த்திய பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 106 இடங்களை பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை உறுப்பினர்கள் மூன்று இடங்களிலும் வென்றுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் இரண்டு உறுப்பினர்கள் தேவை. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆதரவு தரும் பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக நடத்திய திருவிளையாடல்களை நாடறியும்.

மணிப்பூர், கோவா, மேகாலயாவில் ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மையை விலை கொடுத்து வாங்கியது போல இங்கேயும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? பனியா புகழ் குஜராத்தில் இருந்து வந்திருக்கும் மோடியும் அமித்ஷாவும், ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் கட்சிகளை உடைப்பதற்கும் விலைக்கு வாங்குவதற்கும் சோடை போனவர்களல்ல.

கடைசியாக நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் கூட அவர்கள் இதை முயன்றார்கள். அப்போது கவர்னர் என்ன செய்தார்? பெரும்பான்மை இல்லையென்றாலும் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். எடியூரப்பாவும் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக சபதம் செய்தார். பிறகு யாரையும் விலைக்கு வாங்க முடியவில்லை என்று ராஜினாமா செய்தார்.

படிக்க:
♦ பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

இந்து மதவெறியின் அடிநாதமாக திகழும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் சட்டீஸ்கர் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் ஆட்சியை இழந்திருப்பதை பாஜக சாதரணமாக எடுத்துக் கொள்ளாது. ஆகவே மத்தியப்பிரதேசத்தில் சதிகள் பல செய்தாவது ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா முயன்றே தீரும்.

தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானத்தில் காங்கிரசுக் கட்சியினை ஆதரிக்கப் போவதாக மாயாவதி தெரிவித்திருக்கிறார். ஆனால் மாயாவதி கட்சி எம்.எல்.ஏக்களை வளைப்பது பாஜக முயலாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஒருவேளை முதலில் காங்கிரசை ஆட்சியமைக்க வாய்ப்பளித்து விட்டு பின்னர் சில எம்.எல்.ஏக்களை வளைப்பதற்கு எவ்வளவு நேரமாகும்?

அடிபட்ட நரிக்கு ஆத்திரம் அதிகம் என்பது உண்மை. ஆனால் பாஜக போல காங்கிரசும் இத்தகைய குதிரைப்பேர வர்த்தகத்தில் தேர்ந்த கட்சி என்பதால் அது அத்தனை சுலபத்திலும் நடக்காது. நாடு முழுவதும் பாஜக-விற்கு உள்ள எதிர்ப்புணர்வை கணக்கில் கொண்டு மோடி அணி தானே அமைதி காத்தால் ஒழிய காங்கிரசு கட்சி போபாலில் உடனே கொடி ஏற்றுவது சிரமம். ஒருவேளை கொடி ஏற்றினாலும் எத்தனை காலம் பறக்க விடுவார்கள் என்பதும் கேள்விக்குறி!

– மதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க