பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் நெல்லைப் பகுதியின் சார்பில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணி அளவில் நெல்லை சகுந்தலா இன்டர்நேசனில் உள்ள அரங்கில் ‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூய சவேரியார் கல்லுாரியின் பொருளியல் துறை பேராசிரியர் அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேரா. தொ. பரமசிவன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேரா. வீ. அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை பேரா. சோமசுந்தரம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஏறத்தாழ 75 பேர் பங்கேற்ற இக்கருத்தரங்கம் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. நெல்லைப் பகுதியின் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், உயர் ஆய்வு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய பேரா. அமலநாதன், உயர் கல்வியானது பெரும்பான்மை மக்கள் அறியாதவாறு அவர்களின் நலன்களுக்கு எதிராக எத்தகைய மாற்றங்களுக்கு தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும், இத்தகைய மக்களுக்கு எதிரான வணிகம் சார்ந்த மாற்றங்களை எதிர்கொள்வதில் ஆசிரிய அமைப்புகள் பலவீனமாக இருக்கின்றன என்பதையும், பொது வெளியில் அனைவரும் சேர்ந்த ஒரு அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.

ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி

இக்கருத்தரங்கில் வாழ்த்திப் பேசிய பேரா. தொ. பரமசிவன், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கல்வி சார்ந்த மாணவர் – ஆசிரியர் பிரச்சினைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து பல்வேறு காலங்களில் போராடியதே நம் தமிழக மண்ணின் வரலாறு என்று குறிப்பிட்டார்.

கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வணிகமயமாகி வருவதுடன், சாதி சார்ந்தும் நடத்தப்படுவது தமிழகத்தின் நடைமுறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இத்தகைய போக்கிற்கு அதிகார வர்க்கம் பேரளவு உடந்தையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பேரா. தொ. பரமசிவன்

பல்கலைக்கழகங்களில் பெரிய அளவில் ஊழல் இருப்பதையும், துணைவேந்தர்கள் நியமனத்திலும் பேரளவு ஊழல் இருப்பதையும் ஆளுநரே ஒத்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார். காவிக் கலாச்சாரவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் துணைவேந்தர்கள் செயல்படுவதையும், அது ஆசிரியச் சமூகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளதையும் குறிப்பிட்டார் பேரா. பரமசிவன் அவர்கள்.

இத்தகைய உயர்கல்விச் சீரழிவு குறித்து சிந்திக்கவும், பங்கேற்கவும் வந்திருக்கின்ற சமூக உணர்வாளர்களான பேராசிரியர்களையும் மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன் என்று தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார் பேரா. தொ. பரமசிவன் அவர்கள். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், கருத்தரங்கில் வந்து பேரா. தொ. பரமசிவன் அவர்கள் கலந்து கொண்டது பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தியது.

தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம்

அடுத்ததாக ‘தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம்’ எனும் தலைப்பில் பேரா. வீ. அரசு தனது சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கும் போக்கினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை பச்சையப்பா கல்வி அறக்கட்டளை போன்றவை எப்படித் தொடங்கி உயர்கல்வியைச் சீரழித்தன? கல்வியை சுரண்டலுக்கான மாதிரி நிறுவனங்களாக அவை எப்படி இருந்தன என்பதை குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது ஆசிரியர்க்கான பணியிடங்களை எப்படி விற்பனைப் பொருளாக மாற்றி கல்வியை, அரசு நிதியை நாசமாக்கின என்பதைக் கூறினார்.

