நாகை முதல் வேதாரண்யம் வரையிலான கடலோர கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தென்னை, மா, பலா, முந்திரி, பு,ளி நெல் போன்றவற்றை பயிர் செய்து வருகிறார்கள் விவசாயிகள். “இதோ எங்க ஊர் நெலமய பாருங்க” என்று சென்னையில் தங்கி வேலை செய்யும் அந்த கிராமத்து இளைஞன் பிரதீப் தனது செல்ஃபோனிலிருந்து சில நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தைக் காட்டுகிறார். ஊரே பச்சைப் பசேலென காட்சியளிக்கும் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து விட்டு நிமிரும்போது, இன்றைய அழிவு படத்தின் பசுமையை மறைக்கிறது.

பிரதீப்

பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரன் இருப்பு, கோவில்பத்து, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், பெரிய குத்தகை, ஆறுகாட்டுத்துறை… என அனைத்து கடலோர கிராமங்களும் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதைப் போல சிதைந்து கிடக்கின்றன. இனி என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை என கலங்கி நிற்கின்றனர்.

வேட்டைக்காரன் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த 53 வயது செல்வராஜ் என்பவரை சந்தித்தபோது,

“என்னத்த சொல்ல சொல்றீங்க… நல்லா வாழ்ந்துகிட்டிருந்தோம். ஒரே ராத்திரியில எல்லாத்தயும் எழந்துட்டு கட்டின துணியோட வெறும் ஆளா இருக்கோம்.”

தோப்பிற்கு செல்லும் வழியில் கிடந்த கிளைகளை அப்புறப்படுத்திவிட்டு, மேலும் தொடர்ந்தார்…

செல்வராஜ்.

“இதுக்கு இப்ப 20 வயசு ( மா மரங்களைக் காட்டுகிறார்).

என்னோட 6 ஏக்கர் நெலத்துல ரெண்டு போர் போட்டு, ருமானியா சாகுபடி பண்ணியிருக்கேன். 600 மரங்கள் இருக்கு. 8 நாளைக்கு ஒரு தடவ தண்ணி விடணும்; அவ்ளோ தண்ணி இழுக்கும். ரெண்டு மாதத்துக்கு முன்னதான் 97 வண்டி பொருக்கு மண்ணு அடிச்சிட்டு, ஒரு 60 ஆயிரம் ரூபாய்க்கு மாட்டுச் சாணி வாங்கி போட்டேன். அப்புறம் வருசத்துக்கு 2 முறை டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட்னு உரம் போடுவேன்; இதுக்கெல்லாம் சேத்து ஒரு பத்தாயிரம் ஆகும். எனக்கு இலவச மின்சாரம் இல்ல; காசு கொடுத்துதான் வாங்கணும்; அது ஒரு மூவாயிரம் ரூபா. இது மாதிரி பெரிய செலவு போக, விவசாயத்துல மத்ததெல்லாம் கணக்குப் பாக்க மாட்டோம்.

இந்த வருசம் நல்ல வௌச்சல் சார். ஒரு காய உள்ளங்கையில அடக்க முடியாது, அவ்வளவு பெருசு. இங்க பாருங்க கொட்டிய காயக்கூட இன்னும் எடுக்கல.

சாய்ந்து முறிந்து கிடக்கும் மரங்களுக்கு இடையில் சிதைந்து கிடக்கும் காய்களை எடுத்துக் காட்டுகிறார்.

படிக்க:
ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
விவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா?

வருசத்துக்கு 2 போகம் விளையும். ஒன்னு பெரும் போகம், அடுத்தது கார் போகம். பெரும்போகத்துல எங்குமே (தமிழகம் முழுதும்) காப்பு இருக்குறதால, விலை கம்மியாயிருக்கும். கார்போகத்துல விளைச்சல் அதிகம் இருக்காது. அப்பதான் கிலோ 60 ரூபா வரைக்கும் கெடைக்கும். கேரளா, ஓசூர் மாதிரியான எடங்களுக்கு ஜூஸ் கம்பெனிங்க வாங்கி போவாங்க.

மொத்தத்துல ஒரு போகத்துக்கு 1 மரம் 30 கிலோவுக்கும் மேலே காய்க்கும். எப்படா கொடல் செவக்குமுன்னு காய ஒடச்சி ஒடச்சி பாத்துகிட்டிருப்போம். கொடல் செவந்ததும், மொத்தமும் பறிச்சி பழுக்க வச்சிருவோம். இனி இது பழங்கனவாயிடும்.

பதினாலு வருசத்துக்கு முன்னாடி சுனாமி வந்து எங்க பொருளெல்லாம் நாசமா போச்சு; இப்ப சுனாமியோட புயலும் சேந்து எங்க வாழ்க்கை மொத்தமும் போச்சு. மாங்காய வாங்க வர்ற வியாபாரிகிட்டேகூட இதுவர கடன் கேட்டதில்ல; இப்ப எப்படா நிவாரணம் வருமுன்னு ஏங்கிகிட்டிருக்கோம்.”

வார்த்தைகள் தொண்டையை அடைக்க, மரத்தோடு சாய்கிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க