சென்னையில் உள்ள ஒரு அம்மா உணவகம். பகல் பதினோரு மணி. உள்ள நோட்டமிட எட்டிப் பாத்தா மதியத்துக்கான சமையல் வேலையே முடிஞ்சுருச்சு. ஆனாலும் ஆவி பறக்க சுடச்சுட இட்லிய கவுன்டருக்கு எடுத்து வந்தாங்க ஒரு அம்மா. இந்த இட்லி ஆறிப்போச்சுன்னா புட்டுத் திங்க கையில பலம் வேணுங்கறது வேற விசயம். ஆனா ஆவி பறக்கும் இட்லிய பாத்தா சாப்பிட ஆசை வருதுல்ல.. அதுதான் இட்லிக்கான சிறப்பு அம்சம்.

வீட்டுல பத்து மணிக்கு சாப்புட்டு வந்த நானு நாலு இட்லிக்கு டோக்கன் வாங்கினேன்னா பாத்துக்குங்க. ஓட்டலின் ருசிக்காக வாடிக்கையாளர் தேடி வருவது போல குறைந்த வருமானத்தில் அல்லல்படும் குடிமக்கள் வாடிக்கையா தேடி வருவது அம்மா உணவகம்தான். அப்படியான வாடிக்கையாளர்களுக்காகத்தான் ஆவி பறந்தன இட்லிகள்.

பகல் பொழுதின் முடிவில் அம்மா உணவகத்தில் சுடப்படும் இந்த இட்லி, முதல்நாள் நள்ளிரவையும் கடந்து வேலை முடித்து வரும் வாடிக்கையாளர்களுக்காக. அந்த நேரம் சொல்லி வச்சாப்போல ஏழட்டு பசங்களும் வந்தாங்க. ஒரு தட்டுல இருந்த இட்லி பல தட்டுக்கு மாறிடுச்சு. அன்னதானம் வாங்கிட்டு ஆலய மண்டபத்துல சங்கடப்பட்டு எடம் பிடிக்கிறது போல அத்தன விசாலமான அறையில இரு மூலையில ரெண்டு பிரிவா உக்காந்தாங்க பசங்க.

அன்னதானம் வாங்குறதுல என்ன சங்கடமுன்னு தோணுதா ? அன்னதானம் வாங்கும் போது பக்தனா இருந்தா பிரசாதத்த பக்தியோட பொறுமையா வாங்கலாம். பசிக்காக பக்தன் போல வாங்குறவன் நிலமெ எப்படி இருக்கும். அவங்களப் பாத்து அய்யோ பாவம்னு தோன்றத விட இந்த நிலைக்கி தள்ளுன ’ஆண்டவன்’ மேலதான் அளவு கடந்த கோவம் வரும்.

போகட்டும்.. அன்னதானத்த பத்தி அப்புறம் பேசுவோம். அங்க நடந்தது என்னன்னு இப்ப பேசுவோம்.

“தம்பிங்களா நானும் உங்ககூட உக்காந்து சப்பிடட்டுமா? என்றேன் மூனு பேரு கொண்ட குழுவிடம்”.

“உக்காருங்கா. நாங்க என்ன 5 ஸ்டாரு ஓட்டல்ல டேபிள் புக்பண்ணி சாப்றாப்போல கேக்கிறிங்க. அம்மா உணவகத்து டோக்கன் இட்லிதானே உங்காருங்க பேசிட்டே சாப்புடுவோம்.”

“டேய் தமிழ் இன்பா, ஏன்டா தேவையில்லாமெ பேசுற. தப்பா எடுத்துக்காதீங்க உங்காருங்கக்கா.”

“இதுல என்ன தப்பிருக்கு தம்பி.. வயசு பசங்கன்னா இப்புடிதான் துடிப்பா இருக்கணும். சரி விடுங்க ‘தமிழ் இன்பா’ பேரு நல்லாருக்கே. தம்பிகளுக்கு எந்த ஊருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“ஜெயங்கொண்டம் பக்கத்துல கிராமம்கா. நானும் வெங்கடேசனும் ஒரே ஊரு. தமிழ்செல்வன் பக்கத்தூரு.”

“ராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரமுன்னு சொல்லுங்க. சோறு படச்ச சோழ வளநாட்டு பசங்க அம்மா உணவகத்து இட்லிக்காக லைன்ல நிக்கிறீங்க.”

“போங்கக்கா காமெடி பண்ணாதிங்க. வரலாறு பாத்தா வயித்துல ஈரத்துணிய கட்டிகிட்டு நிக்க வேண்டியதுதான். காலையிலயே வந்து பாருங்க சேரநாடு பண்டியநாடு கூடவே எத்தன வடமாநிலத்து பசங்க லைன் கட்டி நிக்கிறாங்கன்னு.”

