மிழகத்தில் மோடி ஆதரவு ஊடகங்களில் நம்பர் ஒன் இடம் தினமலருக்கு மட்டுமே. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வியடைந்ததை இந்த நம்பர் ஒன்றால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஆகவே ’ஆஆஆஆஆஆஆஆய்வுப்’ பணியை துவங்கி விட்டது தினமலர்.

தின மலர் – மலிவு விலையில் மனு தர்மம்

அந்த ஆய்வின் படி தினமலர் மூன்று காரணங்களை அரும்பாடுபட்டு கண்டுபிடித்திருக்கிறது. இம்மூன்றும் காங்கிரசு கட்சியின் வெற்றிக்கான ஆய்வு என்பதை மனதில் கொள்க.

காரணம் ஒன்று : ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி.

சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. ஆனாலும் இவ்வளவு நீண்ட காலம் ஆண்டதால் மக்களிடம் அதிருப்தி தோன்றிவிட்டதாம். முதல்வர் ரமண்சிங் நல்லவர் வல்லவர். இருப்பினும் அவர் செய்த நல்ல விஷயங்களை மக்கள் மறந்து விட்டனராம். இப்படியான இத்தோல்விக்கான காரணத்தை மக்களின் தவறு என்று தினமலர் கண்டுபிடித்திருக்கிறது. அதாவது பாரதிய ஜனதா நல்லாட்சியை கொடுத்தாலும், மக்கள் நன்றி கெட்டவர்கள் என்பதுதான் இந்த மயிலாப்பூர் மாமாவின் கண்டுபிடிப்பு. ஆகவே இத்தோல்விக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மக்களே, பா.ஜ.க. அல்ல!

இரண்டாவது காரணம் என்ன? ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே அறிந்துகொண்டதாம். அதனால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்று தினமலர் சொல்கிறது. சரி, உண்மையின் உரைகல்லான தினமலருக்கு ஒரு கருத்தைக் கூட இப்படி முன்னுக்கு பின் முரணாக உளறுவது குறித்து வெட்கம் இல்லை.

ராமண்சிங்குடன் மோடி.

ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணத்தில் மக்கள் இருந்தனர் என்றால் என்ன பொருள்? அங்கே இருக்கக்கூடிய வாழ்க்கைப் பிரச்சினைகள் என்ன? பொருளாதார பிரச்சினைகள் என்ன? இவற்றினால் தானே அதிருப்தி நிலவ முடியும்! முதல் காரணத்தில் நல்ல விஷயங்கள் செய்த பாரதிய ஜனதா பற்றி மக்கள் விசுவாசமாக இல்லை என்று சொல்லிவிட்டு இங்கே அதிருப்தி என்று சேம் சைடு கோல் அடிப்பது ஏன்?

தினமலர் கூறும் மூன்றாவது காரணம், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அஜித் யோகி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் காங்கிரசில் இருந்து பிரிந்து புதிய கட்சியைத் துவங்கி போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்டு அனைவரும் எதிர்பார்த்தனராம். ஆனால், அந்த எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்டு மக்கள் யோகியை விடுத்து காங்கிரசுக்கு வாக்களித்தனராம். அப்படியானால் இங்கும் மக்கள் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர் என்கிறது தினமலர்.

இதுவரை பார்த்த மூன்று காரணங்களும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கானவை. இனி பாரதிய ஜனதா தோல்விக்கு என மூன்று காரணங்களைக் கூறுகிறது தினமலர்.

முதல் காரணம்: நம்பர் 1 பிரச்சினையான மாவோயிஸ்டுகள். இந்தியாவிலேயே மாவோயிஸ்டுக் கட்சியின் அதிக செயல்பாடு உள்ள மாநிலம் சட்டீஸ்கர். இத்தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தனர். தேர்தல் காலத்தில் நிறைய வன்முறையினை மாவோயிஸ்டுகள் செய்ததாக தினமலர் கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளாக ஆட்சி செய்தாலும் மாநிலத்தில் நக்சல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லையாம். இதுதான் தோல்விக்கு முதல் காரணமென்கிறது தினமலர். ஆனால் இதே பிரச்சனையை காங்கிரஸ் கட்சியும் கூட சந்தித்திருக்கிறது. சொல்லப் போனால் பசுமை வேட்டை என்றழைக்கப்பட்ட ஆபரேஷன் கிரீன் ஹன்ட் என்ற தாக்குதலை துவக்கி மாவோயிஸ்ட்கள் பெயரில் பழங்குடி மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது காங்கிரஸ் கட்சிதான்.

நக்சலை ஒடுக்குவது இருக்கட்டும். வளர்ச்சிக்கு எதிரானவர்கள் மாவோயிஸ்டுகள் என்று பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்தனர். அதன்படி வளர்ச்சிக்கு ஆதரவான பா.ஜ.க.விற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை?

பா.ஜ.க. தோல்விக்கு இரண்டாவது காரணம் என ஏழ்மை வேலைவாய்ப்பு பிரச்சனையை கூறுகிறது தினமலர். இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் சட்டீஸ்கர் தான். மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். அதேபோன்று வேலைவாய்ப்பின்மை சதவீதம் இங்கு அதிகம். இம்மாநிலம் மத்திய பிரதேசத்தில் இணைந்திருந்த போதும் பின்னர் பிரிந்த போதும் வளர்ச்சி என்பது இல்லையாம். எனில் 15 ஆண்டுகளாக பா.ஜ.க. அங்கே ஏன் வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை?

தினமலர் கூறும் மூன்றாவது காரணம் அஜித் யோகி மாயாவதி கூட்டணி. இந்த தேர்தலில் அஜித் யோகியின் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. இக்கூட்டணி காங்கிரசுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என காவிப்படை உள்ளிட்டு ஊடகங்களும் கருதினார்களாம். ஆனால் ஆளுங்கட்சி மற்றும் பாரதிய ஜனதா மீது கோபம் கொண்ட தலித் மக்கள் யோகி மாயாவதி கூட்டணிக்கு வாக்களித்தனராம். மேலும் இக்கூட்டணி பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு எதிராக அதே சாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி ஓட்டுகளை பிரித்து விட்டதாம்.

படிக்க:
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

தினமலர் இங்கேயும் சொதப்புகிறது. அதாவது ஆளுங்கட்சி மீதான அதிருப்தி காங்கிரசுக்கு எதிரான கூட்டணியுடன் சேர்ந்துவிட்டதால் அது பா.ஜ.க.-விற்குத்தானே ஆதாயம்?

இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள பா.ஜ.க.-வை காப்பாற்ற பக்தாள்கள் இப்படி தினுசு தினுசாக கிளம்பியுள்ளனர். காவிக்கறையில் பூத்த தினமலர் அப்படி ஒரு உளறலை ஆய்வு என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. குப்புறப்படுத்து துப்புவன் எவனுக்கும் அது தன் மூஞ்சில் விழுமென்று தோணாது.

– மதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க