மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 35

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
ந்தத் தார் எண்ணெய்த் தொழிலாளிகள் தங்களது அன்றைய வேலை முடிந்த உற்சாகத்தோடு திரும்பி வந்தனர்.

அவர்களது பேச்சுக் குரல் தாயை எழுப்பிவிட்டு விட்டது. அவள் எழுந்திருந்து, புன்னகை செய்து கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் வெளியே வந்து சேர்ந்தாள்.

“நீங்களோ வேலைக்குப் போனீர்கள். நானோ அங்கே சீமாட்டியைப் போல் செல்லமாகத் தூங்கினேன்” என்று கூறிக்கொண்டே அவர்களை வாஞ்சையோடு பார்த்தாள்.

“அதற்காக உன்னை மன்னித்து விடலாம்” என்று சொன்னான் ரீபின். அவனது அமித சக்தியைக் களைப்பு ஆட்கொண்டு விழுங்கிவிட்டது. எனவே அவன் சாந்தமாக இருந்தான்.

”இக்நாத்! கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் என்ன? நாங்கள் இங்கே, எங்கள் வீட்டு வேலைகளை ஒவ்வொருவராக முறை வைத்துச் செய்கிறோம். சாப்பாடும் தேநீரும் தயாரிப்பது இன்று இக்நாத்தின் வேலை, அவனது முறை.”

“இன்று நான் என் முறையை யாருக்காவது தாராளமாக சந்தோஷமாக விட்டுக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவன் அடுப்பு மூட்டுவதற்காகச் சுள்ளிகளையும் சிராத்துண்டு விறகுகளையும் சேகரிக்க ஆரம்பித்தான்.

இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது.

”நமது விருந்தாளிகளோடு இருப்பதற்கு நீ ஒருவன் மட்டுமே விரும்பவில்லை” என்று கூறிக்கொண்டே எபீம் சோபியாவுக்கு அருகில் உட்கார்ந்தான்.

“நான் உனக்கு உதவுகிறேன், இக்நாத்” என்றான் யாகவ். அவன் அந்தக் குடிசைக்குள்ளே சென்று ஒரு ரொட்டியை எடுத்து வந்து, துண்டு துண்டாக நறுக்கி மேஜை மீது வைத்தான்.

”கேட்டாயா? யாரோ இருமுகிறார்கள்” என்றான் எபீம்.

ரீபின் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கேட்டான், தலையை அசைத்துக்கொண்டான்.

“அவனேதான். அந்த உயிருள்ள சாட்சியம்தான் வருகிறது” என்று சோபியாவிடம் சொன்னான் அவன். “என்னால் மட்டும் முடியுமானால், நான் அவனை ஊர் ஊராக அழைத்துச் சென்று, ஒவ்வொரு சந்தியிலும் அவனை நிறுத்தி, அவன் பேச்சை எல்லா ஜனங்களும் கேட்கும்படி செய்வேன்; அவன் எப்பொழுதும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருப்பான். ஆனால் அவன் பேச்சு எல்லோரும் கேட்க வேண்டிய பேச்சு.”

மஞ்சள் வெயில் கறுத்தது; அமைதியும் அதிகமாகியது; அவர்களது பேச்சுக் குரலும் தணிந்தது. சோபியாவும் தாயும் மிகுந்த களைப்பினால் மெல்ல மெல்ல அசைந்து வேலை செய்யும் அந்த முஜீக்குகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களும் பதிலுக்கு அந்தப் பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காட்டுக்குள்ளிருந்து ஒரு நெடிய கூனிப்போன உருவம் கம்பை ஊன்றிக்கொண்டே வந்தது. அந்த மனிதனின் சிரமம் நிறைந்த சுவாசத்தை அவர்கள் அனைவருமே கேட்க முடிந்தது.

“வந்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தான் அவன். அதற்குள் அவனைக் குத்திருமல் அலைத்துப் புரட்டியது.

அவன் ஒரு பழங் கந்தையான நீளக்கோட்டை அணிந்திருந்தான்/ அந்தக் கோட்டு கால் வரையிலும் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது அமுங்கிப்போன வட்டமான தொப்பிக்குக் கீழே சிலிர்த்துக் குத்திட்டு நிற்கும் மஞ்சள் நிற ரோமங்கள் தெரிந்தன. அவனது மஞ்சள் பாரித்த ஒட்டிய முகத்தில் மெல்லிய தாடி அழகு செய்து கொண்டிருந்தது. அவனது உதடுகள் நிரந்தரமாகத் திறந்து காணப்பட்டன. அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜூரத்தில் பிரகாசித்தன.

”நீங்கள் புத்தகங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்று ரீபின் சோபியாவை அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் சொன்னான்.

