மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 31

மாக்சிம் கார்க்கி
வன் வந்து சென்ற நாலாவது நாளன்று அவள் அவனுடைய வீட்டுக்குக் குடி போனாள். அவளது இரண்டு பெட்டிகளோடு அவள் ஏறிச் சென்ற வண்டி அந்தத் தொழிலாளர் குடியிருப்பை விட்டு வெளிவந்து, ஊருக்குப் புறம்பேயுள்ள வெம்பரப்புக்கு வந்து சேர்ந்தது. உடனே அவள் பின்னால் திரும்பிப் பார்த்தாள். எங்கே இருள் படிந்த இடையறாத் துன்பம் கலந்த வாழ்வை அவள் அனுபவித்தாளோ, எங்கே புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.

கரி படர்ந்த பூமியின் மேல் ஆகாயத்தை நோக்கி புகைபோக்கிகளை உயர நீட்டிக்கொண்டு கருஞ்சிவப்புச் சிலந்தியைப் போல நின்றது தொழிற்சாலை. அதைச் சுற்றிலும் தொழிலாளர்களின் மாடியற்ற ஒற்றைத்தள வீடுகள் மொய்த்துச் சூழ்ந்திருந்தன. அவை சிறிதும் பெரிதுமாக நிறம் வெளிறிக் குழம்பிப்போய், சேற்றுப் பிரதேசத்தை அடுத்து நின்றன. அந்த வீடுகள் தமது ஒளியற்ற சிறுசிறு ஜன்னல்கள் மூலம் அடுத்தடுத்த வீடுகளைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அந்த வீடுகளுக்கு மேலாக, தொழிற்சாலையைப் போலவே கருஞ்சிவப்பாகத் தோன்றும். தேவாலயம் உயர்ந்து நின்றது. அதனுடைய ஊசிக் கோபுரம் புகை போக்கிகளின் உயரத்தை விட குட்டையாயிருந்தது.

பெருமூச்செறிந்து கொண்டே தனது கழுத்தை இறுக்கி திணறச் செய்வதுபோலத் தோன்றி தனது ரவிக்கையின் காலரைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள் தாய்.

“போ இப்படி!” என்று முனகிக்கொண்டே வண்டிக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இழுத்தான். அவன் ஒரு கோணக்கால் மனிதன். குட்டையானவன், வயதை நிதானிக்க முடியாத தோற்றமுடையவன். அவனது தலையிலும் முகத்திலும் வெளிறிய மயிர்கள் சில காணப்பட்டன. கண்களில் வர்ண ஜாலம் எதுவுமே இல்லை. அவன் வண்டிக்குப் பக்கமாக நடந்து வரும்போது அசைந்து அசைந்து நடந்தான். வலப்புறம் போவதோ, இடப்புறம் போவதோ, அவனுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று தெளிவாகத் தெரிந்தது.

“சீக்கிரம் போ” என்று உணர்ச்சியற்ற குரலில் குதிரையை விரட்டிக் கொண்டே, தனது கோணல் கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்தான். அவனது பூட்சுகளில் சேறு ஒட்டி அப்பிக் காய்ந்து போயிருந்தது. தாய் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது இதயத்தைப் போலவே வயல்வெளிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன.

கொதிக்கும் மணல் வெளியில், குதிரை தலையை ஆட்டிக்கொண்டு கால்களை கனமாக ஊன்றி நடந்தது. மணல் சரசரத்தது; அந்த லொடக்கு வண்டி கிரீச்சிட்டது. வண்டிச் சக்கரத்தால் ஏற்படும் ஒலி புழுதியுடன் பின்தங்கிவிட்டது…..

