மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 26

மாக்சிம் கார்க்கி

நாட்கள் வெகு வேகமாகக் கழிந்து சென்றன. அந்த வேகத்தில் மே தினத்தின் வரவைப் பற்றிச் சிந்திப்பதற்குக்கூடத் தாய்க்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இரவில் மட்டும், பகல் முழுதும் ஓடியாடி, வேலை செய்து ஓய்ந்து களைத்துப் படுக்கையில் சாய்ந்தபிறகு மாத்திரம், அவள் இதயத்தில் இனந்தெரியாத ஒரு மங்கிய வேதனை இலேசாக எழும்.

”அது மட்டும் சீக்கிரம் வந்துவிட்டால்…”

காலையில் ஆலைச் சங்கு அலறியது. அந்திரேயும் அவளது மகன் பாவெலும் சீக்கிரமே தங்கள் சாப்பாட்டை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அவளுக்கு ஏதாவது பதிற்றுக் கணக்கான வேலைகளை விட்டுச் செல்வார்கள். பகல் முழுதும் அவள் கூண்டுக்குள் அகப்பட்ட அணிற் குஞ்சு மாதிரி ஓடியாடி வேலை செய்வாள். சாப்பாடு தயாரிப்பாள். பசை காய்ச்சுவாள், சுவரொட்டி விளம்பரங்களுக்கு மை தயாரிப்பாள். திடீர் திடீரென்று எங்கிருந்தோ வந்து தோன்றி பாவெலுக்குப் பல செய்திகளைக் கொண்டு வந்துவிட்டு, மாயமாக மறைந்து செல்லும் இனந்தெரியாத மனிதர் பலரை வரவேற்பாள். அவர்கள் வந்து சென்ற பிறகு அவர்களுக்கிருந்த பரபரப்பு அவள் மனதிலும் குடிபுகுந்துவிடும்.

அநேகமாக ஒவ்வொருநாள் இரவும் தொழிலாளரை மே தினக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் சுவரொட்டி அறிக்கைகள் வேலிப் புறங்களிலும் போலீஸ் நிலையக் கதவுகளிலும் ஒட்டப்பட்டு வந்தன. ஒவ்வொரு நாளும் அம்மாதிரியான அறிக்கைகள் தொழிற்சாலையிலும் காணப்பட்டன. காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும். நகரிலிருந்து துப்பறியும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மூலைக்கு மூலை நின்றுகொண்டு சாப்பாட்டு வேளையில் தொழிற்சாலைக்கு உற்சாகமாய்ப் போவதும் வருவதுமாய் இருக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருடைய முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் போலீஸ்காரர்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு ஒவ்வொருவரும் ஆனந்தப்பட்டார்கள். வயதான தொழிலாளர்கள்கூடச் சிரித்துக்கொண்டே தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

“இவர்கள் செய்கிற காரியத்தைத்தான் பாரேன்!”

எங்கு பார்த்தாலும் தொழிலாளர்கள் கும்பல் கும்பலாக நின்று மே தின அறைகூவலைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை எங்கும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வசந்த பருவத்தில் வாழ்க்கை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் எல்லோருடைய மனத்திலும் ஒரு புதிய உணர்ச்சி பூத்துக் கிளர்ந்தது. சிலருக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கான எரிச்சலும் புகைச்சலும்தான் மனத்தில் மூண்டது; அவர்கள் இந்தப் புரட்சிக்காரர்களை வாயாரச் சபித்தார்கள். சிலருக்கு ஒரு மங்கிய கவலையும் இனந்தெரியாத நம்பிக்கையுணர்ச்சியும் ஏற்பட்டன. சிலர் – அதாவது மிகவும் குறைந்த ஒருசிலர் மட்டும் – தாம்தான் இந்த ஜனங்களைக் கிளறிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் என்ற உணர்வினால் உள்ளுக்குள் மிகுந்த பூரிப்பும் உற்சாகமும் கொண்டு திரிந்தார்கள்.

