ஜா புயல் நிவாரண மையத்தில் இருந்த நான்கு பெண்கள், இருள் காரணமாக, சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, வாகனம் மோதி அந்த இடத்திலேயே மரணம்.

நாகை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது  நீர்முலை கிராமம். கஜா புயலால் அடியோடு பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. வீடிழந்த மக்கள் நீர்முலையில் நான்குக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கியுள்ளனர். அப்படி, இவ்வூரின் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முகாமில் தங்கியிருந்த சுமதி (40), அமுதா(60), ராஜகுமாரி(39), சரோஜா(38) ஆகிய நான்கு பேரும், நவம்பர் 22-ம் தேதி இரவு 9.30 மணி அளவில், இரவு உணவை முடித்துவிட்டு சுகாதார நிலைய வாயிலில் உள்ள, சாலையின் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மின்சார வசதி இல்ல, வேறு எந்த வெளிச்சமும் இல்லை, நிவாரண உதவிகள் மூலம் கிடைக்கும் மெழுகுவர்த்திகள் எந்த மூலைக்கு? கடுமையான கொசுக்கடி வேறு. இதனால் நீர்முலை உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டுக்கு மத்தியில் மக்கள் சாலை ஓரங்களில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துதான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் நேற்றும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த சாலை வழியே வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவர் அந்த இடத்திலேயே இறந்துவிட, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்ற இருவரும், அங்கு சென்றதும் இறந்துவிட்டனர். மேலும் மணிகண்டன் என்ற 15 வயது சிறுவனுக்கு கால் முறிந்துவிட்டது.

கஜா புயலினால் ஏற்கனவே உயிரைத்தவிர அனைத்தையும் இழந்து விட்ட இந்த மக்கள் தற்போது உயிரையும் இழந்துவிட்டனர். ( புகைப்படம் மிகக் கோரமாக இருக்கிறது. அதனால் இணைக்கவில்லை). இது மற்றுமொரு விபத்து இல்லை. அன்றாடம் நிகழும் சாலை விபத்துகளின் பட்டியலில் இதை சேர்க்க முடியாது.

வாழ வழியில்லாமல் நடுரோட்டில் நிற்கும் அவர்கள் இந்த நான்கு உடல்களையும் எப்படி புதைப்பார்கள்? எப்படி எரியூட்டுவார்கள்? இந்த நான்கு பெண்களும் தனிமனிதர்கள் அல்ல… அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப் பிழைக்க போகிறார்கள்? அவர்களை யார் காப்பாற்றுவது?

♦♦♦

டெல்டா மாவட்டத்தின் எந்தத் தெருவில் நுழைந்தாலும் கஜா புயலால் பாதிக்கப் பட்டோர் முகாம் என்ற பெயர் பலகைகள் அரை கிலோமீட்டருக்கு ஒன்று தென்படுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் முகாம்கள்.. முகாம்கள்.. முகாம்கள்.

வரும் நிவாரண வண்டிகளின் கண்களில் தென்பட வேண்டும் என்பதற்காக; அவர்களின் இரக்கத்தை கோர வேண்டும் என்பதற்காக… உள்ளடங்கிய கிராமங்களை சேர்ந்தவர்கள் முதன்மை சாலை அருகே அகதிகளைப் போல காத்திருக்கின்றனர். சாலையோரத்தில் பாத்திரத்தை வைத்து சமையல் செய்கின்றனர். வாகனங்களை நோக்கி கைகளை நீட்டியபடி ஓடிவருகின்றனர். இந்தக் காட்சி ஒவ்வொன்றும் நெஞ்சை அறுக்கிறது.

கீழத்தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்கள் கடும் உழைப்புக்கு பெயர் போனவர்கள். நாளொன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக கடைமடையில் நின்ற கால்கள், இன்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்காக ஏங்கி நிற்கிறது. அவர்கள் சாலையில் நின்று கையேந்துவதை கண்டு மனம் பொறுக்கவில்லை.

தஞ்சை: நிவாரண முகாம் ஒன்றில் உணவுக்காக நீண்ட வரிசையில்… (படம் மங்கலாக்கப்பட்டிருக்கிறது)

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

♦♦♦

குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து செல்லும் பலநூறு நிவாரண வண்டிகள்… எண்ணற்ற ஊர்களில் இருந்து மக்கள் சேகரித்து அனுப்பும் பொருட்கள், ஏராளமான வெளிநாடுகளிலிருந்து வந்து சேரும் உதவித்தொகை… உண்மையில் சிவில் சமூகம் ஒரு இராணுவத்தை போல இணைந்து நின்று டெல்டா மக்களை அரணாக பாதுகாக்கிறது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை சரிசெய்யும் பணி மட்டுமே அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. அதைத் தாண்டி அவர்கள் எதுவும் செய்வார்கள் என்ற நம்பிக்கைக் கூட இல்லை. இந்த அரசக் கட்டமைப்பின் பிரம்மாண்ட தோல்விக்கும், மனித மனதின் ஆதாரமான அறவுணர்ச்சிக்கும் இன்றைய டெல்டா மாவட்ட கிராமங்களே சாட்சி.