நிகலாய் இவானவிச் நகரின் ஒரு கோடியில் ஒரு அமைதி நிறைந்த தெருவில் குடியிருந்தான். பழங்காலக் கட்டிடமான ஒரு இரண்டடுக்கு மாடி அருகில், பச்சை வர்ணம் அடிக்கப் பெற்ற சிறு பகுதியில் அவனது வாசஸ்தலம் இருந்தது. அந்தப் பகுதிக்கு முன்னால் ஒரு சிறு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்திலுள்ள பன்னீர் பூ மரக்கிளைகளும், வேல மரக்கிளைகளும் வெள்ளிய இலைகள் செறிந்த இளம் பாப்ளார் மரக்கிளைகளும் அந்தப் பகுதியிலிருந்த மூன்று அறைகளின் ஜன்னல்களிலேயும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. அறைகளுக்குள்ளே எல்லாம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தன. மோன நிழல்கள் தரைமீது நடுநடுங்கும் கோலங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. சுவரோரங்களில் புத்தக அலமாரிகள் வரிசையாக இருந்தன. அவற்றுக்கு மேல் சிந்தனை வயப்பட்டவர்கள் மாதிரித் தோன்றும் சிலரின் உருவப் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

“இந்த இடம் உங்களுக்கு வசதியானதுதானே?” என்று கேட்டுக்கொண்டே நிகலாய் தாயை ஒரு சிறு அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான். அந்த அறையிலுள்ள ஒரு ஜன்னல் தோட்டத்தை நோக்கியிருந்தது. இன்னொரு ஜன்னல் புல் மண்டிக்கிடந்த முற்றத்தை நோக்கியிருந்தது. அந்த அறையின் சுவரோரங்களிலும் புத்தக அலமாரிகள் இருந்தன்.

”நான் சமையல் கட்டிலேயே இருந்து விடுகிறேன், சமையல்கட்டே வெளிச்சமாகவும் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறதே…..” என்றாள் தாய்.

அவளது வார்த்தைகள் அவனைப் பயமுறுத்துவது போலிருந்தது. அதன் பிறகு அவன் அவளிடம் எப்படியெல்லாமோ சுற்றி வளைத்துப் பேசி, அவளை அந்த அறையில் வசிக்கச் சம்மதிக்கச் செய்த பிறகுதான், அவனது முகம் பிரகாசமடைந்தது.

அந்த மூன்று அறைகளிலுமே ஒரு விசித்திரமான சூழ்நிலை நிரம்பித் தோன்றியது. அங்கு நல்ல காற்றோட்டம் இருந்தது. சுவாசிப்பது லகுவாயிருந்தது. எனினும் அந்த அறையில் யாருமே உரத்த குரலில் பேசுவதற்குத் தயங்குவார்கள். சுவர்களில் தொங்கிக்கொண்டு குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சித்திரங்களிலுள்ள மனிதர்களின் அமைதி நிறைந்த சிந்தனையைக் கலைப்பது அசம்பாவிதமானது போலத் தோன்றியது.

“இந்தச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விட வேண்டும்” என்று ஜன்னல்களிலிருந்த பூந்தொட்டிகளின் மண்ணைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள் தாய்.

”ஆமாம்” என்று வீட்டுக்காரன் தனது குற்றத்தை உணருபவன் போலச் சொன்னான். “எனக்கு அவையெல்லாம் ரொம்பப் பிடித்தமானவை. ஆனால் எனக்கு இதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை.”

தனது விசாலமான அந்த வீட்டில்கூட நிகலாய் மிகவும் பதனமாகவும் நிதானமாகவும் யாரோ ஒரு அன்னியன் மாதிரி நடமாடித் திரிவதைத் தாய் கண்டாள். அவன் அந்த அறையிலுள்ள பல பொருள்களையும் குனிந்து உற்றுப் பார்த்தான்.