பாவெலுக்கும் அந்திரேய்க்கும் இப்போது எல்லாம் தூங்குவதற்குக்கூட முடியவில்லை. அவர்கள் காலை நேரத்தில்தான் திரும்பி வருவார்கள். வெளுத்துக் களைத்து என்னவோபோல் வந்து சேர்வார்கள். ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் காடுகளிலும் அவர்கள் கூட்டங்கள் நடத்தி வந்தார்கள் என்பது தாய்க்குத் தெரியும். குடியிருப்பைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் இரவெல்லாம் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதும், துப்பறியும் வேவுகாரர்கள் எங்குப் பார்த்தாலும் ஊர்ந்து திரிந்து தனியாகச் செல்லும் தொழிலாளர்களை வழிமறித்து அவர்களைச் சோதனை போடுவதும் கூட்டங்கூட்டமாக வரும் தொழிலாளர்களைக் கலைந்து போகுமாறு செய்வதும் சில சமயங்களில் சிலரைக் கைது செய்து கொண்டு போவதுமாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். எந்த நேரத்திலும் கைதாகக் கூடிய நிரந்தரமான அபாயத்தில்தான் பாவெலும் அந்திரேயும் இருந்தார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். அவர்கள் அப்படிக் கைதாக நேர்ந்தாலும், அவள் அதையும் வரவேற்கத்தான் செய்வாள். பின்னால் வரப்போகும் பெரும் ஆபத்துக்கு ஆளாவதைவிட, இப்போதே கைதாகிவிடும் ஆபத்து மேலானது என்பது அவள் எண்ணம்.

என்ன காரணத்தினாலோ இஸாயின் கொலை விஷயம் மறைக்கப்பட்டுவிட்டது. இரண்டு நாட்களாய் உள்ளூர்ப் போலீஸ்காரர்கள் புலன் விசாரித்தார்கள். சுமார் ஒரு டஜன் தொழிலாளர்களைக் கண்டு விசாரணை செய்த பின்னர் அவர்கள் அந்தக் கொலை வழக்கை விட்டுவிட்டார்கள்.

மரியா கோர்சுனவா தாயோடு பேசியபோது, போலீஸ்காரர்களின் அபிப்பிராயத்தை வெளியிட்டுச் சொன்னாள். மற்றவர்களோடு எவ்வளவு சுமூகமாகப் பழகி வந்தாளோ, அதே மாதிரி அவள் போலீஸ்காரர்களிடமும் பழகி வந்ததால் அவர்களது அபிப்பிராயம் அவளுக்கும் தெரிய நேர்ந்தது.

“கொலைகாரனை எப்படித்தான் கண்டுபிடிப்பது? என்று காலையில் சுமார் நூறு பேர் இஸாயைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் தொண்ணூறு பேர் அவனைத் தாங்களே ஒழித்துக்கட்ட நேர்ந்திருந்தால், அது குறித்துச் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அவனும்தான் என்ன? ஏழு வருஷ காலமாய் ஒவ்வொருத்தரையும் என்ன பாடு படுத்தி வைத்தான்.”

ஹஹோல் இப்போது எவ்வளவோ மாறிப் போய்விட்டான். அவனது முகம் மெலிந்து ஒட்டிப் போயிற்று. கண்ணிமைகள் கனத்துத் தடித்துப்போய்விட்டன. எனவே, அவன் அவனது பெரிய கண்களில் பாதியை மூடிக் கவிந்துவிட்டன. அவனது நாசியோரங்களிலிருந்து வாயை நோக்கி மெல்லிய வரிக்கோடுகள் விழுந்திருந்தன. அவன் வழக்கமான விஷயங்களைப் பற்றி மிகவும் குறைவாகப் பேசினான். அறிவும் சுதந்திரமும் ஆட்சி செலுத்தும் வெற்றி மகோன்னதமான எதிர்காலத்தைப் பற்றி தனது ஆசைக் கனவை அவன் மற்றவர்களிடம் எடுத்துக் சொல்லி அவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும்போதும், அவன் அதிகமான ஆர்வத்தோடு பேசினான்.