“ஆமாம்” என்றாள் அவள்.

“ரொம்ப நன்றி – எல்லா மக்களின் சார்பாகவும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு அது தெரியும். எனவே அவர்கள் சார்பில் நான் நன்றி கூறுகிறேன்.”

அவன் பரபரவென்று சுவாசித்தான். அவனது சுவாசம் ஆசுவாசமின்றி ஆழமின்றிப் பதைபதைப்போடு இயங்கியது. அவனது குரல் அடிக்கடி தடைப்பட்டது. பலமற்ற கரங்களின் எலும்பு விரல்கள் கோட்டுப் பித்தான்களை மாட்டுவதற்காக நெஞ்சுத் தடத்தில் தடுமாறித் தடவின.

படிக்க:
வானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018
டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?

”இந்த நேரத்தில் நீங்கள் காட்டுப் பக்கம் வருவது உங்கள் உடல்நிலைக்கு நல்லதல்ல. காட்டில் ஈரமாயும் புழுக்கமாயும் இருக்கிறது.” என்றாள் சோபியா.

“எனக்கு இனி எதுவுமே நல்லதல்ல” என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு சொன்னான் அவன், “சாவு ஒன்றுதான் இனி எனக்கு நல்லது!”

அவனது குரலைக் கேட்டாலே நெஞ்சில் வேதனை உண்டாயிற்று. அவனது தோற்றம் முழுவதும் ஓர் அத்தமான அனுதாப உணர்ச்சியையே கிளறிவிட்டது. அந்த அனுதாப உணர்ச்சியால் எந்தப் பலனும் இல்லாததோடு, வெறும் கசப்புணர்ச்சியே மிஞ்சி நிற்கும் என்பது தெரிந்திருந்தும்கூட அனுதாபம் உண்டாகத்தான் செய்தது. அவன் ஒரு பீப்பாயின் மீது அமர்ந்து தனது முழங்கால்களை மிகவும் நிதானமாக மடக்கினான், அந்தக் கால்களை ஒடிந்துவிடாதபடி பதனமாக மடக்குவது மாதிரி இருந்தது அவனது செய்கை. வியர்த்திருந்த நெற்றியைத் துடைத்தான். அவன் முடியோ சருகுபோல் உயிரற்றிருந்தது.

நெருப்புப் பற்றியெரிந்தது. சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் அசைந்தாடும்படியாக அனல் அடித்தது. காட்டுக்குள் இருள் கவிந்து நிழலாடியது. நெருப்புக்கு மேலாக, உப்பிய கன்னங்களோடு விளங்கும் இக்நாத்தின் உருண்ட முகம் பிரகாசித்தது. நெருப்பு மீண்டும் அணைந்துவிட்டது. புகை நாற்றம் மண்டியது. மீண்டும் இருளும் அமைதியும் நிலவியது. எனவே அந்த நோயாளி மனிதனின் கரகரத்த குரலை அப்போது தெளிவாகக் கேட்க முடிந்தது.

”நான் இன்னும் சாதாரண மக்களுக்கு உதவ முடியும். ஒரு பெரிய குற்றத்தின் உயிருள்ள ஞாபகச் சின்னமாக நான் விளங்க முடியும்….. இங்கே, என்னைப் பாருங்கள்….. இருபத்தெட்டு வயதிலேயே நான் செத்துக்கொண்டிருக்கிறேன். பத்து வருஷங்களுக்கு முன்னால், நான் ஐநூறு பவுண்டுக் கனமுள்ள சாமான்களைக்கூடக் கொஞ்சமும் முக்கி முனகாமல் சுமந்து சென்றுவிடுவேன். அந்த மாதிரியான உடல் வளம் மட்டும் இருந்திருந்தால், என்னால் எழுபது வயது வரை கூடச் சுலபமாக உயிர்வாழ முடியும் என நான் நினைத்தேன். ஆனால், நானோ மேற்கொண்டு பத்தே பத்து வருஷங்கள்தான் உயிர்வாழ முடிந்தது. இப்போதோ – இதுதான் என் அந்திம காலம், என்னுடைய முதலாளிகள் என்னைச் சுரண்டிக் கொள்ளையிட்டுவிட்டார்கள்; என்னுடைய வாழ்நாளின் நாற்பது வருஷ காலத்தை, நாற்பது வருஷ வாழ்வையே அவர்கள் பறித்துக்கொண்டுவிட்டார்கள்!”

“இதுதான் அவன் பாடுகிற பாட்டு!” என்றான் ரீபின்.

