ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும்பத்ம விபூஷண்பிரேம்ஜின் இதயமற்ற விப்ரோ

த்யராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வருபவர். அவர் ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாகவும், அவருடைய கிராமத்தில் இருக்கும் வெகுசில பட்டதாரிகளில் ஒருவராகவும் இருந்தார். சத்யராஜின் பெற்றோர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள், மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய மகனை பட்டதாரி ஆக்கியுள்ளனர்.

இளநிலை பட்டப்படிப்புக்குப் பின், விப்ரோ டெக்னாலஜி நிறுவனத்தின் வேஸ் (WASE-Wipro Academy of Software Excellence) என்னும் படிப்பிற்கு(course) சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டார். இது எம்.டெக் (M.Tech) டிகிரி வழங்கும் 4 ஆண்டு படிப்பு. WASE குழுவின் பகுதியாக இருக்கும் நபர்களுக்கு பட்டப்படிப்பை முடிக்கும் வரை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். 5 நாட்கள் விப்ரோவிற்கு வேலை செய்கிறார்கள். சனிக்கிழமை படிப்பதற்காக செலவிடுகிறார்கள்.

ஊழியர்களை அடிமாட்டுக் கூலியில் பணிபுரிய வைக்க விதவிதமாக உருவாக்கப்படும் திட்டங்கள் !

ஒரு ஒப்பந்தத்தின் மூலம் விப்ரோ மலிவு விலையில் இவர்களிடமிருந்து உழைப்பைப் பெறுகிறது. ஆனால் சத்யராஜ்-ஐ பொறுத்தவரை விப்ரோவில் பணிபுரிந்து, நவீன உலகில் தனது வாழ்க்கையை உருவாக்க வாய்ப்பு கிடைத்தது. 4-5 ஆண்டுகள் கடினமாக உழைத்த பிறகு, அவர் திருமணம் செய்துகொண்டு, கௌரவமான சம்பளத்துடன் வாழலாம்.

குறித்த காலத்தில் சத்யராஜ் தனது WASE படிப்பை முடித்தார். அவர் தனது சகோதரியின் திருமணத்திற்கு கடன்கள் மூலமாகவும் மற்றும் சம்பளத்திலிருந்தும் உதவினார். அவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்

தனது WASE படிப்பை வெற்றிகரமாக முடித்தபின், சத்யராஜ் நிரந்தர ஊழியராக விப்ரோவில் சேர்ந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் பணி நீக்கங்களுக்கான இலக்கில் இருந்தார். கடைசி மதிப்பீடு சுழற்சியில் (Appraisal Cycle) குறைவாக மதிப்பிடப்பட்டார். மேலும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது (MCE) என்று ரேட்டிங் வழங்கினர். அவருக்கு PIP எனும் செயல்திறன் மேம்பாட்டு திட்டம் வழங்கப்பட்டது. PIP இன் 3 மாதங்களுக்குப் பிறகு, அவரது PIP செயல்திறன் எதிர்மறையாக இருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. அவராகவே ராஜினாமாவை சமர்ப்பிக்க நிர்பந்திக்கப்பட்டார். தனது வேலையைப் பாதுகாக்க, சத்யராஜ் NDLF மற்றும் FITE போன்ற பல்வேறு IT தொழிற்சங்கங்களை தொடர்பு கொண்டார். சத்யராஜின் வேலையை காப்பாற்ற அனைத்து சாத்தியங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக நிறுவனம் சத்யராஜின் சேவைகளை  நவம்பர் 21-ம் தேதியன்று நிறுத்தி விட்டது. அவர் தனது வாழ்நாளில் ஒரே ஒரு MCE மதிப்பீட்டை தனது கடைசி மதிப்பீட்டு சுழற்சியில் பெற்றதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தில் வேலை செய்த முந்தைய ஆண்டுகளில் அவருக்கு HVC மதிப்பீடு வழங்கப்பட்டது. அவர் வேறு நகரத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, விப்ரோ நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். ஒரு நாள் முன்பாக கடிதம் வழங்கப்பட்டு, விருந்தினர் இல்லத்தை விட்டு வெளியேற அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இது நேற்று நடந்தது, இப்போது சத்யராஜ் குடும்பத்தை நடத்துவதற்கு தனது அடுத்த வேலையைத் தேடி வருகிறார். விப்ரோவிலிருந்து அவரது திருமணத்திற்கு வாங்கிய 50,000 ரூபாய் கடனில் 36,000 ரூபாய் பாக்கி உள்ளது. இறுதி தீர்வைகளின் படி விப்ரோ 2 மாத சம்பளம் வழங்கும். மீதக் கடனைக் கழித்தபின், அதிகபட்சமாக 24,000 ரூபாய் அவருக்கு கிடைக்கும். சத்யராஜின் தற்போதைய சூழ்நிலை, இந்த பணத்தின் உதவியுடன் அவர் சென்னையில் தனது அடுத்த வேலையைத் தேடி தனது வாழ்வை நடத்த முடியும். அவர் சொன்ன கடைசி வார்த்தை என்னவென்றால், இந்த பணம் முடிவடையும்வரை வேலை தேடுவேன், பணம் முடிந்து விட்டால் எனது கிராமத்திற்குத் திரும்புவேன்.