இஸாயின் மரணத்தைப் பற்றிய பேச்சு தேய்ந்து இற்றுக் செத்துப்போனவுடன், அவன் ஒரு கசந்த புன்னகையுடன் சொன்னான்:

”அவர்கள் மக்களை மட்டும்தான் மதிக்கவில்லை என்பது அல்ல. மக்களின் மீது ஏவிவிடும் வேட்டை நாய்களாக உபயோகிக்கும் தங்களது கைக்கூலிகளைக்கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அக் கைக்கூலிகள் தொலைந்து போனதற்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்; தங்கள் காசு தொலைந்து போனால்தான் வருத்தப்படுவார்கள்!”

“இந்தப் பேச்சு போதும், அந்திரேய்!” என்று உறுதியுடன் கூறினான் பாவெல்.

உளுத்து அழுகி ஓடாகிப் போனதைத் தொட்டாலே உதிர்ந்து பொடியாய்ப் போய்விடும். அவ்வளவுதான்” என்றாள் தாய்.

“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது” என்று சோர்வோடு பதில் சொன்னான் ஹஹோல்

அவன் இதையே பல தடவை சொல்லி வந்தான். எனினும் அதைச் சொல்லும்போது, முன்னிருந்ததைவிட வார்த்தைகள் அனைத்தையும் அடக்கிய விசேஷமான அர்த்தத்துடன் கடுப்புக் காரவேகமும் பெற்று ஒலித்தன.

வெகு நாட்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்துவிட்டது – மே தினம்! மே மாதப் பிறப்பு!

ஆலைச் சங்கு வழக்கம் போலவே அலறியது. கடந்த இரவு முழுவதும் கண்ணையே இமைக்காது விழித்துக் கிடந்த தாய் சங்குச் சத்தம் கேட்டதும் உடனே படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து முந்தின நாள் மாலையில் தயாரித்து வைத்திருந்த தேநீரை கொதிக்க வைத்தாள். வழக்கம்போலவே தன் மகன் படுத்திருக்கும் அறைக் கதவைத் தட்ட நினைத்தாள். ஆனால் கதவைத் தட்டி அவனை எழுப்பாமலிருப்பது நல்லது என்று எண்ணியவளாய் ஏதோ பல்லவிக்காரியைப் போல, தன் கையை மோவாயில் கொடுத்துத் தாங்கிக்கொண்டு ஜன்னலருகே சென்று கீழே உட்கார்ந்தாள்.

வெளிறிய நீல வானத்தில் ரோஜா நிறமும் வெண்மையும் கலந்து மேகப் படலங்கள் மிதந்து சென்றன. ஆலைச் சங்கின் அலறலால் பயந்தடித்துக்கொண்டு பறந்தோடும் ஒரு பெரிய பறவைக் கூட்டம் போலத் தோன்றியது அந்த மேகக் கூட்டம். தாய் அந்த மேகத் திரளைப் பார்த்தாள். தனது இதயத்தில் எழுந்த சிந்தனைகளோடு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். அவளது தலை கனத்துப் போயிருந்தது. இரவு முழுவதும் தூங்காததனால் கண்கள் வறண்டு சிவந்து கனன்று போயிருந்தன. அவளது இதயத்தில் எதோ ஒரு அதிசயமான அமைதி குடிகொண்டிருந்தது. அவளது மனதில் சாதாரணமான எண்ணங்கள் நிரம்பித் ததும்பிச் சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருந்தன.

“நான் தேநீரை ரொம்ப சீக்கிரம் கொதிக்க வைத்தேன். தண்ணீர் பூராவும் சீக்கிரம் கொதித்துக் காய்ந்துவிடும்…… அவர்கள் இருவரும் மிகவும் களைத்துப் போயிருக்கிறார்கள். இன்றைக்குக் காலையிலாவது அவர்கள் கூடக் கொஞ்ச நேரம் தூங்கட்டும்……”

