சீக்கியர் படுகொலை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி அண்மையில் தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.  பாஜகவினர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்த்திப் பிடித்து வரவேற்றனர்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சீக்கியர் படுகொலையில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் எவரும் நினைத்திருக்க முடியாது” என மோடி, இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து சொன்னார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சீக்கியர் படுகொலையில் காங்கிரசின் பங்கு குறித்து அவர் பேசிவிடுவார். ஆனால், சீக்கியர் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு பெரும்பங்கு உள்ளது என்பதை இந்துத்துவ கும்பல் வெகுகாலமாக மறைத்து வருகிறது.

சீக்கியர் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டது காங்கிரஸ். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவ சித்தாந்தம் அதை மேலும் தூண்டிவிட்டது. படுகொலைகளைச் செய்ய பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ். கொலை கும்பலையும் அனுப்பியுள்ளது.

சீக்கியர் படுகொலை தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், பாஜகவைச் சேர்ந்த முக்கியமானவர்களில் பெயர்கள்  இடம்பெற்றுள்ளதை ஒட்டி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2002 பிப்ரவரி 2 தேதியிட்ட நாளிதழில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் 1984-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வாஜ்பாயின் ஏஜெண்டாக இருந்த பாஜக பிரமுகரும் ஆர்.எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்தவருமான ராம்குமார் ஜெயின் என்பவரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தி சொல்கிறது. சீக்கியர் படுகொலை குறித்த ஜெயின் கமிஷன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 14 வழக்குகள் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினர் மீது 1992-94 காலக்கட்டத்தில் பதியப்பட்டிருக்கிறது.

படிக்க:
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி, வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுதல், ஆயுதங்களை பயன்படுத்துதல் என பல பிரிவுகளின் கீழ், டெல்லியைச் சேர்ந்த ஆர்.எஸ். எஸ். – பாஜக குண்டர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ப்ரீதம் சிங், ராம் குமார் ஜெயின், ராம் சந்தர் குப்தா, ரத்தன் லால், கிலான் லால் ஜெயின், பிரதீப் குமார், பாபு பால், வேத் மனிபால் சர்மா, பதம் குமார் ஜெயின், சுரேஷ் சந்திர ஜெயின் ஆகியோர் போலீசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

சீக்கியர் படுகொலை வழக்குகளில் மிகப் பெரியதாக 1993-ஆகஸ்டில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவைச் சேர்ந்த ராம் குமார் ஜெயின், ஷர்னி லால் குப்தா, வேத் மணிபால் சர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.  கலவரத்தில் தனது மொத்த சொத்துக்களையும் இழந்த ஹர்தியால் சிங் என்பவரால் பதியப்பட்ட வழக்கு இது என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். அப்போதைய உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானியிடம் சீக்கியர் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் பங்கு குறித்து கேட்டபோது, அதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என மறுத்துள்ளதையும் இந்த நாளிதழ் பதிவு செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்டதையும் சித்தாந்த ரீதியாக அதற்கு உதவியதையும் பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், வெகுமக்கள் பரப்புக்குள் அந்த விடயங்கள் வரவில்லை.  பாஜகவின் ஓட்டுக்கட்சி கூட்டாளியான ஷிரோமனி அகாலிதளம், சீக்கியர் படுகொலையில் பல சீக்கியர்களை ஆர்.எஸ். எஸ். காரர்கள் காப்பாற்றியதாக கதை விட்டது. ஆனால், ஜெயின் – அகர்வால் கமிஷன் அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இந்த படுகொலைகளில் முக்கிய பங்கு இருப்பதை சுட்டிக்காட்டியது.

இதை மறைக்கும் விதமாக ஆர்.எஸ். எஸ். – பாஜகவினரின் பெயர்களை வழக்குகளிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கியதாக 1994-ஆம் ஆண்டு பயனீர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

சீக்கிய படுகொலை நடந்தபோது அதை நியாயப்படுத்தி 1984 ல் ஆர்.எஸ். எஸ். தலைவர் நானா தேஷ்முக் கட்டுரை எழுதியிருக்கிறார்.  ‘இந்தியாவில் உள்ள இந்துக்களின் நியாமான உணர்வு’ என அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடுகிறது இவருடைய பாசிச மனம். அதோடு, காந்தி படுகொலைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தாக்கப்பட்டதை, சீக்கிய படுகொலையோடு ஒப்பிடுகிறார் இவர். சீக்கியர்கள் அமைதியாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் எழுதியிருக்கிறார்.  காந்தி, ஆர்.எஸ். எஸ். கும்பலால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கும் இந்திரா காந்தியின் படுகொலைக்கு தொடர்பே இல்லாத அப்பாவி சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கும் முடிச்சு போடுகிறார் இவர்.

இந்திரா காந்தியின் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டாரை’ வரவேற்ற இந்த ஆர்.எஸ். எஸ். காரர்,  தேச துரோகிகளுகளை இப்படித்தான் கையாள வேண்டும் என்கிறார்.  ‘சீக்கியர்கள்தான் வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணம்.  இந்து வேர்களிலிருந்து தங்களை துண்டித்துக்கொண்ட சீக்கிய அறிவுஜீவிகளே இந்த படுகொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்’ எனவும் அவர் எழுதியிருக்கிறார்.  இந்த நாடு உடையாமல் பார்த்துக்கொண்டவர் இந்திரா காந்தி ஒருவரால்தான் முடியும், அப்படிப்பட்டவரை கொன்றதற்காக சீக்கியர்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என ஆர்.எஸ்.எஸ். விசத்தை கக்கியிருக்கிறார்.

இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை, படுகொலைகள் குறித்து ராஜீவ் காந்தி ‘ஒரு பெரிய மரம் கீழே விழும்போது, நிலத்தில் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்’ என்றார். ராஜீவ் காந்தியின் கருத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேஷ்முக் பாராட்டுகிறார்.

மத சிறுபான்மையினரை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின்  முதன்மையாக அஜெண்டாவாக உள்ளது. இந்த அஜெண்டாவுக்கு காங்கிரஸின் ‘சாஃப்ட் இந்துத்துவா’ உதவியாக இருந்து வருகிறது என்பதையும் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தேர்தல் வெற்றி – தோல்விகளைக் கடந்து நாட்டில் பாசிசத்தின் வேர் பாய்ந்திருக்கிறது. அதை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும்.

கலைமதி
நன்றி: கபார்பர், கேரவன் டெய்லி

1 மறுமொழி

  1. அடப்பாவிகளா இவ்வளவு நாளா காங்கிரசை குறை சொல்லிக்கிட்டு திரிஞ்சின்களேடா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க