ர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது என்ன? சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு? மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொண்டாலும் சர்க்கரை கூடுமா? வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

மருத்துவர் B.R.J. கண்ணன்.

ர்க்கரை கட்டுக்குள் வரவில்லையா ? மருத்துவர் சொன்ன அத்தனையும் பின்பற்றிய பின்னும் சர்க்கரை தொடர்கிறது எனில் உங்களுக்கு அவசியமான வீடியோ இது.

முதலில் சர்க்கரை நோய் / நீரிழிவு நோய் என்றால் என்ன ?

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுப்பொருள், கொழுப்பு, புரதம் ஆகியவை இருக்கின்றன. மாவுப் பொருளைப் பொருத்தவரையில், உடலில் சீரணிக்கப்பட்ட பிறகு அது சர்க்கரையாக மாறி இரத்ததில் சேரும். நமது உடல் அதை உபயோகிக்க வேண்டும். இந்த செயல்நடக்க நமது உடலில் இன்சுலின் சுரக்க வேண்டும். இன்சுலின் இருந்தும் அது உபயோகிக்கப் படவில்லை என்றாலோ, நம் உடலில் இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, இரத்ததில் சர்க்கரை தேங்கி நிற்கும். அதுதான் சர்க்கரை நோய்.

இதனடிப்படையில் பார்த்தால், உடலில் சர்க்கரை தேங்கினால்தான் சர்க்கரை நோய் வரும் என்பது தெரிகிறது. சர்க்கரை, நாம் உட்கொள்ளும் மாவுப் பொருளில் இருக்கிறது. ஒருவருக்கு மீன் சாப்பிட்டால் உடலில் தடிப்பு / அலர்ஜி வரும் எனில், அவரிடம் மீன் சாப்பிடாதீர்கள் என்போம். மீன் சாப்பிட்டால்தான் அவரது நோய் வெளிப்படும். மீன் சாப்பிடவில்லையெனில் வெளிப்படாது. அதுப்போலதான் இங்கும். நாம் உட்கொள்ளும் உணவில் சர்க்கரை அளவு இருந்தால் மட்டுமே இரத்தத்தில் சர்க்கரை ஏறும்.

ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால், அதன் மூலத்தைக் கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்துவது போல, இங்கும் இரத்தத்தில் சர்க்கரை சேர்வதைத் தடுக்க, உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைக் கட்டுப்படுத்தாமல் இதற்கு தீர்வு கிடையாது.

”நான் காஃபி, டீ சர்க்கரை போடுவதில்லை, இனிப்பு சாப்பிடுவதில்லை” என பலர் சொல்கின்றனர். இனிப்பு யாரும் தினமும் சாப்பிடுவது கிடையாது. அதே போல காபி, டீயில் போடப்படும் சர்க்கரையும் உடலில் பெருமளவு சர்க்கரையை சேர்ப்பதில்லை. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், சோறு, ரவை ஆகிய அனைத்திலும் சர்க்கரை இருக்கிறது.

நாம் காலையிலிருந்து இரவு வரை உண்ணும் உணவில் 50%தான் மாவுப்பொருள் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருக்கிறது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?. காலையில் இட்லி தோசை, மதியம் சாதம், இரவு சப்பாத்தி என கணக்கிட்டால் மொத்தம் 85 – 90 % மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறோம்.

தென் இந்தியா, வட இந்தியா என அனைவரும் மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். அதன் காரணமாகவே இந்தியாவில் பொதுவாகவே சர்க்கரை நோய் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆகவே எப்படி இதைக் குறைப்பது?

முதலில் உணவில் சர்க்கரையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, திணை, குதிரைவாலி, வரகு, ஓட்ஸ் அனைத்தும் சர்க்கரைதான். அதாவது மாவுப் பொருட்கள்.

படிக்க:
அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு
அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

எனில் நாம் சாப்பிட ஒன்றுமே இல்லையா எனக் கேள்வி எழலாம். அப்படி கிடையாது. நாம் அத்தகைய உணவுகளை நினைத்துப் பார்ப்பது கிடையாது. காலையில் இரண்டு முட்டை, ஒரு கோப்பை பால். அல்லது பயிர்வகைகளில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு கோப்பை பழவகைகள் அல்லது கட்டித் தயிர் ஒரு கோப்பை சாப்பிடலாம். இது போல நாமே நமது உணவுப் பழக்கத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதில் மாவுப் பொருட்கள் குறைவாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மதிய உணவிற்கு கீரை, காய்கறி, தயிர், போன்றவையே எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் ஓரத்தில் ஒரு தேக்கரண்டி சோறு வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் பொறியல், எண்ணெய் கத்தரிக்காய், தயிர் போன்றவை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். முடியாது என நினைக்காமல், முயன்றால் இவ்வுணவிற்கு பழகி விடலாம்.