“ ஒங்க ஊருக்கு பக்கம் நானும் வந்திருக்கேன் தம்பி, அதான் ஏதோ அந்த மண்ணு பெருமெ பேசிட்டேன். உங்க நெலமைய புரிஞ்சுக்காமெ…….” எண்ண வழிந்த முகத்தோட அசட்டுத்தனமா சிரிச்சு வச்சேன்.

“ஏய் இன்பா அக்காவுக்கு வடை வையிடா.” ஊரச்சொன்னதும் உணர்ச்சிவசத்துல பாசம் கொஞ்சம் தூக்கலானது தம்பி வெங்கடேசுக்கு.

அதுவரைக்கும் கூச்சப்பட்டு காலுக்கடியில வச்சுருந்த டீக்கடையில போட்ட மசால் வடையும் ஆச்சி இட்லிப் பொடியும் வெளிய எடுத்தான் தமிழ்செல்வன்.

“ஏண்டா வடை மட்டுந்தானடா வாங்குனோம் இட்லி பொடி எப்படா வாங்குனெ.”

“நேத்து வாங்குனது ரூம்லருந்து எடுத்துட்டு வந்தேன்.”

“சரி எனக்கு கொஞ்சம் வையிடா தமிழு.”

“உங்களுக்கு பல தடவ சொல்லிட்டண்டா.. இட்லி பொடி வாங்காமெ வந்துட்டு சாப்புட்ற எடுத்துல வந்து கடன் கேக்காதிங்கன்னு. ஆனா திரும்ப திரும்ப என்ன கோவக்காரனாக்குறீங்க.”

“சைடிஷ் இல்லாமெ டாஸ்மாக்குக்கு குடிகாரன் போகமாட்டான். அதே போல அம்மா உணவகத்துக்கும் சைடிஷ் இல்லாமெ போகக்கூடாதுன்னு சொல்லிருக்க. ஆனா மறந்துட்டேன்டா. சைடிஸ் இல்லாமெ இத சாப்பிட முடியலடா மச்சான்.”

ஒங்க இட்லி பொடி பிரச்சனையில எனக்கு வடை தர்ரேன்னு சொன்னத மறந்துட்டீங்க பாத்திங்களா.” இடையில் புகுந்து திசை திருப்ப வேண்டியதாயிட்டு.

சாரிக்கா.

பரவால்ல இன்பா. நீங்கள்லாம் எங்க, என்ன வேலை பாக்குறீங்க.?

படிக்க:
♦ அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !
♦ அம்மா சாராயம் எப்போது?

வடபழனியில உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்ல வேலை செய்றோம்கா.

ஓட்டல்ல வேலையா. பிறகு எதுக்கு இங்க சாப்ட்றீங்க. ஒங்க ஓட்டல்ல சாப்பாடு நல்லாருக்காதா?

என்னக்கா நையாண்டியா. பகல் 12 மணிக்கி வேலைக்கி போனா 1 மணிக்கெல்லாம் மதிய சாப்பாடு எந்த முதலாளி போடுவான். ராத்திரி 11 மணிக்கி வேலை முடியும். மிஞ்சுனா ஏதாவது சாப்பிட்டுக்கலாம். இல்லன்னா ரோட்டோர கடைதான்.

“ஓட்டல்ல நீங்க என்னா வேலை பாக்கிறிங்க?“

“நீங்க கேட்ட கேள்வில எனக்கு பொறக்கேறிடுச்சு. தமிழ் சொல்வாங்கா.  சொல்றா மச்சான்”.

தமிழ்செல்வனோ இட்லி பொடிக்கி பங்கம் வந்துருமோன்னு கண்ணும் கருத்துமா சாப்பிட்றதுலேயே குறியா இருந்தாப்ல.

“ நாளை பின்ன ஓட்டலுக்கு வந்துட்டு ஒங்க பேர சொல்லி  நானு பில்லு குடுக்காமெ போயிடுவேனோன்னு பயப்படுறீங்களா?”

“ஐ கரைக்டா கண்டுபிடிச்சிட்டிங்க. வேலைய தெரிஞ்சுக்காமெ விடமாட்டிங்க. இதுதான் வேலையின்னு இல்ல ஆல்ரவுண்டர் நாமெதாங்கா.”

“இந்த வேலை பிடிக்கலேன்னா ஏதாவது படிச்சு வேற வேலைக்கி போயிருக்கலாமுல்ல.”

“நானு பி.இ., வெங்கடேசன் டிப்ளமோ இஞ்சினியர், இன்பா ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சுருக்கான். நாங்க நல்லா படிக்கலையாக்கா.”

என்னுகிட்ட கேள்வி இல்ல மௌனம் மட்டும்தான் இருந்தது.

