திராம்பட்டினம் – மணவெளிற்காடு, அண்ணாநகர் பகுதி. நகரத்தை ஒட்டியுள்ள ஒரு பகுதிதான். ஆனால் தாழ்த்தப்பட்டோர்கள் வாழும் பகுதி. மொத்தம் 60 குடும்பங்கள் இருக்கிறது. எல்லா வீடும் தென்னை கீற்றால் கட்டப்பட்டுள்ளது. சாலைக்கும் குடியிருப்பு பகுதிக்குமான வித்தியாசம் மிகவும் தாழ்வான பகுதியில் இருக்கிறது என்பதே. சின்ன மழை என்றாலும் தண்ணீர் தேங்கி விடும். இங்கு வசிக்கும் யாருக்கும் இது சொந்த இடமும் கிடையாது. எல்லாம் குட்டை பொறம்போக்குதான்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இது வரை யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை. ஆனால் எல்லோரிடமும் குடிசை வரி வாங்குகிறார்கள். எல்லோருக்கும் தள்ளுவண்டி கடை, தேங்காய் உரிப்பது, கொத்தனார், சித்தாள் வேலை தான் வாழ்வளிக்கிறது. அன்றாடம் உழைத்து வாழும் மக்கள். ஒருநாள் வேலைக்கு  போகவில்லையென்றாலும் உணவில்லை என்பதுதான் கதி.

இப்படிப்பட்ட நிலையில் வாழும் இம்மக்களின் ஒரே இருப்பு இந்த குடிசைதான். இதனையும் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது கஜா. “இங்க இருக்க வீட்டுலயே 27 குடிசை மட்டும்தான் தப்பிச்சிருக்கு. மத்த எல்லாம் தரை மட்டமாகிடுச்சி. டி.வி, துணிமணி எல்லாம் போச்சி. இனிமே சம்பாதிச்சிதான் வாங்கனும்… அரசாங்கமும் எதுவும் செய்யல” என்கிறார் ராஜலட்சுமி.

முதல் வரிசை – இடமிருந்து ராஜலட்சுமி, ஜோதி, பரமேஸ்வரி மற்றும் பகுதியைச் சேர்ந்த பெண்கள்.

“தள்ளுவண்டிதான் எங்களுக்கு சோறு போட்டது. ஆனா வண்டி மொத்தமும் காத்து அடிச்சி சேதமாயிடுச்சி… வீட்டுல ஒரு சாமான்சட்டுக்கூட மிஞ்சல. வீட்டுல இருந்த இரண்டு ஆடும் செத்துடுச்சி. நாங்க படுத்துக்க கூட இடம் இல்லாம கட்டிக்கிட்டு இருக்குற அந்த பில்டிங்ல தான் படுத்துக்கிறோம். நேத்து ஷிபா ஆஸ்பிட்டல்ல படுத்துகினோம். கெடக்கிறத சாப்பிட்டுக்கிறோம்” என்கிறார் ஜோதி.

கமலா (இடது ஓரம்) மற்றும் பகுதி பெண்கள்.

எத்தனையோ புயல், மழை வெள்ளம் வந்தப்ப கூட சாமாளிச்சிருக்கோம்.. தண்ணியிலயே நீந்தி போயிருக்கோம்.. ஆனா இந்த முறை எங்கள காப்பாத்திக்கவே பெரும்பாடு பட்டோம். ராத்திரி நேரத்துல என்ன பண்ண முடியும்… எங்க போக முடியும்? யாரு வீட்டுக்கு போனாலும் அங்க கும்பலா இருக்காங்க. எங்க போறதுன்னும் தெரியல. கடைசியா ஷிபா ஆஸ்பிட்டல் கதவை கைக்குழந்தைகளோட போயிட்டு தட்டினோம். அப்புறம் வந்து திறந்து விட்டாங்க.

