டந்த 17-ம் தேதி (17.11.2018) அன்றுதான் இந்த ‘நாய்க்கறி’ செய்தி வெளிவந்தது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ஆட்டுக்கறியை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்திருக்கின்றனர். அதற்குள் அது நாய்க்கறி என்று சொல்லி வதந்தியை பரப்பினர்.

அதன் உண்மைத்தன்மையை அறியாமல்  ஊடகங்களும் அப்படியே வாந்தியெடுத்தன. அதனை பார்த்த/படித்த வாசகர்களும் வாட்சப் வாயிலாக பகிர ஒரே பரபரப்பானது.  கைப்பற்றிய இறைச்சியை கால்நடை மருத்துவமனைக்கு  சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அந்த கறியை ஆர்டர் செய்த ஷகிலா என்பவரும் அது நாய்க்கறி இல்லை, ஆட்டு இறைச்சிதான் என்பதை ஆதாரங்களுடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். முசுலீம்கள் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தியால் முதலில் அதனை யாரும் நம்பவில்லை.  இறுதியில் சோதனைக்கு சென்ற இடத்தில் இது ஆட்டு இறைச்சிதான் என்று ஊர்ஜிதமானது. பிறகு அந்த இறைச்சியில் அனுப்புநர் முகவரி தெளிவாக இல்லை, இறைச்சி கெட்டுப் போய் இருந்தது, மீன் பெயரில் வந்தது என்று பல்வேறு காரணங்களை சொல்லி சமாளித்து, தற்பொழுது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி சில்லறை வியாபரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரோஷி அவர்களிடம் எடுத்த நேர்காணல்.

ஆடு மாட்டிறைச்சிக்கு எதிராக தொடர்ச்சியான வதந்திகள் வருவதன் பின்னணி என்ன? தற்பொழுது நடந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“மனிதர்களுக்கு காய்ச்சல் என்றால் என்ன செய்வார்கள். மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்து பார்த்த பிறகுதான் அது என்ன காய்ச்சல் என்று தெரிய வரும். அதுபோல பறிமுதல் செய்த இறைச்சியை கால்நடை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்த பின்னரே அதிகாரிகள் முடிவை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது முதலில் தவறு. கண்டிக்கத்தக்கது.

சென்னை ஆட்டிறைச்சி கோழி இறைச்சி சில்லறை வியாபரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரோஷி

அந்த பெட்டியில் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்று சொல்கிறார்கள், எனில், நாம் ஒரு நபருக்கு கொரியர் அனுப்புகிறோம். அதில் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்றால், கொரியர் நிறுவனம் ஏன் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்று கேட்பது வழக்கம். அப்படி ரயிலில் அனுப்பும்போது புக் செய்த ரயில்வே நிர்வாகம் ஏன் அதை கவனிக்கவில்லை? அரசு இறைச்சிக் கூடத்தில் இருந்து அனுப்பியவை அல்ல என்கிறார்கள். இறைச்சிக் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை செய்வது வழக்கம். ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் ஒரு கடை உள்ளது என்றால் அது அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்? ஏன் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இறைச்சிக்கு எதிராக இதுபோன்று வருவது புதிதல்ல. ஏறக்குறைய பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை இருந்து வருகிறது. எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் அதிகம் என்பதால் நான் பார்த்த பல படங்களில் கொலை, கொடுஞ்செயல் செய்வது எல்லாம் முசுலீமாகத்தான் காட்டி வருகிறார்கள். அதிலே இதுவும் ஒருவகைதான். இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்-ஸினுடைய அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. மாடுதான் அவர்களுடைய பகவானாக இருக்கிறது. மற்றதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.”

தமிழகத்தில் ஆட்டிறைச்சி கிடைக்கும்போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதன் தேவை என்ன?

தமிழகத்தில் இன்றைக்கு ஆடு மிகவும் பற்றாக்குறையாகி விட்டது. கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் படித்து விட்டு நகரத்தை நோக்கி வந்துவிட்டதால் ஆடு வளர்ப்பும் குறைந்துவிட்டது. மேலும் விலையும் அதிகம். ஆனால் கறி சுவையாக இருக்கும். அதேபோல ஹைதராபாத், மகாரஷ்டிரா, குண்டூர், கூடூர், பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள ஆடுகள் கொஞ்சம் தரமானதாக இருக்கும். அங்கேயும் விலை அதிகம்.

