மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 30 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“பாடுங்கள், அம்மா, என் அருமை அம்மா!” என்று கத்தினான் ஹஹோல். “அதுதான் வாழ்க்கை!”

அவன் முதலில் தானே பாடத் தொடங்கினான். அவனது குரல் பிற சப்தங்களையெல்லாம் விழுங்கி விம்மி ஒலித்தது. தாய் அவனைத் தொடர்ந்து சென்றாள். திடீரென அவள் தடுமாறினாள். கால் தவறி ஆழங்காணாத பாதாளக் குழிக்குள் விழுந்தாள். அந்தப் பிலத்தின் சூன்யத்தில் பயங்கரக் குரல்கள் கூச்சலிட்டு அவளை வரவேற்றன …..

மேலெல்லாம் நடுங்கிக் குளிர அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது இதயத்தை ஒரு கனமான முரட்டுக் கை அழுத்திப் பிடித்து. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கி முறுக்கிப் பிழிவதில் ஆனந்தம் காண்பதுபோல் தோன்றியது. ஆலைச்சங்கு இடைவிடாது அலறி முனகி, தொழிலாளர்களை அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது. அது இரண்டாவது சங்கு என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அந்த அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன; எல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்க் கிடந்தன. தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள் காணப்பட்டன.

அவள் எழுந்தாள்; முகங்கை கழுவவோ, பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி, அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள். சமையலறையில் கிடந்த கம்பின் மீது – கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக்கிடந்த அந்தக் கம்பின் மீது – அவள் பார்வை விழுந்தது. அவள் அதைக் குனிந்து எடுத்து, அடுப்பில் வைக்கப் போனாள். ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி, அதை ஒழுங்காக மடித்து, தனது பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள். பிறகு ஜன்னல்களையும் தரையையும் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்துவிட்டு உடை உடுத்திக்கொண்டாள். பின்னர் அவள் சமையலறையில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்தாள். அவள் மனத்தில் அதே கேள்வி மீண்டும் எழுந்தது.

“இனி என்ன?”

தான் தனது காலைப் பிரார்த்தனையைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்ரகங்களை நோக்கி வந்தாள். அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள். பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் ஒரே சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில் தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக்கிடந்து, இயற்கைக்கு மீறிய சம்பவங்களைப் பற்றி அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல, அதிசய மோனம் நிலவிக்கொண்டிருந்தது.

திடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாள்; சவுசாய்லவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம் பூங்காவனம். பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம். தடாகம் முழுவதிலும் நீரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தின் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று அவள் அந்தக் தடாகக்கரை வழியாக நடந்து சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப் படகு அந்தக் கரிய நீர்த்தடத்தின் மீது, பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு ஒட்டிக் கிடப்பதாகத் தோன்றியது. காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந்தனியாக, துடுப்புக்களோ மனிதத் துணையோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகுநேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள்; யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளிவிட்டார்கள். எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடுகுடுவென்று நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண். அந்தக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்.

தாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனத்தில் அன்றைய தினத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவுகளிடையே எண்ணற்ற சிந்தனைகள். நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகுநேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் குளிர்ந்து போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கக்கூடிய யாராவது ஒரு படாடோபமற்ற புத்திபடைத்த மனிதனைக் காணவேண்டும்; கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக்கொண்டிருந்தது.

அவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்பது போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான். என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக்கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;

“நீங்கள் ஏன் வந்துவிட்டீர்கள்! இப்படிச் செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங்கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்!”

அவன் அவளது கையைப் பற்றி இறுக அழுத்தினான், தனது மூக்குக்கண்ணாடியைச் சரி செய்துகொண்டு, அவள் பக்கமாக நெருங்கிக் குனிந்து விறுவிறுவெனப் பேசினான்: ”பாவெல், அந்திரேய், நான் – எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுநாளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய்விடுவது என்பது எங்கள் ஏற்பாடு” என்றான். அவனது குரல் பெருந்தன்மை நிறைந்ததாகவும், அவளது நலத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது. ”சரி இங்கு ஏதாவது சோதனை நடந்ததா?”

”ஆமாம். அவர்கள் எல்லாவற்றையும் வெட்கமோ மனச்சாட்சியோ இன்றி உலைத்துக் கலைத்து எறிந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் அவள்.

“அவர்கள் எதற்காக வெட்கப்பட வேண்டும்?” என்று தன் தோளைக் குலுக்கிக்கொண்டு கேட்டான் நிகலாய். பிறகு அவள் என் நகருக்கு வீடு மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னான்.

அவனது நட்பும் பரிவும் கலந்த நயவுரையை அவள் காது கொடுத்துக் கேட்டாள். லேசாகப் புன்னகை புரிந்து கொண்டான். அவன் கூறும் காரணங்களை அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவள் மனத்தில் எழும்பிய அன்பு கனிந்த நம்பிக்கையைக் கண்டு அவளே வியந்து கொண்டாள்.

“பாஷாவின் விருப்பம் அதுவானால், உங்களை நான் ஏதும் சிரமத்துக்கு ஆளாக்காது இருந்தால்…..” என்றாள் அவள்.