பேரா. வீ. அரசு

நிலவுடைமையாளர்களும், மிகப்பெரிய தொழிலதிபர்களும், சாராய வியாபாரிகளும், எம்.ஜி.ஆர். போன்றோரிடம் அடியாட்களாக இருந்தவர்களும் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று கல்வித் தந்தையர்களாக மாறிவிட்டனர் என்பதையும், அவர்களால் எப்படி அரசு புறம்போக்கு இடங்களும், ஏரிகளும், நீர் நிலைகளும் ஆக்ரமிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், சங்கரா பல்கலைக்கழகம், சத்தியபாமா, சாஸ்திரா பல்கலைக்கழகங்களாக வளர்ந்தன என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இத்தகைய பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். – ன் சாகா பயிற்சி நடத்தும் அளவிற்கு காவிமயமாக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்க அனுமதிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் இன்று எண்ணிக்கையில் 850-ஐத் தாண்டி விட்டது. எந்தத் தரமும், தொழில்நுட்ப வசதியும், திறன்பயிற்சி இன்றியும் புற்றீசல்களாக வளர்ந்து வருகின்ற இத்தனியார் பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலை என்பது திறனற்ற வேலையில்லாப் பட்டதாரிகளை வெளியே அனுப்பும் வேலையை மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார். மாணவர்களிடமிருந்து கட்டணத்தைப் பெற்று பல்கலைக்கழகங்கள் தனது நிதியை பார்த்துக்கொள்ளுமாறு இன்றைய அரசுகள் கட்டாயப்படுத்துகின்றன. எத்தனையோ நாடுகளில் அருகில் உள்ள இலங்கை உட்பட உயர்கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன. இத்தகைய மோசமான வணிகமய நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்ற உயர்கல்வியை நம்மை போன்ற அனைவரும் இணைந்து போராடி மீட்க வேண்டும் என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்தார் பேரா. வீ. அரசு அவர்கள்.

தேவை : கல்வியாளர்களின் சுதந்திரமான, அச்சமற்ற, எதற்கும் விலைபோகாத உண்மைக் குரல்கள்!

பேரா. கருணானந்தன்.

இக்கருத்தரங்கிற்கு வாழ்த்துரையை சென்னை விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறையின் தலைவர் பேரா. கருணானந்தன் அனுப்பி இருந்தார். தனது வாழ்த்துச் செய்தியில் இன்றைய நமது சமூகம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. நெருக்கடியான சூழலில், சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கின்றது. பெரும்பாலான ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் குரல்களாகி சீரழிந்திருக்கின்ற இச்சூழலில், கல்வியாளர்களின் சுதந்திரமான, அச்சமற்ற, எதற்கும் விலைபோகாத உண்மைக் குரல்கள் நம் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும், நம்பிக்கை ஊட்டவும் பெரிதும் உதவும். நமது நாட்டின், நாட்டு மக்களின் நிகழ்கால, எதிர்கால நலன்களுக்கு நம்மால் ஆன சிறிய பணி இது. உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.

ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

‘ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்’ எனும் தலைப்பில் பேரா. சோமசுந்தரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு சீர்கேடுகளுக்கு ஆசிரியர்களாகிய நாமும் பொறுப்பேற்க வேண்டும். ஆசிரியர்கள் அமைதியாகவும், சீரழிவின் ஒரு பகுதியாகவும் இருந்தால் அது கல்வியையும் சீரழிக்கும். கல்வி நிறுவனங்களில் தவறுகள் நடைபெறும்போது அது குறித்து வெட்கப்படும் மனநிலை அன்று ஆசிரியர் சமூகத்திடம் இருந்தது. இன்று பணம் கொடுத்து ஆசிரியப் பணிக்குள் போவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. தவறுகளுக்கு எதிரான அறச்சீற்றம் ஆசிரியர்களுக்கு வர வேண்டும். அத்தகைய அறநெறியும், போராட்டமும், கல்வி நிறுவனங்களது ஊழல் மற்றும் பாலியல் சீர்கேடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று கூறினார் பேரா. சோமசுந்தரம்.

காவிமயமாக்கப்படும் உயர் கல்வி

நிறைவாக ‘காவிமயமாக்கப்படும் உயர் கல்வி’ எனும் தலைப்பில் முனைவர் இரமேஷ் கீழ்கண்ட தனது கருத்துரையை வழங்கினார். காவிமயமாகிவரும் உயர் கல்வி என்பது தனியார்மயம், ஊழல், பாலியல் மயமாகிவரும் உயர்கல்வி என்பதோடு தொடர்புடையதே. கடந்த பத்து வருடங்களாக கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பல்வேறு நியமனங்கள் அனைத்தும் தகுதியற்ற நபர்களையே நியமிப்பதாகவே இருக்கிறது. நெல்லை துணைவேந்தர் சாமியாடியது என்பது பல்கலைக்கழகங்களின் தன்மையை, தரத்தை சீரழிப்பதாக இருக்கிறது. பி.ஜே.பி. அரசு வந்த பிறகு இத்தகைய சீரழிவுப் போக்குகள் இன்னும் அதிகமாக நடக்கிறது.