படிக்க :
♦ ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
♦ தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி

ஆனால், ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டிறைச்சியின் விலை மிகவும் குறைவாக இருக்கும். இந்தத் தொழிலில் மார்வாடிகள் உட்பட எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். ஆனால் அங்கே யாரும் சாப்பிடுவதில்லை. அதனால் வெறும் 300 ரூபாய்க்கு அனுப்பி விடுகிறார்கள். இது இன்னும்கூட விலை குறைவாக இருக்கும். அதனால் வாங்குகிறார்கள்.

மேலும், ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுபவர்கள் கேட்பது லெக் பீஸ்தான். அதுவும் 500 ரூபாய்க்கு கேட்கிறார்கள். எங்களுக்கு கிடைப்பதே அந்த விலைக்குத்தான் எனும்போது எப்படி அது கட்டுப்படியாகும். ஆக ராஜஸ்தான் ஆடு குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அவர்களுக்கு லெக் பீஸ் கொடுத்து விட்டு அதன் சதைக்கறி, மார்பு கண்டம், இடுப்பு பகுதிகளை மற்ற உணவகங்களுக்கு தருவார்கள். நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு உள்ளூர் கறியின் சுவை என்ன என்பதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தேவை லெக் பீஸ். அதைக் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். அவ்வளவுதான்.

ராஜஸ்தான் ஆட்டையே உயிரோடு வாங்கி வந்தால் பிரச்சினையில்லை. அதனை வெட்டி ஐஸ் பெட்டியில் வைத்து அனுப்பி விடுகிறார்கள். அங்கிருந்து வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. அதற்குள் அது கெட்டு  விடுகிறது. அதனால்தான் அந்த மாதிரி தெரிகிறது. மற்றபடி நாய்க்கறியை வாங்கி போடுமளவிற்கு மோசமான மனிதர்கள் இல்லை. வெறுமனே வாலைப் பார்த்து சொல்வது மிகமிக தவறு.

அதேபோல் இறைச்சி இறக்குமதி செய்பவர்களும் இறைச்சிக்கடைகள் அரசால் அனுமதிக்கப்பட்டவையா, அதன் தரம், இறைச்சி கூடத்தின் அனுபவம் எல்லாவற்றையும் கவனித்து வாங்க வேண்டும். இல்லையெனில் தொழில் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை உணரவேண்டும்.

ஒருவேளை அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்யாமல் இருந்திருந்தால் இந்த இறைச்சி விற்பனையாகி இருக்கும்தானே?

மனமுவந்து எப்படி செய்ய முடியும்? இறைச்சி கெட்டுவிட்டது என்று தெரிந்தாலே கொடுக்க மாட்டோம். கறிக்கு ஒரு தன்மை இருக்கிறது. ஆட்டுக்கறி, மாட்டுக்கறியை பத்து மணி நேரம் சூடு பண்ணினாலும் எந்த பிரச்சனையும் இல்லை. சூடு பண்ணித்தான் விற்க முடியும். மத்தக் கறியை அவ்வாறு சூடு பண்ணினால் கெட்ட வாடை அடிக்கும். அதிலிருந்து இது எந்தமாதிரியான கறி என்பதை கண்டுபிடித்து விடலாம்.

எல்லா உணவகங்களுக்கும்  அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள். அதில் நல்லதா, கெட்டதா என்பதை கண்டுபிடித்து விட முடியும். அதனால் கெட்டப் பெயர் வியாபரிகளுக்குத்தான். ஆக தொழிலில் நீண்டகால லாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒருவேளை நீங்கள் சாப்பிடும் உணவு கெட்டுப் போனதாகவோ, வேறு கறி மாதிரி தெரிந்தால் நீங்கள் தாரளமாக புகார் அளிக்கலாமே!

சென்னையில் இருக்கும் நடைமுறை என்ன? எப்படி எல்லா இடங்களுக்கும் கறி கொண்டு செல்லப்படுகிறது?