♦♦♦

ஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் குறித்து இரண்டு வதந்திகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

1 முதலில் நிவாரணப் பொருள் ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிப்பறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது; முழு பொய். இந்த மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை.

நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப் போவதில்லை. அவர்கள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். இருந்த கடைசி குடிசையையும் புயலுக்கு பறிகொடுத்து விட்டு நடுரோட்டில் நிற்கிறார்கள். கையேந்தி நிற்பவர்களை கயவர்களாக சித்தரிக்க வேண்டாம்.

படிக்க:
பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும் – வீடியோ
ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

நான்கு நாட்களாக கடும் பசி. ஏதேனும் ஒரு வாகனம் வருமா என எதிர்பார்த்து காத்திருந்து; ஏற்கனவே காத்திருந்து கிடைத்த அனுபவத்தில்; இப்போது வரும் வாகனத்தைக் கூட விட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் அவர்கள் கேட்கிறார்கள். அந்த அவலத்தின் குரல் கோபமாகத்தான் வெளிப்படும். அதை மிரட்டல் என்றோ வழிப்பறி என்றோ அழைப்பது மோசமானது; தவறானது.

நாம் கொடுக்கும் இரண்டு கிலோ அரிசியையும் 4 மெழுகுவர்த்திகளையும் பெற்றுக்கொள்ள அவர்கள் ஆதார் அட்டையைக் காட்டி கையெழுத்துப் போட வேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தயவுசெய்து வேண்டாம்.

2 இரண்டாவது பிரச்சினை இன்னும் முக்கியமானது. நிவாரணப் பொருட்களை பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் ஊர்த்தெரு முதலிலும் காலனி தெரு அதை தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது முதலில் ஊர் தெரு இருப்பதால் அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் சேரிக்கு எதுவும் செய்வதில்லை என்றும் பல பதிவுகளை இங்கு கண்டேன். இது முற்று முழுதான உண்மையோ அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை என்பதோ இல்லை.

நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் கண்ட பெரும்பாலான ஊர்களில் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அந்த ஊரில் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக புயலடித்த கணத்தில் இருந்து மக்களை காப்பாற்றி, பாதுகாத்து, நிவாரண வண்டிகளில் இருந்து பொருட்களைப் பெற்று பகிர்ந்தளித்து அந்த மக்களை உயிரோடு வைத்திருப்பது ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் இளைஞர் குழுக்கள்தான். சொல்லப்போனால் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் என்ற அளவில் இந்த புயல் நேரத்தில் அவர்கள் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். ஓரிரு இடங்களில் களநிலவரம் வேறாக இருக்கலாம். அதை பொதுமைப்படுத்த வேண்டாம்.

அரசாங்கம் கைவிட்டுவிட்ட நிலையில் சிவில் சமூகத்தின் அரவணைப்புடன் தற்போது உதவிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த சிவில் சமூகத்தின் பொது மனநிலையை; அறவுணர்ச்சியை எதிர் திசையில் செலுத்தும் இத்தகைய செய்திகளை நண்பர்கள்; தோழர்கள் பகிர வேண்டாம்.

எங்களுக்கு இவை போதும் மற்ற ஊர்களுக்கு கொடுங்கள் என்று சொன்னவர்களை நாங்கள் கண்டோம். காலையிலிருந்து சாப்பிடாத எங்கள் வாகனத்தின் ஓட்டுநர், மாலை தன் கைக்கு கிடைத்த ஒரு பொட்டலம் உணவை முகாமில் பசியில் வாடிய ஒரு குழந்தைக்கு தந்தார். அந்த முகாமில் சமைக்கப்பட்ட உப்புமாவை ஓட்டுனருக்கு மக்கள் தந்தார்கள். அது உழைக்கும் வர்க்கத்தின் ஆதார உணர்ச்சி. மதுரையில் இருந்து வந்துள்ள இளைஞர் குழு ஒன்று தலைஞாயிறு பகுதியில் தங்கி நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உணவு சமைத்து தருகின்றனர். அந்த நிவாரண முகாமில் தான் நேற்று நாங்கள் சாப்பிட்டோம். இதுவே கள நிலவரம். இது பிளவுகளை இணைக்க வேண்டிய தருணம். மேலும் அதிகப்படுத்த வேண்டிய தருணம் அல்ல.

முகநூலில்: பத்திரிகையாளர், பாரதி தம்பி

1 மறுமொழி

  1. கட்டுரைத் தலைப்பே புயலின் வலியை உணர்த்துகிறது.
    கஜா புயல் – பாதிப்பு – கள நிவாரணம் பற்றி உலவும் வதந்திகளை சரியான நேரத்தில் விளக்கியது அவர்களின் மானம் காத்த துணிபோல உதவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க