‘என் சாவுக்கு காரணம் எடப்பாடி அரசும், தமிழக போலீஸும்தான்’ – ’கஜா’ புயலில் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஃபேஸ்புக் வீடியோ வாக்குமூலம்!

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் (தி.மு.க) ராஜேந்திரனின் மகன், இனியவன். இதழியல் படித்த இவர், தலைஞாயிறு பகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்வந்து செயல்படக்கூடியவர்.

கஜா புயலால் தலைஞாயிறு பேரழிவை சந்தித்த அந்த இரவில், அந்தந்தப் பகுதி இளைஞர்கள்தான், துடிப்புடன் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதில் இனியவனும் ஒருவர். புயல் அடித்து பல நாட்களாகியும் உணவின்றி, நீரின்றி, வசிப்பிடமின்றி மக்கள் பரிதவித்து நின்ற வேலையில், நிவாரணம் வழங்காத தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி, தலைஞாயிறு பகுதியிலும் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றதைப் போலவே இனியவனின் பங்கேற்றார்.

ஆனால், அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டி அடித்தப் பிறகு, நிவாரணம் கேட்டு போராடிய அத்தனை மக்களையும் மிக மோசமாக தாக்கியது தமிழக காவல்துறை. அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களை நள்ளிரவில் தேடிப்பிடித்து கைது செய்வது, அவர்களை திருச்சி உள்ளிட்ட நெடுந்தொலைவு சிறைகளில் அடைப்பது… என இன்றுவரை சித்திரவதை தொடர்கிறது. நேற்று கூட தலைஞாயுறு அருகே உள்ள லிங்கத்தடி என்ற ஊரில் ஓர் இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதில் இளைஞர் இனியவனின் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதுடன் தினம்தோறும் அவரைத் தேடிச்சென்று, ‘வந்தால் என்கவுண்டரில் போட்டுவிடுவோம்’ எனவும் போலீஸ் மிரட்டி வருகிறது. ஏற்கெனவே இவரது அப்பா ராஜேந்திரனையும், அண்ணனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவரைத் தேடி வருகின்றனர். இதனால் அவர் ஒரு மாதத்தும் மேலாக தலைமறைவாகவே சுற்றி வருகிறார். இந்நிலையில்தான், டிசம்பர் 24-ம் தேதி, இன்று இரவு 8 மணி அளவில் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

படிக்க:
கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
♦ கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தையும், தங்களைப் போன்ற பலரையும் இந்த தமிழக அரசும், காவல்துறையும் தீவிரவாதிகளைப் போல தேடி வருவதாகவும், இந்த வேதனை தாங்காமல் தான் விஷம் குடித்துவிட்டதாகவும் கூறுகிறார். கண்ணீர் மல்க பேசும் அவர், தன் மரணத்தின் மூலமாகவேனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்.

இனியவன் எந்த ஊரில் இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை என்ன என்பது குறித்து உடனடி விவரங்கள் கிடைக்கவில்லை. தற்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தகவல் வந்திருக்கிறது. இதையும் உறுதிப்படுத்த வேண்டும். போலீசோ அவரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட காத்திருக்கிறது. அவரது பெற்றோருக்கு கூட அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. புயல் நிவாரணப்பணிகள் சரியாக நடக்கவில்லை என்றது கூட இந்நாட்டில் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது என்றால் இதை விட இழிவு வேறு என்ன வேண்டும்?

*****

தலைஞாயிறு இனியன் உயிருக்கு ஆபத்து ?

தலைஞாயிறு இனியன் தலைமறைவாக இருக்க நேர்ந்துள்ளது குறித்து எங்கள் அறிக்கையில் விரிவாக எழுதியுள்ளேன். சுற்றியுள்ள மூன்று தலித் குடியிருப்புகளும் இன்று கடும் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளன. நாங்கள் சென்றிருந்தபோதே 40 க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியிருந்தனர். நள்ளிரவுக் கைதுகளுக்குப் பயந்து ஆண்கள் ஊரிலேயே இருக்க முடியவில்லை. பெண்களும் இரவுகளில் கோவிலில் சென்று தஞ்சமடையும் அவலம்.

தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர். இன்று அவரது குடும்பத்தில் அவரும் அவரது மூத்த மகனும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இன்னொரு மகன் இனியவன்மீது ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யத் தீவிரமாகத் தேடப்படுவதால் அவர் தலைமறைவாகி உள்ளதையும் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

அவர் அகப்பட்டால் என்கவுன்டர் செய்து கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சமும் பீதியும் ஊர் மக்கள் மத்தியில் பரவி இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.

நேர்றிரவு அந்த ஊரிலிருந்தும் இதழாளர் கவின்மலரிடமிருந்தும் வந்த தொலைபேசிச் செய்திகளிலிருந்து இனியன் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிய வந்தது. ஆனால் அவர்களுக்கும் அவர் இருப்பிடம் தெரியவில்லை. வழக்குரைஞர்கள் தனசேகர், தை.கந்தசாமி முதலானோரும் பிற நண்பர்களும் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சியில் உள்ளனர்.

இனியவன் மீது ஏன் இந்த ஆத்திரம்? உள்ளூர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறித்து கஜாபுயலை ஒட்டி இனியவன் பேசிய ஒரு உரை பெரிய அளவில் வைரலாகப் பரவியதுதான் காரணம் எனச் சொல்கின்றனர். அந்த உரையை நீங்கள் கவின்மலர் முகநூல் பக்கத்தில் காணலாம்.

இனியனின் உரை – சன் நியூஸ்

முன்னாள் அரசு ஊழியரும் சமூகநலச் செயல்பாட்டாளரும் உள்ளூர் CPI கட்சியின் செயலருமான சோமு.இளங்கோ அவர்களும் கூட கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் தொடர்பில் இல்லாமல் உள்ளார்.

புயலால் ஏற்பட்ட பாதிப்பைவிடக் கொடும் பாதிப்பாக இது உள்ளது. அரசியல் கட்சிகளும் இதைக் கண்டிக்க வேண்டும்.

நன்றி -Marx Anthonisamy

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க