சென்னையில் மொத்தம் மூன்று ஸ்லாடர் ஹவுஸ் (இறைச்சிக் கூடங்கள்) இருக்கின்றன. பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாபேட்டை ஆகிய இடத்தில் உள்ளன. இதனை நம்பி 2000 மட்டன் ஸ்டால்கள், 6000 தொழிலாளிகள் இருக்கின்றார்கள். அதுபோக தனிக்கடைகளாக நீலாங்கரை, குன்றத்தூர், போரூர், ஆகிய இடங்களில் இருக்கின்றது.

சென்னை சிட்டி லிமிட்டில் உள்ள பெரம்பூர் இறைச்சிக் கூடத்தில் சாதாரண நாட்களில் 1,500 ஆடுகளும், ஞாயிற்றுக் கிழமையில் 4,000 ஆடுகளும் வெட்டப்படும். இங்கிருந்து 300 மட்டன் ஸ்டால்கள் கறிவாங்கிச் சென்று விற்பனை செய்வார்கள்..

இறைச்சிக்கூடத்தில் உயிருள்ள ஆட்டை வெட்டுவதற்கு முன் எதாவது நோய் தொற்றியுள்ளதா என்று கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்வார்கள். அதன்பிறகே அறுப்பதற்கு அனுமதி வழங்குவார்கள். ஆட்டின் தொடையில் அதிகாரிகள் முத்திரை குத்திய பிறகே அவை வெளியே கொண்டு வரப்படும். இதுதான் நடைமுறை. அந்தக்கறி 100% தரமானது. இதனோடு ஒப்பிடும்போது ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கறி தரமானதாக இருக்காது. அதற்கான காரணத்தை முன்னதாகவே சொல்லியிருப்பேன்.

அதேபோல் நம்மூரிலேயே சிலர் தனியாக கடைவைத்து வெள்ளாடு, செம்மறிஆடு வாங்கி வந்து அறுக்கிறார்கள். அது முழுக்க முழுக்க இல்லீகல். மருத்துவரின் ஒப்புதல் இல்லாமல் அறுக்கக் கூடாது. இருந்தாலும் கடைகள் தனியாக வைப்பதற்கு காரணம் போதுமான இறைச்சிக்கூடம் இல்லை. பெரம்பூர் ஆடுதொட்டி நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. அப்புறம் வில்லிவாக்கம், சைதாபேட்டையில் இருக்கிறது. இது மட்டும் போதாது. நிறைய இறைச்சிக் கூடங்கள் அரசு சார்பாக திறக்க வேண்டும். அப்பொழுதுதான் தரமான கறி பஞ்சமில்லாமல் மக்களுக்கு கிடைக்கும். ஆனால், அரசு அதை ஏன் செய்ய மறுக்கிறது என்று தெரியவில்லை. நான் இதற்காக பல முயற்சியை எடுத்து விட்டேன். ஒன்றும் நடக்கவில்லை.

தற்போது பரவிய இந்த நாய்க்கறி வதந்தியால் விற்பனை பாதிக்கப்பட்டதா?

ஆமாம். மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வாண் டே என்று மொத்தம் 16 நாட்கள் ஸ்லாடர் ஹவுசுக்கு லீவு. இந்நாளில் ஆடு வெட்டக்கூடாது. வெட்டிய கறியும் விற்கக்கூடாது என்று தடை இருக்கிறது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

கிருத்திகை, புரட்டாசின்னு வரும் நாட்களில் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால் கடையில் வந்து சாப்பிடுவார்கள். இன்னொரு பக்கம், இன்றைக்கு ஆன்லைன் பிசினஸ் வந்து விட்டது. நல்லது கெட்டது என்றால் வீட்டில் சமைப்பது இல்லை. ஆர்டர் கொடுத்து பக்கெட்  பிரியாணி வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இதனால் கறி விற்பனையும் குறைந்து வருகிறது.

முன்பெல்லாம் தீபாவளிக்கு இரவு முழுவதும் கடை இருக்கும். இப்பொழுது இல்லை.   இந்த மாதிரி சமயத்தில் வதந்தி பரவினால் எப்படி விற்பனையாகும். சாப்பிடும்போது அந்த சிந்தனைதானே வரும். இந்த பிரச்சனைக்கு பிறகு 20% வரை விற்பனை குறைந்து விட்டது.

