விழாக்காலம் என்றால் குழந்தைகள் நினைவுக்கு வருவார்கள். தற்போது டாஸ்மாக் வசூலும், புதுப்பட ரிலிசுமே பண்டிகைகளை நினைவுபடுத்தி வருகின்றது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட் முதற்கொண்டு தமிழக அரசின் டாஸ்மாக், சினிமாக்கள் வரை மக்களை சுரண்டுவது எப்படி என திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் “தி கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்” என்றும், “பிக் பில்லியன் டேஸ்” என்று பிளிப்கார்ட்டும் போட்டி போட்டுக்கொண்டு இதுவரை இல்லாத சலுகைகளை வழங்குவதாகக் கூறி தமது வசூலை அள்ளியிருக்கிறார்கள்.

அமேசான் மூன்று கட்டங்களாக சலுகைகளை வழங்கி மக்களிடம் விரட்டி விரட்டி விற்பனை செய்திருக்கிறது. அதன் விளைவு, கடந்த ஆண்டை விட 117 சதவீதம்  கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்று பன்மடங்கு விற்பனையையும் உயர்த்தியுள்ளது. “இந்தியாவில் பெரும்பாலன வாடிக்கையாளர்கள் அமேசானில் இணைந்துள்ளனர். பிரைம் வாடிக்கையாளர்களும் இரு மடங்கு உயர்ந்துள்ளனர். இ-காமர்ஸில் இது ஒருநாள் விற்பனையே. மேலும் இந்தியாவில் விற்பனை செய்வதில் அதிக முதலீடு செய்வோம்” என்கிறார் அமேசானின் இந்திய தலைவர் அமித் அகர்வால்.

பிளிப் கார்ட் நிறுவனத்தை கடந்த மே மாதம் வால்மார்ட் வாங்கியதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த இணைய வர்த்தகப் போரால் மின் சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தும் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்தது பிளிப் கார்ட்.

“தி கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்” மூலம் 10 கோடிக்கும் அதிகமான பொருட்களை தள்ளுபடியில் விற்பனையை அறிவித்த அமேசான், சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக், அமேசான் பே-பேலன்ஸ் மூலமாக ஷிப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீத தொகை திரும்ப கிடைக்கும் என சாத்தியமான அனைத்து வகைகளிலும் சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களின் பாக்கெட் மணியைக்கூட “ஸ்வைப்” செய்தது.

படிக்க :
♦ இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
♦ அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !

இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபுறம் சுரண்ட, தமிழகத்தில் எடப்பாடி அரசும்- தமிழ்த் திரைத்துறையும் மக்களின் பட்டாபட்டி டிராயரைக்கூட அவிழ்த்து அலைய விட்டிருக்கிறது.

தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு சரக்கு விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு, ரூ.320 கோடி என்று நிர்ணயித்த இலக்கை எட்டி மகத்தான சாதனையை புரிந்திருக்கிறது. பட்டாசு, பலகாரப் பொருட்கள், புத்தாடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை குறைந்த நிலையில், ரூ.602 கோடிக்கு சாராய சரக்குகளை விற்பனை செய்திருக்கிறது.

இதைவிட அதிர்ச்சியான செய்தி, “ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் சரக்கு அடிப்பவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும்” என அதிமுகவின் பிரமுகர் ஒருவர் பார் முன்பு பேனரே வைத்திருந்தார்.

வழக்கமாக டாஸ்மாக்கின் ஒருநாள் விற்பனை 70-80 கோடிதான். ஆனால் கடந்த 3-ம் தேதி சனிக்கிழமை 124 கோடி, ஞாயிறு 150 கோடி, திங்கள் 148 கோடி, செவ்வாய் தீபாவளி அன்று 180 கோடி விற்பனையாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 175 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 131 கோடி, அதற்கு முந்தைய தினத்தில் 113 கோடி என மொத்தம் 244 கோடிக்கு விற்பனையானது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவையே விஞ்சி விட்டார் எடப்பாடி பழச்சாமி.

அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளின்போது புதுப்புதுப்படங்களை வெளியிட்டு பிளாக்கில் விற்று கொள்ளையடிக்கிறார்கள் திரைத்துறை முதலாளிகள். . “திருட்டுக்கதை” என்று நீதிமன்றம் வரை சென்று சமரசமாகி வந்திருக்கும் “சர்க்கார்” திரைப்படமும் வெளியான இரண்டு நாட்களில் பல கோடிகளை வசூலித்தாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்கார் படமோ, கபாலி மற்றும் பாகுபலியின் இரண்டாம் பாக வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக கொண்டாடித் தீர்க்கின்றனர். தமிழகம் முழுவதும் முதல் நாளில் 31.6 கோடியும், “சென்னையில் மட்டும் 2.41 கோடியும் வசூல் செய்துள்ளது.