இரவுக்கு சுண்டல், பச்சைபட்டாணி, பட்டர் பீன்ஸ், பன்னீர், காளான் என நாமே திட்டமிட்டு உண்ண வேண்டும். தோசை, சப்பாத்தி எடுக்கக் கூடாது. அசைவம் சாப்பிட வேண்டுமெனில் அதுவும் எடுத்துக் கொள்ளலாம்.

கோழி சாப்பிடவேண்டும் என விரும்பினால், கோழி வாங்கி வெங்காயம் போட்டு சமைத்து சாப்பிடலாம். ஆனால் சோறு போட்டு சாப்பிடக் கூடாது.

அசைவ உணவு சாப்பிடுகிறோம் என சொல்லிக் கொண்டு ஒரு 100 கிராம் சிக்கன் சாப்பிட்டால், அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ சோறு சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடும் சோறு / பிரியாணிதான் நமக்கு நோயைக் கொண்டுவருகிறது. ஆனால் பழியை நாம் சிக்கன் மீது போடுகிறோம்.

வாரம் இருமுறை அசைவம் சாப்பிட வேண்டும் என தோன்றினால் சாப்பிடலாம். ஆனால் சோறு சேர்க்கக் கூடாது. இடையில் பசித்தால், வெள்ளரிப் பிஞ்சு கேரட், தேங்காய், உலர் பழங்கள், போன்றவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிஸ்கட், ரஸ்க், சிப்ஸ் போன்றவை எடுத்துக் கொள்ளக்கூடாது.

சமைக்க நெய் எண்ணெய் எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம். அது போதுமான கொழுப்புச் சத்தை கொடுக்கும். இதைத் தொடர்ந்தால் கண்டிப்பாக சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து தீரும். இதைத் தொடங்கினால், முதலில் ஒரு வாரத்துக்கு கடினமாக இருக்கும். அதன் பிறகு சிறப்பாக உணர ஆரம்பிப்பீர்கள். உடல் இதனை எளிமையாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் மனம்தான் ஏற்றுக் கொள்ளாது.

இதில் முக்கியமான விசயம் என்னவெனில், எந்தெந்த வீட்டில் குடும்பத் தலைவியர் இதன் அருமையை உணர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் சரியாக உணவை மாற்றிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது கணவருக்கும் சர்க்கரை குறைகிறது.

இதுபோன்ற உணவு முறையை பின்பற்றிவிட்டு, 100 – 110 யூனிட் இன்சுலின் போட்டவர்கள் 5 – 10 யூனிட்டுக்கு குறைத்திருக்கிறார்கள். 1-2 மாத்திரை போட்டவர்கள் மாத்திரையே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். இது அறிவியல் சார்ந்த தீர்வு.

காணொளியைக் காண

மருத்துவர் கண்ணன்

மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

1 மறுமொழி

  1. வினவு தோழர்களுக்கு ஒரு விண்ணப்பம் மேற்கூறிய உணவு முறையின் சிறந்த வடிவம் பேலியோ உணவு முறை. இது குறித்து மருத்துவர் திரு ஃபரூக் அப்துல்லா அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட சிறு பதிவுகளாக எழுதியுள்ளார். அது மக்களை நீரிழிவு மட்டுமல்லாது தைராய்டு உடல் பருமன் இதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களிலிருந்து விடுபட்டு வாழ்த்துகள் வழி வகுக்கும்.இதறகெனவே முகநூலில் ஒரு குழுவும் உள்ளது அதன் பெயர் ஆரோக்யம் & நல்வாழ்வு அங்கு அனைத்து தகவல்களும் இலவசம். ஹீலர்களைப் போன்று நவீன மருத்துவத்திற்கு எதிராக இல்லாமல் நவீன மருத்தவத்தையே பின்பற்ற வலியறுத்துகிறார்கள். மக்களுக்கான சிறந்த உணவுமுறை இதுதான். நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க