ஆடுகளை வெளியூரில் இருந்து கொண்டு வருவதற்கு எதாவது தடைகள் இருக்கிறதா?

தமிழகத்திற்குள் எதுவும் இல்லை. ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வர சிரமம் இருக்கிறது. குண்டூர் ஆட்டின் கறி நன்றாக இருக்கும்.  ஆனால் இதனை கொண்டு வர பத்து இடத்தில் மாமூல் கொடுக்க வேண்டும்.  உதாரணமாக ஒரு லாரியில் அதிகபட்சம் 230 ஆடுகள் கொண்டு வரலாம். அப்படி கொண்டு வரும்போது செக் போஸ்டில் இருப்பவர்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்.

விலங்குகள் நல வாரியம் பிடித்தால், தண்ணீர் காட்டினியான்னு கேட்டு மிரட்டுவாங்க. காட்டிட்டோம்னு சொன்னா, எதுக்கு அதிக ஆடு ஏத்துனன்னு கேட்பாங்க. இதனாலதான் பிரச்சனையே. இந்த பிரச்சனைய தவிர்க்கக்கூட ரயில் மூலமா கொண்டு வருவாங்க. இதுலயும் மாமூல் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

சரி! இப்ப கொண்டு வந்த இறைச்சிப் பெட்டியில மீன் என்று குறிப்பிட்டு இருந்ததா சொல்றாங்களே?

நீங்க ஏர்போர்ட்டுக்கு போனிங்கன்னா வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் பொருளுக்கு ஏற்ற மாதிரி வரி வசூலிப்பாங்க. அதுபோல இங்க மீனுக்கு ஒரு வரி, மட்டனுக்கு அதிக வரின்னு வாங்குறாங்க. அதனை தவிர்க்கத்தான் இந்த மாதிரி எழுதி வருகிறது. எனவே இந்த தொழிலில் இருக்கின்ற நடைமுறை பிரச்சனைகளை எல்லாம் களைய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்சினையால் மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி சரி செய்ய போகிறீர்கள்?

எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் ரயில்வே, கார்ப்பரேசன் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைவரும் கூட்டாக சேர்ந்து நடந்த தவறு குறித்து பேட்டி அளிக்க வேண்டும். அதன்மூலம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை போக்க வேண்டும். இது அவர்களின் கடமை.

தொடர்ந்து மாட்டிறைச்சிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்பிஜேபி எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே?

அப்படியானால் குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள். முசுலீம் பெயரில் கடை இருக்கும். ஆனால் உரிமையாளர் ஒரு மார்வாடியாக இருப்பார். இங்கிருந்து இறைச்சியை டன் கணக்கில் ஏற்றுமதி செய்கிறார்கள். அதை ஏன் தடை செய்யவில்லை. இவர்களோட ஆட்களுக்கு லாபம் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

படிக்க :
♦ விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

மேலும், அசைவம் சாப்பிடக்கூடாது, மிருகத்தனமானவர்களா மாறிவிடுவார்கள் என்கிறார்கள். இந்தக் கருத்து முட்டள்தனமானது. எந்த உணவையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கதிகமாக எதை உட்கொண்டாலும் ஆபத்துதான். எனக்கு தெரிந்து வீட்டில் அசைவம் சாப்பிடவில்லை என்றால் கடைகளில் வந்து சாப்பிடுகிறார்கள். சைவத்தில் இருந்து அசைவத்துக்கு மாறியவர்கள்தான் அதிகம். மனிதனே மனிதனை சாப்பிடும் (ஒருவனை ஒருவன் ஏமாற்றும்) காலத்தில் இருக்கிறோம், எனும்போது கறி சாப்பிடக்கூடாது என்பது தப்பு. இந்த விஷயத்தில் அரசியல் சதி-அதிகாரிகளின் சதி இருப்பதாகத்தான் பார்க்கிறேன்.

இனி வரும் காலத்தில் இறைச்சித் தொழில் சுமூகமாக நடக்குமா?

பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் செய்ய முடியாது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் அரசுக்கு  பெரும் இழப்பு ஏற்படும்.