நாள் 19-11-2018

டெல்டா மாவட்டங்களில், கஜா புயல் பாதித்த பகுதியில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, உணவு இல்லை, கொசுக்கடியால்  உறக்கம் இல்லை. கழிப்பறைக்குகூட தண்ணீர் இல்லை. விழுந்த பல இலட்சம் மரங்கள் இன்னும் அகற்றப்பட வில்லை. முழுமையாக சரி செய்ய எத்தனை நாட்களாகும் என்பதை எடப்பாடி சொல்லவில்லை. அடுத்தடுத்து மழைவரும் என வானிலை எச்சரிக்கிறது.

வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து பெண்கள் குழந்தைகள், என குடும்பம் குடும்பமாக அகதிகள் போல் குடிநீருக்கும் உணவிற்கும் நடு ரோட்டில் நின்று மக்கள் கதறுகிறார்கள். இதுவரை எங்கள் கிராமத்திற்கு எந்த அதிகாரியும் வரவில்லை என்ற அழுகுரலுக்கு இடையில் எடப்பாடி அரசை பாராட்டும் அருவருப்பு ஒலிக்கிறது.

படிக்க:
எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !
கொந்தளிக்கும் டெல்டா – அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரட்டியடிப்பு

புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரிலிருந்து மக்களை முழுமையாக மீட்கும் பணியை அரசு என்றைக்கும் செய்ததில்லை. வர்தா, தானே, ஒக்கி புயல் பாதிப்புகளில் தமிழக மக்களுக்கு கிடைத்த அனுபவம் இதுதான். பெரும்பான்மை மக்களும், பல்வேறு அமைப்புகளும்தான் நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.

நிவாரண உதவி செய்ய வருபவர்களை கண்காணிப்பது, மிரட்டுவது, தடுப்பது போராடத் தூண்டினார்கள் எனப் பொய் வழக்குப்போட்டு அடக்குமுறையை ஏவுவது இதுதான் அரசின் கடந்தகால செயல்பாடு. இத்தகைய அரசு பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக காப்பாற்றும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?. கரண்ட், கொடு, தண்ணீர் கொடு, உணவு கொடு, நாங்கள் எங்கே போவோம்? எப்படி வாழமுடியும்? என கேட்டுப் போராடினால், எடப்பாடி போலீசு, வீடு புகுந்து மக்களை அடித்து கைது செய்கிறது.

அதிகாரிகளும், அமைச்சர்களும் சைரன் வண்டியில் மிடுக்காக அணிவகுத்து மெயின் ரோட்டில் மட்டுமே குறுக்கு நெடுக்குமாக செல்வதும், இறங்கி போட்டோவிற்கு போஸ்கொடுத்து விட்டு, “நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலைமை சீராக உள்ளது“ என அறிக்கை விடுவதும், அ.தி.மு.க. அமைச்சர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டி கொள்வதும், வீடிழந்து வீதியில் நிற்கும் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர்கூட, கொடுக்க முடியாத வக்கற்ற எடப்பாடி அரசு மக்களை மிரட்டி அடக்க முயல்கிறது.

தமிழகத்திற்கே சோறு போடும் டெல்டா மக்களைப் பசியிலிருந்து மட்டுமல்ல, அவர்கள் கஜா புயலில் இழந்த வாழ்வை மீட்டுத் தரும் வரை அவர்களோடு களத்தில் இணைந்து நிற்க வேண்டும்.

கஜா புயலில் பாதித்த டெல்டா மக்களோடு, மக்கள் அதிகாரம் களத்தில் நிற்கிறது. நீங்களும் வாருங்கள்.!

மத்திய, மாநில அரசுகளே!

♦ போர்க்கால அடிப்படையில் உணவு, குடிநீர், மருத்துவம், குடியிருப்பு, மின்சாரம் வழங்கு !

♦ எட்டு வழிச்சாலைத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்டதைப் போல தென்னை மரம் ஒன்றுக்கு ரூபாய் 50,000 இழப்பீட்டுத்தொகை வழங்கு!

♦ கஜா புயல் பாதித்த மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்!

♦ இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்கு!

♦ புயலால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதுடன், மீண்டும் தொழில் தொடங்க உடனே முதலீட்டு கடன் கொடு!

♦ விவசாயத் தொழிலாளர்களுக்கு போதிய நிவாரணத் தொகை வழங்கு!

♦ கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கூரை, தகர கொட்டகை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக அரசே கட்டித்தர நடவடிக்கை எடு!

♦ கஜா புயல் நிவாரணப்பணிகளுக்காக செலவழிக்கப்படும் தொகைகள் பற்றிய முழு விபரங்களையும், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் பற்றிய தகவல்களையும் உள்ளூர் மக்கள் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படையாக அறிவித்து விளம்பர பலகை வை !

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
rajupp2019@gmail.com

99623 66321

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க