படிக்க:
♦ ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!
♦ இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

தொழிற்சங்கத்திலிருந்து, நிறுவனத்திற்கு எதிராக 2A மனுவை தாக்கல் செய்ய நாங்கள் அவருக்கு உதவினோம். சோகமான பகுதி என்னவென்றால் இந்த சட்ட மோதல்கள் குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகள் எடுக்கும். பல ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக போராடும் இந்த நீண்ட காலகட்டத்தை தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லை.

ஒரு வழக்கில் பல முயற்சிகளுக்குப் பிறகும் ஆஜராகததால் விப்ரோவுக்கு ரூ 3,000 அபராதம் விதிக்கப்பட்ட ஒரு சம்பவம் உள்ளது. இந்த சம்பவம் புனேவில் நடைபெற்றது. அதில் விப்ரோ ஒரு ஊழியரின் வழக்கை இழுத்தடித்ததுடன், பல விசாரணைகளுக்கு ஆஜராகவில்லை. எனவே மீண்டும் மீண்டும் வாய்தா வாங்கியதற்காக விப்ரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இங்கே 3,000 ரூபாய் பணம் விப்ரோவிற்கு பெரிதில்லை. விப்ரோவின் எண்ணம் அல்லது வேறு எந்த நிறுவனத்தின் எண்ணத்தையும் இது தெளிவாக காட்டுகிறது. ஊழியர்கள் போராடும்போது நிறுவனங்கள் முடிந்தவரை வழக்குகளை இழுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பணபலம் மற்றும் வழக்கறிஞர் பலத்துடன் இதைச் செய்கிறார்கள்.

மேலே கூறியபடி, அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மூத்த ஊழியர்களை மட்டுமின்றி ஜூனியர் ஊழியர்களையும் வேலையிலிருந்து நீக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது சத்யராஜின் கர்ப்பிணி மனைவி, அவரது நலனுக்காகவும் அடுத்த வேலைக்காகவும் வேண்டிக் கொண்டிருக்கிறார். விப்ரோவின் சில மேலாளர்கள் மற்றும் மனிதவள அதிகாரிகளின் முடிவு 3 மாதங்களில் பிறக்க இருக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டிற்கு சேவை செய்தாராம் திருவாளர் பத்ம விபூஷன் அசிம் ப்ரேம்ஜி

இதில் சோகமான பகுதி வேலைநீக்கத்திற்கு காரணம் வேலைவாய்ப்புக் கடிதத்தின் ஒரு விதி என்பதுதான். மற்றொரு ஊழியரின் விசாரணையில், தொழிலாளர் நல அதிகாரி, வேலைவாய்ப்புக் கடிதத்தின் விதிமுறைகளைக் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்க முடியாது என்று கூறியிருக்கிறார். பெரிய நிறுவனங்களில் எவையும் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றுவதில்லை. இத்தகைய முடிவுகளை அனுமதிக்காத, மாதிரி ஒழுங்குமுறை விதிகளை அவை பின்பற்ற வேண்டும்.