மீண்டும் நெருப்புப் பற்றிக்கொண்டு முன்னைவிடப் பிரகாசமாகவும் பெரிதாகவும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அங்கு சூழ்ந்து நின்ற இருள் தோப்பைப் பார்க்க விலகியோடியது. மீண்டும் அந்த நெருப்பை நெருங்கி வந்து ஊமையாக, வெறுப்போடு நடமிட்டு அசைந்தாடத் தொடங்கியது. ஈர விறகு இரைச்சலோடு வெடித்தது. வெது வெதுப்பான காற்று வீசியபோது மரத்திலைகள் சலசலத்தன. சிவப்பும் மஞ்சளும் கலந்த தீ நாக்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி உற்சாகமாக விளையாடின; அவை மேலோங்கி எரியும்போது தீப்பொறிகள் உதிர்ந்து பொறிந்தன. நெருப்புக்கனலும் ஒரு தீச்சருகும் பறந்து சென்று அணைந்து செத்தன, வானத்துத் தாரகைகள் பூமியை நோக்கிப் புன்னகை பூத்தன; அந்தத் தீப்பொறிகளைத் தமது நட்சத்திர மண்டலத்துக்குக் கவர்ந்திழுக்க முயன்றன.

“இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது. எத்தனை மக்கள் தங்களது உழைப்பினால் முடமாகிறார்கள், எத்தனைபேர் வாய் பேசாது பட்டினிக்சாவு சாகிறார்கள்…..” அவன் மீண்டும் இருமலினால் குனிந்து குலுங்கினான்.

யாகவ் மேஜை மீது ஒரு பாத்திரம் நிறைய ‘க்லாஸ்’ பீரும், வசந்த காலத்து வெங்காயம் சிலவற்றையும் கொண்டுவந்து வைத்தான்.

”சவேலி, இங்கே வா. நான் உனக்குக் கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் அவன்.

சவேலி தலையை ஆட்டினான். ஆனால் யாகவ் கக்கத்தில் கை கொடுத்து அவனை மேஜையருகே கூட்டிச் சென்றான்.

“அவனை ஏன் இங்கு வரவழைத்தீர்கள்? அவன் எந்த நிமிஷத்திலும் சாகக்கூடிய நிலைமையிலிருக்கிறானே” என்று ரீபினை நோக்கிக் கண்டிக்கும் தோரணையில் சொன்னான் சோபியா.

“எனக்குத் தெரியும்” என்றான் ரீபின், “ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவன் பேசிக்கொண்டிருக்கட்டும். அவனது வாழ்க்கை எந்த நல்ல காரணத்துக்காகவும் தியாகம் செய்யப்படவில்லை. அந்தக் கடைசிக் காலத்தையாவது அவன் நல்லபடியாய்ச் செலவழிக்கட்டுமே. எல்லாம் சரியாய்ப் போகும் – நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்!”

“இதில் என்ன, நீங்கள் ஆனந்தம் காண்கிறீர்கள் போலிருக்கிறதே” என்றாள் சோபியா.

ரீபின் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரக்தியோடு சொன்னான்.

“சீமான் வீட்டுப் பிறவிகளான நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு முனகித் தவிக்கும் ஏசு சிறிஸ்துவைக் கண்டாலும் கூட ஆனந்தம் கொள்வீர்கள். ஆனால் நாங்களோ இந்த மனிதனிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறோம்; நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறோம்………”

தாய் பயத்தோடு தன் புருவத்தை உயர்த்தியவாறே சொன்னாள்:

”சரி, சரி. இது போதும்.”

மீண்டும் அந்த நோயாளி மேஜையருகே தானிருந்த இடத்திலிருந்தே பேசத் தொடங்கினான்.

“அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள்? ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள்? எங்கள் முதலாளி – நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன் – ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற்காக தங்கப் பாத்திரம் ஒன்றைப் பரிசளித்தான், அவளது படுக்கைக்குக் கீழே போடுவதற்கு ஒரு தங்கத்தாலான மூத்திரச் சட்டியைக்கூடப் பரிசளித்தான். என்னுடைய பலமும் என்னுடைய வாழ்க்கையும் அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே போய்விட்டது. அதற்காகத்தான் நான் என் வாழ்க்கையைப் பறிகொடுத்தேன். என்னை வேலையைக் கொடுத்தே கொன்றுவிட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்குத் தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கி கொடுத்தான்!”

”கடவுளின் அம்சமாகவும் கடவுளின் பிம்பமாகவும்தான் மனிதன் பிறந்தானாம். அந்த உருவத்துக்கு அவர்கள் செய்த உபகாரத்தைப் பார்த்தீர்களா?” என்று கசந்து போய்ச் சொன்னான் எபீம்.

“பின்னே, சும்மா இராதே’ என்று தன் கையை மேஜை மீது தட்டி, அறைந்து கொண்டே சொன்னான் ரீபின்.

”அத்துடன் நிறுத்திவிடாதே” என்றான் யாகவ்.