காலைக் கதிரவனின் இளங்கதிர்க் கீற்று மிகுந்த உவகையோடு ஜன்னலின் மேலாக எட்டிப் பார்த்தது. அந்தக் கதிரை நோக்கித் தன் கையை நீட்டினாள் தாய். அவளது சருமத்தின் மீது அந்த இளங்கதிர் தோய்ந்து அதனால் சிறிது கதகதப்பு ஏற்பட்டபோது அவள் தனது மறு கையால் அந்தக் கதகதப்பான பாகத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள். அதேவேளையில் சிந்தனைவயப்பட்டு லேசாக சிரித்துக் கொண்டாள். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து தேநீர்ப் பாத்திரத்தின் குழாயைச் சுத்தம் செய்யாமல் திருகிவிட்டாள். பின்பு முகம் கை கழுவிவிட்டு தன் முன்னால் கையால் சிலுவை கீறிக்கொண்டு பிரார்த்திக்கத் தொடங்கினாள்.

அவள் முகம் ஒளிபெற்றது. வலது புருவம் ஏறியேறி இறங்கிக் கொண்டிருந்தது.

ஆலைச் சங்கின் இரண்டாவது ஓசை அவ்வளவு உரத்துக் கேட்கவில்லை. அதில் பழைய அதிகாரத் தொனியும் தொனிக்கவில்லை. அதனது கனத்த ஈரம் படிந்த குரலில் சிறு நடுக்கம் தென்பட்டது. வழக்கத்துக்கு மீறி அது வெகுநேரம் அலறிக் கொண்டிருப்பதாகத் தாய்க்குப்பட்டது.

அடுத்த அறையிலிருந்து ஹஹோலின் தெளிவான ஆழ்ந்த குரல் ஒலித்தது.

”கேட்கிறதா, பாவெல்?”

யாரோ தரைமீது நடந்து செல்வது கேட்டது. அவர்களில் யாரோ ஒருவர் நிம்மதியோடு கொட்டாவிவிடும் ஓசையும் கேட்டது.

“தேநீர் தயார்” என்று கத்தினாள் தாய்.

”நாங்கள் எழுந்து விட்டோம்” என்று உற்சாகமாகப் பதிலளித்தான் பாவெல்.

”சூரியன் உதயமாகிவிட்டது. வானத்தில் ஒரே மேகமாயிருக்கிறது. இன்றைக்கு மேகமில்லாது இருந்தால் நன்றாயிருக்கும் என்றான் ஹஹோல்.

படிக்க:
தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

அவன் தூக்கக் கலக்கம் தெளியாது முகத்தைச் சுழித்துக்கொண்டு சமையலறைக்கு தடுமாறிக்கொண்டே ஆனால், உற்சாகமாக வந்தான்.

“வணக்கம். அம்மா? எப்படித் தூங்கினீர்கள்?”

தாய் அவனருகே சென்று மெதுவாக சொன்னாள்,

“நீ அவன் பக்கமாகவே போகவேண்டும், அந்தியூஷா.”

“நிச்சயமாய்” என்றான் ஹஹோல். ‘அம்மா, ஒன்று மட்டும் உங்களுக்கு நிச்சயமாயிருக்கட்டும். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்வரையிலும், ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் இருவருமே முன்னேறிச் செல்வோம். தெரிந்ததா?”

“நீங்கள் இரண்டு பேரும் என்ன குசுகுசுக்கிறீர்கள்?’ என்று கேட்டான் பாவெல்.

”ஒன்றுமில்லை, பாஷா!”

”வேறொன்றுமில்லை. என்னைக் கொஞ்சம் நன்றாக முகத்தைக் கழுவிக்கொண்டு போகச் சொல்கிறாள். அப்படிப் போனால்தான் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து மயங்குவார்கள்?” என்று கூறிக்கொண்டே ஹஹோல் முகம் கை கழுவுவதற்காக வாசற்பக்கத்துக்குச் சென்றான்.

“துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்காள்!” என்று லேசாகப் பாடினாள் பாவெல்.