நிச்சயமாக பெரிய நிறுவனங்கள் இதை நன்கு அறிந்திருக்கின்றன, ஆனால் சத்யராஜைப் போன்ற ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக எதையும் செய்வதில்லை என்பதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு ஊழியர்களை வேலையை விட்டு துரத்துகிறார்கள்.

அனைத்து ஊழியர்கள் கூட்டத்திலும் விப்ரோ மேலாளர்கள், விப்ரோ அதன் வருமானத்தில் 40% நன்கொடைக்கு அளிப்பதாக பெருமையடிக்கின்றனர். விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு நாட்டிற்களித்த சேவைகளுக்காக பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது, மேலும் அவர் தொண்டு நோக்கங்களுக்காக தனது செல்வத்தின் பெரும்பகுதியை ஒதுக்கிவைக்கிறார். விப்ரோவின் மேலாளர்கள், அஜிம் பிரேம்ஜியுடன் அவர்களது HR நடைமுறைகளை பற்றி விவாதிக்க வேண்டும். ஊழியர்களின் வாழ்க்கையை நிறுவனம் இப்படித்தான் அழிக்க விரும்புகிறதா என்று கேட்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல், ‘சேவை சொந்த வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது’ என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

படிக்க:
♦ விப்ரோவில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடிய ஷ்ரேயா உக்கில்
டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?

விப்ரோ ஊழியர் டேவிட் வேலையை இழந்த 3 மாதங்களுக்குள் வங்கிக் கொள்ளை முயற்சி செய்தார். இது தொடர்பாக நமது சங்க வலைத்தளத்தின் கட்டுரையைப் படித்த பிறகு அவருடைய நண்பர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் மறுமொழி கிடைத்தது. வாசகர்களிடம் அந்த மின்னஞ்சலை முன்வைக்க விரும்புகிறோம்:

நான் இதை மிகுந்த வேதனையுடனும், எங்களில் நீண்ட கால உதவி செய்ய விரும்புகிறவர்களின் உதவி பிரவீனுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் எழுதுகிறேன்.

நான் அவரது நண்பர்களில் ஒருவன் மற்றும் முன்பு அவருடன் பணியாற்றியவன். பிரவின் மற்றும் அவரது குடும்பத்தினரை நன்றாகவே எனக்குத் தெரியும். பிரவின் ஒரு நல்ல மனிதர், மிகவும் அறிவார்ந்தவர், பணிவானவர். இசை, பயிற்சியளித்தல் (நடத்தை மற்றும் மென்திறமைகள் பயிற்சி) பற்றிய அவரது அறிவு தனித்துவமானது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். எந்தவொரு குடும்பத்திலும் இருப்பதைப் போலவே அவர் வீட்டிலும் குடும்பப் பிரச்சினைகள் இருந்தன. அவர் எப்போதும் குடும்பத்தின் மேல் அக்கறையுடன் வேலை செய்தார். அவரது நடத்தை அவரின் மேலாளர்கள் அனைவராலும், அவரது சக ஊழியர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் நண்பர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

வாழ்க்கையின் கடினமான பகுதிகளில் பிரவீன் பயணித்ததை நான் பார்த்திருக்கிறேன், அவற்றிலிருந்து எப்போதுமே ஒரு வெற்றியாளராக வெளிப்பட்டார். வாழ்க்கையையும் வேலையையும் பற்றிய அவரது அறிவுரை மற்றும் எப்போதும் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு வாழ்க்கையிலும், வேலையிலும் தொடர்ந்து உத்வேகமளித்தது.

கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் டேவிட்

அவரது குடும்பத்தினர் அவரை இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் கவனித்திருந்தால், பிரவீன் இந்த தீவிர முடிவை எடுத்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரது நல்ல நண்பராக நான் வெட்கப்படுகிறேன், வேலைவாய்ப்புகளை பற்றி கூறியதை தவிர அவருக்கு அதிக உதவி செய்ய முடியவில்லை என்று. ஆனால், என் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுள் யாராவது இத்தகைய எண்ணங்கள் அல்லது செயல்களைச் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

அவருடன் என் கடைசி உரையாடல் புனேயில் பயிற்சியாளர் வாய்ப்பு பற்றியது. அந்த வாய்ப்பை பெற தனது விண்ணப்பத்தை அனுப்பவும் சில அழைப்புகள் செய்யவும் நான் அவரிடம் கூறினேன்.

ஒரு மனிதனுக்குதன் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கான வருமானம்; குடும்பத்தின் ஆதரவு மற்றும் கவனிப்பு ஆகியவை கடினமான சூழ்நிலைகளைக் கடக்க போதுமானது என்று நான் நினைக்கிறேன். பிரவீனுக்கு வாழ்க்கையில் இந்த இரண்டும் குறைவாகவே கிடைத்தது. இவையெல்லாம் இருந்தபோதிலும்அவர் இன்னும் என்னுடைய நல்ல நண்பர். அவரைப் போன்றவர்களுக்கு அப்படி எந்த சட்டமும் இல்லை.

என் நண்பர் பிரவீன் டேவிட், பற்றிய இந்த சம்பவத்தையும் அவரது இரண்டு சிறு குழந்தைகளைப் பற்றியும் இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

டேவிட் பற்றிய இந்த சம்பவம், ஊடகங்களில் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி குண்டு மூலம் கொள்ளையடிக்க முயன்ற IT ஊழியர் என்று கோமாளி போல் சித்தரித்து வெளிவந்துள்ளது. நாமும் செய்தியைப் படித்துவிட்டு வழக்கம் போல் மறந்துவிடுவோம். ஆனால் அவரது நண்பரின் இந்த மின்னஞ்சல் டேவிட்டின் வேறொரு பக்கத்தையும் கட்டாய வேலைநீக்கம் IT  ஊழியர்களின் வாழ்க்கையை எப்படி தாக்குகிறது என்பதையும் காட்டுகிறது. நாங்கள், சங்கம் மூலமாக மற்ற சக ஊழியர்களிடம் உங்களால் முடிந்த எல்லா விதங்களிலும் டேவிட்டுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு கோருகிறோம்.

படிக்க:
♦ பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்
♦ வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா

ஜூனியர் ஊழியர்கள் பலரிடம் தங்களது வேலைகள் 10 வருடங்கள் வரை காப்பாற்றப்படும் என்று நினைத்துகொண்டு தொழிற்சங்கங்களில் சேர ஆர்வமற்று இருப்பதை நாங்கள் எச்சரித்துள்ளோம். தொழிற்சங்கங்களின் முக்கியத்துவத்தை பற்றி பலமுறை எச்சரிக்கை செய்துள்ளோம்; விரைவில் நிறுவனங்கள் மூத்த ஊழியர்களோடு புதிய ஊழியர்களையும் குறிவைக்க ஆரம்பிக்கும்.

இப்போது உண்மையில் புலி வந்தே விட்டது. 2 ஆண்டு அனுபவமுள்ள ஊழியர்களுக்கும் வேலை பறிபோகிறது.

மூத்த ஊழியர்களும், சக ஊழியர்களும் வேலையை விட்டு நீக்கப்படும்போது நாம் கைகளை கட்டிக்கொண்டு, நமது வேலையை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தால் மேலும் பல டேவிட்களையும் சத்யராஜையும் நிறுவனங்கள் உருவாக்கும்.

இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர சங்கமாக ஒன்றிணைவோம்.

– அனுபவம் மிக்க மூத்த ஊழியர்
மொழிபெயர்ப்பு: மணி
நன்றி: New Democrats