“அதைப் பற்றி கவலையே வேண்டாம்” என்று குறுக்கிட்டான் அவன். “நான் தன்னந்தனியாகத்தான் வாழ்கிறேன். எப்போதாவது என் சகோதரி மட்டும் என்னைப் பார்க்க வருவாள்.”

”நான் சும்மா வந்து இருந்து கொண்டு உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றாள் அவள்.

“விருப்பம் இருந்தால், அங்கு வேலை தேடிக்கொள்ளலாம்” என்றான் நிகலாய்.

வேலை என்ற எண்ணம். தனது மகனும் அந்திரேயும் பிற தோழர்களும் செய்யும் வேலையோடு எப்படியோ பிணைப்புற்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச் சென்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

”உண்மையாகவா? உங்களால் தேடித்தர முடியுமா?” என்று கேட்டாள்.

”என் வீட்டில் அதிகமான வேலை ஒன்றும் இருக்காது. நான்தான் பிரம்மச்சாரி ஆயிற்றே…”

‘நான் அதைப் பற்றி நினைக்கவில்லை – வீட்டு வேலையைப் பற்றியல்ல!” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.

அவள் பெருமூச்செறிந்தாள்; தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள். அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான். சிந்தனை வயப்பட்டவனாகப் பேசினான்.

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

”நீங்கள் மட்டும் பாவெலைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிட வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகளை அவனிடமிருந்து எப்படியாவது தெரிந்துகொண்டு வரமுடிந்தால்…..”

“எனக்கே அவர்களைத் தெரியும்” என்று உவகையோடு கூறினாள் அவள். ‘நான் அவர்களைக் கண்டுபிடித்து, நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப்படமாட்டார்கள். கடவுள் கிருபையால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா?”

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

”இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக்கொள்கிறேன். எல்லா பிரதேசத்திலுள்ள சகல ரோட்டு பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர்காலத்திலும் – நான் சாகிற வரையில் – ஒரு காம யாத்திரிகளைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று நினைக்கிறீர்களா?”

வீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக வீடு வீடாய், கிராமத்துக் குடிசை வாயில்களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரைவாசியாகத் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

நிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப்பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக்கொடுத்தான். பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“சரி, அதைப்பற்றி நாம் பின்னர் பேசிக்கொள்ளலாம்.

“நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?”

நிகலாயின் முகம் வெளுத்தது.

”இந்த மாதிரி வார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை” என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதியாகச் சொன்னான் அவன்.

“நான் வேறு என்னத்தைச் சொல்ல?” என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக்கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள். “என் நெஞ்சுக்குள்ளே துடிதுடிக்கும் இந்தத் தாயின் இதயத் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு வார்த்தைகள் இருந்தால் …”

அவள் எழுந்தாள். உத்வேகம் நிறைந்த எத்தனையோ சொற்கள் அவளது தலைக்குள்ளே பின்னி முடைந்து குறுகுறுப்பதால் அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.

“அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள்கூட, வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்!”

நிகலாவும் எழுந்தான். மீண்டும் ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரி, அப்படியென்றால் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். நகருக்கு – என் இடத்துக்கு – வருகிறீர்கள், இல்லையா?

அவள் தலையசைத்தாள்.

“சரி, எப்போ? கூடிய சீக்கிரத்தில், சரிதானே” என்று பரிவோடு கூறினான் அவன். “நீங்கள் வருகிற வரையில் எனக்குக் கவலைதான்.”

அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும்? அவள் முன் தலைகுனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு, கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டிருந்தான் அவன். அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.

“உங்களிடம் ஏதாவது பணம் காசு இருக்கிறதா?” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான் அவன்.

”இல்லை.”

உடனே அவன் தன் பைக்குள் கையைவிட்டு, தன் மணிப்பர்சை எடுத்து, அதைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினான்.

“இதோ, இதைத் தயைசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

தாய்க்குத் தன்னையறியாமலேயே இளஞ்சிரிப்பு வந்தது. அவள் தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள்;

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

“உங்களிடம் எல்லாமே புதுமாதிரியாகத்தான் தோன்றுகிறது. பணம்கூட உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிலர் அந்தப் பணத்துக்காகத் தங்கள் ஆத்மாக்களையே விற்றுவிடுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் பணத்தை வைத்திருக்க ஒப்புவதுபோலத் தோன்றுகிறது.”

நிகலாய் மெதுவாகச் சிரித்தான்.

“பணமா, அது ஒரு நச்சுப்பிடித்த பொருள். வாங்குவதானாலும் சரி, கொடுப்பதானாலும் சரி. மனத்துக்கே பிடிப்பதில்லை. அவன் அவள் கையைப் பற்றி அதை லேசாகப் பிசைந்தான். பிறகு மீண்டும் சொன்னான்:

“சீக்கிரம் கிளம்பிவிடுங்கள்!”

பிறகு அவன் வழக்கம் போலவே அமைதியாகச் சென்றான். அவன் செல்வதை அவள் வாசல் வரை சென்று பார்த்தாள். அப்போது தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“எவ்வளவு அன்பான மனம்! ஆனால் அவன் எனக்காகப் பரிதாபப்படவே இல்லை.”

இந்த எண்ணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா, அல்லது அதிசயத்தைத் தந்ததா என்பதை அவளால் உணரக்கூட முடியவில்லை.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க