மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 41 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
தாய் ஒருபுறமாக நெருக்கித் தள்ளப்பட்டாள். அவள் பயத்தால் ஒரு சிலுவையின் மீது போய்ச் சாய்ந்து ஏதோ ஓர் அடியை எதிர்நோக்கி கண்களை மூடி நின்றாள். குழம்பிப்போன குரலோசை அவளது காதுகளைச் செவிடுபடச் செய்தது. பூமியே அவளது காலடியை விட்டு அகன்று செல்வதாக ஒரு பிரமை. பயத்தினால் அவளுக்கு மூச்செடுக்கவே முடியாமல் திக்குமுக்காடியது. போலீஸ் விசிலின் சப்தம் ஆபத்தை அறிவித்து ஒலித்தது. முரட்டுக் குரல்கள் உத்தரவு போட்டன. பெண்களின் கூச்சல் பீதியடித்துக் கதறின; வேலிக் கம்பிகள் முறிந்து துண்டாயின. கனத்த பூட்ஸ் காலடிகள் வறண்ட பூமியில் ஓங்கியறைந்து ஒலித்தன. இந்தக் களேபரம் அதிக நேரம் நீடித்தது. எனவே அவள் இந்தப் பயபீதியால் அஞ்சி நடுங்கிப்போய் கண்களை மூடியவாறே அதிக நேரம் நின்று கொண்டிருக்க இயலவில்லை.

அவள் ஏறிட்டுப் பார்த்தாள். கூச்சலிட்டுக் கொண்டும் தன் கைகளை முன்னே நீட்டிக்கொண்டும் பாய்ந்து ஓடினாள். கொஞ்ச தூரத்தில், சமாதிக் குழிகளுக்கு இடையேயுள்ள குறுகிய சந்தில், போலீசார் அந்த நீண்ட கேசமுடைய இளைஞனைச் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக நாலாபுறத்திலிருந்தும் சாடி முன்னேறி வரும் ஜனங்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள். உரிய வாள்கள் மனிதத் தலைகளுக்கு மேலாகப் பளபளத்து மின்னி திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் குதித்துப் பாய்ந்தன. ஒடிந்த வேலிக் கம்பிகளும், கம்புகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கூச்சலிடும் ஜனங்கள் வெளுத்த முகமுடைய அந்த இளைஞனைச் சுற்றிலும் வெறியாட்டம் ஆடிக்கொண்டு குமைந்து கூடினார்கள். இந்த வெறியுணர்ச்சிக் களேபரப் புயலுக்கு மத்தியில் அந்த இளைஞனது பலம் வாய்ந்த குரல் ஓங்கி ஒலித்தது:

”தோழர்களே! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள்?”

அவனது வார்த்தைகள் தெளிவு தருவனவாக ஒலித்தன. ஜனங்கள் தங்கள் கைகளிலிருந்த கழிகளையும் கம்புகளையும் விட்டெறிந்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் தாயோ ஏதோ ஒரு தடுக்க முடியாத சக்தியால் தூண்டப்பெற்று முன்னோக்கி முண்டிச் சென்று கொண்டிருந்தாள். பின்னால் சரிந்துபோன தொப்பியோடு நிகலாய் இவானவிச் அந்த வெறிகொண்ட ஜனக்கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டிருப்பதை அவள் கண்டாள்.

”உங்களுக்கு என்ன பைத்தியமா? அமைதியாயிருங்கள்!” என்று கத்தினான் அவன்.

அவனது ஒரு கை செக்கச் சிவந்து காணப்படுவதாகத் தாய்க்குத் தோன்றியது.

“நிகலாய் இவானவிச் இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அவனை நோக்கி ஓடிக்கொண்டே கத்தினாள் தாய்.