நேரம் ஆக ஆகப் பொழுதும் நன்கு புலர்ந்து வானம் நிர்மலமாயிற்று. மேகத் திரள்கள் காற்றால் தள்ளப்பட்டு ஒதுங்கி ஓடிவிட்டன. சாப்பாட்டு மேஜையைத் தயார் செய்யும் போது தாய் எதையெதையோ எண்ணித் தலையை அசைத்துக்கொண்டாள். அவளுக்கு எல்லாம் ஒரே அதிசயமாயிருந்தது. அவர்கள் இருவரும் அன்று காலையில் கேலியும் கிண்டலுமாய்ச் சிரித்துப் பேசிப் பொழுதைப் போக்கினார்கள்; ஆனால் நண்பகலில் அவர்களுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதோ அவருக்கும் தெரியாது. இருந்தாலும். அவள் அதனால் கலவரமடையவில்லை. அமைதியாகவும் குஷியாகவும் இருந்தாள்.

”அவர்கள் மக்களை மட்டும்தான் மதிக்கவில்லை என்பது அல்ல. மக்களின் மீது ஏவிவிடும் வேட்டை நாய்களாக உபயோகிக்கும் தங்களது கைக்கூலிகளைக்கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அக் கைக்கூலிகள் தொலைந்து போனதற்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்; தங்கள் காசு தொலைந்து போனால்தான் வருத்தப்படுவார்கள்!”

காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கென்று நெடுநேரம் தேநீர் அருந்தினார்கள். பாவெல் தனது கோப்பையிலிருந்து சர்க்கரையை வழக்கம் போலவே மிகவும் மெதுவாகக் கலக்கிக் கரைத்தான். ரொட்டியின் மீது உப்பைச் சரிசமமாகத் தூவிக்கொண்டான். அதுதான் அவனுக்கு எப்போதும் பிடித்த பொருள். ஹஹோல் மேஜைக்கடியில் கால்களை அப்படியும் இப்படியும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தன் கால்களை எப்படி வைத்தாலும் செளகரியமாயிருப்பதாகத் தோன்றவில்லை. தேநீரில் பட்டுப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி சுவரிலும் முகட்டிலும் ஆடியசைந்து நர்த்தனம் புரிவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் பத்து வயதுப் பையனாக இருக்கும்போது, எனக்குச் சூரியனை ஓர் கண்ணாடிக் கிளாசுக்கள் பிடித்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்ததுண்டு” என்றான் அவன். “எனவே நான் ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டு சூரியன் விழும் இடத்துக்குச் சென்று கண்ணாடிக் கிளாஸால் டபக்கென்று அமுக்கிப் பிடித்தேன். கண்ணாடி உடைந்து என் கையில்தான் காயம்பட்டது. அத்துடன் வீட்டிலும் அடி வேறு விழுந்தது. அடிபட்ட பிறகு நான் வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அப்போது சூரியன் ஒரு சேற்றுக் குட்டையில் தெரிந்தது.

உடனே என் ஆத்திரத்தையெல்லாம் வைத்துக் கொண்டு அந்தச் சூரியனை மிதிமிதியென்று மிதித்துத் தள்ளிவிட்டேன். என் மேல் காலெல்லாம் சேறு தெறித்துப் பாழாயிற்று. இதற்காக நான் மீண்டும் ஒருமுறை அடி வாங்கினேன். அந்தச் சூரியனைப் பழிவாங்க எனக்கு ஒரே ஒரு வழிதான் பட்டது. சூரியனைப் பார்த்து நாக்கைத் துருத்தி வக்கணை காட்டினேன். “ஏ சிவந்த தலைப் பிசாசே எனக்கு இந்த அடி ஒண்ணும் வலிக்கலே வலிக்கவே இல்லை!” என்று கத்தினேன். அதில் எனக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்தது.”

”நீ ஏன் அதைச் சிவந்த தலைப் பிசாசு என்றாய்?” என்று கேட்டுச் சிரித்தான் பாவெல்.

“அதற்குக் காரணம் வேறு, எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சிவந்த தலைக் கொல்லன் இருந்தான். அவன் தாடியும் சிவப்பு. அவன் ஒரு குஷிப் பேர்வழி. அன்பானவன். சூரியன் அவனைப் போலவே இருந்ததாக எனக்குத் தோன்றியது.”