இக்நாத் ஒரு சிரிப்புச் சிரித்தான். பின் எப்போதெப்போது பேசினாலும் அடங்காத அகோரப்பசி கொண்ட மனிதனின் பரபரப்போடு அந்த மூன்று இளைஞர்களும் அவனது பேச்சைக் காது கொடுத்துக் கேட்கத் துடிப்பதைத் தாய் கண்டறிந்தாள். சவேலியின் பேச்சு அவர்களது முகத்தில் ஒரு விசித்திரமான ஏளன பாவத்தைப் படரச் செய்தது. அந்த பாவம் துல்லியமாகவும் வெளியே தெரிந்தது. அந்த நோயாளிக்காக அவர்கள் கொஞ்சம்கூட அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.

”அவன் சொல்வதெல்லாம் உண்மைதானா?” என்று சோபியாவின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு மெதுவாகக் கேட்டாள் தாய்.

“ஆமாம் உண்மைதான்” என்று உரத்த குரலில் பதில் சொன்னாள் சோபியா. ”இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி மாஸ்கோ பத்திரிகைகளில்கூட எழுதினார்கள்.”

”ஆனால் குற்றவாளிதான். தண்டிக்கப்படவே இல்லை” என்று சோர்ந்துபோய்ச் சொன்னான் ரீபின். “அவனைத் தண்டித்தே இருக்க வேண்டும். அவனை ஜனங்களுக்கு மத்தியில் உருட்டித் தள்ளி, கண்டம் கண்டமாக, துண்டம் துண்டமாக வெட்டித் தறித்து, அவனது அழுகிப்போன மாமிசத்தை நாய்களுக்கு விட்டெறிந்திருக்க வேண்டும்! ஜனங்கள் மட்டும் விழித்தெழுந்துவிட்டால், அவர்கள் கொடுக்கின்ற தண்டனை மகாப்பெரிய தண்டனையாகவே இருக்கும். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கழுவுவதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தத்தைச் சிந்தித் தீர்ப்பார்கள்! அந்த ரத்தம் அவர்களது சொந்த ரத்தம்தான் அவர்களது ரத்தக் குழாயிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கப்பட்ட ரத்தம்தான்! எனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை அகற்றுவதற்காக பெருமளவு ரத்தம் சிந்துகிறார்கள்.

‘குளிருகிறது” என்றான் அந்த நோயாளி.

அவனை எழுந்திருக்கச் செய்து நெருப்பருகே கொண்டுபோய் உட்கார வைப்பதற்கு யாகவ் உதவி செய்தான்.

இப்போது நெருப்பு பிரகாசமாக எரிந்தது. உருவமற்ற நிழல்கள் அதற்கு மேலாக நடுங்கியாடிக்கொண்டே தீ நாக்குகளின் உற்சாகம் நிறைந்த விளையாட்டை வியந்து நோக்கிக்கொண்டிருந்தன. சவேலி ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து, மெலிந்து வெளுத்துப்போன தனது கரங்களை நெருப்பு வெக்கையை நோக்கி நீட்டினான். பின் அவனை நோக்கித் தலையை அசைத்துவிட்டு சோபியாவிடம் பேசத் தொடங்கினான்.

”இவன் புத்தகங்களைவிட, தெளிவாகக் கூறிவிட்டான். ஒரு யந்திரம் ஒரு தொழிலாளியைக் கொன்றால், அல்லது அவனது கையைத் துண்டாக்கி, அவனை முடமாக்கினால், அது அவன் குற்றம்தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு மனிதனின் ரத்தத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சித் தீர்த்து, அவனைக் குப்பைத் தொட்டியில் எறியும் சக்கைபோல் விட்டெறிந்தால், அதற்கு மட்டும் விளக்கம் கிடையாதாம்! ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும்தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள்? அவர்கள் ஏன் நம்மையெல்லாம் வாட்டி வதைபுரிகிறார்கள்? அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு; தாங்கள் விரும்புவதையெல்லாம் மனிதத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கும் பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை, தங்கத் தட்டுகளை, தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத்தான்! “நீ பாட்டுக்கு வேலையைச் செய். கொஞ்சம் சிரமப்பட்டு வேலையைச் செய்; அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்; மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி மூத்திரம் பெய்வதற்குத் தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும்! என்கிறார்கள் அவர்கள்.”

தாய் கவனித்துக் கேட்டாள். அவளது கண் முன்னால், அந்த இரவின் இருளுக்கு ஊடே, தனது மகன் பாவெலும் அவனது தோழர்களும் தேர்ந்தெடுத்துள்ள புனித மார்க்கம் பிரகாசமாக ஒளிவிட்டுத் தெரிந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க