“நீங்கள் எங்கே போகிறீர்கள்? அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்”

அவளது தோள்மீது ஒரு கரம் விழுந்தது. திரும்பினாள்; அவளுக்கு அடுத்தாற்போல் தலையிலே தொப்பியற்றுக் கலைந்துபோன தலைமயிரோடு சோபியா நின்றுகொண்டிருந்தாள்; அவள் ஒரு பையனைத் தன் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள். அந்தப் பையன் இன்னும் வாலிப வயதை எட்டிப்பிடிக்காத, பால்மணம் மாறாதவனாயிருந்தான். அவன் தன் முகத்திலுள்ள ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, துடிதுடிக்கும் உதடுகளால் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்:

”என்னைப் போகவிடுங்கள் …… எனக்கு ஒன்றுமில்லை …..”

”இவனைப் பார்த்துக்கொள்ளுங்கள், நம் வீட்டுக்குக் கொண்டு போங்கள். இதோ கைக்குட்டை; அவன் முகத்தில் ஒரு கட்டுப்போடுங்கள்’ என்று படபடத்துக் கூறினாள் சோபியா. பிறகு அவள் அந்தப் பையனின் கையைத் தாயின் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டு ஓடினாள். ஓடும்போதே சொன்னாள்:

“சீக்கிரமாகப் போய்விடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களைக் கைது செய்துவிடுவார்கள்”

இடுகாட்டின் நாலாபுறங்களிலும் ஜனங்கள் சிதறியடித்து ஓடினார்கள், போலீஸ்காரர்கள் சமாதி மேடுகளின் மேலெல்லாம் ஏறிக் குதித்து ஓடினார்கள். அவர்களது நீண்ட சாம்பல் நிறச் சட்டைகள் முழங்கால் வரையிலும் தொங்கி, முட்டிக் கால்களைத் தட்டின, அவர்கள் தங்கள் வாள்களைச் சுழற்றிக்கொண்டும். வாய்க்கு வந்தபடி சத்தமிட்டுக்கொண்டும் தாவித் தாவிப் பின்தொடர்ந்தார்கள். அந்தப் பையன் அவர்களை உர்ரென்று முறைத்துப் பார்த்தான்.

”சீக்கிரம், சீக்கிரம், புறப்படு” என்று அவனது முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே கத்தினாள் தாய்.

“என்னைப் பற்றிக் கவலைப்படாதே — இது ஒன்றும் வலிக்கவில்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் வாயிலிருந்த ரத்தத்தைக் கக்கினான். “அவன் வாளின் கைப்பிடியால் என்னை ஓர் அடி கொடுத்தான். ஆனால் பதிலுக்கு என்னிடம் அவனும் வாங்கிக் கட்டிக்கொண்டான். நான் ஒரு கழியினால் அவனை ஒரு விளாசு விளாசினேன்; பயல் கதறி ஊளையிட்டான். நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்” என்று அவன் தனது ரத்தம் தோய்ந்த முஷ்டியை உலுக்கியாட்டிக் கொண்டே கத்தினான். “வரப்போகிற சண்டையை நினைத்துப் பார்த்தால், இது என்ன பிரமாதம்? நாங்கள் —- தொழிலாளர்களாகிய நாங்கள் அனைவரும் கிளர்ந்தெழும்போது, உங்களையெல்லாம் சண்டை போடாமலே துடைத்துத் தூர்த்துவிடுகிறோம்!”

”புறப்படு சீக்கிரம்” என்று அவனை அவசரப்படுத்திக்கொண்டே, இடுகாட்டின் வேலிப்புறமாகவுள்ள சிறு வாசலை நோக்கி நடந்தாள் தாய். வெளியேயுள்ள பரந்த வயல்வெளியில் போலீஸ்காரர்கள் பதுங்கிக் காத்திருந்து, ஜனங்கள் இடுகாட்டைவிட்டு வெளியே வந்ததும், பாய்ந்து தாக்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அவள் அந்த வாசலுக்கு வந்ததும், ரொம்பவும் ஜாக்கிரதையோடு இலையுதிர்காலத்தின் இருள் போர்வை போர்த்திருந்த வெளியைப் பார்த்தாள். அங்கு யாரையும் காணோம், மெளனமே நிலவியது. அவளுக்குத் தைரியம் வந்தது.

“சரி, இப்படி வா. முகத்தில் ஒரு கட்டுப் போடுகிறேன்” என்று சொன்னாள் தாய்.

”அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் — இதைக் கண்டு நான் ஒன்றும் வெட்கப்படவில்லை” என்றான் அவன். “இது ஒரு சரியான நேர்மையான சண்டை. அவன் என்னை அடித்தான். பதிலுக்கு நானும் அவனை அடித்துவிட்டேன்!”

ஆனால் தாய் விறுவிறென்று அவனது முகத்திலிருந்த காயத்துக்குக் கட்டுப்போட்டாள். ரத்தத்தைக் கண்ணால் கண்டதும் அவள் மனத்தில் ஓர் அனுதாப உணர்ச்சி ஏற்பட்டது. அவளது கைவிரல்கள் வெதுவெதுப்பான அந்தச் செங்குருதியின் பிசுபிசுப்பை உணர்ந்தபோது, அவளது உடம்பெல்லாம் ஒரு குளிர்நடுக்கம் பரவிச் சிலிர்த்தோடியது. அவசர அவசரமாக, வாயே பேசாமல் அவள் அந்தச் சிறுவனை வயல்வெளியின் குறுக்காக இழுத்துக்கொண்டு ஓடினாள்.

“தோழரே, என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று தன் வாயின்மீது போட்டிருந்த கட்டை அவிழ்த்துக்கொண்டே கிண்டலாகக் கேட்டான். அவன். “உங்கள் உதவியில்லாமலே, நான் போய்விடுவேனே.”

ஆனால் அவனது கரங்கள் நடுநடுங்குவதையும், கால்கள் பலமிழந்து தடுமாறுவதையும் அவள் கண்டாள். பலமற்ற மெல்லிய குரலில் அவன் பேசிக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விரைவாக வந்தான். தான் கேட்கும் கேள்விகளின் பதிலுக்காகக் கூட அவன் காத்திராமல் பேசினான்:

“நீங்கள் யார்? நான் ஒரு தகரத் தொழிலாளி. என் பேர் இவான். இகோர் இவானவிச்சின் கல்விக்குழாத்தில் நாங்கள் மூன்று பேர் இருந்தோம். மூன்று பேரும் தகரத் தொழிலாளிகள். ஆனால் நாங்கள் மொத்தத்தில் பதினோரு பேர். எங்களுக்கு அவர் மீது ஒரே பிரியம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் – எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட ……”

ஒரு தெருவுக்கு வந்ததும் தாய் ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்தினாள். இவானை அதில் ஏற்றி உட்காரவைத்தவுடன் அவள்: ”இனிமேல் ஒன்றும் பேசாதே” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கைக்குட்டையால் அவனது வாயில் ஒரு கட்டுப்போட்டாள்.

படிக்க:
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்
1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு !

அவன் தன் கையைத் தன் முகத்துக்குக் கொண்டு போனான். அந்தக் கட்டை அலைத்து அவிழ்க்கச் சக்தியற்று மீண்டும் தன் கையை மடிமீது நழுவவிட்டான். இருந்தாலும் அந்தக் கட்டோடேயே அவன் முணுமுணுத்துப் பேசத் தொடங்கினான்:

”அருமைப் பயல்களா, இதை மட்டும் நான் மறந்துவிடுவேன் என்று நினைக்காதீர்கள்…… முன்னால் தித்தோவிச் என்ற ஒரு மாணவர் எங்களுக்கு வகுப்பு நடத்தினார். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடம் சொன்னார்……… பிறகு அவர்கள் அவரையும் கைது செய்துவிட்டார்கள்………”

தாய் இவானைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, அவனது தலையை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். திடீரென அந்தப் பையன் கிறங்கி விழுந்து மெளனமாகிக் கிடந்தான். பயபீதியால் செய்வது இன்னதென்று அறியாமல் திகைத்தாள் தாய். ஒவ்வொரு பக்கத்திலும் பார்த்துக்கொண்டாள். எங்கோ ஒரு மூலையிலிருந்து கிளம்பி, போலீஸ்காரர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் ஓடோடியும் வந்து, இவானின் கட்டுப்போட்ட தலையைப் பிடித்து இழுத்துப்போட்டு அவனைக் கொல்லப் போவதாகத் தோன்றியது.