தாய்க்கு இந்த வேடிக்கைப் பேச்சுக்களைக் கேட்பதற்குப் பொறுமையில்லை. எனவே, அவள் பொறுமையிழந்து கேட்டாள்.

“இன்றைக்கு நீங்கள் எப்படி அணிவகுத்துப் போகப் போகிறீர்கள்? அதைப்பற்றி ஏன் பேசவில்லை?”

“அதெல்லாம் ஏற்கெனவே முடிவு பண்ணி ஏற்பாடாகிவிட்டது. அதை இப்போது போட்டுக் குழப்புவானேன்?” என்று அமைதியாகச் சொன்னாள் ஹஹோல். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தால் நாங்களெல்லாம் கைதாகிவிட்டாலும் நிகலாய் இவானவிச் உன்னிடம் வந்து இனி ஆக வேண்டியதைக் கூறுவான். அம்மா!”

“ரொம்ப நல்லது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“நாம் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வந்தாலென்ன?” என்று ஏதோ நினைவாய்ச் சொன்னான் பாவெல்.

”இப்போது வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது. நேரம் வருவதற்கு முன்னாலேயே போலீஸ்காரர்களின் கண்களை ஏன் உறுத்தவேண்டும் என்கிறாள். உன்னை அவர்களுக்கு ஏற்கெனவே நன்றாய்த் தெரியும்” என்றான் அந்திரேய்.

பியோதர் மாசின் அவசர அவசரமாக உள்ளே வந்தான். அவனது முகம் பிரகாசமுற்றுக் கன்னங்கள் சிவந்து காணப்பட்டன. அவனது ஆனந்தமயமான உத்வேகம் அவர்களது காத்துக்கிடக்கும் சங்கடத்தை தளர்த்தியது.

“எல்லாம் ஆரம்பமாகிவிட்டது. ஜனங்கள் எழுச்சி பெற்றுவிட்டார்கள்! முகங்கள் எல்லாம் வெட்டரிவாள் மாதிரி கூர்மை பெற்றுப் பிரகாசிக்க அவர்கள் தெருவிலே வந்து கூடிவிட்டார்கள். நிகலாய் வெஸோவ்ஷிகோல், வசீலி கூஸெவ், சமோயலவ் எல்லோரும் தொழிற்சாலை வாசலில் நின்று கொண்டு பிரசங்கம் செய்கிறார்கள். எவ்வளவு தொழிலாளர்கள் வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்! வாருங்கள், போவதற்கு நேரமாகிவிட்டது. அப்போதே மணி பத்தடித்துவிட்டது” என்றான் அவன்.

”சரி. நான் போகிறேன்” என்று உறுதியாகச் சொன்னான் பாவெல்.

“பாருங்களேன்! மத்தியானத்துக்கு மேல் தொழிற்சாலையில் உள்ளவர்கள் அத்தனை பேரும் வெளிவந்து விடுவார்கள்” என்றான் பியோதர்.

அவன் ஒடினான்.

”அவன் காற்றில் எரியும் மெழுகுவர்த்தி மாதிரி இருக்கிறான்” என்றாள் தாய். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து சமையலறைக்குள் உடை மாற்றிக்கொள்ளப் போனாள்.

”எங்கே புறப்படுகிறார்கள், அம்மா?” என்று கேட்டான் அந்திரேய்.

”உங்களோடுதான்” என்று பதிலளித்தாள் தாய்.

அந்திரேய் தன் மீசையை இழுத்து விட்டவாறே பாவெலைப் பார்த்தான். பாவெல் தனது தலைமயிரைப் பலமாகக் கோதி விட்டவாறே தாயிடம் போனான்.

“அம்மா, நானும் உன்னிடம் எதுவும் பேசமாட்டேன்; நீயும் என்னிடம் எதுவும் பேசக்கூடாது. சரிதானே?”

“ரொம்ப சரி, ரொம்ப சரி. கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்” என்று முனகினாள் அவள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க