாங்க சார்.

உப்பு இறால்

பால் சுறாவினுடையை இறக்கையை சைனீஸ் மக்கள் சூப் வைத்து குடிப்பார்கள். ஆண்மை அதிகரிக்கும்.  சுறாவும் இடுப்பு வலிக்கு நல்ல மருந்து தான்.  மழையில கருவாடு சாப்பிடுறது அவ்வளவும் உடம்புக்கு நல்லது சார். குளிர்ந்த உடம்ப சூடாக்கும் தன்மை கருவாட்டு இருக்கு.  அதனால் மழையில கருவாடு சாப்பிடனும்னு சொல்லுறது…..  நம்ம கிராமத்து மக்கள் குழம்பு கருவாடு வாங்கிக்குவாங்க. ஆனா இவ்ளோ நல்லது இருந்தும் மக்கள் கிட்ட கருவாடு சாப்பிடுவதற்கான மோகம் குறைந்து விட்டது.

வினவு புகைப்படச் செய்தியாளர்

அசைவத்து மேல வெறுப்பு ஏற்படுத்திட்டாங்க. எல்லாத்தையும் அசைவம்னு முத்திரை குத்தி ஒதுக்கிடுறாங்க.. அப்படி பார்த்தா சீஸ் இருக்கே அதுவே மாட்டினுடைய கொழுப்புல இருந்தும், பன்றிக் கொழுப்பிலிருந்தும் தான் தயாரிக்கிறாங்க. அதை மட்டும் எப்படி சாப்பிடுறாங்க? செடி-கொடி எல்லாத்துக்கும் உயிர் இருக்கு! அதை அறுக்கிறது தப்பில்லையா? என்னக் கேட்டா பூமியில வெளஞ்சி சாப்பிடுற எல்லாம் அசைவம்தான் சார்”…!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

6 மறுமொழிகள்

  1. பொது உணவில் கட்டுப்பாட்டை கொண்டுவரும் ஆதிக்கமனநிலை கொண்டோா் ஒழிக்கப்படவேண்டியவா்கள்.

  2. கருவாடு உணவை எடுக்காமல் இருப்பது நல்லது, ஏனென்றால் அதை பதப்படுத்த பயன்படுத்தபடும் பார்மலின்(Formalin) என்கிற கெமிக்கல் மிகவும் ஆபத்தான ஒன்று அதனால் புற்று நோய், தோல் வியாதிகள் போன்றவை ஏற்பட அனைத்து வாய்ப்புகளும் உண்டு… ஆகவே பார்ப்பனீயம் என்பதெல்லாம் தாண்டி இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு கிடையாது .. என்னை கேட்டால் கருவாட்டை முழுமையாக தடை செய்து விடலாம், சமூகத்திற்கு அதுவே நல்லது..

  3. பார்த்தீனியம் செடி மனித உடலுக்கு கேடு. பார்ப்பனீயம் சமூகத்திற்கு கேடு . இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவையே.

  4. கருவாடு ஆபத்தான உணவு தான், பிரேதங்களை பதப்படுத்த பயன்படுத்த படம் Formal D-Hyde என்னும் ரசாயனம் கருவாடுகளை பதப்படுத்த உபயோகிக்கபடுகின்றது. அது மனித உடலுக்கு மிகவும் கேடு செய்ய கூடிய ஒன்று. இதனை பற்றி ஏற்கனவே பல செய்து ஊடங்கங்களில் மருத்துவர்களின் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் இதன் தீமைகளை தெரிந்துக் கொள்ள இணையத்தில் தேடி பார்க்கவும். மது, புகையிலை, குட்காவை போன்று மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்தும் கருவாடு உணவை நாடு முழுவதும் தடை செய்வது மக்களுக்கு செய்ய படும் மகத்தான தொண்டுகளில் ஒன்று…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க