படிக்க :
♦ ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?
♦ ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?

அண்டை மாநிலமான கேரளாவில் 6.6 கோடியும், கர்நாடகாவில் 6.1 கோடியும், ஆந்திராவில் 3.8 கோடியும் அள்ளியுள்ளது. இதன் மூலம் சர்கார் வசூல் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்று வர்ணிக்கிறார்கள் திரைத்துறை மேதாவிகள்.

இந்தியாவில் மட்டுமா? “அமெரிக்காவில் 2.31 கோடியும், ஆஸ்திரேலியாவில் 1.16 கோடி, இங்கிலாந்தில் 1.17 கோடி வசூலித்ததுள்ளது” என்கிறார் விமர்சகரும், திரைத்துறை வர்த்தக ஆய்வாளருமான தரன் ஆதர்ஷ். இதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண டிக்கெட் வரவு எவ்வளவு என்பது மற்றும் தேவ ரகசியம். தற்போதைய செய்திகளின் படி சர்கார் திரைப்படத்தின் வசூலால் வினியோகஸ்தர்களுக்கு நட்டம் என்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களுக்குச் சென்ற வசூலில் மக்கள் இழந்தது எவ்வளவு என்பதுதான் கேள்வி!

இவற்றோடு தீபாவளி அன்று தொலைக்காட்சிகள் அனைத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் விளம்பர வருவாயை அதிகரித்துக் கொண்டன. அதே பட்டிமன்றம், சிறப்புத் திரைப்படம் என்று எந்த பிராயத்தனமும் இல்லாமல் சானல்களின் வசூல் சுமூகமாக நடந்தேறியது.

மோடி அரசின் நான்காண்டு ஆட்சியில் அடுக்கடுக்கான தாக்குதல்கள் மக்களின் மீது தொடுக்கப்பட்டது. குறிப்பாக பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒட்டு மொத்த தொழில் துறையையே புரட்டி போட்டது. பலர் வேலையிழந்தனர். இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  அடுத்து வந்த ஜி.எஸ்.டி-யும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி என்று இந்திய பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது.

அன்றாடம் வாழவே வழியில்லாமல் செய்வதறியாமல் திகைத்து வருகிறார்கள் மக்கள். அதிலிருந்து அவர்களை மீட்டுருவாக்கம் செய்யாமல் மேலும் மேலும் அவர்களை எப்படி சுரண்டுவது என்றுதான் சிந்திக்கிறது மோடி அரசு.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம், வழிப்பறி, கொள்ளை, என்று பெரும் இளைஞர்கள் சமூகத்தையே லும்பன்களாகவும், குடி வெறியர்களாகவும், சினிமா – நுகர்வு வெறியர்களாகவும் மாற்றி அதை நோக்கியே பயணிக்க வைக்கிறது.

படிக்க :
♦ பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !
♦ மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !

தமிழகத்தில் நடந்து வரும் யமஹா,என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம் முதற்கொண்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம் – இந்தியாவில் மோடி அரசின் ரஃபேல் ஊழலும், சி.பிஐ மாற்றம் – ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு என்று எல்லாமும் பெருவாரியான மக்களின் பார்வைக்கு வராதபடி பின்னுக்கு தள்ளப்பட்டன. கவனிக்கபட வேண்டிய நாட்கள் எல்லாம் இந்த விழா விளம்பரத்தில் கவனிக்க தவறியுள்ளது தமிழ்ச்சமூகம். பேப்பரை திறந்தாள் முதல்பக்கத்திலேயே மனதை கொள்ளைகொல்லும் அமேசான் விளம்பரமும், டி.வி பெட்டியை திறந்தால் தீபாவளி நிகச்சிகளும், சர்க்கர் பட சர்ச்சை பற்றியும்தான் பேச்சு. இதைத்தான் இந்த அரசும் விரும்புகிறது.

தமிழ் திரைப்படங்களில் சரக்கு அடிப்பதையே ஹீரோயிசமாக காட்டுவது – அந்த ஹோரோக்களையே தங்கள் பொருட்களின் விளம்பர தூதராக முன்னிருத்துவது – சினிமா நாயகர்கள்தான் தங்களின் தேவதூதன் என மக்களை திரும்பத் திரும்ப நம்ப வைப்பது என்று  ஒரு சுழல் வட்டப் பாதையில் அரசு மற்றும் முதலாளிகளின் நலன்களோடு பின்னிப் பிணைந்துள்ளது.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் அளவு மக்களிடம் பணமில்லை எனும் போதே இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்கிறது. பணத்தோடு மக்களின் நேரத்தையும்  திருடியிருக்கிறார்கள். சிந்தனையையும் திசை திருப்புகிறார்கள். இந்த நச்சு சூழலை முறிப்பது எப்போது?