அப்படிப் பார்க்கும்போது தன் வலது கையின் மெல்லிய விரல்களால் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டும், கண்களைச் சுருக்கிக் கூர்மையாக்கிக்கொண்டும் தனக்கு அக்கறையுள்ள பொருள்களைப் பார்த்தான். சில சமயங்களில் அவன் ஒரு சாமானைத் தன் முகத்தருகே கொண்டு போய்க் கண்களால் தொட்டு உணர்வதுபோலப் பார்த்தான். தாயைப் போலவே அவனும் அந்த அறைக்கு முதன் முதல் வந்திருப்பவன் போலவும், அதனால் அங்குள்ள பொருள்களெல்லாம் அவனுக்குப் புதியனவாக, பழக்கமற்றதாக இருப்பது போலவும் தோன்றியது. இந்த நிலைமை தாயின் மனநிலையைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்தியது. அவள் நிகலாயைத் தொடர்ந்து அந்த இடத்தை முழுதும் சுற்றிப்பார்த்தாள். எங்கு என்ன இருக்கிறது என்று கண்டறிந்தாள். அவனது பழக்க வழக்கங்களைக் கேட்டறிந்தாள். அவன் ஏதோ ஒரு குற்றவாளியைப் போல் கள்ளக் குரலில் பதிலளித்தான். அவன் பதில் சொல்லிய பாவனையானது, ஒரு காரியத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி செய்யாமல் ஆனால் வேறுமாதிரியாகச் செய்யவும் தெரியாதவன் சொல்வது போலத் தொனித்தது.

அவள் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விட்டாள்: பியானோ வாத்தியத்தின்மீது சிதறிக் கிடந்த இசை அமைப்புத் தாள்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். தேநீர்ப் பாத்திரத்தின் மீது பார்வையைச் செலுத்தியவாறு பேசினாள்:

“இந்தப் பாத்திரத்தை விளக்க வேண்டும்.”

அவன் அந்த மங்கிப்போன பாத்திரத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தான், தன் விரலை முகத்தருகே கொண்டுபோய்க் கவனித்தான். தாய் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.

அன்றிரவு அவள் படுக்கைக்குச் செல்லும்போது அன்றைய தினத்தின் சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள். தலையைத் தலையணையிலிருந்து உயர்த்தி, வியப்போடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். வேறொருவருடைய வீட்டில் இரவைக் கழிப்பது என்பது அவளது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை. எனினும் அவளுக்கு அதனால் எந்தவிதச் சிரம உணர்ச்சியும் தோன்றவில்லை. அவள் நிகலாயைப் பற்றி அக்கறையோடு நினைத்துப் பார்த்தாள். அவனது வாழ்வை, முடிந்தவரை மேன்மையுடையதாக்கி, அவனது வாழ்க்கையின் மென்மையும் கதகதப்பும் சேருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு ஒரு உணர்வு தோன்றியது. அவனது லாவகமின்மை, வேடிக்கையான சாமர்த்தியமின்மை மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட்ட அவனது விசித்திர நடத்தை, ஞான ஒளி வீசும். எனினும் குழந்தை நோக்குக் கொண்ட அவனது பிரகாசமான கண்கள் முதலியவெல்லாம் அவளது இதயத்தைத் தொட்டுவிட்டன.

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

பிறகு அவள் மனம் அவளது மகன்பால் திரும்பியது, மீண்டும் மே தின வைபவத்தின் சம்பவங்கள் அவள் கண் முன் நிழலாடிச் சென்றன. எனினும் அந்தச் சம்பவத்தின் நினைவுச் சித்திரத்தில் இப்போது ஒரு புதிய அர்த்தமும், புதிய குரலும் அவளுக்குத் தொனித்தன. அன்றைய தினத்தைப் போலவே, அந்த தினத்தைப் பற்றிய சோக உணர்ச்சியிலும் ஏதோ ஒரு விசேஷத் தன்மை இருந்தது என்றாலும் அந்தச் சோக உணர்ச்சி முஷ்டியால் ஓங்கிக் குத்தித் தரையிலே மோதி விழச் செய்யும் உணர்ச்சிபோல் இல்லை. அந்த உணர்ச்சி இதயத்துக்குள் பன்மடங்கு வேதனையோடு துளைத்துத் துருவிப் புகுந்து, கோப உணர்ச்சியை மெது மெதுவாகத் தூண்டி, முதுகை நிமிர்த்தி நேராக நிற்கச் செய்யும் உணர்ச்சியாக இருந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க