வீசும் புயலுக்கும்
நம்
வேதனை தெரிவதில்லை!

ஒரு தென்னை
விழுந்தால்
எத்தனை
கனவுகள் நொறுங்கும்.

ஒரு வாழைத் தோப்பு
குலைந்தால்
எத்தனைப் பேர்
வாழ்க்கை குலையும்

மாந்தோப்பு
கலைந்தால்
எத்தனைக்
காரியங்கள் கலையும்

படகுகள்
உடைந்தால்
எத்தனை குடும்பங்கள்
உடையும்

ஒரு மரம்
வீழ்ந்தால்
எத்தனை நிழல் முறியும்
பல்லூயிர் தவிக்கும்

நெற்களஞ்சியம்
சரிந்தால்
நாகரிகம் அதிரும்.

அதிராம் பட்டினங்கள்
அதிர்கிறது…
உரத்த நாடு
உதிர்ந்து கிடக்கிறது.

பட்டுக் கோட்டையும்
புதுக் கோட்டையும்
பேரா ஊருனியும்
கண்ணீர் சுரக்கிறது

நாகப்பட்டினம்
சோகப் பட்டினமாய்
திருமறைக்காடு
புயலின்
வேட்டைக்காடாய்…

ப‍னிரெண்டு மாவட்டமும்
ஊர் முகம் சிதைந்து
உள் மனம்
ரணமாய் கிடக்கிறது.

எழும்ப
எத்தனை நாள் ஆகுமோ
இதயம்
எத்தனை
பாழாகுமோ?

உதிர்ந்தது
கண்ணீரல்ல
கண்கள்.
மீள முடியாத இருட்டில்
தவிக்கும் மக்களுக்கு
பற்றிக் கொள்ள
ஒரே நம்பிக்கை,

மீட்பு பணியில்
நிவாரணப் பணியில்
அங்கங்கே
துளிர்க்கும்
தொழிலாளர் கரங்கள்.

கடற்கோள் புகாரும்
கடல் கொண்ட தென்னாடும்
உருக்குலைந்த போதும்
உருக்கனைய உறுதியுடன்
உதவிய
அதே… தொழிலாளர் கரங்கள்.

ஆக்கும் சக்தி
தொழிலாளி வர்க்கம்
என்பதை
அறியத் தரும் தருணங்கள்.

புன்னையும்
புலி நகக் கொன்றையும்
தென்னையும்
சரிந்த போது
தாங்கிப் பிடித்த
வரலாற்றின் வர்க்கம்

சரிந்த மின் கம்பங்களை
சரி செய்யும் காட்சிகள்
தன் வர்க்கமே
தனக்கு உதவி
எனும்
தத்துவத்தின் சாட்சிகள்.

மின் ஊழியர்-
ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்
நமக்கு என்ன சம்மந்தம்
என நினைத்தவர்களே

மேலே பாருங்கள்…
உங்களுக்காக
தன் உயிரில்
மின்சாரத்தை கடத்துகிறான்
மின் ஊழிய தொழிலாளி

சிட்டுக் குருவிகளைப் போல
கட்டுக் கம்பிகளின் மீது
தொங்குகிறான்.

புயல்
இப்போது அவன்
இரத்தத்தில் அடிக்கிறது,

இழுக்கும் கம்பிகளில்
நிமிர்த்தும்
மின்கம்பங்களில்
முறுக்கும் நாடி நரம்புகளில்
நமக்கான பேருழைப்பும்
மனித மாண்பும்
மின்சாரமாய் பாய்கிறது.

உருக்குலைந்ததை
சரிசெய்யவும்,
உலகம் உருப்படவும்
உழைக்கும்
தொழிலாளர்கள் இல்லையேல்
என்ன ஆகும்
என்று நினைத்தாலே
உயிர் சிலிர்க்கிறது!

அடுத்து.. அடுத்து.. என
உங்கள் வீடு ஒளிர
இறங்கி ஏறினால்
இன்னும் தாமதமாகும்
என்று,
உண்ணும் வேலையையும்
மின் கம்ப உச்சியிலேயே
செய்கிறான்.

கைத்தோல் உரிகிறது
கண்கள் தீய்கிறது
இமைகளே குடைகளாகி
பெய்யும் மழை ஒதுக்கி
செய்யும் வேலையிலேயே
அவன்
ஜீவன் கரைகிறது

தன் வாழ்வில்
வெளிச்சமில்லை
தகுந்த ஊதியமில்லை
வேலை நிரந்தரமில்லை
தாழ்வாரம்
சொந்தமில்லை..
ஊருக்கு
வெளிச்சம் தர
உழைக்கும்
‍அந்த தொழிலாளர்க்கு
ஒராயிரம்.. நன்றிகள்!

நன்றியோடு
விடைபெற்றால் போதுமா?
அவர்க்கு ஒன்று எனில்
நம் வர்க்கம் என
நாம்
ஒன்றிணைய வேண்டாமா!


போற்றிப் பாதுகாக்கப்பட
வேண்டியவர்கள்
நமக்காக
புயலை சுமக்கும்
அந்த மனிதர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க