“எங்க அப்பா ரெண்டுபேரும் விவசாயம். அவங்கப்பா டிரைவரு. எஜிகேசன் லோன் போட்டு சென்னையிலதான் படிச்சோம். தங்குறது சாப்பாடுன்னு அம்மா அப்பா பாடுபட்டு அனுப்புனாங்க. படிப்பு முடிஞ்சு மூனு வருசமாச்சு. தேடுறோம் தேடுறோம் வேலைய கண்டே புடிக்க முடியல.”

“போட்டி நெறஞ்சதுப்பா உலகம்.. நமக்கானத நாமதான் தேடி கண்டுபிடிக்கனும்.”

“நாமெ இங்க சாப்பிட உக்காந்ததுல இருந்து டிவியில என்ன ஓடிட்டு இருக்குன்னு கவனிச்சிங்களாக்கா.”

படிக்க:
♦ எம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா !
♦ ஐயர் மனசுல பெரியார் !

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். என்ற முழக்கத்தை மறைந்த ஜெயலலிதா அம்மா முழங்கினார். அடுத்து அ.தி.மு.க சாதனைகளை பட்டியலிட்டு காட்சிகள் வந்து போயின.

“அவங்க சொல்ற தோரணைய பாத்திங்களா எல்லாத்துக்கும் மேல நின்னு தகுதியான ஒரு எடத்துல இருந்து சொல்றோம்கறத உறுதிபடுத்துது. அப்ப தகுதிய வளத்துக்கறது நம்ம கடமை வேல கொடுக்குறது அவங்க கடமைதான.”

“அன்னை உள்ளத்தோட உணவு கொடுத்தது முதல் செஞ்ச சாதனைய பட்டியல் போட்டு சொல்றாங்களேப்பா. அதுல உங்க வேலை மட்டும்தான் மிஸ்சாயிருச்சு.”

“அ.தி.மு.க அரசு சாதனையின்னு சொல்றதெல்லாம் அவங்க அமைச்சருக்கே நினைவிருக்குமான்னு தெரியல எங்களுக்கு வாய்ப்பாடு போல மனப்பாடம் ஆயிடுச்சு. எட்டு இட்லி சாப்பிடறதுக்குள்ள பத்து வாட்டி சாதனை பட்டியல் ரிப்பீட்டாகுது.

அது போகட்டும். நான் சொல்ல வர்றது மன்னர் காலத்து அன்னதான சந்திரம் சாவடி எல்லாம் நம்ம ஊருபக்கம் பாத்துருப்பீங்க. அதே போல இந்த காலத்துல அம்மா உணவகம். இது போல சாதனையல்லாம் நமக்கு வேண்டாம். படிச்ச படிப்புக்கு வேல குடுத்தா சாப்பாட்ட நாமே வாங்க முடியும்னு சொல்றேன்.”

படித்தவர்களுக்கு மோடி கொடுக்கும் வேலைவாய்ப்பு – பக்கோடாவாலா

“படிப்பு கடன் போல தொழில் கடன் போட்டு ஏதாவது செய்லாமேப்பா?”

“எது மோடி சொன்னாரே படிச்சவங்க பக்கோடா போடலாம்னு அதுவா? படிக்க வாங்குன கடன் எங்கள படிக்க வைக்க அப்பா அம்மா வாங்குன கடன் எல்லாமே அந்தரத்துல தொங்குது. திரும்ப கடனா போங்கக்கா.”

“வருத்தப் படாதிங்கப்பா கூடி சீக்கிரம் நல்லது நடக்கும்.”

“படிக்கிறவங்க, படிச்சுட்டு வேலை தேடுறவங்க, குருப் தேர்வு எழுதி எப்படியாவது அரசு உத்தியோகத்த அடைய நினைக்கிறவங்க, எங்களப்போல பராமரிப்புக்காக ஒரு வேல பாத்துக்கிட்டு படிப்புக்கான வேலைய தேட்றவங்க எல்லாரும் பெரும்பாலும் அம்மா உணவகத்துலதான் ஒன்னு கூடுறோம். அப்ப வந்து பாருங்க எதிர்காலத்த பத்துன ஏக்கமும், ஏமாற்றமும் நெறஞ்ச அவங்க முகத்த.”

”அக்கா! ஆசை ஐ ஏ ஏஸ் ஆகனுங்கறது அமைப்பு அம்மா இட்லி சாப்பிடனுங்கறது. இருந்தாலும் நீங்க சொல்றீங்க உங்க நம்பிக்கை நடைமுறைக்கு வந்தா சந்தோசம்.”

அம்மா உணவகத்து இட்லி வயித்தை அடைத்தது. அவர்கள் பேச்சு நெஞ்சை அடைத்தது. ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையை அழகாக்க விரும்பியவர்களை அம்மா உணவகத்து வாடிக்கையாளர்களாக ஆக்கியது யார் ?


– சரசம்மா