“குடித்திருக்கிறானா?” என்று வண்டிக்காரன் தன் இடத்தைவிட்டுத் திரும்பி புன்னகை செய்து கொண்டே கேட்டான்.

“ரொம்ப ரொம்பக் குடித்துவிட்டான்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

“இது யார் உங்கள் மகனா?”

“ஆமாம். ஒரு செருப்புத் தொழிலாளி. நான் ஒரு சமையற்காரி.”

”கஷ்டமான வாழ்க்கைதான், இல்லையா?”

அவன் தன் சாட்டையை ஒரு சுண்டுச் சுண்டி வாங்கினான். மீண்டும் அந்த வண்டிக்காரன் திரும்பவும் பேசினான்:

”கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இடுகாட்டில் நடந்த கலவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களா? அவர்கள் யாரோ ஓர் அரசியல்வாதியை, அதிகாரிகளுக்கு எதிராக வேலை செய்த ஓர் அரசியல்வாதியைப் புதைக்கச் சென்றார்கள் போலிருக்கிறது. அங்கு அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சண்டை. அந்த அரசியல்வாதியைச் சேர்ந்த நண்பர்கள்தாம் அவனைப் புதைக்கப் போனார்களாம். அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். ‘மக்களை ஏழைகளாக்கும் அதிகாரிகள் ஒழிக’ என்று அவர்கள் கத்தினார்களாம். உடனே போலீஸார் வந்து, அவர்களை அடிக்கத் தொடங்கினார்களாம். சிலர் படுகாயம் அடைந்ததாகக் கூடச் சொல்லிக் கொள்கிறார்கள். போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்ததாம். அவன் ஒரு கணநேரம் மெளனமாயிருந்தான். பிறகு விசித்திரமான குரலில் வருத்தத்துடன் தலையை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான். “செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!”

வண்டிச் சரளைக் கற்களில் ஏறி விழும்போது, இவானின் தலை தாயின் மார்போடு மெதுவாக மோதிக்கொண்டது. வண்டிக்காரன் பெட்டியில் பாதி திரும்பியவாறு உட்கார்ந்து ஏதேதோ பேசி வந்தான்.

“ஜனங்களுக்குப் பொறுமையின்மை ஏற்பட்டுவிட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஒரே களேபரம்தான் தலைதூக்கி வருகிறது. நேற்று ராத்திரி என் அடுத்த வீட்டுக்காரன் வீட்டுக்குப் போலீஸார் வந்து, விடியும் வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் சோதனை போட்டார்கள். அப்புறம் ஒரு கொல்லுலைத் தொழிலாளியைத் தங்களோடு கொண்டு போய்விட்டார்கள். அவனை இரவு வேளையிலே ஆற்றங்கரைக்குக் கொண்டுபோய் நீரில் அமுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்று ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்தக் கொல்லன் ரொம்ப நல்லவன்.”

“அவன் பேர் என்ன?” என்று கேட்டாள் தாய்.

அந்த கொல்லன் பேரா? சவேல். சவேல் எவ்சென்கோ. சிறு வயசுதான். இருந்தாலும், அவனுக்கு நிறைய விஷயம் தெரியும். விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே இங்கே அனுமதி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. அவன் எங்களிடம் வந்து பேசுவான். வண்டிக்காரர்களே உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? என்பான். ‘உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் வாழ்க்கை நாயினும் கேடான வாழ்க்கைதான்’ என்று நாங்கள் சொல்லுவோம்.”

“நிறுத்து’ என்றாள் தாய்.

வண்டி நின்றதால் ஏற்பட்ட குலுங்கலில் இவான் விழித்துக்கொண்டு லேசாக முனகினான்.

“விழித்துக்கொண்டானா?” என்றான் வண்டிக்காரன்: “தம்பி, ஓட்கா வேணுமா. ஓட்கா!”

மிகுந்த சிரமத்தோடு இவான் நடந்துகொண்டே தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தாயை நோக்கிச் சொன்னான்:

“பரவாயில்லை. என்னால் முடியும்.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க