ஜா புயல் பாதிப்புகளை தேசிய பேரிடர் இழப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் இராணுவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் போலீசையும் களப்பணியில் இறக்கிவிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது மக்கள் அதிகாரம் அமைப்பு.

மேலும், இந்த கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்ற வேண்டுகோளுடன் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவரும், தி.மு.க. தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் கடிதம் அளித்துள்ளனர்.

கடிதத்தின் முழு விவரம் பின்வருமாறு:

கஜாப்புயல் ஏற்படுத்திய பேரழிவு, இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று. கரையைக் கடந்த ஊர்கள் அனைத்தும் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. புயல் அடித்த பின் ஐந்து நாட்கள் வரை மக்களுக்கு குடிநீர், உணவு, கொடுக்க முடியவில்லை. ஊரே இருண்டு கிடக்கிறது. இருபது நாட்கள் ஆன பிறகும்கூட எங்கள் ஊருக்கு எந்த அதிகாரியும் வரவில்லை, குடிநீர் இல்லை, என மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் செய்கிறார்கள்.

புயல் அடித்து இருபது நாட்களைக் கடந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளைத் தவிர எதுவும் செய்யவில்லை. தமிழக அரசு ஒதுக்கிய 1300 கோடியும், பா.ஜ.க. மோடி அரசு ஒதுக்கிய 353 கோடியும் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது. கஜா புயல் ஏற்படுத்திய பேரழிவிற்கு போதுமான நிதி ஒதுக்காமல் நிவாரண மீட்பு பணிகள், இழப்பீடுகள் தரப்படும் என்பது பித்தலாட்டம். வயல் வெளிகளை கடந்து பல கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் செல்ல ஒரு மாதத்திற்கு மேலாகும். கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சரிசெய்யப்படாமலேயே நிவாரண முகாம்களை காலி செய்து மக்களை விரட்டுகிறது அரசு. வீடுகள் சேதத்திற்கு அறிவித்த இழப்பீடும் ஆள் கூலிக்குகூட போதாது. இது வரை தார்ப்பாய் வழங்கப்படவில்லை. குடும்ப உதவித்தொகை ரூபாய் ஐயாயிரம் வழங்கப்படவில்லை. இழப்பீடுகள் முழுமையாக கணக்கெடுக்கப்படாமல் சேத மதிப்பீடு மறைக்கப்படுகிறது.

மரம் ஒன்றுக்கு ரூபாய் இருபதாயிரம் கேட்டு தென்னை விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு தென்னைக்கு இழப்பீடாக ரூ 1100 மட்டுமே என அறிவித்துள்ளது. கஜா புயல் சேதத்தால் மனமுடைந்து சோழகன் குடிகாடு சுந்தரராஜ், நெடுவாசல் திருச்செல்வம் உட்பட பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற விவசாயிகள் நடைப்பிணமாக உள்ளனர். கண்ணீர் வற்றி காலம் கடந்து போனால், விரக்தியுற்று மக்கள் களைத்து போய் விடுவார்கள்;  அவலங்கள் அப்படியே பழகி விடும்; என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை. ஒக்கிப்புயல், தானேப்புயல், வர்தாப்புயல் என பேரிடர் இழப்பீடு அறிவிப்புகள் எதையும் முழுமையாக நேர்மையாக செயல்படுத்தியதில்லை.

படிக்க:
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !
தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!

தஞ்சாவூர், திருச்சி, பல்லாவரம், வெலிங்டன் ஆகிய தமிழக நகரங்களிலும் வேதாரண்யத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் கோடியக்கரையிலும் முகாமிட்டுள்ள இந்திய இராணுவத்தையும், ஒன்றே கால் இலட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் போலீசையும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களையும் புயலுக்கு அடுத்த நாளே களத்தில் ஒருங்கிணைந்தத் திட்டத்தோடு இறக்கி இருந்தால் பெரும்பணிகளை முடித்திருக்கலாமே!

நிவாரணப் பணிகளை செய்திட மனித ஆற்றலுக்கா குறைச்சல்? நூறு நாள் வேலைத் திட்டத்தை இதோடு இணைத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? பலம் பொருந்திய அரசுக் கட்டமைப்பு முயன்றிருந்தால் ஜெனரேட்டர், தண்ணீர் லாரிகள், சோலார் லைட், உணவுப்பொருட்கள், உடைகள், தார்ப்பாய்கள், துணிகள் என அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தையும் முன்னின்று நாடு முழுவதும் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர் நின்று வழங்கியிருக்க முடியும் ஏன் செய்யவில்லை? என்பதை பரிசீலித்து பார்க்க வேண்டும்.

தமிழக மக்களின் உணவுத் தேவையை சுயசார்புடன் பாதுகாத்து வந்த டெல்டா விவசாயி இன்று பேரழிவை சந்தித்து கையேந்தி நிற்கிறான். வஞ்சகத்தால் காவிரி பொய்த்துப் போனது, டெல்டாவை பாலைவனமாக்கும் கார்ப்பரேட்டு திட்டங்கள் படையெடுக்கின்றன. மக்களை அப்புறபடுத்தும் வேலையை கஜா புயல் துரிதமாக்கி இருக்கிறது.

வீடு கட்டுவது ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்நாள் கனவுமட்டுமல்ல, அடிப்படைத்தேவை. கஜாப்புயலால் வீடிழந்த மக்களின் வாழ்க்கை நிலையை எப்படி மீட்டுத்தரப்போகிறோம்? இழந்த தோப்புக்களும் படகுகளும்தான் அவர்களின் ஒரே மூலதனம். கஜா அவற்றை அழித்து நாசமாக்கி விடட்து. அவர்கள் எல்லோரும் தம் வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். ஆனால் தினசரி வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் செலவு மிக்கதாக இருக்கிறது.

நாம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அவர்களின் தேவையில் சொற்ப சதவீதமே. இழந்தவற்றை அரசால் மட்டுமே ஈடு செய்ய முடியும். இந்த அரசு தானாகப் பார்த்து மனமிறங்கி வந்து கஜா புயலுக்கு நிவாரணம் தந்துவிடும் என்றும் இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கக் கைகொடுக்கும் என்றும் நம்பிக் கொண்டு சும்மா இருக்க முடியாது. நம் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்ய நாம் ஒன்றுபட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்த வேண்டுமென கோருகிறோம்.

தோழமையுடன்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

♠♠♠

ஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மற்றும் புணரமைப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், சித்தமல்லி.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமரன்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு, எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.

களப்பணியில் இணைந்து பணியாற்ற / நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் மக்கள் அதிகாரம் தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம், சென்னை – 9176 801656
மக்கள் அதிகாரம், திருவாரூர் – 9962 366321, 9626 352829
பு.மா.இ.மு., வேதாரண்யம் – 6383 461270

தகவல்:
மக்கள் அதிகாரம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. கஜா புயலில் மக்கள் அதிகாரம் தோழர்களின் செயல்பாடுகள் இன்றியமையாதது. மக்கள் அதிகாரம் களத்தில் இருப்பது எங்களுக்கு ஒரு ஆறுதல்தான். ஒரு கூட்டு செயல்பாடாக இதை திட்டமிட்டு எல்லோரையும் ஒன்றிணைத்து அம்மக்கள் இத்துயரிலிருந்து மீளுவதை மக்கள் அதிகாரம் உறுதி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க