படிக்க:
கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

காலையில விடிஞ்சி பாத்தபோதுதான் எல்லாம் நாசமாகி கிடந்துச்சி.  இப்ப எல்லாம் உஸ்ஸுனு, உஸ்ஸுன்னு சத்தம் கேட்டாலே பயமா இருக்கு. குடிக்க தண்ணி கூட இல்லாம பாத்ரூம் தண்ணிய புடிச்சி வந்து சூடு பண்ணி குழந்தைகளுக்கு கொடுத்து உயிரை காபந்து பண்ணியிருக்கோம். அந்தநேரம் மறக்காயர் (முசுலீம் – ஷிபா மருத்துவமனை) மட்டும்தான் பசியில அழுத குழந்தைகளுக்கு பால், பிஸ்கட்டு கொடுத்து காப்பத்தினாங்க. அரசியல்வாதி, அதிகாரின்னு ஒருத்தனும் வந்து பாக்கல… ஓட்டுகேக்க மட்டும் வீடு தேடி வருவானுங்க. ஆனா எங்கள பாக்க வர மாட்டானுங்க. எங்க ஓட்டு மட்டும் செல்லும். ஆனா எங்க உயிர் செல்லாதா?  என்று கேள்வியெழுப்புகின்றார்’’ கமலா.

கண்ணன் மற்றும் அவரது தாய் கண்ணகி.

செட்டித்தோப்பு பகுதியில் இருந்த சொந்த வீட்டை கடன் பிரச்சனையால் வித்துவிட்டு வயதான தன் தாயுடன் இப்பகுதிக்கு குடியேறிய கண்ணன், “எனக்கு கல்யாணமாகி அஞ்சி வருஷம் ஆவுது சார். அந்த வீட்டுல இருக்க வரைக்கும் என்கூட தான் மனைவி இருந்தாங்க. இங்க வந்ததும் இருக்க முடியாதுன்னு பிரிஞ்சி போயிட்டாங்க. நானும் எவ்ளோ பேசிப் பார்த்தேன். வீடு மாறினாதான் உன்கூட வந்து வாழ்வேன்னு சொல்லிட்டா… வீடு மாற்ற அளவுக்கு பணம் இல்ல. சரின்னு நானும் விட்டுட்டு புதுக்கோட்டையில இருக்க ஒரு ரெடிமேட் சுவர் தயாரிக்கிற கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். ஒருநாள் கூலி 500 ரூபா. அதை எப்படியோ கொஞ்சம் கொஞ்சமா வாயக்கட்டி வயித்துக் கட்டி சேர்த்து வறேன். இந்த புயல் வந்ததால வேலை இல்லன்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

இங்க வந்து பார்த்தபோது தான் தெரிஞ்சது வீடு இடிஞ்சதே… எனக்கு என்ன பன்றதுனு தெரியல. கொஞ்ச பணம் சேர்ற வரைக்கும் என்னோட பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுலயே இருந்துக்கட்டும். பிறகு வீடு மாறிடலாம்னு நெனச்சேன். அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சி. இதையெல்லாம் சரி பண்ண இன்னும் எத்தன நாள் ஆகும்.. எவ்ளோ செலவாகும்னு நெனச்சாலே பயமா இருக்கு…” என்கிறார் சோகமாக.

கஜா புயல் தென்னை, வாழை விவசாயிகளை மட்டுமல்ல… இலட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையையும் திசை தெரியாமல் புரட்டிப் போட்டுள்ளது!

3 மறுமொழிகள்

    • பாரதி ஐயர்வாளுக்கு நமஸ்காரம். நம்ம பொழப்பே தட்டுல விழுற தக்ஷணையிலதான் ஓடுறது! திருப்பதி ஷேத்ரத்துல இருக்கறச்சே அம்பானி பிள்ளையாண்டன் வந்தா சுளையா 50,000 போடுவன். காமாஷி கோவில்ல நம்மவா வந்தா 5 பத்துன்னு ஆயிரம் தேறிடும். ஃப்ளோவுல நம்மவாளையும் லிஸ்ட்டுல சேத்துறாதேள்! இப்பவே நம்மவாள அறம் பாடி கொல்றதுக்கு ஒரு கூட்டமே அலையிறது!

  1. பாரதி…காசு வாங்கிட்டு ஓட்டு போடுறவங்க தகுதி இல்லாதவஙன்னா, காசு வாங்காம ஓட்டு போட்டவன் எவன் வந்து அநியாயத்தை கேட்டிருக்கான் சொல்லுங்க? அப்படியே கேட்டா மட்டும் உடனே செஞ்ச தப்ப உணர்ந்து பதிவிய ராஜினாமா பன்னிடுவாங்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க