முனைவர் ரமேஷ்.

தனது பல்வேறு மூட நம்பிக்கைகளை, அறிவியலுக்கு முரணான பிற்போக்கு கருத்துக்களை உயர்கல்வியின் பெரும் பொறுப்புகளில் இருக்கின்ற அமைச்சர்கள், அதிகாரிகள் பிதற்றுவதன் மூலம் அதையே உயர்கல்வியின் ஒரு அறிவாக மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மத பிற்போக்குவாதிகளின் நிகழ்ச்சி நிரல் என்பது உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, பள்ளி நிறுவனங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி வட்டத்தில், ஆசிரியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் வகுப்பு எடுக்கும் அவலம். ஆசிரியர்களது எதிர்ப்பிற்கு பின் அது விலக்கி கொள்ளப்படுகிறது. வரலாற்றை திரிப்பது, பொய்யான தகவல்களை உண்மையெனச் சொல்வது, சாதிப்பிரிவினைக்குக் காரணம் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் என்று சொல்வது என்ற உண்மைக்கு எதிரான தகவல்களை தொடர்ந்து பரப்பும் திருட்டுத்தனத்தை பார்ப்பனியவாதிகள் செய்து கொண்டே இருக்கின்றனர்.

பார்ப்பனியமயம் அல்லது காவிமயம் என்பதை அதோடு மட்டும் வைத்து நாம் பார்க்கக் கூடாது. மாறாக அது முழுமையாக தனியார்மயத்தை ஆதரித்து அதை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றது. அனைவருக்குமான கல்வி என்பதை மறுத்து, சிலருக்கான கல்வி எனும் பார்ப்பனிய சித்தாந்தத்தின் வழியில் தனியார்மயத்தை வேகமாக வளர்த்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பல்.

இவர்கள் தனியார்மயத்திற்கான, ஏகாதிபத்திய கட்டமைப்பிற்கான தரகு வேலையை மட்டுமே செய்கின்றனர். கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஹரித்துவாரில் நடைபெற்ற உயர்கல்விக்கான மாநாட்டில், பி.ஜே.பி. ஆளுகின்ற மாநிலங்களின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய உயர்கல்விக்கான அமைச்சர்கள், பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரதிநிதிகள், உயர்கல்வி செயலர்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்கள் பேசியது, ‘இந்திய உயர்கல்வியை இந்திய பாரம்பரிய கல்வியைக் கொடுக்கும் அமைப்பாக மாற்ற வேண்டும்’ என்பதே. ‘பாரம்பரிய கல்வி என்பது சமஸ்கிருதம், இராமாயணம், மகாபாரதம், வேதகால கருத்துக்கள், அதன் பார்ப்பனிய மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புகுத்துவது என்பதே இவர்கள் குறிப்பிடுகிற இந்திய பாரம்பரியக் கல்வி என்பதாகும்.

தனியார்மயம் என்பது பார்ப்பனியத்தின் அனைத்துக் கூறுகளையும் திட்டமிட்டுப் புகுத்துவதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது என்பதே அவர்கள் தனியார்மயத்தை ஆதரிப்பதன் காரணம். காவிமயத்தின், தனியார்மயத்தின் நலன்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இதை எதிர்கொள்வதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வெகுஜன அமைப்பினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கிய போராட்ட முறையே சரியானதாக இருக்கும் என்று முனைவர் இரமேஷ் கூறினார்.

படிக்க:
உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !
கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !

கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பேரா. நவநீதன் நன்றி கூறினார். தனது நன்றி உரையில், ‘சுயநிதிக் கல்லூரிகளில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் எப்படி கொத்தடிமையாக நடத்தப்படுகின்றனர், நிரந்தரமற்ற பணி, முறைப்படுத்தப்படாத ஊதிய உயர்வு, கல்வி ஆண்டின் இறுதியில் ஊதியத்தின் நிச்சமற்ற தன்மை ஆகியன குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தகவல்: பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க